என் இனிய அவள் விகடன் வாசகிகளுக்கு... வணக்கம்! கடந்த 42 வருஷங்களுக்கு மேல சினிமாவுல இருக்கேன். என்னோட பேரன், பேத்தி வயசுப் பிள்ளைங்ககூட என் படங்களைப் பார்த்து ரசிச்சுப் பேசும்போது, ரொம்பவே சந்தோஷப்படுறேன். என்னோட படங்களைப் பற்றி நான் காலங்காலமா பல தருணங்கள்ல பேட்டி கொடுத்திருந்தாலும், இப்ப என்னோட நான்காம் தலைமுறைகிட்டயும், என் கதைநாயகிகள் பற்றி பேசப் போறதை பெருமையா நினைக்கிறேன்.

என்னோட தாயை, சகோதரிகளை, என்னைச் சுற்றியிருக்கும் பெண்களை ஒரு ரசிகனா ரசிக்கிறேன். முதல்ல நான் ஒரு ரசிகன், அப்புறம்தான் இயக்குநர். அந்த ரசனையும், பெண்கள் மேல நான் கொண்ட அலாதியான பாசமும்தான் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற படங்களை என்னை இயக்க வெச்சிருக்கு.

நான் முதல்ல பேச வேண்டிய படம்... 'கருத்தம்மா’. சேலம், ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, தேனி இந்த ஊர்களிலெல்லாம் பெண் சிசுக்களை கள்ளிப்பால் ஊத்தி கொல்ற வழக்கம் இருந்ததைக் கேள்விப்பட்டேன். அதுக்கு முக்கியமான காரணம்... வரதட்சணைக் கொடுமை. ஒரு பொண்ணு பிறக்கிறதுல ஆரம்பிச்சு, சாகுறவரைக்கும் 'சீர்’ங்கிற பேருல செலவு செய்யணுமேங்கிற மனப்பான்மைதான் இதுக்குக் காரணம். காதுகுத்து, மஞ்சள் நீராட்டு விழா, கல்யாணம், சீமந்தம், பிரசவம்னு ஒரு பொண்ணுக்கு செய்ய வேண்டிய செலவுக் கணக்கை மனசுல வெச்சுதான், பொட்டப் புள்ள பொறந்ததும் 'வேணாம்’னு துணிஞ்சி கொல்ல முடிவெடுக்குறாங்க.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என் இனிய கதைநாயகிகள்..! - 7

'கருத்தம்மா’ படத்துல ஆரம்பக் காட்சியில பெரியார்தாசன் தனக்குப் பெண் குழந்தை பிறந்ததை இழிவா பேசுவார். அவரே ஒரு மாட்டுக்கு பெண் கன்று பொறக்கலையேனு கவலைப்படுவார். தனக்குப் பிறந்த பெண் குழந்தையைக் கள்ளிப்பால் ஊத்தி கொல்லச் சொல்லுவார். ஆனா, அதுல தப்பிச்சு வேறொருத்தர்கிட்ட வளர்ந்து, டாக்டரான அந்தக் குழந்தைதான், கடைசி காலத்துல அப்பாவோட உயிரைக் காப்பாத்தும். நாட்டுல நிறைய பேர் 'பொட்டப் புள்ளைங்க சுமை’னு ஒதுக்கிட்டு, ஆண் பிள்ளைகளுக்குதான் முக்கியத்துவம் கொடுத்து வளர்ப்பாங்க. ஆனா, கடைசி காலத்துல பெத்தவங்களைப் பார்த்துக்கிறது, பெத்த பொண்ணுங்களாதான் இருக்கும். அப்படி தனக்குப் பிறந்த பெண் குழந்தைகளை வேண்டாம்னு ஒதுக்கின ஒவ்வொருத்தருக்கும், என் 'கருத்தம்மா’ சாட்டையடி.

அடுத்து... 'கிழக்குச் சீமையிலே’. அண்ணந்தம்பிக மேல அளவுக்கதிகமா பாசம் வெச்சிருக்கும் பொண்ணுங்களோட மனசைப் பேசுற படம். இப்பவும் பொறந்த வீட்டுக்கும் புகுந்த வீட்டுக்கும் நடுவுல அல்லல்படுற என் ஆயிரமாயிரம் அக்கா, தங்கச்சிகளோட கதை. அண்ணன் விஜயகுமாருக்கும், புருஷன் நெப்போலியனுக்கும் இடையில நடக்குற பிரச்னையில, சருகா சிக்கின 'விருமாயி’ ராதிகா, பலராலும் மறக்க முடியாத கண்ணீர்த் திரைப்பாத்திரம். க்ளைமாக்ஸ்ல, அண்ணனை புருஷன் வெட்டப்போக, அந்த அருவா 'விருமாயி’ கழுத்துல பாய்ஞ்சிடும். அவ சாகறதுக்கு முன்ன, 'இந்த மனுஷனுக்கு நான் பொண்டாட்டியா சாகுறதைவிட, உன் மடியில் உன் தங்கச்சியா செத்துப் போறேண்ணே...’னு தாலியை அறுத்துட்டு செத்துடுவா. புகுந்த வீடுகள்ல, பிறந்த வீட்டை மறந்துட்டு வாழக் கட்டாயப்படுத்தப்படுற ஆயிரமாயிரம் விருமாயிகளோட கண்ணீரைப் புரியவைக்க செத்தவ, இந்த 'விருமாயி’.

'புதுமைப் பெண்’ படத்துல, 'சீதா’ கதாபாத்திரத்துல ரேவதி நடிச்சிருப்பாங்க. வரதட்சணையை எதிர்த்து, காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்குவா 'சீதா’. தன் கணவன் சந்தர்ப்ப சூழ்நிலையால ஜெயிலுக்குப் போக நேரிட, போராடி பெரும்பாடுபட்டு அவனை மீட்டுக் கொண்டு வருவா. கடைசியில அவனே அவளை சந்தேகப்படும்போது, உதறி எறிஞ்சுட்டு வெளியேறிடுவா. அன்பும், அர்ப்பணிப்புமே வாழ்க்கையா வாழ்ந்தாலும், கணவன் சந்தேகப்படும்போது, பொங்கி வர்ற ஆங்காரத்தை எல்லாம் சமூக சூழ்நிலைக்காக அடக்கிட்டு, அவனோட சந்தேகங்களுக்கு எல்லாம் விளக்கம் சொல்லியும், கண்ணீரோட கதறியும் வாழ்க்கையைக் கழிக்கிற பெண்கள் பலர். அவங்களோட உள்மனக் கோபத்தை, ருத்ரத்தை, நியாயத்தை வெளிய பேசியவ, என் 'சீதா’.

'16 வயதினிலே’ - 'மயிலு’... மறக்க முடியாதவ. 'ஸ்ரீதேவி’, 'மயிலா’ நடிச்சிருப்பாங்க. பெரும்பாலும் கிராமத்துல இருக்குற பெண்களுக்கு கோட்டு சூட்டு போட்ட நகரத்து ஆண்கள் தனக்கு கணவனா வரணும்னு ஆசை இருக்கும். நகரத்துப் பெண்களுக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை கிடைக்க ஆசைப்படுவாங்க. தன்னை உண்மையா நேசிக்குறவன் பக்கத்துல இருக்கறது தெரியாம, அவனை விட்டுட்டு கனவுப் பிரதேசத்துல மெய்மறந்து எவனோ ஒருத்தன்கிட்ட ஏமாந்துடுவாங்க. இப்படி தன்னை நேசிச்ச சப்பாணியை (கமல்) விட்டுட்டு, டாக்டர் மாப்பிள்ளை மேல ஆசைப்பட்டு ஏமாந்துடுவா மயிலு. தன்னால நேசிக்கப்பட்டவளை, பரட்டை (ரஜினி) பலாத் காரம் பண்ண முயற்சிக்கும்போது, அவனைக் கொன்னு, மயிலைக் காப்பாத்துவான் சப்பாணி. தன்னை நேசிச்சவனுக்காக மயிலு காத்துக் கெடப்பா. ஒவ்வொரு பொண்ணும் மயிலை பாடமா எடுத்துக்கணும்.

'முதல் மரியாதை’ - 'குயிலு’... அன்புக்கு அகராதி. 'குயிலா’ நடிச்சிருப்பாங்க ராதா. ராதாவுக்கு சிவாஜி மேல காதல்னு நீங்க எல்லாரும் சொல்லலாம். ஆனா, அதுக்கு நான் சொல்ற பேரு காதல் இல்ல. காதல்னா என்ன? நிலாவை தூரத்துல இருந்து பார்க்குற வரைக்கும்தான் அது நிலா. அதுவே நாம நிலாவுல இறங்கிட்டா, அது வெறும் மண்ணுதான். அதுபோல கிடைக்காத வரைக்கும்தான் காதல். உடனே கிடைச்சுட்டா அந்தக் காதலுக்கு வலிமை இல்லாம போயிடும்.

'குயிலு’ தன்னைவிட வயசு வித்தியாசம் அதிகமா இருக்கிற சிவாஜி மேல அளவுக்கு அதிகமான அன்பும் மரியாதையும் வெச்சிருப்பா. அது காதல் இல்ல... காதலுக்கும் நட்புக்கும் இடைப்பட்ட அன்பு. சொல்லப்போனா, அது காதலைவிட உயர்ந்த விஷயம். சந்தர்ப்ப சூழல்களால நம்மோட நிறைய 'குயிலு’ வாழ்ந்துட்டு இருக்காங்க. நான் 'குயில’ முன்னுதாரணமா எடுத்து வாழச் சொல்லல. ஆனா, அவங்ககிட்ட இருக்கும் மேலான அன்பை கவனிக்கச் சொல்றேன்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிமைகள் சமமா இருக்கலாம். ஆனா, கடமைகள் வெவ்வேறானது. பெண்களால் மட்டுமே தாய்மைங்கிற பெரிய பாரத்தை தாங்க முடியும். அவங்களால மட்டுமே ரத்தத்தை பாலாக்கி அன்பில் கலந்து கொடுக்க முடியும்.

பெண்கள்... பொக்கிஷம்!

சந்திப்பு: பொன்.விமலா

என் இனிய கதைநாயகிகள்..! - 7

''மூணு மாசக் குழந்தையோட ஷூட்டிங் போனேன்!''

'கிழக்குச் சீமையிலே’ படம் குறித்து ராதிகாவிடம் பேசினோம்...

''நீதான் என்னோட விருமாயினு பாரதிராஜா சார் எங்கிட்ட சொன்னப்போ, நான் குழந்தை பிறந்து ஹாஸ்பிடல்ல படுத்துட்டு இருக்கேன். 'ஐயோ சார்... குழந்தைக்குப் பால் கொடுக்கணும்... முடியாதே’னு சொன்னேன். 'உனக்குத் தேவையான எல்லா வசதியும் செஞ்சு தர்றேன்’னு சொன்னவர், அதேபோல செஞ்சும் கொடுத்தார். பிறந்த மூணு மாசக் குழந்தையைத் தூக்கிட்டு நானும் ஷூட்டிங் கிளம்பிட்டேன். ஒரு ஸீன்ல, தாவணி கட்டி நடிக்கச் சொன்னார். ஒரு குழந்தைக்கு அம்மாவா இருந்துட்டு தாவணி கட்ட மனசு ஒப்புக்கல. சார்கிட்ட சொன்னா, 'நீ டைரக்டரா, இல்லை நான் டைரக்டரா?’னு கோவிச்சுக்கிட்டார். ஆனாலும் அவரை சமாதானப்படுத்தி அந்த ஸீன்ல புடவையில நடிச்சுட்டேன். ஆனா, அடுத்த ரெண்டு படங்கள்ல நான் தாவணியில நடிக்க நேர்ந்தப்போ, அந்தச் சம்பவத்தை நினைச்சு சிரிச்சுப்பேன்!''