முன்பிறவியில் யாராக, என்னவாக இருந்தோம் என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆவல்... இது விஷயத்தில் நம்பிக்கையுள்ளவர்களுக்கு இருக்கத்தான் செய்கிறது. ஸ்வாமி பாபா ஈஸ்வராவதாரம் என்பதைப் பற்றி பல்வேறு நாடிகளும் சித்தர்களும் சொன்ன தெய்வ வாக்குகளைப் படித்து வியந்திருக்கிறேன். எனக்கு அறிமுகமான சாயி பக்தர்களில் சிலர், பூர்வபிறவியில் ராமாவதார, கிருஷ்ணாவதார, ஷீரடி அவதாரக் காலங்களில் அந்தத் தெய்வங்களோடு வாழ்ந்தவர்கள்... பக்தியும் சேவையும் புரிந்தவர்கள் என்பதைக் கேள்விப்பட்டு, அவர்களில் சிலரை நேரில் பார்த்தும் தொலைபேசியில் பேசியும் மகிழ்ந்திருக்கிறேன்.

தெய்வத் தொடர்புடைய அத்தகு பக்தர்களுடைய இல்லங்களில்தான் ஸ்வாமி பாபா அற்புதங்களைப் புரிகிறார்! இதையெல்லாம் கேட்கக் கேட்க... நம்முடைய போன பிறவி என்னவாக இருந்திருக்கும் என்று ஆவலோடு சிந்திக்கத் தொடங்கினேன். அதுசமயம் என்னிடம் அன்பும் நட்பும் கொண்ட ஒரு பெண் வந்து, என் போன பிறவியைக் கூறுவதாய்... சில செய்திகளைச் சொல்லிவிட்டுப் போனாள். அதைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தேன். அப்போது என்னுடனிருந்தவர்கள் இப்போது எங்கெங்கே பிறந்திருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளும் ஆவல் வேறு வளர்ந்துகொண்டிருந்தது. அன்றாட வேலைகளைக்கூட ஈடுபாட்டோடு செய்ய முடியவில்லை. ஒரு வாரத்துக்குப் பிறகு ஸ்வாமி கனவில் வந்தார். கிராமத்து வகுப்பறையில் கோவைக்காய் இலைகளால் துடைக்கப்பட்டது போல் பெரிய கரும்பலகை தெரிந்தது. அதில் வெண்ணிற சாக்பீஸால் அழகிய மிகப்பெரிய எழுத்துக்களில் ஸ்வாமி...

சத்தியப்பாதையில்..! - 7

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'பூஜ்ய தத்துவத்தைக் கைவிடுக’ என்று பளீரென்று எழுதிப்போட்டார். அதோடு அந்த என் முன்பிறவி ஆராய்ச்சிக்கு ஸ்வாமி முற்றுப்புள்ளி வைத்தார். 'இந்தப் பிறவியின் உறவுகளையும் கடமைகளையுமே சமாளிக்க முடியவில்லை. இதில் போன பிறவியையும் உறவுகளையும் தெரிந்துகொண்டு ஆகப் போவதென்ன? எதற்கு இந்த வீணான மனநெருக்கடி? இந்தப் பிறவிக்கான உன் கடமையைச் செய் போதும்... கற்பனை ஆராய்ச்சியைக் கைவிடுக’ - அதுதான் ஸ்வாமி எழுதிய வாசகத்திற்கான விளக்கம்.

ஸ்வாமி தரும் கனவுகள் ஒவ்வொன்றும் பொருள் பொதிந்தவை. அவர் அந்தக் கனவுகளை வடிவமைக்கும் விதமே மிக அலாதியானது! ஒரு கனவில் பிள்ளைகளோடு அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறேன். எங்கள் முன்னே தெரிந்த பெரிய படத்திலிருந்து ஸ்வாமி எழுந்து வந்து எங்கள் முன் உட்கார்ந்துகொண்டு எங்களை ஆசீர்வதித்தபடியே பேசுகிறார். பெரியவனைப் பார்த்து, எனக்கு 'நாண்’ (ரொட்டி வகை) ரொம்பப் பிடிக்கும். நீ செய்து கொடு. ரொம்ப சாஃப்டா இருக்கணும்... சரியா?’ என்று ஆள்காட்டி விரலை நீட்டியபடியே சொல்கிறார். அவனும் தலையசைக்கிறான். கனவு முடிந்தது.

சில வருடங்களுக்குப் பிறகு பெரியவன் மதன் கார்க்கி... பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்து மேற்படிப்புக்காக, ஆஸ்திரேலியாவின், 'குயின்ஸ்லேண்ட்’ பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காகச் சென்றான். அங்கு தங்கிப் படிக்கும்போதே, கல்விக் கட்டணம் போக தன் இதர தேவைகளுக்காக ஓர் உணவு விடுதியில் வேலை பார்த்தான். அங்கு பலவித உணவு வகைகளை மிக அருமையாகச் சமைக்கக் கற்றுக்கொண்டான். அதிலும், 'நாண்’ மிகப் பிரமாதமாகச் செய்வான். சிறிய பிள்ளையும் அங்கு படிக்கப் போனபோது, நானும் பத்து மாதங்கள் போய்த் தங்கியிருந்தேன். அங்கிருந்த சாயி பக்தர்கள் குடும்பத்தினரோடு சேர்ந்து நடத்திய சாயி பஜன்களில், ஸ்வாமிக்கு நைவேத்தியமாக ஆளாளுக்கு ஓர் உணவு வகை, இனிப்பு வகையை செய்து கொண்டுபோகும்போது, சிலர் என் பெரிய பிள்ளையிடம், 'மதன்... நீ 'நாண்’ செய்து வரவேண்டும்’ என்று கேட்டார்கள். அவனும் பெரிய பாத்திரம் நிறைய செய்து கொண்டுபோய், ஸ்வாமி முன்பாக வைத்தான். ஸ்வாமி மகிழ்ச்சியடைந்தது போலிருந்தது. பஜன்... மங்கள ஆரத்தி முடிந்து சாப்பிடத் தொடங்கினோம். உண்மையிலேயே அந்த ரொட்டி மிக மிருதுவாகவும் சுவையாகவும் இருந்தது. ஸ்வாமி சில வருடங்களுக்கு முன்பு அவனிடம் கனவில் கேட்டதை நினைத்துக்கொண்டேன். அவன் செய்ததை சாப்பிட்டு மகிழ்ந்து அவனை எதற்கு ஆசீர்வதித்தாரோ?! இந்தியாவில் வந்த கனவு, ஆஸ்திரேலியாவில் பலித்திருக்கிறது!

என்னதான் கடமைகள் நெருக்கடி கொடுத்தாலும் என் பிள்ளைகளுக்கான கடமைகளை என்னாலானவரை சரியாகவே செய்து வந்திருக்கிறேன். காலையில் எனக்கு ஏழரை மணிக்கு கல்லூரி... அவர்களுக்கு ஒன்பது மணிக்குப் பள்ளி... அவர்களுக்கு உணவு, சீருடை, ரிக்ஷாவுக்கான ஏற்பாடு எல்லாம் செய்துவிட்டு செல்வேன். கல்லூரி இடைவேளை நேரங்களில் அவர்கள் பள்ளிக்குச் சென்று ஆசிரியைகளைச் சந்தித்து பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தைத் தெரிந்துகொள்வது, மாலையில் விளையாடி வரும் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்வது, கதைகள் சொல்வது... திருக்குறள், பாரதியார் பாடல்களைச் சொல்லிக் கொடுப்பது, அன்றைய வகுப்பு அனுபவங்களைக் கேட்பது, மனம்விட்டு பேசி மகிழ்வது, நல்லொழுக்கங்களைப் போதிப்பது, தேவைகளைப் பூர்த்தி செய்வது என்று தாயாகவும் தோழியாகவும் இருந்து வளர்த்தேன். தெய்வ சங்கல்பத்தால் அவர்களும் சரியானவர்களாகவே வளர்ந்திருக்கிறார்கள்.

சத்தியப்பாதையில்..! - 7

வீட்டில் அவர்கள் செய்யும் குறும்புகளை ரசிக்கத் தெரியாமல்... உறவினர் ஒருவர் அனைவர் எதிரிலும் என்னைப் பார்த்து, 'உனக்கு பிள்ளைகளை வளர்க்கத் தெரியவில்லை’ என்று குறை கூறினார். எனக்கு வருத்தமாகப் போய்விட்டது. 'என் கவனிப்பிற்கும் பராமரிப்பிற்கும் அர்த்தமே இல்லையா... இந்த மனிதர் இப்படி பலர் எதிரில் சொல்லிவிட்டாரே’ என்று ஸ்வாமியிடம் சொல்லி வேதனைப்பட்டுக் கொண்டிருந்தேன். ஸ்வாமி பதிலேதும் சொல்லவில்லை.

ஆனால், ஒரு வாரத்தில் மிக நல்லதொரு செய்தியை பார்க்கும்படி செய்துவிட்டார். அப்போது என் சிறிய மகன் கபிலன் அரசு நடத்திய பேச்சுப் போட்டியில் வென்று, 'அண்ணா விருது’ வாங்கியிருந்தான். 'அண்ணா விருது’ என்று எழுதப்பட்ட துணிப்பட்டை, சட்டைமேல் அலங்கரிக்க அவனுக்குப் பரிசாக அளிக்கப்பட்ட சைக்கிளோடு அவன் நிற்க, அவனோடு குடும்பத்தினர் அனைவரும் நிற்கும் படத்தோடு பத்திரிகையில் செய்தி வந்திருந்தது. அதில் அவன் பேச்சுத்திறனையும் பண்பையும் பாராட்டி பிள்ளைகளை வாழ்த்திவிட்டு, பிள்ளைகள் எப்படி வளர்ப்பதென்று பொன்மணி மேடத்திடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று எனக்குமொரு பாராட்டைத் தந்திருந்தார்கள். இதைவிட, என் சார்பாக என்ன பதில் சொல்ல முடியும்! எப்பேர்ப்பட்ட சமாதானம் அது!

இந்த பத்திரிகைச் செய்தியின் மூலம், சமாதானத்தை ஸ்வாமி எனக்குத் தந்தார்... ஸ்வாமியின் கருணையும் பத்திரிகைச் செய்தியும் ஒன்றுசேர்ந்தன! அந்தப் பத்திரிகை எதுவென்று சொன்னால் ஆச்சர்யப்படுவீர்கள். அது 'ஆனந்த விகடன்’தான்!

ஜெய் சாயிராம்!

தொடரும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism