ஸ்பெஷல் 1
Published:Updated:

40+ ஆனால் என்ன... மனது வைத்தால் ஜெயிக்கலாம்!

அதிரடி 'ரேடியோ பெண்' மோகனா பொன்.விமலா

தொலைக்காட்சியின் ஆதிக்கத்தால் ஒரேயடியாக ஓரங்கட்டப்பட்ட வானொலி, 'எஃப்.எம்’ (பண்பலை அலைவரிசை) மூலமாக மீண்டும் உயிர்பெற்று அசத்திக்கொண்டிருக்கிறது. வானொலி கேட்போரின் எண்ணிக்கை, பெருகியிருக்கிறது. அடுத்த பாய்ச்சலாக வந்திருப்பது... ஆன்லைன் ரேடியோ. இதை கையில் எடுத்து, அமெரிக்காவில் இருந்தபடி அசத்திக்கொண்டிருக்கிறார் ஒரு தமிழ்ப்பெண்! அதிலும், 40 வயதைக் கடந்த நிலையில், இதைச் சாதித்துக்கொண்டிருப்பதுதான் அழகு!

எங்கேயும் எந்தநேரமும் கேட்டுக்கொண்டே இருக்கும் வகையில், புதிய பரிணாமம் பெற்றிருக்கும் ஆன்லைன் ரேடியோ உலகில், 'தமிழ்குஷி.காம்’ (http://tamilkushi.com) எனும் ரேடியோவை நடத்திக்கொண்டிருக்கிறார் மோகனா ஓபேஷ். சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்தவருடன் ஒரு சந்திப்பு நமக்கு!

''நான், சென்னைப் பெண்தான். திருமணத்துக்குப் பிறகு அமெரிக்கா போய் 16 வருஷமாச்சு. அமெரிக்காவில் இருந்தாலும் என் மண்வாசம் மேல எப்பவுமே தனி பிரியமும் மரியாதையும் இருக்கும்...'' என்று மண்பாசத்தை முதலில் எடுத்து வைத்த மோகனா, தொடர்ந்தார்.

40+ ஆனால் என்ன... மனது வைத்தால் ஜெயிக்கலாம்!

''நல்லா படிக்கணும், கோல்டு மெடல் வாங்கணும்ங்கிறதெல்லாம்தான் ஆரம்ப கனவுகள். அதெல்லாம் கைகூடவும் செய்துச்சு. 18 வருஷமா பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள்ல வேலை பார்த்து முடிச்சப்ப... 40 வயசுல வந்து நின்னேன். அடுத்த இலக்கை தேடி ஓடலாம்னு ஆரம்பிச்சப்ப, வந்து நின்னதுதான், 'தமிழ்குஷி.காம்’. ஒண்ணரை வருஷமா வெற்றிகரமா ஒலிச்சுட்டிருக்கு.

இந்த ரேடியோவை 109 நாடுகள்ல கேட்கலாம். அதையும் 187 வகையான தொழில்நுட்பங்கள் மூலமா கேட்க முடியும். உதாரணத்துக்கு, இணையதளம், மொபைல், ஆண்ட்ராய்ட் இன்னும் சில மென்பொருட்கள் மூலமாவும் கேட்கலாம். அறுபதுக்கும் மேற்பட்ட சேனல்களை, 24 மணி நேரமும் ஒலிபரப்பிட்டு இருக்கோம். நிறைய மாறுபட்ட நிகழ்ச்சிகளைக் கொடுத்துட்டு இருக்கோம். உதாரணமா, 'காதலா காதலா’! நிகழ்ச்சியோட தலைப்பை கேட்டதும்... காதல் பாட்டு ஒலிபரப்பாகிற நிகழ்ச்சினு நினைக்கத் தோணும். ஆனா, நம் இதிகாசத்தில் காதல் எப்படி இருந்துச்சு, அதற்கடுத்த காலங்கள்ல எப்படி இருந்துச்சு, இப்போ எப்படி இருக்குனு... இந்த நொடி விஷயங்களோட, நாம மறந்து போன விஷயங்களையும் ரீ-மேக் செய்து புதுப்பொலிவோட தர்றோம்.

40+ ஆனால் என்ன... மனது வைத்தால் ஜெயிக்கலாம்!

'இசை சஞ்சீவினி’ நிகழ்ச்சி, இசை தெரபியா இருந்து, பலரோட மன உளைச்சலுக்கும் மருந்தா அமையுது. 'மாதவிடாய்’ என்கிற தலைப்பிலான நிகழ்ச்சியை நடத்தினோம். இந்த சந்தர்ப்பத்துல பெண்கள் சந்திக்கும் அத்தனை பிரச்னைகளையும், குடும்பத்தினரின் புரிதலையும் நிகழ்ச்சியில விளக்கி இருந்தோம். மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைச்சுது.

'தமிழ்குஷி.காம்’ மூலமா பாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டி இதெல்லாம் நடத்துறோம். ஆடிஷன்ங்கிற பேர்ல போட்டியாளர்களோட நேரத்தையும் உழைப்பையும் வீணடிக்காம, அவங்க இருக்குற இடத்துல இருந்தே போட்டிக்கு விண்ணப்பித்து, கலந்துகிட்டு ஜெயிக்கிற வசதியையும் கொண்டு வந்திருக்கோம். 'ஹலோ தோழி’ நிகழ்ச்சியை ஆண்களுக்காகவும், 'ஹலோ தோழா’ நிகழ்ச்சியை பெண்களுக்காகவும் நடத்துறோம். இது ஆண்கள், பெண்களைப் பற்றியும்; பெண்கள், ஆண்களைப் பற்றியும் புரிந்துகொள்ள உதவுற நிகழ்ச்சி. நிகழ்ச்சியைக் கேட்டு, பாகிஸ்தான் தமிழர்கள் வியந்து பாராட்டினப்போ, சரியான இலக்கை நோக்கிப் போயிட்டு இருக்கேன்னு உணர்ந்தேன்'' என்ற மோகனா,

''எங்க ரேடியோவோட இன்னொரு சிறப்பு... நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் இலங்கை, சிங்கப்பூர், இந்தியா, ஃபிரான்ஸ், கனடா, அமெரிக்கானு உலகம் முழுக்கப் பரவி இருக்காங்க. இவங்க யாருமே, செயற்கைக்கோள் மூலமா இயங்குற எஃப்.எம் போல நேரடியா ஸ்டுடியோவுக்கு வந்து நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கணும்ங்கிற அவசியமில்ல. அவங்க இருக்குற இடத்துல இருந்தே மொபைல் மூலமாகவோ அல்லது இன்டர்நெட் மூலமாகவோ தொகுத்து வழங்கலாம். இந்த வசதியால எங்களோட நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் பெரும்பாலும் இல்லத்தரசிகளாவும், கல்லூரி மாணவிகளாவும், அலுவலகம் செல்லும் பெண்களாவும் இருக்குறது வரவேற்கக் கூடியது. இன்னொரு கூடுதல் சிறப்பு, நம்ம நாட்டுல ஒரு நிகழ்ச்சி 8 மணிக்கு ஒளிபரப்பானா, மற்ற நாடுகளிலும் அவரவர் நேரத்தில் அதே 8 மணிக்குதான் ஒளிபரப்பாகும். அலைவரிசை நுழையாத இடங்கள்லயும் 'தமிழ்குஷி.காம்’ அசத்திக்கிட்டிருக்கு!

ஒரு கணக்கெடுப்புப்படி அதிகபட்சமா ரேடியோ கேட்கக் கூடிய நேரம் 15 முதல் 25 நிமிடங்கள்னு சொல்றாங்க. ஆனா, இந்தக் கணக்கை முறியடிச்சு, அதிகபட்சமா தொடர்ந்து 65 நிமிடத்துல இருந்து 4 மணி நேரம் வரைக்கும் ரேடியோ கேட்க வெச்சுருக்கு எங்க தமிழ்குஷி.காம்!'' என்று உற்சாகம் குறையாமல் சொல்லும் மோகனாவின் பேச்சில் தெரிகிறது... 'ஒலி’மயமான எதிர்காலம்!