ஸ்பெஷல் 1
Published:Updated:

கேம்பஸ் இன்டர்வியூக்கள்... வரமா... மாயவலையா?

வே.கிருஷ்ணவேணி

'கேம்பஸ் இன்டர்வியூவில் 100% பிளேஸ்மென்ட்!’

- இந்த விளம்பரத்தை முன்னிறுத்திதான் இன்று பல பொறியியல் கல்லூரிகளும் மாணவர் சேர்க்கை நடத்துகின்றன. 'கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆகி, படிப்பை முடிச்ச கையோட சுடச்சுட வேலையில் சேர்ந்துட்டேன்!’ என்று சொல்லும் மாணவர்களைப் பார்த்து ஆச்சர்யப்படும் அதேவேளையில், 'அட, கேம்பஸ் இன்டர்வியூ எல்லாம் வெறும் கண்துடைப்பு!’ என்று புலம்பும் மாணவர்களைப் பார்த்து அதிர்ச்சி அடையாமலும் இருக்க முடியவில்லை. 'உண்மையில், கேம்பஸ் இன்டர்வியூக்கள் என்பது வரமா, மாயவலையா.?’ எனும் கேள்வியுடன் சென்னையைச் சேர்ந்த மனிதவள மேம்பாட்டாளர்கள் இருவரைச் சந்தித்தோம்.  

''கேம்பஸ் இன்டர்வியூவின் நம்பகத்தன்மை, நீங்கள் சேரும் கல்லூரியைப் பொறுத்தது!'' என்று ஆரம்பித்தார், 'மனிதவள மறுமலர்ச்சி மைய’த்தின் இயக்குநர், டாக்டர். கே.ஜாஃபர் அலி.

கேம்பஸ் இன்டர்வியூக்கள்... வரமா... மாயவலையா?

கல்லூரியின் தரம் பார்த்து போடவும் அட்மிஷன்!

''வெறும் விளம்பர ஜாலங்களை மட்டுமே நம்பி ஏமாந்துவிடாமல், பிளேஸ்மென்ட்டில் நல்ல ரெக்கார்டு உள்ள தரமான கல்லூரியாகப் பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டியது முதல் முக்கிய விஷயம். அந்தக் கல்லூரியில் இதுவரை எத்தனை நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வியூ நடத்தியிருக்கிறார்கள், அதில் எத்தனை சதவிகித மாணவர்கள் உறுதியான வேலைவாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள் என்பதைப் பற்றி, அங்கு படிப்பை முடித்த மாணவர்களிடம் கேட்டு விசாரித்துக்கொள்ளலாம்.

கேம்பஸ் இன்டர்வியூ நடத்தும் நிறுவனங்களின் தர வரிசையை, டயர் (Tier) 1 நிறுவனங்கள், டயர் 2 நிறுவனங்கள், டயர் 3 நிறுவனங்கள் என்று குறிப்பிடுவதுண்டு. இவற்றில், டயர் 1 நிறுவனங்கள், டாப் 1 கல்லூரிகளில் மட்டுமே கேம்பஸ் இன்டர்வியூ நடத்த முன்வரும். அடுத்தடுத்த ரேங்குகளில் உள்ள கல்லூரிகளுக்கு, அடுத்தடுத்த தர வரிசையில் உள்ள நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வியூவுக்கு செல்லும். இதைத் தெளிவுபடுத்தும் வகையில், அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல் தற்போது வெளியாகியிருக்கிறது. இது அந்த நிறுவனங்களுக்கும், நம் மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். அதேபோல, ஒரே பெயரிலும், எழுத்து மட்டுமே வித்தியாசப்பட்டும் பல பொறியியல் கல்லூரிகள் இருப்பதால், அதைச் சீர்படுத்த வேண்டிய கோரிக்கையும் அண்ணா பல்கலைக்கழகத்திடம் வைக்கப்பட்டுள்ளது.

கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகியும் வேலை கிடைக்கவில்லையா?!

பொறியியல் முடித்தவர்கள், கேம்பஸ் இன்டர்வியூ இல்லை என்றாலும், வேலைவாய்ப்பை பெறமுடியும். என்றாலும், ஆரம்பத்தில் வழங்கப்படும் சம்பளத்தில்தான் வித்தியாசம் அதீதமாக இருக்கும். ஒரு சில நிறுவனங்கள், கேம்பஸ் இன்டர்வியூ மூலம் தாங்கள் தேர்ந்தெடுக்கும் மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய பிறகும், அவ்வளவு சுலபமாக பணியில் அமர்த்துவதில்லை. இறுதியில் கையை விரிப்பதும்கூட நடக்கிறது. ஆனால், அந்த நிறுவனத்தின் வேலைக்காக, படிப்பை முடித்தபின் கிட்டத்தட்ட ஒரு வருடம் வரைகூட காத்திருக்கும் பட்டதாரிகள், அது இல்லை என்றான பிறகு, வேறு நிறுவனங்களை நாடிச் செல்கிறார்கள். ஒரு வருட தாமதத்தால் அவர்களுக்கு வேலைவாய்ப்பு கடினம் ஆகிறது.

கேம்பஸ் இன்டர்வியூக்கள்... வரமா... மாயவலையா?

எனவே, இதுபோன்ற ஏமாற்று நிறுவனங்கள் நம் வீட்டுப் பிள்ளைகளின் எதிர்காலத்தோடு விளையாடாமல் இருக்க, அவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் அனுமதி பெற்றே, அதன் கீழ் இயங்கும் கல்லூரிகளில் கேம்பஸ் இன்டர்வியூ நடத்த வேண்டும் என்று முறைப்படுத்த வேண்டும். அப்போதுதான், வேலைவாய்ப்பில் மாணவர்கள் ஏமாற்றப்பட்டால், அந்த நிறுவனங்களை கேள்வி கேட்க முடியும்; புற்றீசல் நிறுவனங்கள் நடத்தும் கண்துடைப்பு இன்டர்வியூக்களை வரைமுறைப்படுத்தவும் முடியும்.

படித்த கல்லூரியிலேயே வேலை... வேண்டாம்!

சில கல்லூரிகள், தங்கள் மாணவர்கள் படிப்பை முடித்தவுடன், தங்களின் கல்லூரியிலேயே மேற்படிப்பு படிக்கும் மாணவர்களையே ஆசிரியர்களாகவும் பணியமர்த்திக் கொள்கிறார்கள். இந்த வழக்கத்தை அண்ணா பல்கலைக்கழகம் இப்போது தடை செய்துள்ளது. காரணம், அப்படி பணியில் அமர்த்தும்போது அந்தக் கல்லூரி அந்த மாணவர்களுக்கு மிகக்குறைவான சம்பளமே நிர்ணயிக்கிறது. எனவே, அந்த சாய்ஸையும் மாணவர்கள் எடுக்க வேண்டாம்'' என்று அறிவுறுத்தி முடித்தார், ஜாஃபர் அலி.

கேம்பஸ் இன்டர்வியூ... வரப்பிரசாதம்!

''நிறுவனங்கள் எப்படி இருந்தாலும், கேம்பஸ் இன்டர்வியூ மூலமாக வேலை கிடைப்பது என்பது, சம்பந்தப்பட்ட மாணவனிடம்தான் இருக்கிறது'' என்கிறார் சென்னையைச் சேர்ந்த மனிதவள மேம்பாட்டு நிறுவனமான 'காம்ஃபை சொல்யூஷன்’ மனிதவள ஆலோசனை நிறுவனத்தின் இயக்குநர் ஏ.கே.சுகுமாரன்.

''தமிழகத்தில் 594 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. ஆனால், பெரிய நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வியூ நடத்துவது, டாப் 30 கல்லூரிகளில்தான். மற்ற பொறியியல் கல்லூரிகள் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு, பி.பீ.ஓ மற்றும் கால் சென்டர் பணிகள், கேம்பஸ் இன்டர்வியூ மூலம் கிடைக்கின்றன. எனவே, கேம்பஸ் இன்டர்வியூ என்பது, திறமையான மாணவர்களுக்கு வரப்பிரசாதமே.

திறன் வளர்க்க வேண்டும்!

மதிப்பெண் சதவிகிதம் அதிகமாக வைத்திருக்கும் மாணவர்களுக்குக்கூட, ஸ்கில்ஸ் மற்றும் டெக்னிகல் ரீதியான விஷயங்களில் முழுமையான கற்றல் இருக்காது. எனவே, அவற்றில் கவனம் செலுத்த வேண்டும். சில வருடங்களுக்கு முன்பெல்லாம், ஆப்டிட்யூட் டெஸ்ட், டெக்னிகல் டெஸ்ட் என்று இந்த இரண்டு தேர்வுகள் மட்டுமே இருந்தன. இன்று அப்படியல்ல. நிறுவனங்கள், குரூப் டிஸ்கஷன், செல்ஃப் இன்டர்வியூ, டெக்னிகல் இன்டர்வியூ, சிஸ்டம் பிராக்டிகல் டிரெயினிங், ஆஃப் கேம்பஸ், வாக்கிங் இன்டர்வியூ என்று பலதரப்பட்ட நேர்காணல்களை நடத்துகிறார்கள். எனவே, மாணவர்கள் தங்கள் திறன்களையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். புராஜெக்டை விலை கொடுத்து வாங்கும் மாணவர்கள், வேலை கிடைக்கவில்லை என்று புலம்புவதில் அர்த்தமில்லை. அதேசமயம், திறமையும் புதுமையும் கைகோத்திருக்கும் மாணவர்களை எந்த நிறுவனமும் தவறவிடுவதில்லை.

கேம்பஸ் இன்டர்வியூக்கள்... வரமா... மாயவலையா?

இன்டர்வியூவில் தவறவிடுவது எங்கே?

'கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகியும் வேலை கொடுக்கல' என்று சிலர் புலம்பக் கேட்டிருக்கலாம். காரணம், கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகி பணியில் அமரும் இடைப்பட்ட காலத்தில், 'நமக்குத்தான் வேலை கிடச்சிருச்சே!’ என்று சம்பந்தப்பட்ட மாணவன் தன் துறையின் அப்டேட்களை கற்காமல் விட்டுவிடுகிறான். ஆறு மாதங்கள் கழித்து அந்த நிறுவனம் அவனை அழைத்து இறுதித் தேர்வு வைக்கும்போது, வெற்றிபெற முடியாமல் போகிறது. எனவே, கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகிவிட்டால் மட்டும் அல்ல, பணியிலேயே அமர்ந்துவிட்டாலும், துறை சார்ந்த அப்டேட்களோடு இணைத்துப் பயணித்தால்தான் எந்த வேலையிலும் நிலைக்க முடியும்.

கேம்பஸ் இன்டர்வியூவில் நம்பிக்கை வைத்து, விழித்தெழுங்கள்!

இந்த வருடமும் பல மல்டிநேஷனல் நிறுவனங்கள் தங்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ மூலம் பணியாட்களை எடுக்கக் காத்திருக்கிறார்கள். அதற்காக உங்களைத் தயார்படுத்த முழு உழைப்பையும் கொடுங்கள். ஒருவேளை, தொடர்ந்து கேம்பஸ் இன்டர்வியூவில் தமிழகம் பின் தங்கினால், அந்த நிறுவனங்கள் பக்கத்து மாநிலங்களை நோக்கிச் சென்றுவிடுவார்கள். எனவே, தகுதியை உயர்த்திக்கொள்ளுங்கள், கேம்பஸில் தேர்வாகுங்கள்'' என்று வாழ்த்துகள் சொல்கிறார் சுகுமாரன்.