Published:Updated:

அன்புக்கு அமுதா என்று பேர்!

ஜெ.பாரதி , படம்: ச.வெங்கடேசன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பேரிருளை சிறுவிளக்கொன்று அகற்றுவதைப் போல, விதியின் பெரும்சதிகளை எல்லாம் தன்னம்பிக்கையால் தொடர்ந்து துரத்தி அடித்துக்கொண்டே இருக்கிறார், வேலூரைச் சேர்ந்த  அமுதா பார்கிமேரி. சிறுவயதில் பறிபோன பார்வை, இந்த துயரிலேயே மறைந்த அம்மா, வாழ்க்கையை ஆரம்பிக்கும் தருணத்தில் இறந்த கணவர், அதையடுத்த பேரிடியாக அப்பாவின் மரணம்... என்று அனைத்தையும் தாண்டி, 'என் பிள்ளைங்களுக்காக..!’ என்று வாழ்ந்துகொண்டிருக்கும் அந்தத் தாயின் வார்த்தை ஒவ்வொன்றிலும், பேரன்பின் தரிசனம்!

''பார்வைத் திறன் இழந்தாலும், என் மனதுக்கு புரிதல்திறன் அதிகம்!'' என்று மென்மையாக ஆரம்பித்த அமுதா, ''சொந்த ஊர் திருநெல்வேலி. ரெண்டு வயசு வரைக்கும் கண்பார்வை இருந்துச்சு. அப்போ டயரியா மற்றும் கண்பார்வை கோளாறு ஏற்பட, டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போகாம, கம்பவுண்டர்கிட்ட கூட்டிட்டுப் போனாங்க படிப்பறிவில்லாத பாவப்பட்ட எங்கம்மா. ஏதோ ஆயின்ட்மென்ட் கொடுத்து கண்ணுல போடச் சொல்ல, பார்வை சுத்தமா பறிபோயிடுச்சு. இந்தக் குற்றவுணர்ச்சியிலேயே எங்கம்மா இறந்துட்டாங்க'' என்பவருக்கு, கல்வியே கண்களாக மாறியிருக்கிறது!

அன்புக்கு அமுதா என்று பேர்!

''பாளையங்கோட்டையில எட்டாவது படிச்சேன். மதுரையில ப்ளஸ் டூ, பி.ஏ., எம்.ஏ., எம்.ஃபில்னு தொடர்ந்து படிச்சேன். வேலூரில் பி.எட் படிச்சேன். சென்னையில கொஞ்ச நாள் வேலை செய்திட்டிருந்தப்ப, கண்பார்வை இழந்த  வேணுகோபால், என்னைத் திருமணம் செய்துகிட்டார். வேலூரில் அரசுப் பள்ளியில் அவருக்கு வேலை கிடைக்க, இங்க வந்துட்டோம். ஒரு மகன், ஒரு மகள்னு பிறக்க... இருட்டிலும் வாழ்க்கை சந்தோஷமா இருந்துச்சு!'' எனும்போதே கண்களில் நீர் துளிர்க்கிறது அமுதாவுக்கு. ''ஆனா... எல்லாமே கொஞ்ச நாளைக்குதான். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கணவர் ஏழு வருஷத்துக்கு முன்ன இறந்துட்டார்'' என்றபோது கட்டுக்கடங்காமல் கண்ணீர் புரள, ஓடி வந்து அம்மாவின் கரம் பற்றுகிறாள், மகள். இந்த ஸ்பரிசத்தில் திடம் பெற்றுத் தொடர்கிறார் அமுதா.

''எனக்குத் தைரியம் சொல்லி, எங்களுக்குப் பெரும் துணையா இருந்தார் எங்கப்பா. நானும் என் துக்கத்தை எல்லாம் ஒரு ஓரமா வெச்சுட்டு, பிள்ளைகளுக்காக என் மனசு மூலம் உலகத்தைப் பார்க்க ஆரம்பிச்சேன். அந்த வைராக்கியத்தில்தான் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் கெஸ்ட் லெக்சரரா ஆறு வருஷமா வேலை செய்துட்டு வர்றேன். ஓரளவு ஆறித்தேறி வந்த நிலையில... எங்கிட்ட இருந்து எங்கப்பாவை பறிச்சுடுச்சு விதி. ஆறுதல் சொல்லக்கூட ஆளில்லாத நிலையில, 'ஆறுதலைவிட தைரியம்தான் தேவை'னு, எனக்கு நானே தைரியம் சொல்லிக்கிட்டேன். இப்போ என் வீட்டை, குடும்பத்தை குறையில்லாம பார்த்துக்கிறேன்!'' என்றபோது, வருத்தங்கள் நீங்கிய தெளிவு அமுதா முகத்தில்.

''பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்பியதும், 'மிஷன் டு த பிளைண்ட்’ இயக்கத்துக்கு பைபிள் வகுப்பெடுப்பேன். பைபிள் கருத்துக்களைப் புத்தகமாவும் எழுதிக் கொடுப்பேன். மதியம் என் மாணவர்களே வீட்டுக்கு வந்து, கல்லூரிக்குக் கூட்டிட்டுப் போயிட்டு, திரும்ப கூட்டிட்டு வந்து விட்டுடுவாங்க. என்னோட நிலையை அறிந்து, மற்ற வகுப்புகளைவிட அதிக பொறுப்போட மாணவர்கள் பாடங்களைக் கவனிக்கிறதில் எனக்கு பெரும் சந்தோஷம், நிம்மதி. என் சம்பளத்தோட, கணவரின் பென்ஷன் பணமும் குடும்பத்தைக் காப்பாத்துது. பையன் பத்தாவது படிக்கிறான், பொண்ணு ஏழாவது படிக்கிறா'' என்று அமுதா சொல்லிய தருணத்தில், அவர் கைக்குள் வந்து அடைகிறார்கள் பிள்ளைகள்.

மகன் சைலேஸ் எபனேசர், ''சமையல் பண்றது, துணி துவைக்கிறது, பாத்திரம் கழுவுறது, வீடு சுத்தம் செய்றதுனு எல்லாம் எங்கம்மாதான் செய்வாங்க. நானும், தங்கச்சி லிடியாவும் எழுந்திரிக்கிறதுக்கு முன்னயே எழுந்து, டிபன், ஸ்கூலுக்கு லன்ச்னு செஞ்சுடுவாங்க. நாங்களும் அம்மாவுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வோம். ரெண்டு பேருக்கும் சாயங்காலம் பாடம் சொல்லிக் கொடுக்கிறதும் அவங்கதான். ஃப்ரெண்ட்ஸ்களோட வீட்டுல அவங்க அப்பா, அம்மாக்களைப் பார்க்கும்போது மனசுல ஏதோ ஒரு ஏக்கம் வரும். ஆனா, எங்கம்மா எங்களுக்காக செய்றதை எல்லாம் ஒரு நிமிஷம் நினைச்சுப் பார்த்தா, கண்ணீரா வரும். நல்லா படிச்சு, எங்கம்மாவையும், தங்கச்சியையும் பார்த்துக்கணும்!''

- குரலே உடையாத வயதில், மனதில் அத்தனை உறுதி எபனேசருக்கு.

''நேர்மையா நடந்துக்கணும், எப்பவும் உண்மையைதான் பேசணும்... பொய் சொல்றது கொலை செய்றதைவிட மோசம்னு எங்கம்மா சொல்லியிருக்காங்க. நாங்க அம்மா பேச்சைக் கேட்டு சமர்த்தா நடந்துப்போம்!'' என்கிறாள் லிடியா அம்மா பிள்ளையாக.

''ஒரு வேண்டுகோள்... உடல் அளவில் பாதிக்கப்பட்டவங்களைப் பார்க்கும்போது பாவமாவும் பார்க்க வேண்டாம், பாரமாவும் நினைக்க வேண்டாம். எங்களை அன்புக்குள் சென்று பாருங்க. அதுதான் எங்க இருட்டு உலகத்துக்கான மாபெரும் மருந்து!''

- அழகாகப் புன்னகைக்கிறார், பேராசிரியை அமுதா, எம்.ஏ., பி.எட்., எம்.ஃபில்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு