ஸ்பெஷல் 1
Published:Updated:

ஒரு மணி நேரத்துக்கு 20 டாலர்...

கிராஃபிக்ஸ் கில்லியின் பளீர் கிராஃப்! சுகன்யா வர்மா

''நான் ஒரு வெற்றிகரமான கிராஃபிக் டிசைனர். கலைக்கு ஆண், பெண் என்ற வேறுபாடுகள் கிடையாது. ஒரு டிசைனரின் போர்ட்ஃபோலியோ திடமாக இருந்தால், வாய்ப்புகள் அவரை தானாகத் தேடி வரும். இதுதான் இந்தத் துறையில் விதி. அது எனக்கு நிகழ்ந்துகொண்டிருக் கிறது!''

- ஒவ்வொரு வார்த்தையும் தன்னம்பிக்கை நிறைந்ததாக இருக்கிறது, 27 வயதான கிராஃபிக் டிசைனர் அர்ச்சனாவுக்கு! தேசிய அளவில், உலக அளவில் பல்வேறு புராஜெக்ட்டுகள் மூலமாக புயலென முன்னேறி வருபவரிடம் பேசினோம்.

ஒரு மணி நேரத்துக்கு 20 டாலர்...

''பிறந்து, வளர்ந்தது சட்டீஸ்கரில் இருக்கும் பிலாஸ்பூர். என் பாட்டியின் ரங்கோலியும் ஓவியங்களும் தூண்டுகோலாக இருந்து, என்னையும் ஒரு படைப்பாளியாக வளர்த்தன. என் குடும்பத்தில் அனைவரும் பொறியாளர்கள். நான் கிராஃபிக் ஆர்ட்டிஸ்டாக வருவேன் என்று அவர்கள் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. 'இன்ஜினீயரின் பிள்ளை, இன்ஜினீயராவதில் வியப்பேதுமில்லை. ஆனால், டிசைனிங் பற்றி எதுவும் தெரியாத நம் குடும்பத்தில் இருந்து, இந்தத் துறைக்கு செல்வதை, பெருமையாகவும் சவாலாகவும் நினைக்கிறேன்!’ என்றபோது, 'ஆல் தி பெஸ்ட்’ சொல்லி அனுப்பினார்கள்'' என்றவர், இந்தத் துறைக்காக தான் கற்ற கல்வி குறித்துப் பேசினார்.

''கல்லூரியில் மேத்ஸ் படிக்கும்போதே, மல்டிமீடியாவில் டிசைனிங் கோர்ஸ் படித்தேன். அதுதான் என்னை இவ்வளவு தூரம் அழைத்து வந்திருக்கிறது. கோர்ஸ் முடித்தவுடன் ஒரு எம்.என்.சி நிறுவனத்தில் வேலை கிடைத்தது. கூடவே, ஃப்ரீலான்ஸ் (தனிப்பட்ட வகையில்) அடிப்படையிலும் டிசைனிங் செய்யத் தொடங்கினேன். விளம்பரங்களுக்கு, பெரிய கம்பெனிகளின் லோகோ, காலேஜ் அளவில் நடக்கும் போட்டிகளுக்கான டிசைன் என்று கற்பனைக்கு வழிவகுக்கின்ற எல்லாவிதமான டிசைனும் செய்வேன். எனக்கு வருகின்ற புராஜெக்ட், அந்த கம்பெனி பற்றி முழுமையாக அறிந்துகொண்டு, அதற்கு எப்படி கிரியேட்டிவாக டிசைன்கள் வரையலாம் என்று முடிவெடுத்த பின்பு, பென்சில், ஸ்கெட்ச் என்று முதலில் மனதில் தோன்றும் டிசைன்களை பேப்பரில் வரைவேன். அவற்றை அப்படியே கம்ப்யூட்டரில் ஏற்றி, டிசைன்களுக்கான சாஃப்ட்வேர்களைப் பயன்படுத்தி வரைந்து முடிப்பேன்'' என்றவர்,

''திருமணத்துக்குப் பிறகு, நானும் ஐ.டி புரோகிராம் மேனேஜரான என் கணவர் அரவிந்த் நாராயணனும் அமெரிக்காவின் சிகாகோவில் குடியேறினோம். மூன்று வருடங்கள் ஒரு நிறுவனத்தில் சீனியர் டிசைனராக வேலை பார்த்தேன். பிறகு முழுநேரமும் ஃப்ரிலான்ஸ் பண்ணத் துவங்கினேன்'' எனும் அர்ச்சனா, டிசைனர் மற்றும் ஆர்ட்டிஸ்ட்களுக்கு தூண்டுதலாக 'தி டூடுள் டைம்' (The Doodle Time) என்ற கம்யூனிட்டி நடத்தி வருகிறார். இதில் அவர்களின் படைப்புகளை பகிர்ந்துகொள்ளச் செய்து, அங்கீகாரத்துக்கு வழிகள் திறக்கிறார்.

ஒரு மணி நேரத்துக்கு 20 டாலர்...

''நான் தனியாக வேலைகளை ஆரம்பித்தவுடன் சுறுசுறுப்பாக பல புராஜெக்ட்டுகள் எடுத்தேன். ஆனால், நேரமின்மை காரணமாக முழுவதுமாக முடிக்க இயலாமல் போனது. அந்தத் தவற்றை சில நாட்களிலேயே உணர்ந்த  பிறகு எல்லா புராஜெக்ட்டுகளுக்கும் கெடு தேதி வைத்து முடிப்பதை வழக்கமாக்கினேன். அதிகமான வேலைகளை எடுப்பதைத் தவிர்த்தேன்.

ஒரு மணி நேரத்துக்கு 20 டாலர்...
ஒரு மணி நேரத்துக்கு 20 டாலர்...

பொதுவாக, டிசைன் ஆரம்பிக்கும் முன்பு அந்த க்ளையன்ட்டின் தேவையை புரிந்துகொள்ள வேண்டும். அதற்குத் தகுந்தவாறு நேரத்தை அமைத்துக்கொண்டு வேலையை ஆரம்பிக்க வேண்டும். டிசைனிங்கில், குறிப்பாக டி ஷர்ட் டிசைனிங் செய்வதில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. இதற்காக, குறிப்பிட்ட சில சாஃப்ட்வேர்களை (Adobe Illustrator, Photoshop, Indesign, Dreamweaver & Flash) பயன்படுத்துகிறேன்'' என்ற அர்ச்சனா, இந்தத் துறையில் கால் வைத்த ஆறு ஆண்டுகளில் தான் எட்டியுள்ள உயரத்தை, தனக்கான ஊதியங்களின் மூலம் புரியவைக்கிறார்.

''என்னுடைய முதல் டிசைன், ஒரு புத்தகத்துக்காக செய்து. இதற்கு கிடைத்த தொகை, 200 ரூபாய். இப்போது நான் என் க்ளையன்ட்டிடம் ஒரு மணி நேரத்துக்கு 20 டாலர் வாங்குகிறேன். அல்லது புராஜெக்டை பொறுத்து 80 - 120 டாலர் வரை வாங்குகிறேன். இதுவரை 16 இன்டர்நேஷனல் புராஜெக்ட்டுகள் மற்றும் 20 நேஷனல் புராஜெக்ட்டுகள் செய்திருக்கிறேன்.

'String Temple', 'Show Me Action'  போன்ற பெயர் பெற்ற மியூஸிக் பேண்ட் குழுக்களுக்கு வேலை செய்து கொடுத்திருக்கிறேன். என்னுடைய சிறப்பான டிசைன்கள், 'க்ரியேட்டிவ் ககா மேகஸின்' மற்றும் 'ஆன்லைன் கம்யூனிட்டி'யில் வெளிவந்திருக்கிறது'' எனும் அர்ச்சனாவுக்கு, 'ஸ்கோப் இன்டர்நேஷனல்' என்ற நிறுவனத்திடமிருந்து 'கிரியேட்டிவ் சாம்பியன்’ விருது கிடைத்திருக்கிறது. 'மெட்ராஸ்டர்ஸா’ என்னும் டிசைன் கம்யூனிட்டி சார்பாக நடத்தப்பட்ட டி-ஷர்ட் டிசைன் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றதுடன், சமீபத்தில் இந்தியா ஃபிலிம் புராஜெக்ட் நடத்திய பாலிவுட் போஸ்டர் டிசைனிங் போட்டியில், 'பாஹ் மில்கா பாஹ்' என்ற படத்துக்காக இவர் டிசைன் செய்த போஸ்டருக்கு இரண்டாவது பரிசு கிடைத்திருக்கிறது.

''மீண்டும் சொல்கிறேன்... கலைக்கு ஆண், பெண் என்ற வேறுபாடுகள் கிடையாது. கமான் கேர்ள்ஸ்!'' என்று அழைக்கிறார் இந்த இளம் எனர்ஜி!