Published:Updated:

பெத்தவங்களுக்கு மூணு மணி நேர வேலை... பிள்ளைகளுக்கு இலவச கல்வி!

ஜெ.பாரதி, படங்கள்: ச.வெங்கடேசன்

பெத்தவங்களுக்கு மூணு மணி நேர வேலை... பிள்ளைகளுக்கு இலவச கல்வி!

ஜெ.பாரதி, படங்கள்: ச.வெங்கடேசன்

Published:Updated:

வித்தியாசமான சூழலில் கல்வி கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள், ஷீலா - மணிவண்ணன் தம்பதி.  வேலூர் மாவட்டம், புதூர் செல்லும் வழியில், குறுமப்பாளையம் என்ற கிராமத்தில் அமைந்திருக்கிறது, இவர்களால் நடத்தப்படும் 'அமைதிப் பூங்கா’ பள்ளி. அப்படி என்ன சிறப்பு இந்தப் பள்ளியில்..?!

பெத்தவங்களுக்கு மூணு மணி நேர வேலை... பிள்ளைகளுக்கு இலவச கல்வி!

''மாட்டுப் பண்ணை, வேளாண் நிலங்கள்... இதுக்கு நடுவுலதான் இந்தப் பள்ளி இருக்கு. மாணவர்களுக்கு நமது விவசாய முறையைப் புரியவைக்கவும், அவங்களுக்கு அதில் ஆர்வம் ஏற்படுத்தவும் இந்த ஏற்பாடு. இங்க எல்.கே.ஜி முதல் 5-ம் வகுப்பு வரை உள்ளது. காலையில பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு 10.30 மணிக்கு சத்துமாவுக் கஞ்சியும், 12.30 மணிக்கு மதிய உணவும் இலவசமா வழங்குறோம். உணவுக்குத் தேவையான காய்கறிகள் அனைத்தும் பள்ளியின் தோட்டத்திலேயே விளைவிக்கிறோம். 14 மாடுகள் வளர்க்கிறோம். அதோட சாணத்தை உரமா பயன்படுத்துறோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கல்விக் கட்டணம் எதுவும் வாங்கறதில்ல. பதிலா, மாணவர்களோட பெற்றோர்ல யாராவது ஒருவர் பள்ளி நிலத்துல களை எடுப்பது, தண்ணீர் பாய்ச்சுவதுனு ஏதாவது ஒரு விவசாய வேலையோ, குழந்தைகள் உணவுக்கான சமையல் வேலையோ செய்யணும். மாதத்துல ஒரு நாள், 3 மணி நேரம் இந்த வேலை செய்தா போதும். சுற்றியிருக்கும் கிராமங்கள்ல இருந்து வரும் மாணவர்கள், பேருந்து வசதி இல்லாம ரொம்ப சிரமப்பட்டாங்க. அதையும் இலவசமாவே செய்து கொடுத்திருக்கோம்!'' என்று அசர வைத்தார், மணிவண்ணன்.

தொடர்ந்து பேசியவர், ''பழமையான கட்டட முறையை மாணவர்கள் அறிந்துகொள்ள, பள்ளியில் இயற்கை முறையில் அமைத்த மண் கட்டடங்களை ஆண்டுதோறும் புதுசா அமைத்துப் பயன்படுத்துறோம். இயற்கை முறையான வீடுகள் கட்ட சிறு மூங்கில் காட்டை வளர்க்கிறோம். இந்தக் கட்டடங்களுக்கு அரசு அங்கீகாரம் கிடைக்காததால, விருந்தினர்கள் ஓய்வு அறையாகவும், மாணவர்கள் சாப்பிடற அறையாகவும் பயன்படுத்துறோம். இங்க ஆசிரியர்கள் அனைவருமே பெண்கள்தான். இப்போ அஞ்சாவது வரை இருக்கு. ப்ளஸ் டூ வரை கொண்டு வரணும். அடுத்ததா, 'மக்கள் பல்கலைக்கழகம்’ அமைக்கணும் என்ற ஆசையும் ஆழமா இருக்கு. இந்த எட்டு வருஷப் பயணத்தில் என் கூடவே வரும் என் அப்பாவும், மனைவியும்தான் வெற்றிக்குக் காரணம்'' எனும் மணிவண்ணன், சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்.

பெத்தவங்களுக்கு மூணு மணி நேர வேலை... பிள்ளைகளுக்கு இலவச கல்வி!

இந்தப் பள்ளிக்கான விதை விழுந்தது எப்படி என்பதைப் பகிர்ந்தார் ஷீலா. ''திருமணமான புதிதில் டெல்லியில் இருந்தப்போ, 'விவசாயம் மீது மாணவர்களுக்கு மரியாதையும், நம்பிக்கையும் ஏற்படுத்தும் விதமா, வேளாண் சூழல்ல இலவசப் பள்ளி ஆரம்பிக்கணும். வறுமை நிலையில் இருக்கும் கிராம மாணவர்களுக்கும், பெண் கல்விக்கும் முக்கியத்துவம் தரும்விதமா இருக்கும் இந்தப் பள்ளியை, தனிச்சுக் காட்டணும். இது என் பல ஆண்டு ஆசை!’னு சொன்னவர், அதை செயல்படுத்தினார். தன் வருமானத்தில் மாதம் 50 ஆயிரம் வரை இந்தப் பள்ளிக்காக ஒதுக்கிடுவார். மாசத்துல குறைஞ்சது ஆறு முறையாவது சென்னையில இருந்து இங்க வந்து

பெத்தவங்களுக்கு மூணு மணி நேர வேலை... பிள்ளைகளுக்கு இலவச கல்வி!

பள்ளியைப் பார்த்துட்டுப் போவார். நிர்வாகத்தை அவரோட அப்பா பார்த்துக்கிறார். என் பையன் பெங்களூருல ஆயுர்வேதம் படிக்கிறான். ப்ளஸ் ஒன் படிக்கிற என் பொண்ணு, கல்லூரிக்குப் போனதும், நானும் இந்தக் கல்விப் பணியில் முழுமையா இணைச்சுக்குவேன்'' என்றார் அக்கறையுடன்.

இவர்களின் பள்ளியில் மூன்றாம் வகுப்புப் படிக்கும் தேவ்பிரசாத்தின் அம்மா சாந்தி, ''நானும் என் கணவரும் கூலி வேலை செய்றோம். காலையில வேலைக்குப் போகும்போது குழந்தையை இங்க விட்டுட்டுப் போயிடுவோம். சாயந்திரம் வேலை முடிச்சு திரும்பி வரும்போது கூட்டிட்டுப் போயிடுவோம். நேரம் கிடைக்குறப்ப... இங்க வந்து 3 மணி நேரம் வேலை செய்துட்டுப் போவேன். இங்க தரமான கல்வி கிடைக்குதுங்கிற நம்பிக்கை, சுத்துப்பட்டு கிராம மக்களுக்கு ஏற்பட்டிருக்கு!'' என்கிறார் மகிழ்ச்சியுடன்.

நன்முயற்சி கைகூடட்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism