Published:Updated:

‘பஞ்சர்’ கடை லதா!

உ.சிவராமன் , படங்கள்: வீ.சக்தி அருணகிரி

''கஷ்டம்னு நினைச்சா... எல்லாமே கஷ்டம்தான். பொழைக்கணும்னு நினைச்சா, கஷ்டமெல்லாம் இஷ்டம்தான்!''

- சுருக்கமாகச் சொன்னாலும், 'சுருக்’ என சொன்னார் தேனியைச் சேர்ந்த லதா. கடந்த

‘பஞ்சர்’ கடை லதா!

22 ஆண்டுகளாக பைக், கார், லாரி என வாகனங்களுக்கு பஞ்சர் ஒட்டும் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் லதாவின் பேச்சில், இயல்பான ஓட்டம்.

''அப்பாவுக்கு இந்த பஞ்சர் ஒட்டுற தொழில். எங்கூட பொறந்தவங்க அஞ்சு பேரு. சின்ன வயசுல ஸ்கூலுக்குப் போயிட்டு வரும்போது கடையில கொஞ்ச நேரம் இருந்துட்டுதான் வீட்டுக்குப் போவோம். அப்போவெல்லாம் அப்பா பார்க்கிற வேலைகளை வேடிக்கை பார்த்துட்டே இருப்போம். என் அண்ணன், தம்பிங்க அப்பாகூட ஒத்தாசையா வேலை பார்த்தாலும், என்னைய பார்க்க விடமாட்டார் எங்கப்பா.

என்னைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்த பிறகு, கடனுக்காக கடையையும் வித்துட்டாரு எங்கப்பா. என் வீட்டுக்காரர் ஜவுளி வியாபாரம் பார்த்துட்டு இருந்தாரு. அதனால அவரு ஒரு எடத்துல, நான் ஒரு எடத்துலனு இருப்போம். 'இப்படி பிரிஞ்சே தான் இருக்கணுமா... இங்கயே ஏதாவது தொழில் பண்ணலாமே’னு யோசிச்சப்போ, பஞ்சர் கடைதான் ஞாபகம் வந்துச்சு. வீட்டுக்காரரும் சரினு சொல்ல, கடையை ஆரம்பிச்சிட்டோம்...''

- பேசிக்கொண்டிருக்கும்போதே ஒரு டூ வீலர் வர, பஞ்சர் பார்த்து அனுப்பிவிட்டுத் தொடர்ந்தார் லதா.

''ரெண்டு பேருக்குமே பஞ்சர் ஒட்ட தெரியாது. ஒரு தைரியத்துலதான் கடையைப் போட்டோம். பொழைக்க வழி கிடைச்சுடணும்ங்கிற வைராக்கியத்துல உழைக்க ஆரம்பிச்சோம். பஞ்சர் ஒட்டறதுக்காக டயருங்க வந்தப்போ, அப்பா எப்படி வேலை பார்ப்பாருனு என் வீட்டுக்காரர்கிட்ட நான் சொல்லச் சொல்ல, அதைக் கேட்டு அப்படியே ஒட்டினாரு. இப்படித்தான் தொழிலைக் கத்துக்கிட்டோம்!'' என்று சிரித்த லதா,

''அப்புறம் என் வீட்டுக்காரரு லாரி டிரைவர் வேலைக்குப் போக ஆரம்பிச்சாரு. அவரு இல்லாத நேரங்கள்ல என் தம்பிங்க வந்து ஒத்தாசையா இருந்தாங்க. எனக்கு ஒரு பையன், ரெண்டு பொண்ணுங்க. மகனுக்கு பத்து வயசானப்போ, அவனுக்கு இதயத்துல பிரச்னைனு தெரிய வந்துச்சு. எட்டு வருஷமா இந்த தொழில்ல சேர்த்து வெச்ச பணத்தைஎல்லாம் மருத்துவ செலவுக்கே போட்டும் காப்பாத்த முடியல'' என்றபோது, குரல் மெலிந்தது லதாவுக்கு. மடமடவென தண்ணீர் குடித்துவிட்டுத் தொடர்ந்தார்.

''மூத்த பொண்ணை சென்னையில கட்டிக்கொடுத்தாச்சு. சின்னப் பொண்ணு பதினொண்ணு படிக்குது. இந்தத் தொழிலை ஆரம்பிச்சு 22 வருஷமாச்சு. ஆரம்பத்துல, 'பொம்பளையா இருக்கே... ஒழுங்கா பஞ்சர் ஒட்டிருமா’னு தயங்கினவங்க எல்லாம், வாடிக்கையாளரா மாறிட்டாங்க. அவங்களுக்காகவே இத்தனை வருஷமா இடத்தைக்கூட மாத்தாம இங்கேயேதான் இருக்கேன். டூ வீலரா இருந்தா நானே டயரைக் கழட்டிருவேன். கார், லாரிகளுக்கு அவங்களே கழட்டிட்டு வந்து கொடுத்துடுவாங்க. டூ வீலருக்கு 50 ரூபாய், கார், லாரிக்கு 60 ரூபாயில் இருந்து வாங்குறேன். டியூப் மாத்தியும் கொடுப்பேன்.

‘பஞ்சர்’ கடை லதா!

சிலர் வேலைக்குப் போற அவசரத்துல வண்டிய கடையில நிப்பாட்டிட்டு, பஞ்சர் பார்க்கச் சொல்லிட்டுப் போயிடுவாங்க. அதுல சில வண்டிகள்ல ஒரு பஞ்சர் இருக்கும், சில வண்டிகள்ல நிறைய இருக்கும். வேலையை முடிச்சுக் கொடுக்கும்போது, நாம கேட்குற காசை மறுபேச்சில்லாம கொடுத்துட்டுப் போயிடுவாங்க. எங்கப்பா சொல்லிக் கொடுத்த இந்த நேர்மையும், வாடிக்கையாளர்கள் என் மேல வெச்சிருக்கிற நம்பிக்கையும்தான் இதுக்குக் காரணம்'' என்றவர்,

''அப்போ கடைகள் குறைவுங்கிறதால நல்ல வருமானம் இருந்துச்சு. இப்போ நிறைய கடைகள் வந்ததால வருமானம் குறைய ஆரம்பிச்சுடுச்சு. சில நாட்கள்ல பத்துல இருந்து பதினஞ்சு பஞ்சர் வரைக்கும் வரும். சில நாட்கள்ல ரொம்பக் குறைவா வரும். வண்டிக்கு கிரீஸ் தடவுறது, லூஸா இருக்குற நட்டு போல்டுகளை சரிபண்றதுனு எல்லா வேலைகளையும் பார்த்துக் கொடுப்பேன். இதுக்கெல்லாம் காசு வாங்க மாட்டேன்.

காலையில ஆறரை மணிக்கெல்லாம் கடைக்கு வந்துட்டா... சாயங்காலம் ஆறு மணி வரைக்கும் இருப்பேன். பொண்ணு ஸ்கூல் விட்டு கடைக்கு வந்ததும், ரெண்டு பேரும் கிளம்பி வீட்டுக்கு வந்துடுவோம். அப்புறம் வீட்டுக்காரர் பார்த்துக்குவாரு. இப்படித்தான் போகுது வாழ்க்கை. சின்னவளை நல்லா படிக்க வைக்கணும். வேறெந்த பெரிய ஆசையும் இல்ல!'' என்ற லதா, ஸ்பானரை எடுத்துக்கொண்டு அடுத்த வண்டியை நோக்கி நகர்ந்தார் தன் விரல்களைச் சிவப்பாக்க!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு