Published:Updated:

வேலை பார்த்துக்கொண்டே படிக்க நீங்க ரெடியா?

ம.பிரியதர்ஷினி, அ.பார்வதி

வேலை பார்த்துக்கொண்டே படிக்க நீங்க ரெடியா?

ம.பிரியதர்ஷினி, அ.பார்வதி

Published:Updated:

வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களில், இந்தியர்களின் எண்ணிக்கையே அதிகம். குறிப்பாக, முதுநிலை பொறியியல் படிப்புக்குத்தான் அதிகமாக வெளிநாடு செல்கிறார்கள் பலர். இப்படி வெளிநாட்டுக் கல்லூரிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான அடிப்படை வழிகாட்டல்களைச் சொல்கிறார் கனடா, Fairleigh dickinson’ பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜனார்தனன் வாசுதேவன். புதுச்சேரியைச் சேர்ந்த இவர், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அங்கே பணிபுரிந்து வருகிறார்!

''பொதுவாக, பட்ட மேற்படிப்பை (எம்.எஸ்) வெளிநாட்டில் படிக்க முடிவெடுத்தால், இளங்கலை இரண்டாம் ஆண்டில் இருந்தே தயாராக வேண்டும். பொறியியல் கல்லூரிகளின் தரம்குறித்து அறிய ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு தரவரிசை பட்டியல் இருக்கும். உதாரணத்துக்கு, கனடா நாட்டுக்கு, 'மேக்ளீன்ஸ் ரேங்கிங்' (Macleans Ranking) என்ற அமைப்பு உதவியாக இருக்கும். இவர்களுடைய இணையதளத்துக்குச் சென்றால், இதை அறிந்துகொள்ளலாம்.. உயர் பல்கலைக்கழகங்கள் சார்ந்த பொறியியல் வல்லுநர்கள், பேராசிரியர்களுடன் இ-மெயில் மூலமாக பேசுவதற்கும் இது வாய்ப்பளிக்கிறது. மேலும், வலைப்பூ பக்கம் (பிளாக்ஸ்) மற்றும் வெளிநாடு படிப்பு குறித்த நிறுவனத் தகவல்கள் வழியாகவும் பல்கலைக்கழகங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம். பலகட்ட பரிசீலனைகளுக்குப் பிறகு, இறுதியாக நீங்கள் தேர்ந்தெடுக்கும் பல்கலைக்கழகத்தின் வலைதளம் சென்று, கோர்ஸ்கள், வசதி, ஸ்காலர்ஷிப் போன்ற விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

வேலை பார்த்துக்கொண்டே படிக்க நீங்க ரெடியா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அடுத்ததாக, எஸ்.ஓ.பி. (SOP -Statement Of Purpose) என்பதை, சம்பந்தப்பட்ட கல்லூரியில் மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். அதாவது, குறிப்பிட்ட கோர்ஸை தேர்ந்தெடுத்ததன் நோக்கம், சம்பந்தப்பட்ட நாட்டை, படிப்பதற்காக தேர்ந்தெடுத்ததன் அவசியம், அந்தப் பாடப்பிரிவு குறித்த அளப்பரிய ஆர்வம் போன்றவற்றை மாணவர்கள் விரிவாக எழுதித் தருவதுதான் இந்த எஸ்.ஓ.பி. மாணவர்களின் வங்கி இருப்புக் கணக்கு குறித்த விவரங்களையும் தெரியப்படுத்த வேண்டும்'' என்றவர், பொறியியல் கல்விக்குப் பொருத்தமான நாடுகளை எப்படி தேர்ந்தெடுப்பது என்றும் விளக்கினார்.

''அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளையே இன்று பெரும்பாலானோர் மேற்படிப்புக்காக அணுகுகிறார்கள். இவற்றில் கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வேலைவாய்ப்பு பெற கொஞ்சம் காத்திருந்தாலும், வாழ்க்கைத்தர மேம்பாடு சிறப்பாக இருக்கும். நியூஸிலாந்து, அயர்லாந்து போன்ற நாடுகளையும் பலர் நாடுகிறார்கள். இதற்குக் காரணம்... இங்கெல்லாம் கல்விக் கட்டணம் குறைவாக இருப்பதுதான். அது எந்த நாடாக இருந்தாலும், பகுதிநேர வேலைகள் செய்யும் வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ளலாம். வெளிநாடுகளில் ஒரு வருடத்தை ஸ்பிரிங், சம்மர், ஃபால் என்று மூன்று பருவங்களாகப் பிரிக்கின்றனர். அதில் ஏதேனும் ஒரு பருவத்தை பகுதிநேர பணிக்காக தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம், மற்ற இரண்டு பருவங்களில் படிப்பை முடிக்கலாம் என்பது, ஹைலைட்.

வேலை பார்த்துக்கொண்டே படிக்க நீங்க ரெடியா?

அடுத்ததாக, வெளிநாட்டில் படிப்பதற்கான தகுதித்தேர்வு எழுத வேண்டும். தேர்ந்தெடுக்கும் நாடு அமெரிக்காவாக இருந்தால், 'டோஃப்ல்' (TOEFL -Test of English as Foreign Language), 'ஜிஆர்இ' (GRE -Graduate Record Examination) தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதுடன், பி.இ/பிடெக் மதிப்பெண்களும் தகுதியாகப் பார்க்கப்படும். இதுவே இங்கிலாந்தில் 'ஐல்ஸ்' (IELTS-International English Language Testing System) தேர்வில் தேர்ச்சி பெறுவதுடன், பி.இ/பி.டெக் மதிப்பெண்கள் மற்றும் ப்ளஸ் டூ மதிப்பெண்கள் தகுதியாகப் பார்க்கப்படும். பி.இ/பி.டெக் படிப்பின் முதல் ஆறு செமஸ்டர் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மேற்சொன்ன தகுதித் தேர்வுகளின் (இவற்றை ஆன்லைனில் எழுதலாம்) மதிப்பெண்களை, சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்கும்போது சேர்த்து அனுப்ப வேண்டும். தவிர, படிக்கும் கல்லூரியில் மூன்று பேராசிரியர்களிடம் இருந்து தன்னைப் பற்றி 'லெட்டர் ஆஃப் ரெக்கமென்டேஷன்’ வாங்கி, இணைக்க வேண்டும்'' என்று விரிவான விளக்கங்களை தந்தார் ஜனார்தனன்!

உதவிக்கு வரும் சம்பளம்!

சிலருக்கு, வெளிநாட்டுக் கல்லூரியில் படிப்பதற்கான ஆஃபர் லெட்டர் வரும்போதே, ஸ்காலர்ஷிப் லெட்டரும் வந்துவிடும். சிலருக்கு கல்லூரியில் சேர்ந்த பிறகு ஸ்காலர்ஷிப் கிடைக்கும். ஸ்காலர்ஷிப்பை பொறுத்தவரை ரிசர்ச் அசிஸ்டென்ட்ஷிப், டீச்சிங் அசிஸ்டென்ட்ஷிப் என்கிற பெயர்களில் வழங்கப்படுகிறது. ரிசர்ச் அசிஸ்டென்ட்ஷிப் என்பது, அந்தக் கல்லூரிப் பேராசிரியர் ஒருவருக்கு, டேட்டா கலெக்ஷன், டேட்டா பிராசஸிங் என்று அவரின் புராஜெக்ட்டுக்கு உதவியாக இருப்பது. தன் புராஜெக்ட்டுக்கு வரும் நிதியில் இருந்து, இதற்காக மாணவருக்கு ஒரு சம்பளத்தை அந்த பேராசிரியர் தருவார். டீச்சிங் அசிஸ்டென்ட்ஷிப் என்பது, பரீட்சை நடத்துவது, மதிப்பெண்களை ஆன்லைனில் பதிவது உள்ளிட்ட வேலைகளில் சம்பந்தப்பட்ட பேராசிரியருக்கு உதவியாக இருப்பது. இதற்கான சம்பளத்தை, சம்பந்தப்பட்ட பேராசிரியர் நிர்ணயம் செய்வார். இது அங்குள்ள செலவுகளைச் சமாளிக்க போதுமானதாகவே இருக்கும். ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் 'ஸ்டூடென்ட் கம்யூனிட்டி' என்ற ஒன்று இருக்கும். இது, பல மாணவர்கள் சேர்ந்து தங்குவதற்கு வழிவகுக்கும். இப்படி தங்கும்போது, ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ளுதல், உதவுதல், விட்டுக்கொடுத்தல், புதிய கலாசாரத்தை தெரிந்துகொள்ளுதல், ஆண் - பெண் பேதத்தை உடைத்தல் என பலவகையிலும் ஒருவரை பண்படுத்தும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism