Published:Updated:

வாட வைக்கும் வயசு... வாழ வைக்கும் மனசு!

பொன்.விமலா

வாட வைக்கும் வயசு... வாழ வைக்கும் மனசு!

பொன்.விமலா

Published:Updated:
வாட வைக்கும் வயசு... வாழ வைக்கும் மனசு!

'ஒரு பெண் மனது வைத்தால், எல்லா தடைகளையும் தாண்டி ஜெயிக்க முடியும்' என்கிறது, 'ஹவ் ஓல்ட் ஆர் யூ’ (How old are you) மலையாளத் திரைப்படம். வெளியாகிய சில தினங்களுக்குள் 'பிளாக்பஸ்டர் மூவி' என்று பெயரெடுத்துள்ள இந்தப் படத்தின் நாயகி, மஞ்சு வாரியர். 14 வருடங்களுக்குப் பிறகு, திரைத்துறைக்குள் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள மஞ்சு, நாகர்கோவிலைச் சேர்ந்த தமிழ்ப் பெண். 20-க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களில் நடித்து, பல விருதுகளை அள்ளிக் குவித்த மஞ்சுவுக்கு, மலையாளத்தில் பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. 1999-ல் நடிகர் திலீப்பை மணந்த பிறகு, திரையுலகை விட்டு விலகி இருந்தவர், கணவரை விட்டு விலகிய பிறகு நடித்து வெளிவந்துள்ள படம்தான் 'ஹவ் ஓல்ட் ஆர் யூ’.

பெரும்பாலும் திருமணத்துக்குப் பிறகு தங்கள் திறமைகளைப் புதைத்துவிட்டு கணவன், குழந்தைகளுக்காகவே வாழ்கிறார்கள் பெண்கள். மேலும், 30 வயதை தாண்டிவிட்டாலோ... 'வயதாகிவிட்டது' என வீட்டிலேயே முடங்குகிறார்கள். அதைத் தொடரும் அடுத்தடுத்த கவலைகளால் உள்ளுக்குள் நொறுங்கிப் போகிறார்கள். ஆனால், அத்தகைய பெண்களுக்கெல்லாம்... 'சாதிக்க முடிவெடுத்துவிட்டால், வயது ஒரு தடையில்லை' என்பதை அழுத்தம்கொடுத்துச் சொல்கிறது இந்தப் படம்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாட வைக்கும் வயசு... வாழ வைக்கும் மனசு!

படத்தில் 'நிருபமா’வாக வாழ்ந்திருக்கிறார் மஞ்சு வாரியர். வருவாய்த்துறை அலுவலகத்தில் 15 ஆண்டுகளாக கிளார்க் வேலை பார்த்துக்கொண்டிருப்பார் நிருபமா. கணவர் ராஜீவ் (குஞ்சகோ போபன்) எஃப்.எம் ரேடியோவில் வேலை செய்வார். இவர்களுக்கு ஒரே மகள், லஷ்மி. 36 வயதான நிருபமா அவ்வயதுக்கான உடல் பிரச்னைகளை சந்திக்க ஆரம்பிக்கிறாள். நரைமுடிக்கு கூச்சப்பட்டு, பார்லரில் கலரிங் செய்வதோடு, முக்காடு போட்டுக்கொண்டு வீட்டுக்குள் நுழையும்போது, ரசிக்க வைக்கிறாள். அதேசமயம், வயது காரணமாக உள்ளுக்குள் நொறுங்கிக்கொண்டே இருக்கிறாள்.

இந்நிலையில், நிருபமாவின் பெயரில் ஒரு கேள்வியை ஜனாதிபதிக்கு எழுதி அனுப்புகிறாள் மகள் லஷ்மி. மிகவும் சிந்திக்க வைக்கும் அற்புதமான அந்தக் கேள்வியால் திகைத்துப் போகும் ஜனாதிபதி, நிருபமாவை சந்திக்க அழைப்பு அனுப்புகிறார்.

வயதாகிவிட்டது என்கிற உள்ளுணர்வால் குறுகிக்கிடந்த நிருபமா, இதை வெளியில் சொல்ல, ஊரே அவளைக் கொண்டாடுகிறது. மீடியாக்களில் பிரபலமாகிறார். இதற்கிடையே, அது என்ன கேள்வி என்று தெரிந்துகொள்வதற்காக, மகளிடம் பேசுவாள். அவளோ... சொல்ல மறுத்துவிடுவாள். என்றாலும் ஒருவாறு தெம்புகூட்டிக் கொண்டு, ஜனாதிபதிக்கு கொடுப்பதற்காக ஊறுகாய், கேரளாவின் ஸ்பெஷல் எள்ளுருண்டை போன்றவற்றுடன் செல்கிறாள் நிருபமா. ஆனால், அந்தக் கேள்வி என்ன என்பது கடைசி வரை தெரிந்துகொள்ள முடியாமலேயே! ஜனாதிபதியை சந்திக்கும் முன்பாக, அதீத கெடுபிடி பரிசோதனைகளுக்கு ஆளாகும் நிருபமா, சந்திப்பு நேரம் நெருங்க நெருங்க பயத்துடன் திகைக்கிறாள். இறுதியாக, ஜனாதிபதி எதிரே வந்து நிற்க... அவள், சடாரென மயங்கிச் சரிந்துவிழ... அந்த சந்திப்பும் தோல்வியிலேயே முடிகிறது.

ஃபேஸ்புக்கில் இதைப் பற்றி கேலியும் கிண்டலும் வெடிக்கிறது. பள்ளிக்கூடத்தில் இதை வைத்து நிருபமாவின் மகளும் கேலி கிண்டலுக்கு ஆளாகிறாள். இந்தச் சூழலில், கணவர் வேலைக்காகவும், மகள் படிப்புக்காகவும் அவளை விட்டுப் பிரிந்து அயர்லாந்து செல்கிறார்கள். இதனால், மேலும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகும் நிருபமாவை, '14 வருடங்களுக்கு முன் கல்லூரியில் கம்ப்யூட்டர் லேப்-ஐ போராடிப் பெற்றுக் கொடுக்கும் அளவுக்கு இருந்த நிருபமாவா, இப்படி கேலிக்கு ஆளாவது..?’ என்று கல்லூரி தோழி சூசன் (கனிகா) கேட்க, கண்கள் பிரகாசிக்கிறது அவளுக்கு. ஃபேஸ்புக்கில் தன்னை கிண்டல் செய்தவர்களுக்கு, தான் மயங்கி விழுந்த காரணத்தை வீடியோ மூலம் நடித்துக் காட்டி, கைதட்டல் வாங்குகிறாள். இதற்கு நடுவே, தன் மாடித்தோட்டத்தில் இயற்கை முறையில் இவள் காய்கறிகள் வளர்க்கும் விஷயம்... இவளை ஊருக்கே அடையாளமாக மாற்றுகிறது. கணவர், மகளுடன் மீண்டும் சேர்ந்தாளா... மீண்டும் ஜனாதிபதியை சந்தித்தாளா... அது என்ன முக்கியமான கேள்வி என்பது போன்ற சுவாரஸ்யங்களை எழுத்தில் தெரிந்துகொள்வதைவிட, காட்சிகளாகக் காண்பதே சிறப்பு. காரணம், அப்படி வாழ்ந்து காட்டியிருக்கிறார்... மஞ்சு வாரியர்!

'நான் காலேஜ் படிக்கிறப்போ கோல்டு மெடல் வாங்கியிருக்கேன் தெரியுமா? இப்போ சாதிக்கிற வயசையெல்லாம் கடந்தாச்சு!’ என்று பெருமூச்சுடன், மெனோபாஸ் பயத்தில் முடங்கும் பெண்களின் தலையில் குட்டுகிறாள் நிருபமா.

படிப்பு மட்டுமே பெண்ணுக்கான திறமை அல்ல, கோலம், சமையல், எம்ப்ராய்டரி, ஏன்... வீட்டுத் தோட்டத்தில் காய்கறி போடுவதுகூட பெண்களின் அசாத்தியமான திறமைதான். எந்தத் திறமையாக இருந்தாலும் அதை முழுமூச்சோடு செய்யும்போது வெற்றி கிட்டும் என்பதை, 'வயது ஒரு தடை அல்ல' என்ற மெஸேஜுடன் உரக்கச் சொல்கிறது, 'ஹவ் ஓல்ட் ஆர் யூ’!

'யுவர் ட்ரீம் இஸ் யுவர் சிக்னேச்சர்'!

படம் குறித்து மஞ்சு வாரியர் பேசும்போது, ''பதினாலு வருஷம் கழிச்சு மறுபடியும் நடிக்க வந்ததுக்கு கடவுளோட ஆசீர்வாதம்தான் காரணம். எனக்கு என்னோட பழைய வாழ்க்கை திரும்ப கிடைச்ச மாதிரி இருக்கு. படத்துல நடிக்கும்போதே இந்தப் படம் கண்டிப்பா ஹிட் ஆகும்னு டைரக்டர் என்கிட்ட சொன்னார். அவர் என்ன சொன்னாரோ... அதைத்தான் நடிச்சேன். படம் பார்த்துட்டு ரசிகர்கள் எஸ்.எம்.எஸ், ஃபேஸ்புக், போன் இப்படி பாராட்டிட்டே இருக்காங்க.

14 வருஷத்துக்கு முன்ன நான் நடிக்கும்போது இருந்ததைவிட, இப்போ படப்பிடிப்புல நிறைய டெக்னாலஜி மாற்றங்கள் வந்திருக்கு. ஆனா, எவ்ளோதான் டெக்னாலஜி வளர்ந்தாலும் நடிப்பு ஒண்ணுதான். திரும்பவும் நடிப்பேன்னு நினச்சுகூட பாக்கல. நான் நடிக்க வந்ததும் அந்த வெற்றியும் கடவுளோட கிஃப்ட். நான் இப்போ பழைய மாதிரி டான்ஸ் ஆடுறதப் பாத்து எல்லாரும் என்னை சின்ன ஷோபனானு சொல்றாங்க. கேட்கவே எனக்கு சந்தோஷமா இருக்கு. 'யுவர் ட்ரீம் இஸ் யுவர் சிக்னேச்சர்' (Your dream is your signature) இதுதான் படத்துல ஃபேமஸ் டயலாக். இதுதான் என்னோட நிஜ வாழ்க்கையும்கூட. என்னோட கனவு இன்னிக்கு சினிமா மூலம் என்னோட அடையாளமா மாறியிருக்கு. வயதாகறதும்..., 'நம்மால இனி எதுவுமே செய்ய முடியாதோ'னு ஏங்குறதும் பொதுவா எல்லா குடும்பத் தலைவிகளும் அனுபவிக்கும் பிரச்னைதான். ஆனா, நாம மனசு வெச்சா முடியாதது எதுவும் இல்ல. உங்க அடையாளம் உங்க கையிலதான் இருக்கு. நான்தான் இதுக்கு உதாரணம்'' என்று சிரிக்கிறார்.

வாட வைக்கும் வயசு... வாழ வைக்கும் மனசு!

தடைகளில் இருந்து மீண்டு வந்த மஞ்சு!

'ஹவ் ஓல்டு ஆர் யூ’ படத்தின் இயக்குநர் ரோஷன் ஆண்ட்ரூ நம்மிடம் பேசியபோது, ''ஒரு நாள் கண்ணாடி முன் நின்றபோது, சில முடிகள் நரைத்திருந்ததை கவனித்தேன். 'நமக்கு வயசாயிடுச்சா..?’ என்ற புலம்பல் ஆரம்பித்தது. என் மனைவி, நண்பர்களிடம் பேசியபோது, அவர்களுக்கும் இந்தப் பிரச்னை உள்ளது புரிந்தது. நரை வந்தால், சாதிக்கும் வயதைக் கடந்துவிட்டோம் என்று, எல்லைக்கோடு போட்டுக்கொள்கிறோம். ஆனால், சாதனைக்கு வயது தடையில்லை என்பதுதான் உண்மை. இந்த ஒன் லைனை படமாக்க முடிவு செய்தேன். வெற்றியை எட்டியவர்கள், எட்டாதவர்கள் இரண்டு தரப்பினரிடமும் கேட்கப்படும் கேள்வி ஒன்றுதான்... 'ஹவ் ஓல்ட் ஆர் யூ’? அதையே படத்துக்கு தலைப்பாக்கினேன். 'நிருபமா’ போலவே, தன் நிஜ வாழ்க்கை தடைகளில் இருந்து மீண்டு வந்த மஞ்சு வாரியர், படத்துக்கு ஜீவன் தந்திருக்கிறார்!'' என்று வெற்றிக்களிப்புடன் சொல்கிறார்.