Published:Updated:

'எங்களை யாராச்சும் காப்பாத்துவாங்களா?'

11 மாடி மவுலிவாக்கத்தில் கதறும் பெண்கள்ம.பிரியதர்ஷினி, சா.வடிவரசு படங்கள்: எம்.உசேன், தி.குமரகுருபரன்  

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை - மவுலிவாக்கத்தில் மடமடவென நொறுங்கி விழுந்த 11 மாடிக் கட்டடம், பேரதிர்ச்சி. இந்திய நாடாளுமன்றத்திலேயே அஞ்சலி செலுத்திவிட்டார்கள். ஆனால், எத்தனை ஆண்டுகளுக்கு ஆறுதல் சொன்னாலும், துளியும் தீரப்போவதில்லை... பாதிக்கப்பட்டவர்களின் வலி என்பதே உண்மை! அந்தக் கட்டடம் இருந்த இடத்தைச் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருக்கும் பெண்கள் ஒவ்வொருவரின் முகத்திலும் ஓராயிரம் சோக ரேகைகள்!

காதல் கணவரைப் பறிகொடுத்து, கையில் ஒன்றரை வயதுக் குழந்தையுடன், ஈரம் காய்ந்த குரலில் திவ்யா பேசும்போது, கட்டடம் சரிந்த சத்தம் நம் மனதுக்குள் அதிர்கிறது.

''என் வீட்டுக்காரர் தினேஷ், எனக்குத் தூரத்து சொந்தம். ரெண்டு பேரும் காதலிச்சது ரெண்டு வீட்டுக்கும் தெரிய வந்தப்போ, ஆறு வருஷத்துக்கு முன்ன கல்யாணம் செய்து வெச்சாங்க. மனசுக்குப் பிடிச்சவர் கிடைச்சுட்டாருங்கிற சந்தோஷத்துல மனசு நிறைய... பி.பி.எம் படிப்பை பாதியில விட்டுட்டேன்.

'எங்களை யாராச்சும் காப்பாத்துவாங்களா?'

நாலு வருஷம் கழிச்சுதான் குழந்தை பிறந்துச்சு. குழந்தைக்காக ஏங்கின அந்த நாலு வருஷ காலமும், அவர் என் மனசைத் தளரவிட்டதே இல்ல. ரெண்டு பேருக்குமே பெண் குழந்தைதான் இஷ்டம்ங்கிறதால, வயித்துல இருக்கும்போதே குழந்தைக்கு 'ரக்ஷா’னு பேர் வெச்சோம். ஆசைப்பட்ட மாதிரியே ரக்ஷா பிறந்தா.

சிவில் இன்ஜினீயரிங் டிப்ளோமா படிச்சிருந்த அவர், பல இடங்கள்ல வேலை பார்த்திருக்கார். இந்த கட்டடத்துல மூணு வருஷமா சைட் சூப்பர்வைஸரா வேலை பார்த்துட்டிருந்தார். இங்க வந்தப்புறம்தான் ரக்ஷா பொறந்தா'' என்ற திவ்யா, சம்பவ நாளை பற்றிப் பேசுகையில் குரல் நடுங்குகிறார்.

'எங்களை யாராச்சும் காப்பாத்துவாங்களா?'

''குழந்தைக்கு ரெண்டு நாளாவே காய்ச்சல். அவர் அவ்ளோ அரவணைப்பா பார்த்துக்கிட்டார். வழக்கம்போல மதியம் மூணு மணிக்கு வேலைக்குக் கிளம்பினப்போ, சரியான மழை. 'நிச்சயம் போகணுமா?’னு கேட்டேன். 'இன்னிக்கு சம்பள நாள், நான் போய்தான் சம்பளத்தை பட்டுவாடா பண்ணணும். சீக்கிரம் வந்துருவேன், குழந்தையைப் பத்திரமா பார்த்துக்க’னு சொல்லிட்டுப் போனார். போனதுமே போன் பண்ணினவர், 'சீக்கிரம் வந்திருவேன், பாப்பாவைப் பார்த்துக்கோ’னு மறுபடியும் சொன்னார். கொஞ்ச நேரத்துல மழை அதிகமாக, உடம்பு முடியாம இருக்கிற குழந்தையை வெச்சுட்டு தனியா இருக்க பயந்துட்டு, அவருக்கு போன் பண்ணினேன். 'நாட் ரீச்சபிள்'னு வந்துச்சு. டவர் எடுத்திருக்காதுனு, கொஞ்ச நேரம் கழிச்சு போன் பண்ணினேன். 'சுவிச்டு ஆஃப்'னு வந்துச்சு. சார்ஜ் போயிருக்கும்னு நினைச்சுக்கிட்டேன். நைட் முழுக்க காத்திருந்தும் அவர் வரல, போனும் பண்ணல. மனசுல ஒரு பதற்றம் படுத்திக்கிட்டே இருந்துச்சு. காலையில பக்கத்து வீட்டு அக்கா, 'உன் வீட்டுக்காரர் வேலை பார்த்த கட்டடம் இடிஞ்சு போச்சு’னு சொன்னதும் பாதி உயிர் போயிருச்சு''

- தொடர்ந்த வார்த்தைகள் விசும்பலுடனே வந்தன திவ்யாவுக்கு...

''காய்ச்சல்ல கிடந்த குழந்தையைத் தூக்கிட்டு, அவர் போட்டோவை கையில எடுத்துக்கிட்டு கட்டடத்துக்கு ஓடினேன். நெறுங்கிக் கிடந்த கட்டடத்தைப் பார்த்தப்போவே, மனசுல பயம் அப்பிக்கிச்சு. இருந்தாலும் போட்டோவை ஒவ் வொருத்தர்கிட்டயா காட்டி, 'இவரைப் பாத்தீங்களா?’னு அழுதுகிட்டே கேட்டேன். அவர் சம்பளம் கொடுக்க கிரவுண்ட் ஃப்ளோர்ல நின்னுட்டு இருந்ததா பலரும் சொன்னாங்க. 'பில்டிங் அப்படியே பூமிக்குள்ளாற இறங்கியிருக்கும்மா, நிச்சயம் அவர் உயிரோட இருப்பார்’னு சிலர் சொன்னதை மட்டும் மறுபடியும் மறுபடியும் நினைச்சுப் பார்த்துக்கிட்டேன். அஞ்சு நாளா அவரோட போட்டோவோட இடிஞ்ச கட்டடத்துக்கு முன்ன போய் நின்னேன். ஆறாவது நாள், பொணமாதான் என் கையில கொடுத்தாங்க''

- ஆற்றுப்படுத்த முடியவில்லை அவர் அழுகையை.

'எங்களை யாராச்சும் காப்பாத்துவாங்களா?'

''எத்தனையோ ஆசைகளோட வாழ்க்கையை ஆரம்பிச்சோம். அவருக்கு 28 வயசு, எனக்கு 25 வயசு. அதுக்குள்ள எல்லாம் முடிஞ்சு போச்சு'' என்றபோது, குழந்தையும் அவருடைய அழுகையில் சேர்ந்துகொண்டது.

''காரியம் முடிஞ்சதும், எங்கப்பாகூட நான் குழந்தையைத் தூக்கிக்கிட்டு கோயம்புத்தூர் போயிடுவேன். அடுத்தவேளை சாப்பிட்டாகணும், குழந்தையை வளர்த்தாகணும். எனக்கு ஒரு வேலை இருந்தா சொல்வீங்களா?'' என்ற திவ்யாவின் கோரிக்கை, நம் மனதை ரணமாக்கியது.

ந்த 11 மாடி கட்டடத்துக்கு அருகில்தான், 32 வயதான மாரியம்மாள் குடியிருந்த வாடகை வீடு. இந்த வீட்டின் மீதும் அந்த எமன் இடிந்து விழ, அங்கே உறங்கிக்கொண்டிருந்த கணவரைப் பறிகொடுத்துவிட்ட மாரியம்மாள், இடிபாடுகள் நீக்கப்பட்ட அந்த வீட்டை, தன் ஐந்து வயதுக் குழந்தையோடு சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருக்கும் அவலம்... கொடுந்துயரம்.

'எங்களை யாராச்சும் காப்பாத்துவாங்களா?'

''வாணியம்பாடிதான் நான் பொறந்த ஊர். எனக்கு ஒரு வயசு இருக்கும்போதே எங்கம்மாவை பறிகொடுத்துட்டேன். அப்பா இன்னொரு கல்யாணம் பண்ணிக்க, சித்தி கொடுமை தாங்க முடியல. 15 வயசுல சென்னைக்கு பஸ் ஏறிட்டேன். தெரியாத ஊருல தெருத்தெருவா சுத்திட்டு இருந்தப்போ, ஒரு வீட்டுல வேலைக்கு வெச்சுக்கிட்டாங்க. சில வருஷங்கள் கழிச்சு, பக்கத்துல குடியிருந்த கணேசன், 'என்னைக் கல்யாணம் பண்ணிக்க விருப்பமா?'னு கேட்டாரு. 'இனி உனக்கு நான், எனக்கு நீ’னு சந்தோஷமா வாழ்க்கையை ஆரம்பிச்சோம். தனியார் நிறுவனத்துல செக்யூரிட்டி வேலை பார்த்த அவர், 'இதுவரைக்கும் நீ படாத கஷ்டமெல்லாம் பட்டுட்டே. இனி வேலைக்குப் போக வேண்டாம்’னு சொன்னவரு, இப்படி நிர்க்கதியா விட்டுட்டுப் போயிட்டாரே'' என்று கதறி அழ, விளையாடிக்கொண்டிருந்த ஐந்து வயது புனிதா, அம்மா மடியில் வந்தமர்கிறாள்.

''எங்கப்பா செத்துட்டாருல... அதனால ஃபீஸ் கட்டல, நான் ஸ்கூலுக்குப் போகல...'' என்றவள், ''ஆனா, நான் படிச்சு போலீஸ் ஆவேன். ஏன்னா, எங்கப்பா போலீஸ் மாதிரியே இருப்பாரு...'' என்று சொல்ல, மகளைக் கட்டிக்கொண்டு மேலும் அழுகிறார் மாரியம்மாள்.

இரவுக் காவலாளியாக வேலை பார்த்த கணேசன், தினமும் காலையில் வீட்டுக்கு வந்ததும் புனிதாவுடன் கொஞ்சம் விளையாடிவிட்டு, வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வந்து கொடுத்துவிட்டு, உறங்கச் செல்வார். சம்பவம் நடந்த முன்தினம் மன்னார்குடியில் உள்ள அம்மாவைப் பார்க்கச் சென்றவர், அன்றிரவே சென்னை திரும்பி பணிக்குச் சென்றிருக்கிறார். வழக்கம் போல காலையில் வீடு திரும்பியதும் குழந்தையுடன் விளையாடிவிட்டு, 'சாயந்திரமா வெளியில போகணும்... என்ன எழுப்பி விடு’ என்று மாரியம்மாளிடம் சொல்லிவிட்டுப் படுத்திருக்கிறார்.

'எங்களை யாராச்சும் காப்பாத்துவாங்களா?'

''அந்த நேரத்துல அப்படியொரு அநியாய மழை... பயங்கரமா இருட்டிட்டு வந்ததால, பக்கத்துல விளையாடிட்டு இருந்த புனிதாவை கூட்டிட்டு வர்றதுக்காக வெளியில போனேன். அந்த நேரம் பார்த்துதான் கட்டடம் இடிஞ்சு எங்க வீட்டு மேல விழுந்துச்சு. நானும் கொழந்தையும் கதறிக் கதறி அழுதோம். எப்படியும் அவர் உயிரோடதான் இருப்பார்னு நம்பிக்கையோட இருந்தோம். ஆனா, பொணமா பார்த்தப்போ, உயிரோடயே நான் செத்துட்டேன்''

'எங்களை யாராச்சும் காப்பாத்துவாங்களா?'

- குரலெடுத்து அழும் மாரியம்மாளுக்கு இப்போது உணவு, உடை, வீடு என்று அத்தியாவசிய வசதிகூட இல்லாமல் ஆக்கிவிட்டது விதி. எல்.கே.ஜி படித்து வந்த புனிதாவின் படிப்பும் கேள்விக்குறியாக நிற்கிறது.

குழந்தையுடன் மறுபடியும் அனாதையாகியிருக்கும் மாரியம்மாளுக்கு, அடைக்கலம் கொடுத்துவரும் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு பெண், ''மனைவியையும், குழந்தையையும் கணேசன் அவ்ளோ பொறுப்பா பாத்துக்கிட்டாப்ல. வசதியா வாழலைனாலும், சந்தோஷமா இருந்தாங்க. இப்போ, சொந்தக்காரங்க யாரும் இவங்களைக் கண்டுக்கல. அடைக்கலம் கொடுக்கிறேன்னு சொல்லி, இவங்களுக்கு அரசாங்கம் தரப்போற பணத்தையும், ரேஷன் கார்டையும் பறிச்சிட்டுப் போறதுலயே சிலர் குறியா இருக்காங்க. இந்த அபலையை யாராச்சும் காப்பாத்துவாங்களா..?'' என்றார் பெருமூச்சுடன்.

யார் யாரோ செய்த தவறுகளுக்கு, எத்தனை பெண்களின் தாலி பறிபோயிருக்கிறது? அண்ணனை, அக்காவை, தம்பியை, தங்கையை, தாயை, தகப்பனை இழந்த குடும்பங்களுக்கு... லட்சங்களில் கொடுக்கப்பட்ட தொகை, ஈடாகிவிடுமா?

61 பேர் சடலமாக...

வுலிவாக்கத்தில் 'பிரைம் ஸ்ருஷ்டி’ எனும் நிறுவனத்தால் அருகருகே இரண்டு 11 மாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வந்தன. அதில் ஒன்றுதான் ஜூன் மாதம் 28-ம் தேதியன்று திடீரென நொறுங்கி விழுந்தது. கண் மூடி கண் திறப்பதற்குள், இதில் வேலை செய்துவந்த ஆண்கள், பெண் என அனைவரும் கட்டடத்தோடு கட்டடமாக பூமிக்குள் புதைந்தனர். 3,000-க்கும் மேற்பட்ட மீட்புக் குழுவினர், விடாத மழையையும் பொருட்படுத்தாமல் ஆறு நாட்களாகத் தேட... 27 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 61 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். இன்னும்கூட அடித்தளத்தில் சிலர் சமாதியாகி இருக்கக்கூடும் என்கிற பேச்சுகள் அடிபடுகின்றன. ஆனால், அரசுத்தரப்பில் இதை மறுக்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு