ஸ்பெஷல் 1
Published:Updated:

சத்தியப் பாதையில்..! - 5

கவிஞர் பொன்மணி, ஓவியம் : ஸ்யாம்

ல்லூரியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது, வகுப்பெடுத்த நேரங்கள்போக ஓய்வு கிடைத்தபோதெல்லாம் எனக்கு வந்து சேர்ந்த பாபாவின் புத்தகங்களைப் படிக்கத் தொடங்கினேன். நான் படித்த காலத்திலும் பாடம் நடத்திய காலத்திலும் என்னைப் பெரிதும் கவர்ந்தவை தேவாரம், திருவாசகம், திவ்வியப்பிரபந்தம், ராமாயணம், திருவருட்பா, சித்தர் பாடல்கள், திருப்புகழ் போன்ற பக்தி இலக்கியங்களே! அந்த வகையில் இப்போது பாபாவின் இலக்கியங்கள் படிக்கப்படிக்க நல்லதொரு தெளிவையும் ஒளியையும் எனக்குள் ஏற்படுத்தின. ஸ்வாமியின் தெய்விகத்தை ஓரளவுக்கு உணரத் தொடங்கினேன். எனக்குப் பழக்கமான சாயி குடும்பங்களில் பாபா புரிந்துகொண்டிருந்த தெய்விக லீலைகள் என்னைத் திகைக்க வைத்தன.

பாபாவின் படங்களிலிருந்து விபூதி, குங்குமம், மஞ்சள் கொட்டுதல்... அமிர்தம் பொங்கி வழிதல்... பாடும் பாடலுக்கேற்றபடி பூச்சரங்கள் ஒரு தாள கதியோடு அசைந்தாடுதல்... ஸ்வாமி எழுதும் கடிதங்கள் வந்துவிழுதல்... என்று எண்ணற்ற லீலைகளைக் கண்டு மகிழ்ந்தேன். எத்தனையோ இடங்களில் அவர் புரியும் ஏராளமான லீலைகளைக் கேட்டு வியந்தேன். பக்தர்களின் உண்மையான அன்பிற்கும் பக்திக்கும் மட்டுமே கட்டுப்படும் பாபாவின் அருளாசியே நமக்கு முதன்மையானது, முக்கியமானது. இருந்தாலும் பக்தர்களை மகிழ்விக்கும்... நம்பிக்கையூட்டும் இந்த லீலைகளை 'என் தெய்விக வருகையை அறிவிக்கும் வருகைச் சீட்டுகள்’ (Visiting Cards) என்பார் ஸ்வாமி.

சத்தியப் பாதையில்..! - 5

ஒரு சாயி குடும்பத்தில் வழிபாடு நடந்துகொண்டிருந்தபோது போயிருந்தேன். அனைவரும் சாயி பஜன் பாடிக்கொண்டிருந்தார்கள். அதில் ஒரு பாடலும் எனக்குத் தெரியாமலிருந்ததால் அவர்கள் பாடுவதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். மிக நன்றாக அவர்கள் பாடிக்கொண்டிருந்தபோது... திடீரென்று ஸ்வாமி போட்ட அட்சதை பரவலாக அனைவர் மேலும் விழுந்தது! பார்த்துக்கொண்டிருந்தபோதே ஸ்வாமி படத்திலிருந்து புதிதாய் விபூதி உருவாகி விழுந்தது! ஸ்வாமி கரத்திலிருந்து அமிர்தம் வழிய ஆரம்பித்தது! ஆரத்தியானதும்... அந்த விபூதியும் அமிர்தமும் அனைவருக்கும் பிரசாதமாகக் கொடுக்கப்பட்டன. சுகந்த பரிமளவாசம் விபூதிக்கு... அமிர்தத்தின் இனிப்பை வருணிக்கவோ வார்த்தைகளில்லை! அந்த விபூதியும் அமிர்தமும் எத்தனையோ பேருடைய வியாதிகளைப் போக்கியிருக்கின்றன என்றார்கள். புட்டபர்த்தியிலும் பல வழிபாட்டுத்தலங்களிலும், ஸ்வாமி சிறிய பாத்திரத்தில் உருவாக்கிய அமிர்தத்தை அது அட்சயமாய் வளர... ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு தானே ஸ்வாமி தந்த அதிசயத்தைச் சொன்னார்கள்!

சில வீடுகளில் ஸ்வாமி நிஜத்திற்கு நேரில் வந்து பேசுவது, பாடுவது, வீட்டுப் பிரச்னைகளைத் தீர்ப்பது, முக்கியமான தருணங்களில் எச்சரிப்பது வழிகாட்டுவது... எல்லாம் அடிக்கடி நிகழும் என்றார்கள்.

தெய்வமான ஸ்வாமி தரும் பாதுகாப்பு எந்த அளவிற்கு நிம்மதியைத் தருகிறது என்று சொன்னார்கள். 'புட்டபர்த்திக்கு’ அடிக்கடி ஸ்வாமி தரிசனத்திற்கும் சேவை புரியவும் (Service) போய் வருவதைக் கூறினார்கள். அங்கு ஸ்வாமியின் இருப்பிடமான 'பிரசாந்தி நிலையத்தை’யும் அவர் வந்து தரிசனம் தரும், 'குல்வந்த்ஹாலின்’ பிரமாண்டத்தையும் பேரழகையும் முழுமையாகச் சொல்லி மகிழ்ந்தார்கள். அவர்கள் சொல்லச் சொல்ல... மனதில் அத்தனையும் பதிவாயின; படம்போடத் தொடங்கின. 'புட்டபர்த்தி’தான், சத்யசாயிபாபாவின் மூலஸ்தானம்.... நம்மால் அங்குபோய் ஸ்வாமியை தரிசிக்க முடியுமா என்ற எண்ணம் அடிக்கடி எழுந்தது.

'எல்லாருக்கும் போல் எனக்கும் பாபாவின் அருளாசி கிட்டாதா? அதிசயங்கள், அற்புதங்கள் நிகழாதா? கனவுகள், காட்சிகள் கிடைக்காதா? ஸ்வாமி என்னிடம் பேசமாட்டாரா?’ என்ற ஏக்கம் வளர்ந்தது. பாபாவிற்கான என் வழிபாடு தீவிரமானது. வியாழக்கிழமை விரதம், விசேஷ வழிபாடு எல்லாம் தொடர்ந்தன. ஸ்வாமியை வாசிப்பதும், யோசிப்பதும், பூசிப்பதும் மும்முரமாயின. அவ்வப்போது ஸ்வாமி படத்தை உற்றுப்பார்ப்பேன்... விபூதி வந்திருக்கிறதா என்று! ஸ்வாமி அப்படி எந்த அதிசயத்தையும் நிகழ்த்தவில்லை. 'ஸ்வாமி, என் வழிபாட்டை ஏற்றுக்கொள்கிறாயா?’ என்று கேட்டபடி இருந்தேன். இப்படியான என் புலம்பல், ஸ்வாமிக்குக் கேட்கத் தொடங்கியது என்று நினைக்கிறேன்.

எந்தச் சிந்தனையும் இல்லாமல் ஒரு நண்பகல் நேரத்தில் அமைதியாய் உட்கார்ந்திருந்தபோது தெள்ளத் தெளிவாய் ஒரு காட்சி தோன்றியது. வீட்டிற்கு வெளியே இடுப்பளவு தோற்றத்தில் ஸ்வாமி வலதுகை அபயஹஸ்தம் காட்டியபடி தெரிந்தார்! சிரித்தபடியே வீட்டை கீழிருந்து மேலாய் அளப்பதுபோல் அண்ணாந்து பார்ப்பது தெரிந்தது. ஆகா... ஸ்வாமி காட்சியாகிவிட்டார் என்றதும் சந்தோஷம் பிடிபடவில்லை!

விடிகாலை மூன்று, மூன்றரை மணியளவில் வரும் கனவுகளை ஸ்வாமி தரும் கனவுகளாகச் சொல்வார்கள். அவ்வப்போது சில கனவுகள் வந்தன. ஒரு கனவில்... குருஸ்வாமியாய் பாபா அமர்ந்திருக்க, நான் முன்னே உட்கார்ந்திருக்கிறேன். ஸ்வாமி எனக்கு பஜன் சொல்லிக் கொடுக்கிறார். 'கஜானனா (விநாயகர் துதி)  பாடு’ என்கிறார். பாடுகிறேன் கனவு முடிந்தது. அதன்பிறகுதான் பஜன் பாடல்களில் ஆர்வம் ஏற்பட்டு கற்றுக்கொண்டு பாடத் தொடங்கினேன். ஸ்வாமியின் இந்த ஆசீர்வாதத்தால்தான் ஆஸ்திரேலியாவில் தங்கியிருந்தபோது அங்கிருந்த சாயி குடும்பத்தினரை ஒன்றுசேர்த்து நிறைய பஜன் நிகழ்ச்சிகளை நடத்த முடிந்தது.

மனம் ஒருமுகப்பட்டு பிரார்த்தனை செய்து கேட்ட கேள்விகளில் ஒரு சிலவற்றிற்கு மட்டும் ஸ்வாமி கனவிலோ காட்சி மூலமோ அல்லது பக்தர்கள் மூலமோ பதில் சொல்லத் தொடங்கினார்.

எங்கள் வீட்டிற்கு வெளியே நாங்கள் வைத்து வளர்த்த நான்கு மரங்களில் வேப்பமரமும் ஒன்று. பிரமாண்டமான பசுமையாய் வளர்ந்து நிற்கும் அந்த வேப்பமரம் என்னைப் பொறுத்தவரை பராசக்தி! ஞாயிறுதோறும் அந்தப் பராசக்திக்கு விமரிசையாய் பூஜை செய்வேன். மஞ்சள் நீராபிஷேகம் செய்து சந்தனம், குங்குமம் வைத்து... சாமந்திப் பூச்சரங்களைச் சுற்றி... வெற்றிலை - பாக்கு, பழங்கள் வைத்து.... 'சர்வ மங்கல மாங்கல்யே’ சொல்லி வணங்கி வழிபடுவேன் (இப்போது செய்வதில்லை).

ஸ்வாமியிடம் இப்போது கேட்டேன். 'இந்த என் வழிபாட்டை பராசக்தி ஏற்றுக்கொள்கிறாளா? ஸ்வாமி இந்த வழிபாட்டை அங்கீகரிக்கிறாயா? அப்படி என்றால் எனக்கு ஏதேனும் அடையாளம் காட்டவேண்டும்’ என்று கேட்டேன். அன்று விடியலில் ஒரு கனவு வந்தது. கனவில்... வேப்பமரம் அப்போதுதான் பூஜை செய்யப்பட்ட ஜிலுஜிலுப்போடு காற்றில் வேகமாய் அசைகிறது. அடடா! திடீரென்று மரத்திலிருந்து விபூதி கொட்டுகிறது! மழைபோல் கொட்டுகிறது! மரத்தடியிலெல்லாம் விபூதி நிறைந்து மணக்கிறது! இதைப் பார்த்துவிட்டு யாரோ ஒருவர் ஓடிவந்து ஆச்சர்யத்தோடு சத்தம் போடுகிறார்... 'வேப்பமரத்திலிருந்து விபூதி கொட்டுகிறதே!’ என்று. அதோடு விழித்துக்கொண்டேன். அற்புதமான கனவு! 'பராசக்தி வழிபாட்டை ஏற்றுக்கொள்கிறார்’ என்ற ஸ்வாமியின் பதில் அது! சொல்வது விபூதி சுந்தரனான ஸ்வாமியாக இருப்பதால், பதில் விபூதியாகக் கொட்டுகிறது! இந்தக் கனவின் பிரமிப்பு நெடு நாட்கள் எனக்குள் படிந்திருந்தது. காளிகாம்பாள் கோயில் சந்நிதியில், ஸ்வாமியின் ஆசீர்வாதத்தால் எனக்கொரு காட்சி கிடைத்தது! என்ன அருமையான காட்சி அது...

ஜெய் சாயிராம்!

தொடரும்