என் தாயிடம், என் சகோதரிகளிடம், என் மனைவியிடம், இன்னும் நான் சந்தித்த பல பெண்களிடமும் இருக்கும் பூட்டப்பட்ட உணர்வுகளை, நான் நேரடியாக உணர்ந்திருக்கேன். அப்படி என் மனதை உழுத பெண்களையும், அவர்களின் கதைகளையுமே என் திரைப்படங்கள் மூலம் சொல்லியிருக்கிறேன்.

என் இனிய கதைநாயகிகள்!  - 6

அந்த வகையில் என் மனதில் முதன்மையாக நிற்கும் கதைநாயகி, 'அழகி’ படத்தின் 'தனலட்சுமி’. தனத்துக்கு உயிர் கொடுத்திருப்பார் நந்திதா தாஸ்.

நான் எழுதிய 'கல்வெட்டு’ சிறுகதையைத்தான் 'அழகி’யாக திரைமொழியில் கொடுத்தேன். எப்படி எல்லா ஆண்களுக்குள்ளும் ஒரு 'தனம்’ இருப்பாளோ, அதேபோல ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு 'சண்முகம்’ இருப்பான். பார்த்திபன், சண்முகம் பாத்திரத்தை நிறைவாக செய்திருப்பார். வார்த்தைகளால் பகிரப்படாத நேசத்தை, பால்ய காதலாக சுமப்பார்கள் இருவரும். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் வேறொரு பெண்ணை மணப்பான் சண்முகம்.

ஒரு தருணத்தில், தனத்தை எதேச்சையாக சந்திக்க நேரும்போது, கணவனை இழந்து, குழந்தையுடன் சாலையோரத்தில் பிழைப்பு நடத்துபவளாக காலம் அவளை சுழற்றியடித்திருக்கும். அதைத் தாங்கிக்கொள்ள முடியாமல், தன் வீட்டுக்கு அழைத்து வருவான் சண்முகம். மனதின் உள் அடுக்குகளில் பழைய நினைப்புகள் இருந்தாலும், கொஞ்சமும் வெளிக்காட்டாமல், மிக கண்ணியமாக நடந்துகொள்வாள் தனம். ஒரு கட்டத்தில் சண்முகத்தின் வாழ்க்கைக்கு தன்னால் எந்தப் பிரச்னையும் வந்துவிடக் கூடாது என்று, மொத்தமாக விலகிவிடுவாள்.

என் தனம் போலத்தான் நிறைய பெண்கள், தங்கள் ஆசாபாசங்கள் அனைத்தையும் புதைத்து, சமூக கட்டமைப்புகளுக்கு மரியாதை கொடுத்து வாழ்ந்து வருகிறார்கள். அவர்களையெல்லாம் பெருமையுடன் தலைவணங்குகிறேன். தனலட்சுமிகளின் மனதைப் புரிந்துகொள்வதோடு, அவர்களைப் பற்றிய பார்வையை இந்த சமூகம் நேர்செய்ய வேண்டும். ஆண்களின் பால்ய காதல்களை, பிரியத்துடன் பேசும், ஏற்கும் இந்த சமூகம், பெண்களுக்கும் அதேபோன்ற நேசங்கள் உண்டு என்பதை நெருடல் இல்லாமல் ஏற்றுக்கொள்ள வேண்டும். 'அழகி’ படத்தின் பார்ட்-2, விரைவில் வரும்.

'தலைகீழ் விகிதங்கள்’ என்ற  நாவலைத்தான், 'சொல்ல மறந்த கதை’யாக படமாக்கினேன். நாயகி 'பார்வதி’யாக ரதியும், நாயகன் 'சிவதாணு’வாக சேரனும் நடித்திருப்பார்கள். கணவன், மனைவி இருவருக்குள் எந்த மனஸ்தாபமும் இருக்காது. ஆனால், இருவரின் குடும்பங்கள், ஈகோ பிரச்னையால் இரண்டு பேரையும் வாழவிடாமல் கெடுப்பார்கள். இது நிறைய குடும்பங்களில் இன்றும் நடப்பது.

ஒரு குடும்பம் சந்தோஷமாக இருக்க, கணவன் - மனைவி மட்டும் விட்டுக்கொடுத்தால் போதாது. உறவுகள் அனைத்தும் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று சொல்லும் கதைதான், 'சொல்ல மறந்த கதை’. உண்மையில், 'பார்வதி’, என் உறவுக்கார அக்காவின் வார்ப்பு. அப்போது நான் சிறு பையன். அக்காவும் மாமாவும், அவரவர் பெற்றவர்களால் பிரிந்திருந்தார்கள். மாமா எத்தனையோ முறை அழுது அழைத்தார். தன் பெற்றோரின் பேச்சை மீறவும் முடியாமல், மாமாவுடன் போகவும் முடியாமல் தானும் அழுவார் அக்கா. ஒரு கட்டத்தில், 'எனக்கு யாரும் வேண்டாம், என் புருஷன்தான் வேணும்’ என்று ஆர்ப்பரித்து, அழுது சென்றது அக்கா. ஆனால், உடல்நிலை சரியில்லாமல் இருந்துவந்த மாமா, அக்கா வந்து சேர்ந்த இரண்டாவது நாளே இறந்துவிட்டார். 40 வயது வரை தன் நாட்களை வீணாக்கிய அக்காவுக்கு, அதற்குப் பிறகான வாழ்க்கையே வீணானது.

என் இனிய கதைநாயகிகள்!  - 6

ஆனால், 'சொல்ல மறந்த கதை'யில் வரும் பார்வதி, என் அக்கா போல இல்லாமல், சீக்கிரமே நல்ல முடிவெடுத்து கணவனோடு சேர்வாள். கணவன் மேல் பாசம் வைத்திருந்தும், சொந்தங்களால் வாழ்க்கையை இழக்கும் பெண்களுக்கு என் அக்கா ஒரு பாடம்; 'பார்வதி’ முன்மாதிரி.

'ஒன்பது ரூபாய் நோட்டு’ படத்தின் 'வேலாயி’, பலருக்கும் கண்களில் நீரை வரவழைத்த ஓர் அம்மா; அவள் உண்மையில் என் ஆத்தா. அர்ச்சனா, 'வேலாயி’யாகவும்... சத்யராஜ், 'மாதவ'ராகவும் வாழ்ந்திருப்பார்கள். என் அம்மாவின் சொல்லாடல்களையும், உடல் மொழியையும் அப்படியே உள்வாங்கி நடித்திருப்பார் அர்ச்சனா. சொந்த மண் மீது பாசம் வைத்த மாதவர், தன் பிள்ளைகள், பேரன், பேத்திகள் என குடும்பத்தைத் தவிர வெளியுலகம் தெரியாத வேலாயி... இருவரும் தங்களின் கடைசி காலத்தை சொந்த மண்ணோடும், பிள்ளைகளோடும் கழிக்கமுடியாமல், வைராக்கியத்தால் வேறொரு இடத்தில் இருப்பார்கள். என்னதான் கணவனுக்காக 'வேலாயி’ கட்டுப்பட்டு இருந்தாலும், மனது முழுக்க பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் சுத்தியும், சுமந்தும் வருவாள். அதுதானே பெத்தவளின் மனசு!

என் இனிய கதைநாயகிகள்!  - 6

இறுதியில் பிள்ளைகளைப் பார்க்கப் போகும் சமயத்தில், பாம்பு கடித்து இறந்துவிடுவாள் 'வேலாயி’. அவளின் அஸ்தியை இடுப்பில் கட்டிக்கொண்டு இறந்து போவார் 'மாதவர்’. உலகம் தெரியவில்லையென்றாலும் கணவன், பிள்ளைகள், பேரக்குழந்தைகளையே உலகமாக நினைத்து, அவர்களுக்காகவே வாழ்ந்து, இறந்துபோன 'வேலாயி’ என் ஆத்தா மட்டுமல்ல, பல அம்மாக்களின் திரை உருவம். தன்னையும் மண்ணையும் விட்டுப் போய் வெளியூரில் பிழைக்கும் பிள்ளைகளின் நினைவாகவே தவித்துக்கொண்டிருக்கும் அம்மாக்களுக்கு, வேலாயி ஓர் அர்ப்பணம். 'வேலாயி அடியே வேலாயி’ என்று படத்தில் ஒரு பாடல் வரும். அந்தப் பாடல் வரிகள்தான், இந்த சமூகத்தில் தியாகமே வாழ்க்கையாகியிருக்கிற பெண்களுக்கு மிச்சமாக இருக்கிறது.

பெண்களின் பிரச்னைகள், உள்ளுணர்வுகள், சமன் செய்ய முடியாத நேசத்தை ஒரு படைப்பாளியாக நான் உங்களிடம் சேர்த்திருந்தாலும், அவர்களுக்கான விடியலை எதிர்பார்த்து இந்த சமூகத்தில் ஒருவனாக நானும் காத்திருக்கிறேன்.

சந்திப்பு: பொன்.விமலா

நான் சுதாவாகிய அர்ச்சனா..!

'ஒன்பது ரூபாய் நோட்டு’ நாயகி அர்ச்சனாவிடம் பேசினோம். ''தங்கர்பச்சானும் நானும் திரைப்படக் கல்லூரியில சேர்ந்து படிச்சவங்க. என்னோட நிஜப் பேரு சுதா. தங்கர் என்னை அப்படிதான் எப்பவும் கூப்பிடுவார். தங்கர், தன் அம்மாவின் கதைனு இதை என்கிட்ட சொன்னப்போ, உண்மையாவே நெகிழ்ந்துட்டேன். படத்துல நிறைய பேரன், பேத்திகளோட பாசக்காரப் பாட்டியா நடிக்க வேண்டியிருந்தது. ஒரு படைப்பை வீணாக்கிடக் கூடாதுங்கறதால, என்னோட வயசு அதுக்குப் பொருந்துமானு யோசிச்சேன். ஆனா, நடிக்க ஆரம்பிச்ச பிறகு, 'வேலாயி’யாவே மாறிட்டேன். சத்தியராஜ் சாரோட முக்கியமான படங்கள்ல இதுவும் ஒண்ணு. அதுல நானும் இருக்கேன்னு நினைக்கும்போது, பெருமையா இருக்கு.

எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல. என்னோட வளர்ப்பு மகன் மூலமா எனக்கு கிடைச்ச தாய்மை அனுபவத்தைதான் படத்துல பிரதிபலிச்சிருப்பேன். படம் வெளிவந்தப்போ, பல பெண்கள் என் கையைப் பிடிச்சுக்கிட்டு, குரல் வராம வார்த்தைகளை கண்ணீரா கொட்டினப்போ, தாய்மைக்கான மிச்ச அனுபவத்தையும் உணர்ந்தேன்!''