Published:Updated:

ஆட்டோ சித்ரா!

உ.சிவராமன் , படம்: வீ.சக்தி அருணகிரி  

ஆட்டோ சித்ரா!

உ.சிவராமன் , படம்: வீ.சக்தி அருணகிரி  

Published:Updated:

''கஸ்டமர் போன் பண்ணிட்டாங்க. பத்தே நிமிஷம்... இறக்கி விட்டுட்டு வந்துடறேன்!''

- ஆட்டோவில் பறந்து சென்ற சித்ராதேவி, சொன்னது போலவே சில நிமிடங்களில் திரும்பி வந்தார். சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் ஆட்டோ ஓட்டும் பெண்களுக்கு, முன்மாதிரியும், ஒத்துழைப்பும் அதிகம் கிடைக்கலாம். ஆனால், போடிநாயக்கனூரில் சூழ்நிலையின் கட்டாயத்தில் ஆட்டோ ஓட்ட வந்த சித்ராதேவி, இப்போது சுற்றம் மற்றும் ஊர்க்காரர்களின் ஒத்துழைப்போடு அசத்திக்கொண்டிருக்கிறார் தொழிலில்.

''எங்கப்பா ஆட்டோ டிரைவர். எனக்கு ஒரு தம்பியும், தங்கச்சியும். அப்பா சவாரிக்குப் போகும்போது, சின்னப்பிள்ளையா இருக்கும்போது என்னையும் கூட்டிட்டுப் போவாரு. அப்போ அந்த ஸ்டீரிங்கைப் பிடிச்சு நின்னுகிட்டு விளையாடுறதுனா எனக்கு அம்புட்டு ஆசை. சீக்கிரமே எனக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுத்தாங்க. எங்க வீட்டுக்காரர் கூலி வேலை செஞ்சாரு. அவரோட சம்பளம் பத்தாததால, நானும் மில்லு வேலைக்குப் போனேன். காலையில ஒன்பது மணிக்குப் போனா, சாயங்காலம் நாலு மணிக்குதான் வரமுடியும். குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் அம்மா வீட்டுல பாப்பாவை விட்டுட்டு வேலைக்குப் போனேன். இன்னொரு பெண் குழந்தையும் பிறந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆட்டோ சித்ரா!

இடையில எனக்கும் வீட்டுக்காரருக்கும் பிரச்னையாகி அம்மா வீட்டுக்கு வந்துட்டேன். வேலையையும் விட்டுட்டேன். நான் வந்த நேரம் அம்மா வீட்டுலயும் சிரமம். சில நாட்கள்ல சாப்பாட்டுக்கே கஷ்டமா போயிடுச்சு. என் பிள்ளைகளுக்கு வேண்டியதைக்கூட வாங்கிக் கொடுக்க முடியாம, பொம்பளையாப் பிறந்துட்டோமேனு அழுத காலம் அது. இனியும் வெட்டியா இருக்கக் கூடாதுனு, மறுபடியும் ஏதாச்சும் கூலி வேலைக்குப் போகலாம்னு நினைச்சேன். அப்போதான் எங்கப்பா, 'ஆட்டோ ஓட்டுறியாம்மா?’னு கேட்டார். ஒரே வாரத்துல டிரைவிங் பழகிட்டு, ரெடியாயிட்டேன்''

- படபடக்கிறது பேச்சு சித்ராதேவிக்கு.

''தான் வாடகைக்கு எடுத்து ஓட்டுற ஆட்டோவை எனக்குக் கொடுத்துட்டு, வேற ஆட்டோவை வாடகைக்கு எடுத்துக்கிட்டாரு அப்பா. ஆட்டோவுக்கு தினமும் 150 ரூபா வாடகை. அதுபோக பெட்ரோல் செலவு. நல்லபடியா ஆட்டோ தொழில் ஓடிட்டிருந்த நிலையில, என்னைப் புரிஞ்சிக்கிட்டு வந்து சேர்ந்தார் என் கணவர். இப்ப அவரும் வேலைக்குப் போறாரு'' என்றவர், தன் தொழில் பற்றிக் கூறினார்.

''நான் ஆட்டோ ஸ்டாண்டுக்கெல்லாம் போகமாட்டேன். கஸ்டமர்ஸ் எனக்கு போன் பண்ணுவாங்க, கிளம்பிப் போவேன். காலையில ஆறு மணியில இருந்து நைட்டு பத்து மணி வரைக்கும் ஆட்டோ ஓட்டுவேன். பெட்ரோல் ஆட்டோங்கிறதால, பயணம் கொஞ்சம் சொகுசா இருக்கும். நம்பிக்கையா போகலாங்கிறதால, பெரும்பாலும் லேடீஸ் என் ஆட்டோவைத்தான் கூப்பிடுவாங்க. பிரசவ சவாரி, பெரியவங்கள கொஞ்சம் தூரம் கொண்டு போய் இறக்கிவிடறதுக்கெல்லாம் பணம் வாங்கிறதில்ல. குடிச்சிருக்கிறவங்களை வண்டியில ஏத்த மாட்டேன். இரவு நேரத்துல ஃபேமிலியா இருந்தாதான் ஏத்துவேன். வண்டியில வர்றவங்களோட பாதுகாப்பும் என் பொறுப்புங்கிறதால, கவனமா ஓட்டுவேன். நாள் முழுக்க ஆட்டோ ஓட்டுறதால நைட்டெல்லாம் ரொம்ப அலுப்பா இருக்கும். காலையில எழுந்திரிக்கவே கஷ்டமா இருக்கும். இருந்தாலும் ஃபிரெஷ்ஷா கிளம்பிடுவேன். அதுதானே நாம தொழிலுக்குக் கொடுக்கிற மரியாதை!'' என்று சித்ராதேவி சொல்லிக் கொண்டிருக்கும்போதே... செல்போன் ஒலிக்க, ''ராசிங்கபுரம் போகணுமா..? இதோ வந்துட்டேன்'' என்று எதிர்முனைக்கு பதில் சொன்னவர்,

''வீட்டுக்காரரு வாரம் ஒரு தடவை பணம் கொடுப்பாரு. எனக்கு வாடகை, பெட்ரோல் செலவெல்லாம் போக ஒரு நாளைக்கு 200 முதல் 300 ரூபா வரைக்கும் கிடைக்கும். என் ரெண்டு பிள்ளைகளையும் படிக்க வெச்சு நல்ல நெலமைக்கு கொண்டு வரணும்!'' என்றபடி, ஆட்டோவை ஸ்டார்ட் செய்தார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism