ஸ்பெஷல் 1
Published:Updated:

'தப்பா எழுதிட்டார்... தள்ளி எழுதிட்டார்...’

பொன்.விமலா

 மலையாளத்தில் வெற்றிநடை போட்ட 'சால்ட் அண்ட் பெப்பர்’ படம், பிரகாஷ்ராஜின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் 'உன் சமையல் அறையில்’ என தமிழில் வெளிவந்திருக்கிறது! முதிர்கன்னியின் உள்ளுணர்வுகளை திரைமொழியில் வருடுகிறது இந்தப் படம். திருமணம் செய்துகொள்ள வேண்டிய சராசரி வயதைக் கடந்த பிறகு ஓர் ஆணும் பெண்ணும் தங்கள் துணையைத் தேடும் தவிப்பையும், அந்தத் தேடலின் வலிகளையும் சின்னச் சின்னக் காட்சிகளால் அழகாக பேசுகிறார் கள் பிரகாஷ்ராஜும் சினேகாவும்!

படத்தில் ஆர்க்கியாலஜிஸ்ட் (தொல்பொருள் ஆய்வாளர்) ஆக 'காளிதாஸ்’ கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜும், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் 'கௌரி’யாக சினேகாவும் நடித்துள்ளார்கள். குட்டி தோசையை ஆர்டர் பண்ண ஹோட்டலுக்கு போன் செய்ய வேண்டிய சினேகா, தவறுதலாக பிரகாஷ்ராஜுக்கு போன் செய்ய, அந்த ராங் கால் கொஞ்சம் கொஞ்சமாய் நட்பாக மலர்கிறது. இருவரும் சந்திக்க முடிவெடுக்கிற சமயத்தில் வயது காரணமாக ஏற்பட்ட தாழ்வுமனப்பான்மையால் தயங்குகிறார்கள். சினேகா, தனக்குப் பதிலாக தன்னோடு ஒரே வீட்டில் பேயிங் கெஸ்ட்டாக தங்கும் தோழியையும், பிரகாஷ்ராஜ் தனக்குப் பதிலாக தன் அக்கா மகனையும் அனுப்புகிறார்கள். போன இடத்தில் இருவருக்கும் காதல் மலர்ந்துவிட, அவர்கள் இருவருமே சொல்லி வைத்தாற்போல பரஸ்பரம் உண்மையை மறைத்துவிடுகிறார்கள். இறுதியில் பிரகாஷ்ராஜும் சினேகாவும் சேர்ந்தார்களா என்பதுதான் கதை.

'தப்பா எழுதிட்டார்...  தள்ளி எழுதிட்டார்...’

பார்த்துப் பழகிய சம்பவங்களாக இருந்தாலும், காட்சிகளை அழகுபடுத்தியவிதத்தில் புதுமை தெரிகிறது. ஒரு வரலாற்றுப் புத்தகத்தை வைத்துக்கொண்டு கேக் செய்ய ஆரம்பித்து, அதன் மூலமாக இருவரிடையே கெமிஸ்ட்ரியை கொண்டு வந்துள்ளது... சுவை! 'இளம்வயதில் வரக்கூடிய காதல் உறவுக்கானது, வயது கடந்து வரக்கூடிய காதல் துணைக்கானது’ என சொல்கிறது படத்தின் ஒரு வரி. இறுதிக் காட்சியில் இருவரும் கட்டிப்பிடிக்காமல், தோள் மேல் கை சேர்த்து அரவணைத்துச் செல்லும் காட்சி, முதிர்ச்சி அடைந்த வயதில் வரும் காதல், நட்பாய் அரவணைக்கும் என்பதை குறியீடாகச் சொல்கிறது. எல்லாவற்றுக்கும் மேல் ஒரு பெண், திருமண வயதைக் கடந்தும் திருமணம் ஆகாமல் இருக்கும்போது சமூகம் அவளை எப்படிப் பார்க்கிறது, சமூகத்தை அவள் எப்படி எதிர்நோக்க வேண்டியிருக்கிறது என்பதை முதிர்கன்னிகளின் சார்பாக நடித்திருக்கிறார் சினேகா.

படம் குறித்து சினேகாவிடம் பேசினோம். ''படத்துல அந்த ராங் போன் கால் பேச்சை நட்புனு முடிவு பண்ணினாலும், அவரைப் பார்க்கணும்னு நினைக்கும்போது என்னையும் அறியாம காதல் வரும். ஆனா, வயசு தடுக்கும். என்னைவிட அவர் சின்ன பையன்னு சொல்லும்போது மனசு துடிக்கும். என்னோட வேலையை ஒழுங்கா செய்ய முடியாம கவனம் சிதறும். 'சரி, அது எப்படி இருந்தாலும் பரவாயில்லை’னு துணிஞ்சு முடிவெடுக்கும்போதுதான் சுகமான முடிவு கிடைக்குது. நிஜ வாழ்க்கையில் நிறைய பேர் அப்படி துணிஞ்சு முடிவெடுக்கத் தவறி, நாம பேச வேண்டிய இடத்துல வேற யாரையோ பேச வைக்கிறதாலதான் வாழ்க்கையை இழக்கிறோம்!'' என்றார்.

ஒரு நல்ல படம் கொடுத்த நிறைவு பிரகாஷ்ராஜின் பேச்சில். ''பொதுவா ஆண்களைவிட பெண்கள்தான் இந்த திருமண வயதைத் தாண்டிய பிரச்னையை அதிகமா சந்திக்கிறாங்க. படத்துல, சினேகா சமைச்சிட்டு இருக்கும்போது திடீர்னு அம்மா ஞாபகம் வந்துடும். வெடிச்சு அழுவாங்க. அந்த அழுகை, அவங்களுக்கு ஒரு துணை வேணுமேனு ஆடியன்ஸை பதற வைக்கும். ஒரு காட்சியில், பார்லரில், 'இப்பவும் நீ அழகாத்தான் இருக்கேன்’னு ஊர்வசி சொல்லும்போது, 'இப்பவும் அழகான்னா..?’னு கோபப்படுவாங்க சினேகா. 'அழகுங்கிறது பெண்களைப் பொறுத்தவரை காலங்காலமா உடலையும் வயசையும் சார்ந்து பேசற விஷயமாதானே இந்த சமூகத்துல இருக்கு... ஏன் அப்படி?’ - அதுதான் என்னோட கேள்வி.

படத்துல திருநங்கை கேரக்டர் ஒண்ணு ரொம்ப முக்கியமா இடம்பிடிச்சிருக்கும். சினேகாகிட்ட அந்த திருநங்கை பேசற மாதிரி ஒரு வசனம் வரும்... 'கடவுள் என் தலையெழுத்தை தப்பா எழுதிட்டார். ஆனா, உன் தலையெழுத்தை தள்ளி எழுதிட்டார்’.

ஆக, எல்லாருக்குமே வாழ்க்கை இருக்கு. அதை நாமதான் தேடிக் கண்டுபிடிக்காம விட்டுடறோம்!'' என்றார் பிரகாஷ்ராஜ், அழகாக.