Published:Updated:

'அவ இதயத்துக்கும் என்னைப் பார்க்க ஆசையா இருக்கும்ல!'

தானம் தந்த தாயின் ஏக்கப் பெருமூச்சுகட்டுரை, படங்கள்: பா.ஜெயவேல்

'அவ இதயத்துக்கும் என்னைப் பார்க்க ஆசையா இருக்கும்ல!'

தானம் தந்த தாயின் ஏக்கப் பெருமூச்சுகட்டுரை, படங்கள்: பா.ஜெயவேல்

Published:Updated:

றந்தவரின் உடலை மண்ணுக்குக் கொடுப்பவர்களிடையே, தேவையுள்ள மற்றவர்களுக்கு தானமாகக் கொடுத்து (உடல் உறுப்புகளை) புதுவாழ்வு அளிக்கச் சொல்லும் அரிதிலும் அரிதான உன்னத மனிதர்களின் வரிசையில், தானும் இணைந்திருக்கிறார் மதுராந்தகம் அருகேயுள்ள... பழையனூர், ராஜலட்சுமி. கிராம சுகாதார செவிலியர் பணியிலிருக்கும் இவர், விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த தன்னுடைய ஒரே ஒரு மகன் லோகநாதனின் உடல் உறுப்புகளை 7 பேருக்குக் கொடுத்து, அவர்களின் வாழ்க்கையை நீட்டித்திருக்கிறார்.

'அவ இதயத்துக்கும் என்னைப் பார்க்க ஆசையா இருக்கும்ல!'

பழையனூரில் உள்ள ராஜலட்சுமி வீடு தேடிச் சென்ற நாம், ஆறுதல் கூறி பேசியபோது, விழிநீர் துடைத்து ஆரம்பித்தவர், ''சின்ன வயசுலயே என்னைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டாங்க. கணவர் ஒரு மாற்றுத்திறனாளி. கல்யாணத்துக்குப் பிறகு, தாம்பரத்துல ஒரு ஹோம்ல தங்கி பத்தாவது படிச்சேன். பிறகு, நர்ஸிங் முடிச்சு வேலைக்குப் போனேன். இல்லற வாழ்க்கையில நிம்மதியில்ல. லோகநாதன், ஒண்ணரை வயசு கைக்குழந்தையா இருந்த சூழல்ல கணவரைப் பிரிஞ்சுட்டேன். ரொம்ப சிரமப்பட்டுதான்  வளர்த்தேன். ஒவ்வொரு பிறந்தநாளன்னிக்கும் பார்த்தசாரதி கோயிலுக்குப் போய், கும்பிடுவோம். பிறகு, அடையாறு, 'ஆந்திர மகிளசபா'வுல இருக்கற மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடுவோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிழைப்புக்காக என் தங்கச்சி பஞ்சாப் போனப்ப, 10 வயசு லோகுவையும் கூட்டிட்டுப் போனா. மூணு வருஷம் அங்க ஊதுவத்தி கம்பெனியில வேலை செஞ்சான். எவ்வளவு கஷ்டப்பட்டாவது படிக்க வைப்பேன்னு, அவனைத் திரும்ப கூட்டிட்டு வந்துட்டேன். ஸ்கூல் முடிச்சு, டிப்ளோமா படிக்கச் சேர்த்தேன். அவன் இருக்குற இடம் எப்பவுமே கலகலப்பா இருக்கும். அவனோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாம், 'லோகு ரொம்ப நல்ல கேரக்டர்... நீ கொடுத்து வெச்சவம்மா!’னு சொல்லும்போது, என் மனசு குளிர்ந்துடும்.

வேற வேலை கிடைக்கறவரை டிரைவர் வேலை பார்க்கிறேன்னு அந்த வேலை செய்திட்டிருந்தான். இந்த நிலையில, பக்கத்து வீட்டுக்கு வந்திருந்த சொந்தக்காரங்களுக்கு கூல்டிரிங்க்ஸ் வாங்கறதுக்காக வெளியில போனவன், விபத்துல சிக்கிக்கிட்டான். சென்னை, அரசு பொதுமருத்துவமனையில சேர்த்தோம். மூளைச்சாவுனு சொல்லிட்டாங்க...''

- அடக்கி வைத்திருந்த கண்ணீர், அளவில்லாமல் கொட்டியது ராஜலட்சுமிக்கு.

''27 வருஷம் இந்த சமுதாயத்துல தனி ஆளா நின்னு போராடி வளர்த்த மகனை, பொணமா அடக்கம் செய்ய மனசு இடம் கொடுக்கல. உடல்ல இருக்குற உறுப்புகளையாவது தானம் கொடுக்கலாம்னு முடிவு செஞ்சேன். டாக்டர்கிட்ட சொன்னப்ப, 'நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம் சீரா இல்ல. தானம் செய்றது கஷ்டம்’னு சொல்லிட்டார். 'உடல் உறுப்புகளைத் தானம் செய்யுற அளவுக்காவது மகனைக் காப்பாத்தி கொடு'னு பார்த்தசாரதி கோயிலுக்குப் போய் வேண்டிக்கிட்டேன்''

- அக்கணத்தில் இந்தத் தாயின் துயரம் எப்படியிருந்திருக்கும் என்று நினைத்தபோதே, மனது வலித்தது.

''ரெண்டு நாள் கழிச்சு லோகுவுக்கு ரத்த அழுத்தம் சரியாச்சு. செயற்கை சுவாசம் இல்லாம சுவாசிக்க ஆரம்பிச்சான். இப்போ உடல் உறுப்புகளைத் தானமா கொடுக்கலாம்னு டாக்டர் சொல்ல... மும்பையைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு அவனோட இதயத்தைப் பொருத்தினாங்க. 'ஆபரேஷன் நல்லபடியா முடிஞ்சுது'னு, ஒரு டாக்டர் போன் பண்ணி சொன்னார். அப்பதான் மனசு நிம்மதியாச்சு.

'அவ இதயத்துக்கும் என்னைப் பார்க்க ஆசையா இருக்கும்ல!'

நிறைய அதிகாரிகள் போன் செய்து பேசினாங்க. டி.வி பார்த்துட்டு போன் பண்ணி பலரும் விசாரிச்சாங்க. சரியா தூக்கம் இல்லாததால கண்ணசந்து ஹாஸ்பிடல்லயே படுத்தேன். அந்த நேரத்துல செல்போனை யாரோ எடுத்துட்டாங்க. அதுக்குப் பிறகு, யாரையும் தொடர்புகொள்ள முடியல. யாராலயும் என்னை தொடர்புகொள்ள முடியாம தனிச்சு விடப்பட்டேன். அவன்கிட்ட இருந்து எடுத்த மற்ற உறுப்புகள், பிறருக்கு பொருத்தினது எல்லாம் டி.வி, பேப்பர்லதான் தெரிஞ்சுக்க முடிஞ்சுது'' என்று வருத்தத்தோடு சொன்ன ராஜேஸ்வரி,

''லோகு இறந்ததுக்காக எந்த சாங்கியமும் செய்யல. பூ போடுறதுகூட கிடையாது. நான் இங்க ஏதாவது செய்தா, அவன் உறுப்புகளைப் பொருத்தியிருக்கிறவங்களுக்கு ஏதாவது பாதிப்பு வந்துடுமோனு பயமா இருக்கு. அதனால ஈமச்சடங்குகளைக்கூட தவிர்த்துட்டேன். இதுவரைக்கும் எனக்கு ஒரு பையன் மட்டும்தான் இருந்தான். இப்போ எனக்கு ஒரு பொண்ணும் இருக்கா. எம்பொண்ணு இப்ப எப்படி இருக்காளோ தெரியல. அவளைப் பார்க்கணும்னு ஆசையா இருக்கு. அவ இதயத்துக்கும் என்னைப் பார்க்க ஆசையா இருக்கும்ல!''

- மீண்டும் பெருக்கெடுக்கிறது கண்ணீர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism