த்குருவைச் சரணடைந்து வணங்கி அவருடைய தெய்விக வழிகாட்டுதலோடு நாம் செய்யும் செயல் யாவும் சீரானதாகவே அமைந்துவிடுகிறது. அவருடைய அருளாசி, நற்பலன்களையே எப்போதும் நமக்கு அளிக்கிறது. ''நமது அறிவுக் கண்களை சத்குரு மட்டுமே திறந்து விடுகிறார்'' என்கிறது ஸ்ரீஷீரடி சாயிசத்சரிதம். நாம் வழிபடும் 'குரு’ யாராக இருப்பினும் அவர்மேல் நம்பிக்கையும் பக்தியும் கொள்ளும்போது அவர் நமக்குப் பெருந்துணையாயிருந்து நம் இகபர முன்னேற்றத்துக்கு வழிகாட்டுகிறார். என்னைப் பொறுத்தவரை பகவான் ஸ்ரீசத்யசாயி பாபாவை அவருடைய சங்கல்பத்தினாலே என் வாழ்வின் நல்லதொரு பொற்பொழுதில் சத்குருவாய், தெய்வமாய் வழிபடத் தொடங்கியதை என் பூர்வபுண்ணியமாகவே நினைக்கிறேன்.

சத்தியப்பாதையில்..! - 6

''என்னை முழுமனதோடு நம்பிச் சரணடைந்தவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறேன்... எண்ணங்களை ஈடேற்றுகிறேன். என்மீது பக்தர்கள் கொண்டிருக்கும் அளவுகடந்த நம்பிக்கையே அவர்களுக்கு எல்லையற்ற பலன்களை அளிக்கிறது'' என்கிறார் சத்யசாயிபாபா. உலக நாடுகளெங்கும் மில்லியன் கணக்கில் நிறைந்திருக்கும் பக்தர்கள் அத்தனை பேருக்கும் சாயிபாபாவின் கருணை சாசுவதமாக பொழிந்தபடியேதான் இருக்கிறது! இத்தகு மகிமை கொண்ட ஸ்வாமியை, குருதெய்வமாக வழிபடத் தொடங்கியபிறகு, வாழ்வில் எந்த ஒரு முக்கியமான செயலைத் தொடங்கும்போதும், குழப்பங்களை நீக்கித் தெளிவை வேண்டி நிற்கும்போதும் ஸ்வாமியிடம் பிரார்த்தித்துவிட்டு நடப்பது என் வழக்கமானது. விவரமறிந்த வீட்டுப் பெரியவரிடம் ஆலோசனையும் உத்தரவும் கேட்டு நடப்பது போலத்தான் இது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எந்த ஒரு காரியத்தையும் தர்க்கரீதியாக, தன்னம்பிக்கையோடு தாமே செய்கிறோம் என்ற எண்ணத்தோடு சிலர் செய்வதுண்டு. ஆன்மிகரீதியாக, நன்னம்பிக்கை முனையாக ஒரு குருவின் ஆசியோடு செய்கிறோம் என்று சிலர் செய்வதுண்டு. இரண்டும் அவரவர் நிலையில் சரியானதே. இருந்தாலும் இரண்டாவது நிலை... எளிதானது... சற்று வசதியானதும்கூட... என் அனுபவத்தின் மூலம் இதை உணரத் தொடங்கினேன்.

ஒருமுறை பிறந்தநாளின்போது, சென்னை ஸ்ரீகாளிகாம்பாள் கோயிலுக்குச் சென்று, சந்நிதியில் அம்பாளுக்குச் சார்த்த அழகான மஞ்சள் வண்ணச் சேலையோடும் செம்பட்டு ரோஜாக்களாலான மாலையோடும் உட்கார்ந்திருந்தேன். அம்பாளுக்கு அபிஷேகம் நடந்துகொண்டிருந்தது.

குருக்கள், சங்கல்பம் செய்து அர்ச்சனைக் கூடையோடு அனைத்தையும் வாங்கிக் கொண்டு போய் வைத்தார். அப்போது, வெளியிலிருந்து உள்ளே வந்து என் பக்கத்தில் அமர்ந்த பெண்மணி, குருக்களைக் கூப்பிட்டு 'அம்பாளுக்கு இதைச் சார்த்துங்கள்’ என்று ஒரு நீலவண்ணச் சேலையைத் தந்தார். அந்த நேரத்தில் எனக்குள் சிறுபிள்ளைத்தனமான ஒரு குழப்பம் வந்தது. காளிகாம்பாளிடம் என் வழக்கமான பிரார்த்தனையோடு இப்படி மனமாரக் கேட்டேன். 'அம்மா... உனக்கு எல்லாருமே குழந்தைகள்தாம்... உனக்காக ஆசையோடு வாங்கிக் கொண்டுவந்த மஞ்சள் வண்ணச் சேலையை அபிஷேகம் ஆனதும் நீ உடுத்திக்கொண்டால் எனக்கு சந்தோஷமாக இருக்கும் தாயே’ என்று வேண்டினேன். அப்போதும் மனம் அமைதிப்படவில்லை.

மனதில் ஸ்வாமி பாபாவை வணங்கி 'சாயிகாயத்ரி’ சொல்லியபடி பிரார்த்தித்தேன் இப்படி. 'எப்போதோ ஒருமுறைதான் இங்கு வருகிறேன்... ஸ்வாமி, அம்பாள் வழிபாடு எனக்கு திருப்தியாய் அமையட்டும்’ - அந்தச் சேலைக்கான பிரார்த்தனையை ஸ்வாமியிடம் செய்து, 'இந்த என் நினைப்பை நிறைவேற்றுவாயென்றால் எனக்கு தெரியும்படியாய் அடையாளம் காட்டு' என்று கேட்டுக்கொண்டிருந்தேன். உள்ளே அபிஷேகம் நடந்து அலங்காரம் தொடங்கியது. எங்கள் முன் கனத்த திரை இழுத்து விடப்பட்டது. இன்னும் அந்தத் திரை விலகாதபோதே எனக்கு ஒரு காட்சி தெரிந்தது. கன்னங்கரேலென்ற அழகுத் தெய்வம் காளியின் கரியதிருமேனியில் மஞ்சள் வண்ணச்சேலை சார்த்தப்பட்டுக் கொண்டிருந்தது. அடடா... அது என்ன ஓர் அழகாக இருந்தது!

இன்னும் சந்தேகமா?! குருக்கள் அந்தத் திரையை விலக்கியபடியே என்னைப் பார்த்து... ''நீங்கள் கொண்டுவந்த மஞ்சள் வண்ணச் சேலையை அம்பாளுக்கு சார்த்தியிருக்கு... பார்த்துக்கோங்கோ'' என்றார். பார்த்தேன்... பரவசத்தோடு பார்த்தேன். அபிஷேகமானதுமே தன் கரியதிருமேனியில் மஞ்சள் சேலையை அணிந்து 'காளி’ பொலிவோடு புன்னகைத்தாள்; அருளாசி பொழிந்தாள்! கண்கள் பனிக்க காளியை வணங்கினேன். மனம் நிறைந்திருந்தது 'இப்போது சந்தோஷம்தானா உனக்கு?’ என்று எனக்குள் ஸ்வாமி பாபா கேட்பதான உணர்வு எழுந்தது. தனக்கு நன்றி சொல்வதை ஸ்வாமி விரும்புவதில்லை என்பதால் மானசீகமாய் ஸ்வாமியை வணங்கியபடியே 'ரொம்ப சந்தோஷம் ஸ்வாமி’ என்று சொல்லியபடியே வெளியே வந்தேன்.

ஒருமுறை கல்லூரித் தோழியரோடு ஊதிய நிலுவை பெறுவதற்காக... அது தொடர்பான அலுவலகத்திற்குச் சென்றேன். எங்களுக்குரிய 'கவுன்ட்டருக்கு’ வெளியே வரிசையில் நின்றுகொண்டிருந்தோம். அலுவலகத்திற்கு உள்ளே பலர் வேலையில் மும்முரமாயிருந்தார்கள். எங்கள் கல்லூரியிலிருந்து அனுப்பப்பட்ட கடிதங்களையும் படிவங்களையும் ஒவ்வொருவருக்குமாகப் பார்த்து அவரவர்க்குரிய நிலுவைத் தொகைக்கான காசோலையைத் தந்தார்கள். ஏறக்குறைய என் உடன் வந்த தோழியர் எல்லாம் கையெழுத்திட்டு காசோலையை வாங்கி விட்டார்கள். என் படிவம் மட்டும் எங்கோ சிக்கிக்கொண்டது போலிருக்கிறது... தேடிக்கொண்டிருந்தார்கள். 'எதற்கும் கல்லூரியிலேயே இருக்கிறதா என்று பார்த்து விட்டு வாருங்கள்’ என்றும் சொன்னார்கள்.

சத்தியப்பாதையில்..! - 6

உடன் வந்தவர்களின் வேலை முடிந்துவிட்டது. எனக்கு மட்டும் ஏன் இந்தத் தேடல்... திரும்பவும் வர வேண்டும் போலிருக்கிறதே... 'ஸ்வாமி ஏன் இப்படி என்னை அலைக்கழிக்கிறாய்? எல்லாருக்கும் சுமுகமாக நடக்கும் காரியத்தை எனக்கு மட்டும் ஏன் இழுத்தடிக்கிறாய்? நிலைமையைச் சரிசெய்ய வேண்டும்’ என்று எனக்குள் ஸ்வாமியிடம் சொல்லிக்கொண்டிருந்தேன்.

பலரும் பரபரப்பான வேலையில் ஈடுபட்டிருந்த அந்த அலுவலக அறையில்... மின்னற்பொழுதில் என் கண்களுக்கு வெண்ணிற அங்கியோடு ஸ்வாமி தெரிந்தார். அவர் சுறுசுறுப்போடு சிரித்தபடியே இங்குமங்குமாகப் போய்வந்து கொண்டிருக்கும் காட்சி தெரிந்தது! மனதில் மகிழ்ச்சி பிறந்தது. 'ஆகா... ஸ்வாமி உள்ளே வேலை செய்கிறார், சீக்கிரம் படிவம் கிடைத்துவிடும்’ என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே, முன்சொன்ன அந்த அலுவலர், 'மேடம் உங்க படிவம் கிடைச்சிடுச்சு’ என்று கையில் எடுத்துக் கொண்டு வந்தார். கையெழுத்திட்டு காசோலையை வாங்கிக்கொண்டு தோழியரோடு படிகளில் இறங்கும்போது, ஸ்வாமியின் லீலையை நினைத்துச் சிரித்தபடியே வந்தேன். என்னுடனிருந்த தோழி ஒரு மாதிரியாக என்னைப் பார்த்தபடி கேட்டார்... 'என்ன நீ பாட்டுக்கு தனியா சிரிச்சுக்கிட்டே வரே...?’ என்னவென்று சொல்வது 'அது ஒன்றுமில்லை வந்தவேலை சீக்கிரம் முடிஞ்சத நினைச்சு சிரிச்சேன்’ என்று சமாளித்தேன்.

ஒன்றை இங்கு சொல்ல வேண்டும்... ஸ்வாமி எல்லா பிரார்த்தனைகளையும் உடனே நிறைவேற்றிவிடுவார் என்று நினைக்கக் கூடாது. தக்க பிரார்த்தனைகளைத் தவிர மற்றவற்றை கிடப்பில் போட்டுவிடுவார். ''முதலில் நீ வேண்டியதைக் கொடுக்கிறேன். பிறகு உனக்கு வேண்டியதைக் கொடுக்கிறேன்'' என்கிறார் ஸ்வாமி. அது எப்படி என்பதை எனக்குக் கிடைத்த ஓர் அனுபவத்தின் மூலம் சொல்கிறேன்.

ஜெய் சாயிராம்!

தொடரும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism