ஸ்பெஷல் 1
Published:Updated:

படிக்கலாம்... பறக்கலாம்... பணம் பார்க்கலாம்... உண்மை என்ன?

இந்துலேகா.சி

''குறைந்த கட்டணம், படிக்கும்போதே பார்ட் டைம் வேலை, ஃபாரினில் வேலை என்றெல்லாம் விளம்பரங்கள் குவிகின்றன. இதையெல்லாம் பார்த்து, இப்படிப்பட்ட கல்வி நிறுவனங்களில் என் மகளை சேர்க்கலாம் என நினைக்கிறேன். ஆனால், இதெல்லாம் உண்மையாக நடக்குமா என்று சந்தேகமாக இருக்கிறது. இந்த விஷயத்தில் உங்களால் உதவ முடியுமா?'' என்று ஒரு வாசகி தொலைபேசி மூலமாக நம்மிடம் வேண்டுகோள் வைத்தார்.

இதையடுத்து, இப்படிப்பட்ட கல்லூரிகளில் படித்துக்கொண்டிருக்கும் மாணவிகள் சிலரிடம் பேசியபோது... விளம்பரங்களில் சொல்லப்படும் எந்த அம்சமும் அந்தக் கல்வி நிறுவனங்களில் இல்லை என்பதுடன், மாணவர்களைக் காசு கொட்டும் பகடைக்காய்களாக உபயோகிக்கிறார்கள் என்கிற அதிர்ச்சித் தகவலும் தெரிந்தது.

''ஐ.டி.ஐ-யில படிச்சுட்டு வேலை தேடிட்டிருந்தேன். அண்ணன்தான் விளம்பரத்தைப் பார்த்துட்டு, 'பேசாம இந்த இன்ஸ்டிட்யூட்ல படி, அவங்களே வேலை பார்த்து வெச்சுடறாங்களாம்’னு சொன்னாரு. கடனை ஒடனை வாங்கி படிக்க வெச்சுட்டா, வெளிநாட்டுல வேலை, கை நெறைய சம்பாதிக்கலாம்னு எங்கப்பாவும் சேர்த்துவிட்டாரு. ஆனா, இங்க அடிப்படையான கோச்சிங்கே சரியில்ல. வெளிநாட்டுல வேலை செய்யணும்னா ஸ்போக்கன் இங்கிலீஷ், ஃபிரெஞ்ச் இதெல்லாம் படிக்கணும்னு சொன்னாங்க. ஆனா, நிரந்தரமான லெக்சரர்கள் இல்லாம, ஒவ்வொரு நாளும் ஒவ்வொருத்தர் வந்து வகுப்பெடுக்கறாங்க. எங்க வீட்ல இருக்கிறவங்க, 'பொண்ணு இன்னும் ஒரு மாசத்துல படிப்பு முடிச்சு, வெளிநாட்டு வேலைக்குப் போய், கடனை அடைச்சுடுவா’னு நம்பிக்கையோட இருக்காங்க. ஆனா, உள்ளூர்லகூட வேலை பார்க்க முடியும்னு எனக்கு தோணல'' என்று பரிதாபமாகச் சொன்னார் ஒரு மாணவி.

படிக்கலாம்... பறக்கலாம்...   பணம் பார்க்கலாம்... உண்மை என்ன?

''அண்ணா யுனிவர்சிட்டி, மெட்ராஸ் யுனிவர்சிட்டியில சேர்றதுக்குகூட, நேரா போனோமா, அப்ளிகேஷன் வாங்கி விண்ணப்பிச்சோமானு வந்துட்டே இருக்கலாம். இந்தக் கல்வி நிறுவனங்கள்ல, கோர்ஸ் டீடெயில் விசாரிக்கக்கூட கன்சல்டிங் ஃபீஸ்னு சொல்லி 2,000 ரூபாய் வாங்கிட்டுதான் அப்ளிகேஷனே கொடுக்கறாங்க. ஸீட் கிடைக்கலைனா... அது காந்தி கணக்குதான்'' என்று அதிரவைத்த மற்றொரு மாணவி,

''நாங்க படிக்கிற துறை சார்ந்த நிறுவனத்துக்கு, எங்களை டிரெயினியா அனுப்புறாங்க. இன்ஸ்டிட்யூட்லதான் ஒழுங்கான கோச்சிங் இல்ல, டிரெயினிங் போயாச்சும் கத்துக்கலாம்னு பார்த்தா, அங்க எடுபிடி வேலைக்குதான் பயன்படுத்துறாங்க. டிகிரி வாங்கணுமேனு பொறுத்துட்டு இருக்கோம். ஒருவேளை வெளிநாட்டுக் கம்பெனியோட இன்டர்வியூல தேர்வாகிட்டா, 'வேலை மட்டுமில்லாம பாஸ்போர்ட்ல இருந்து ஃபிளைட் டிக்கெட் வரைக்கும் நாங்களே ரெடி பண்ணி தந்துடுவோம்'னு சொல்றவங்க, அதுக்கான செலவுக்கு லட்சக்கணக்குல கறந்துடறாங்க. இப்படி காசு கொடுத்து வேலைக்குப் போனாலும், ஒரு வருஷம் டிரெயினியாதான் போவோம். அதுக்கப்புறம் கம்பெனி இஷ்டப்பட்டா வேலையைத் தொடர முடியும். இல்லைனா பையைத் தூக்கிட்டு ஊரைப் பார்க்க வந்துட வேண்டியதுதான்'' என்றார் புலம்பலுடன்.

இவையெல்லாவற்றையும்விட, அந்தக் கல்வி நிறுவனங்கள் மாணவர்களை வைத்தே கமிஷன் பார்க்கும் வழிகள், தலைசுற்ற வைக்கின்றன. ஒரு கம்பெனிக்கு, 10 மாணவர்களை டிரெயினியாக அனுப்பும் போது, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத் துக்கு ஒரு கமிஷன் கிடைக்கும். கம் பெனிக்கோ... 'டிரெயினி’ எனும் பெயரில் குறைந்த சம்பளத்துக்கு ஆள் கிடைத்து விடும். பயிற்சி முடிந்ததும் நிரந்தர வேலை கொடுத்தால் சம்பளம் அதிகமாக தரவேண்டும் என்பதற்காக, 'உங்க வேலையில் எங்களுக்குத் திருப்தி இல்லை’ என்று சொல்லி, அந்த பத்து பேரையும் வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். மறுபடியும் இதே கமிஷன் முறையில் புதிதாக 10 பேரை டிரெயினி எனும் பெயரில் சேர்த்துக்கொள்வார்கள்.

பெற்றோர்களே... பிள்ளைகளே உஷார்!

படிக்கலாம்... பறக்கலாம்...   பணம் பார்க்கலாம்... உண்மை என்ன?

'அரசாங்கம்தான் காப்பாற்ற வேண்டும்!’

இதுபோன்ற கல்வி நிறுவனங்களைப் பற்றிப் பேசும் பேராசிரியை சரஸ்வதி, ''முன்பெல்லாம், கல்வி நிறுவனங்கள் விளம்பரம் செய்யக்கூடாது என சட்டமே இருந்தது. ஆனால், சுயநிதிக் கல்லூரிகள் முளைக்க ஆரம்பித்தவுடன், விளம்பரங்கள் சர்வ சாதாரணமாக வர ஆரம்பித்துவிட்டன. இதை எதிர்க்க வேண்டிய பொறுப்பு மக்களுக்கு இருந்தாலும், இடம் கிடைத்தால் போதும் என பணத்தைக் கொட்டி ஏமாறுகிறார்கள். அரசாங்க தலையீட்டால் மட்டும்தான் இதைத் தடுத்து நிறுத்த முடியும்'' என ஆதங்கத்தைப் பதிவு செய்தார்.

இதுபோன்ற நிறுவனங்களிடம் ஏமாறாமல் இருப்பது பற்றி பேசிய சென்னை, வழக்கறிஞர் ரமேஷ், ''ஒரு கல்வி நிறுவனத்தில் சேரும் முன்பு, அந்தக் கல்வி நிறுவனத்தில் கற்பிக்கப்படும் துறையைச் சார்ந்த அரசாங்க நிறுவனத்தின், அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதை தெரிந்துகொள்வது அவசியம்.

உங்களுக்கு கொடுக்கப்படும் உத்தரவாதங்கள் பேப்பரில் இருப்பதுடன், அதன் ஒரு நகல் உங்களிடமும் இருக்க வேண்டும். ஒப்பந்தத்தில் இல்லாமல் கூடுதலாக, பணம் கேட்டு மிரட்டினாலோ, பணம் கட்டி ஏமாந்துவிட்டாலோ, சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வழிவகைகள் உள்ளன.

வெளிநாடுகளில் வேலை என விளம்பரப்படுத்தும் நிறுவனங்கள், இதற்கென மத்திய அரசின் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். வெளிநாடுகளில் வேலைக்கு அனுப்பப்படும் நபர், ஸ்டூடென்ட் விசாவிலோ அல்லது டூரிஸ்டு விசாவிலோ அனுப்பப்படுவது சட்டத்துக்குப் புறம்பானது. அதோடு வொர்க் பெர்மிட் இருந்தால்தான் வெளிநாடுகளில் வேலை செய்யமுடியும். இதைஎல்லாம் தெளிவாகத் தெரிந்துகொண்டு சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களில் சேர்வது நல்லது'' என்று அக்கறையுடன் சொன்னார்.

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்!

இதுபோன்ற கல்வி நிறுவனம் ஒன்றின் வெளியூர் கிளையில், நடக்கும் ஒரு கூத்து.... இந்த நிறுவனத்தில் சேர்வதற்காக வரும் மாணவர்களை 'கன்சல்டிங்' என்கிற பெயரில் 2 ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு ஓர் அறையில் உட்கார வைக்கிறார்கள். அங்கே, ஏர்ஹோஸ்டஸ் மாதிரி ஆடை அணிந்திருக்கும் ஒரு பெண்ணை அறிமுகப்படுத்துகிறார்கள். அடுத்து, தலையை இறுக்க பின்னி, முகத்தில் எண்ணெய் வழியும் கோலத்தில் இருக்கும் ஒரு பெண்ணின் புகைப்படத்தை அனைவரிடமும் கொடுக்கிறார்கள். அதன்பிறகு, 'போட்டோவுல இருக்கற பொண்ணுதான், உங்க முன்ன நிக்கறாங்க. எங்க இன்ஸ்டிட்யூட்ல படிச்சதாலதான், இப்போ வெளிநாட்டுல, நல்ல சம்பளத்தில் வேலையில் இருக்காங்க' என்று சொல்லி, அனைவரையும் வாய்பிளக்க வைக்கிறார்கள்.

ஆனால், இதே பெண்தான் தினம் தினம் இப்படி நடக்கும் 'கன்சல்டிங்'கில் ஆஜராகிறார் என்பதுதான் கூத்தே!