Published:Updated:

என் இனிய கதைநாயகிகள்! - 8

பாதுகாப்பு தராட்டி... தாலி வெறும் ஆபரணம்தான்!திரையுலக பிரம்மாக்களின் ரீவைண்ட் தொடர்இயக்குநர் ஆர்.சி.சக்தி, படங்கள்: ஆ.முத்துக்குமார், ஞானம்

என் இனிய கதைநாயகிகள்! - 8

பாதுகாப்பு தராட்டி... தாலி வெறும் ஆபரணம்தான்!திரையுலக பிரம்மாக்களின் ரீவைண்ட் தொடர்இயக்குநர் ஆர்.சி.சக்தி, படங்கள்: ஆ.முத்துக்குமார், ஞானம்

Published:Updated:

என் படங்களில் பெண் கதாபாத்திரங்களுக்கு மாறுபட்ட கோணங்கள் இருக்கும். அனைவருமே நான் சந்தித்த கதாபாத்திரங்கள் அல்ல... நான் சந்திக்க விரும்பிய கதாபாத்திரங்களே! என்னதான் பெண்களுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது, அவர்களுக்கு உரிமைகள் கிடைக்கின்றன என முழங்கிக்கொண்டிருந்தாலும், என்னைப் பொறுத்தவரை அவர்களுக்குப் போதுமான பாதுகாப்போ... சுதந்திரமோ இல்லை என்றுதான் சொல்வேன். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத நிலைதான் இ8  திரையுலக பிரம்மாக்களின் ரீவைண்ட் தொடர்ன்றளவும் நீடிக்கிறது. என் படங்களில் வரும் நாயகிகள், சமூகத்தின் கோணல்களை எதிர்த்து தைரியமாகப் போராடுவார்கள். ஒரு பெண் எப்படி தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதை அவர்கள் உரக்கச் சொல்வார்கள்.

என் மனதில் அழுத்தமாக நிற்கும் படம், 'உண்மைகள்’. யார் தவறு செய்தாலும் அதை மன்னிக்கக் கூடாது, மன்னிப்புதான் குற்றங்களை அதிகரிக்கும் என்கிற உறுதியான மனநிலையில் இருக்கும் பெண்ணாக நடிகை லஷ்மி, 'ஜானகி’ கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். 'ஜானகி’ கல்லூரிப் பேராசிரியை. யார் தப்பு செய்தாலும் தண்டனையைக் கொடுத்துவிடுவாள். கணவன் (ஸ்ரீநாத்), வேலைக்காரப் பெண்ணிடம் தொடர்பில் இருப்பான். 'ஜானகி’க்கு குழந்தையில்லாத நிலையில் வேலைக்காரப் பெண் கருத்தரித்திருப்பாள். தனக்குக் கிட்டாத தாய்மை, அவளுக்குக் கிட்டியிருப்பதை பெருமனதோடு ஏற்றுக்கொண்டாலும், தவறு செய்த கணவனை மன்னிக்க முடியாமல் அவனை விட்டு விலக முடிவெடுப்பாள்.

என் இனிய கதைநாயகிகள்! - 8

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தன் கணவனுக்கு வெறுப்பு வந்து, தன்னை விட்டு நிரந்தரமாக நீங்க வேண்டும் என்பதற்காக செருப்பு தைக்கும் தொழிலாளி ஜீவாவோடு (ராஜ்குமார்) நட்பாக பழகுவாள் 'ஜானகி’. ஒரு கட்டத்தில் அவனுக்கு 'ஜானகி’ மேல் காதல் வந்துவிடும். 'உண்மையாவே உன்னை தவறா நினைத்துப் பழகல... என் கணவருக்கு பொறாமை வந்து பிரியணும்னுதான் பழகினேன்’ என்று 'ஜானகி’ சொல்ல, 'என்னை நீங்க கருவியா பயன்படுத்துனீங்க. ஆனா, அந்தக் கருவிக்கும் இப்போ காதல் வந்துருச்சே..?!’ என்று கேள்வி கேட்பான். கணவனுக்கு தண்டனை கொடுக்கப் போய், அது இன்னொருவனை பாதித்திருப்பதை உணரும் 'ஜானகி’, தப்பு செய்தால் தண்டனை கொடுக்க வேண்டும் என ஊருக்கெல்லாம் உபதேசித்த தான் இப்போது குற்றவாளிக் கூண்டில் நிற்பதை உணர்ந்து, தற்கொலை செய்துகொள்வாள்.

'தான் செய்தது தவறு என உணர்ந்த ஜானகியை ஏன் சாகடித்தீர்கள்?' என நிறைய பேர் என்னிடம் கேட்டார்கள். அதை நினைத்து நானும் வருந்தியிருக்கிறேன். 'ஜானகி’ இந்த சமூகத்துக்கு சொல்லும் பாடம், தவறுகளை யார் செய்தாலும் துணிச்சலாக எதிர்க்க வேண்டும்; தானே செய்திருந்தாலும் முழுமனதோடு ஒப்புக்கொள்கிற மனநிலை வேண்டும்!

னந்த விகடன் சிறுகதைப் போட்டியில் பரிசு வாங்கிய அனுராதா ரமணனின் 'சிறை’ என்ற சிறுகதையை, அதே பெயரில் படமாக்கினேன். இந்தப் படத்திலும் லஷ்மிதான் நாயகி. 'பாகீரதி’ என்ற பிராமணப் பெண்ணாக நடித்திருப்பார். திருமணமான அவளை, அந்த ஊரில் இருக்கும் செல்வாக்கு படைத்த அந்தோணிசாமி (ராஜேஷ்), பாலியல் பலாத்காரம் செய்துவிடுகிறான். கணவனுக்கு எந்த வகையிலும் துரோகம் நினைக்காதவள், எதிர்பாராத இந்தக் கொடுமைக்கு ஆளாகும்போது, அவளை ஏற்றுக்கொள்ளாமல் கணவன் துரத்துகிறான். வெளியில் வரும் பாகீரதி, கான்ஸ்டபிள் ஒருவரின் அறிவுரையின் பேரில் அந்தோணிசாமியின் வீட்டுக்கே போகி றாள். 'உன்னோடு வாழ்வதற்காக  வரவில்லை. ஆனால், இங்கேதான் வாழ்வேன். இந்த அறைதான் என்னுடைய சிறை. என்னை நீ தவறான நோக்கோடு அணுகக்கூடாது. மீறினால், பிணமாகிவிடுவேன்' என்று சொல்லிவிடுவாள்.

என் இனிய கதைநாயகிகள்! - 8

மனஉறுத்தல் காரணமாக, நல்லவனாக மாறும் அந்தோணிசாமி, அவளுக்கு தான் இழைத்த கொடுமையை எண்ணி வருந்தி, கடைசியில் இறந்தும் போகிறான். அதுவரை அவன் மேல் அன்பை வெளிப்படுத்தாத அவள், அவனுடைய இறுதிச் சடங்கில் 'ஐயோ’ என அழுவாள். இந்த நிலையில் அவளைப் புரிந்துகொண்டு தன்னோடு வாழ வரும்படி அழைப்பான் கணவன். 'தான் கட்டின தாலிக்கு ஒரு கணவன் மரியாதை கொடுத்து மனைவிக்கு பாதுகாப்பு தராட்டி, இதுக்குப் பேரு தாலியில்ல... வெறும் ஆபரணம்தான். என்னை உதாசீனப்படுத்தின உனக்கு சுமங்கலியா வாழ்றதவிட, ஒரு நாள் செய்த தவறுக்காக, வாழ்நாள் முழுக்க தார்மீகமா எனக்கு பாதுகாப்பு தந்த அந்தோணிசாமிக்கு விதவையா வாழ்றது மேல்!’ என்று தாலியை அறுத்து வீசி எறிவாள். அது சுவரிலிருக்கும் துப்பாக்கியில் தொங்கி நிற்கும்.

இந்தப் படம் வெளிவர கடுமையான நெருக்கடி. 'தமிழ்நாட்டில் தாலியை அறுத்து எறிவது மாதிரியான க்ளைமாக்ஸை மக்கள் ஏற்க மாட்டார்கள், மாற்றுங்கள்’ என்றார்கள். லஷ்மியோ, 'இந்த க்ளைமாக்ஸ்ல நான் நடிச்சா, மயிலாப்பூர் பக்கம் போக முடியாது. அதனால நடிக்க மாட்டேன்!’ என்று படப்பிடிப்பு சமயத்தில் மறுத்தார். 'இந்த சிறுகதையை ஆனந்தவிகடனில் எழுதிய அனுராதா ரமணன் ஒரு பிராமணப் பெண். நடிக்கும் நீங்களும் ஒரு பிராமணப் பெண். அதனால தைரியமாக நடிக்கலாம்’ என்று சமாதானப்படுத்தி நடிக்க வைத்தேன். மக்கள் மீது நான் வைத்த நம்பிக்கை பொய்க்காமல் படம் வெற்றி அடைந்தது. வந்து குவிந்த பாராட்டுகளில் மூழ்கிப் போனேன்.

என் இனிய கதைநாயகிகள்! - 8

'மனக்கணக்கு’ 'லஷ்மி’ (ராதா) மறக்க முடியாதவள். 'லஷ்மி’, கிராமத்துப் பெண். அவள் படித்து வேலைக்குச் செல்லும்வரை முறைமாமன் பாண்டியன் (ராஜேஷ்) அவளுக்கு உறுதுணையாக இருப்பார். ஆனால், 'லஷ்மி’ அவனைத் திருமணம் செய்துகொள்ளாமல், வேறு ஒருவரை (சரத்பாபு) திருமணம் செய்துகொள்வாள். வேறொரு பெண்ணுடன் கணவனுக்கு தொடர்பு இருப்பதால் அவனைப் பிரிந்துவிடுவாள். விவாகரத்து வழக்கு நீதிமன்றத்துக்கு வர, அங்கே டவாலியாக இருக்கும் முறைமாமன் பாண்டியன், லஷ்மியைப் பார்த்து அதிர்ச்சியில் திகைப்பான். 'நீ எப்படியெல்லாம் வருவேனு நினைச்சேன்' என்று பரிதாபப்பட, 'பரிதாபமோ... இரக்கமோ படவேண்டாம். என்னைக் கோழையா ஆக்கிவிடாதீர்கள்' என்பாள் லஷ்மி. அவளுக்கு மனிதாபிமானத்தோடு வீட்டில் அடைக்கலம் கொடுப்பார் பாண்டியன்.

பாண்டியனின் மனைவி (அம்பிகா), மனநோயாளியாக இருப்பார். அதேவீட்டில், மனைவியை இழந்த சினிமா கேமராமேன் (விஜயகாந்த்), தன் மகனுடன் வாடகைக்குக் குடியிருப்பார். பாண்டியன் மற்றும் வாடகைக்கு குடியிருப்பவர் இருவருமே இறந்துவிடுவார்கள். ஆறு மாதம் கழித்து விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் வரும்போது, கணவன் (சரத்பாபு) மீண்டும் வாழ விருப்பம் தெரிவித்தாலும், நிராகரித்துவிடுவாள் லஷ்மி.

தன்னை முழுமையாக புரிந்துகொள்ளாத கணவனுக்கு மனைவியாய் வாழ்வதைவிட, மனநோயாளியாய் இருக்கும் ஒரு வளர்ந்த குழந்தைக்கும் (அம்பிகா), வளர வேண்டிய ஒரு குழந்தைக்கும் (விஜயகாந்தின் மகன்) தாயாக இருப்பதையே விரும்புவதாகக் கூறி இருவரையும் அழைத்துச் செல்வாள்.

இன்று ஆண்களுக்கு நிகராக ராக்கெட் வரை தடம் பதிப்பதாலோ... அவர்களுக்கு இணையாக ஆடை அணிவதாலோ... பெண்கள் சம உரிமை அடைந்துவிட்டதாக அர்த்தம் இல்லை. பெண் போராட வேண்டிய தளம் வேறெங்கோ இருக்கிறது. பெண்ணுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது என்கிற மாயை அறுபட வேண்டும்!

சந்திப்பு: பொன்.விமலா

என் இனிய கதைநாயகிகள்! - 8

''அக்காவைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன்!''

'மனக்கணக்கு’ படம் குறித்து நடிகை ராதா பேசும்போது, ''இந்தப் படத்தில் நடித்ததை இன்னிக்கும் பெருமையா நினைக்கிறேன். இது, இப்ப வந்திருக்க வேண்டிய படம். அத்தனை முதிர்ச்சியான கேரக்டர் உள்ள படத்தை நான் அப்பவே நடிச்சதை நினைக்கும்போதே பூரிப்பா இருக்கு. கல்யாணத்துக்குப் பிறகு ஒரு பெண் கணவனை பிரிஞ்சு வாழற சூழல் ஏற்பட்டா... அதை எப்படி முதிர்ச்சியோட அணுகணும் என்பதற்கு இந்தப் படம் நல்ல உதாரணம். இதில் என்னோட கேரக்டர் அழுத்தமா இருக்கும். 'முதல் மரியாதை’ படத்துக்குப் பிறகு, எனக்கு அழுத்தமான ரோல் கொடுத்த படம் இது. சொல்லப்போனா... என்னோட கதாபாத்திரத்தைவிட, அக்கா அம்பிகாவோட கதாபாத்திரம் அற்புதமா இருக்கும். படத்துல அக்காவைப் பார்த்து ஆச்சர்யப்பட்டிருக்கேன். பாட்டு, டான்ஸ்னு நடிக்கிறதைவிட நாலு ஸீன்ல வந்தாலும் அக்கா மாதிரி அது பேர் சொல்ற மாதிரி இருக்கணும். 'மனக்கணக்கு’, என்னோட பேர் சொன்ன படம்!'' என்றார் ஆனந்தம் பொங்க!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism