ஸ்பெஷல் 1
Published:Updated:

பொம்முக்குட்டி... விருதுக்குட்டி!

பொன்.விமலா

'பொம்முக்குட்டி அம்மாவுக்கு ஆராரோ!’

- இந்தப் பாடல் நினைவிருப்பவர்களுக்கு, அதில் வரும் பாப்பாவும் நினைவிருப்பாள். அது... கீது மோகன்தாஸ். இவர், 'நளதமயந்தி’ திரைப்படத்தில் மாதவனுக்குக் கதாநாயகியானது அனைவருக்கும் தெரியும். இப்போது, இயக்குநர் அவதாரமும் எடுத்து, முதல் படத்திலேயே விருதுகளைக் குவித்திருக்கிறார்!

பாலிவுட்டின் பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவியின் காதல் மனைவியாகியிருக்கும் கீது மோகன்தாஸ், 2008-ம் ஆண்டு 'கேல்க்குன்டோ’ எனும் மலையாள குறும்படத்தை இயக்கினார். இதையே, 'லயர்ஸ் டைஸ்' (பகடை விளையாட்டு) என்கிற பெயரில் இந்தி திரைப்படமாக கடந்த ஆண்டு வெளியிட்டார். இந்திய - திபெத் எல்லையோர இமாசல பிரதேச கிராமத்தில் வாழும் கமலாவின் கணவன், பிழைப்புக்காக டெல்லி சென்று மாதக்கணக்கில் வீடு திரும்பாமலிருப்பான். அவனைத் தேடி, பெண் குழந்தையுடன் டெல்லி செல்லும் கமலா, நகரத்தோடு ஒட்ட முடியாமல் படும் சிரமங்களும், வழிப்போக்கனாக வரும் நவாஜுத்தீன் என்பவன் அவளுக்கு உதவுவதும், அதை மற்றவர்கள் வேறுவிதமாய் பார்ப்பதும், அதனால் எழும் குழப்பங்களுமே படம்.

பொம்முக்குட்டி... விருதுக்குட்டி!

இந்தப் படத்தை மிக யதார்த்த சினிமாவாகத் தந்திருந்த கீது மோகன்தாஸுக்கு, சன்டேன்ஸ் திரைப்பட விழா, ரோட்டர்டாம் திரைப்பட விழா, ஷோஃபியா திரைப்பட விழா, மும்பை திரைப்பட விழா போன்றவற்றில் ஸ்பெஷல் ஜூரி விருதுகள் கிடைத்தன. 'வெரைட்டி’ போன்ற வெளிநாட்டு பத்திரிகைகள் சிறந்த அறிமுக இயக்குநர் என கீதுவைக் கொண்டாடின. முத்தாய்ப்பாக, கடந்த ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில் சிறந்த நடிகைக்கான விருதை 'கமலா’வாக நடித்திருந்த கீதாஞ்சலி தாபாவும், சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை ராஜீவ் ரவியும் பெற்றுள்ளனர்

''கேல்க்குண்டோ', சிறந்த குறும்படமாகத் தேர்வானதற்காக எட்டே முக்கால் லட்ச ரூபாய் உதவித்தொகை கிடைத்தது. அதையே முதலீடாகக் கொண்டு, வெள்ளித்திரைப் படமாக எடுத்தேன். 'நீ என் மனைவி இல்லை. இயக்குநர் மட்டுமே. அந்த நினைப்போடு உன் மனதில் வடித்திருக்கும் காட்சிகளை அப்படியே நான் கொடுக்கும் வரை, என்னிடம் வேலை வாங்கு’ என்றார் கணவர். ஒரே மாதத்தில் படத்தை முடித்தோம். விருதுகள், எனக்கு இன்னும் எனர்ஜி கொடுத்திருக்கிறது. 'பேரலல் சினிமா' என்கிற விஷயத்தை தாண்டி, வணிக ரீதியான சினிமாவிலும் சாதிக்க வேண்டும். ஸ்கிரிப்ட் எழுதிக்கொண்டிருக்கிறேன்!''

- புன்னகையுடன் சொல்லும் இந்த 'பொம்முக் குட்டி அம்மா’, இப்போது ஒன்றரை வயதுக் குழந்தைக்கு அம்மா!