நாம் வழிபடும் தெய்வத்தின்மேல் நம்பிக்கை கொண்டு சரணடைந்து அன்போடும் பக்தியோடும் வாழும்போது, தெய்வம் அந்த அன்பிற்குக் கட்டுப்படுகிறது. நம் விசுவாசமான வழிபாடும் பிரார்த்தனையும் நாம் புரியும் நல்ல தர்மங்களும் வாழ்வின் ஒழுங்குமுறைகளும், பலனை எதிர்பாராத சேவைகளுமே கடவுள் நம்மீது அருள்பொழியக் காரணங்களாகிவிடுகின்றன. தெய்வ வங்கிக் கணக்கில் பூர்வ புண்ணியத்தோடு நம் பிரார்த்தனையின் பலனும் சேரும்போது, நாம் வேண்டினாலும் வேண்டாமலிருந்தாலும் நமக்கு வேண்டியதை தெய்வம் கொடுத்துவிடுகிறது.

தெய்வத்தின் பார்வை விழத் தொடங்கினால்... தெய்வ நடமாட்டம் வாழ்வில் வரத்தொடங்கிவிட்டால் மிக எளிதில், வெகு இயல்பாக மனமாற்றம் தொடங்குகிறது. நம் குறைகளைச் சீர்திருத்தி பக்குவப்படுத்தி நம்மை மேம்பட்ட இல்லற வாழ்விற்கோ, ஆன்மிக வாழ்விற்கோ ஆற்றுப்படுத்தும் வேலையை ஆண்டவனே நேரடியாகச் செய்யத் தொடங்குகிறான். காலங்காலமாக பக்தர்கள் வாழ்வில் கடவுளின் கருணை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இந்த வகையில்தான் குறைகள் நிறைந்திருக்கும் என்மீதும் ஸ்வாமி சத்யசாயி பாபாவின் அருளாசி பொழியத் தொடங்கியது.

'மனித வாழ்க்கை இரும்புத் துண்டைப் போன்றது. சோப்பும் நீரும் போட்டுக் குளித்தால் போதாது. உள்ளும் புறமும் நீங்கள் தூய்மை செய்துகொள்ள வேண்டும். அவ்வாறு தூய்மையாகும்போது தெய்விகக் காந்தம் உங்களை உடனடியாக ஈர்க்கும். ஈர்ப்பது மட்டுமல்லாமல், அந்த இரும்புத் துண்டையும் காந்தமாக மாற்றும் ஆற்றல் அதற்கு உள்ளது’ என்கிறார் ஸ்வாமி. இதனால்தானோ என்னவோ, ஸ்வாமி அஞ்ஞானம் போக்கி மனதைத் தூயதாக்கும் 'காயத்ரி’ மந்திரத்தைச் சொல்லி வரும்படி என்னைப் பணித்தார். ஸ்வாமியின் மூலமந்திரமான,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'சாயீச்வராய வித்மஹே சத்யதேவாய தீமஹி
தந்நோ சர்வபிரசோதயாத்’

என்ற 'சாயி காயத்ரி’யோடு 'சுதர்சன’ மந்திரம், தைரியம் தரும் 'கார்த்தவீரியார்ஜுன காயத்ரி’ போன்றவற்றையும் சொல்லி வந்தேன். எனக்குள் கூடுகட்டிக்கொண்டிருந்த பயம், பலவீனமெல்லாம் குறையத் தொடங்கின.

சத்தியப்பாதையில்..! - 8

இந்தச் சந்தர்ப்பத்தில்தான் என் வாழ்வில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. என் கல்லூரிப் பணி எனக்குப் போதுமான மகிழ்ச்சியையும் நிறைவையும் தந்துகொண்டிருந்தது. தன் சொற்ப அறிவையும் அனுபவத்தையும் குழந்தைகளுக்கு அன்போடு புகட்டிவிட நினைக்கும் தாய்போலத்தான் என் அன்பு மாணவிகளுக்குப் பாடம் போதித்தேன். அந்த இனியபொழுதில், நான் கற்றுக்கொடுத்ததும் கற்றுக்கொண்டதும் அநேகம். கவிதைப் பாசறை நடத்தியதும், ஆசிரியத் தோழிகளோடு சேர்ந்து கல்லூரி விழாக்களில் பல நிகழ்ச்சிகளை நடத்தியதும், மாணவிகளின் ஆரவாரக் கைதட்டல்களோடு ஆண்டு விழாக்களில் கவிதைகள் பாடியதும்... என் நினைவில் ஒளிரும் நித்ய சித்திரங்கள். அங்கு பணிபுரிந்த காலத்தில்தான் என் வாழ்வில் நல்ல தருணங்கள் வந்தன. வெளி இலக்கிய நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்துகொண்டேன். அப்போதெல்லாம் ஏதோ ஓர் உற்சாகமும் துள்ளலும் எனக்குள் ஓடிக்கொண்டிருக்கும். ஆசிரியத் தோழிகளின் கலகலப்பும், விழாப்போதுகளில் வண்ணவண்ணச் சேலைகளோடு தோழியரோடு கல்லூரி வெளியைச் சுற்றி வந்ததும், மஞ்சள் வண்ணக் கொன்றைப்பூக்கள் பாய் விரித்துக்கிடக்கும் கொன்றை மரங்கள் நிறைந்த மீனாட்சி மகளிர் கல்லூரி முகப்பும்... அடுத்த வகுப்புக்குப் போக ஏறிக்கொண்டிருந்த மாடிப்படிகளும் நினைவில் படிந்து கிடக்கின்றன.

குடும்பக் கடமைகளை இன்னும் முழுமையாகக் கவனிக்க வேண்டும் என்பதற்காக... இன்னும் பதின்மூன்று வருடங்களுக்கு மேல் பணிக்காலம் இருந்தபோதே என் மனதிற்குப் பிரியமான கல்லூரிப் பணியை விடும்படியான கட்டாயம் நேர்ந்தது. கல்லூரி முதல்வர் இதற்குச் சம்மதிக்கவேயில்லை. ஆசிரியத் தோழிகள் அறிவுரை கூற... மாணவிகள் மிக வருந்த... வேறு வழியில்லாமல் தன்விருப்பு ஓய்வு பெற்று கல்லூரியைவிட்டு வெளியே வந்தேன். தன் வழியில் தமிழ்த்துறையில் மகளும் பணிபுரிவதான நிறைவிலிருந்த என் அப்பா... எதற்கும் வருத்தப்படாத என் அன்பான அப்பா வருத்தப்பட்டது இதற்குத்தான். நான் பணியிலிருந்த கடைசி வாரத்தில் அம்மாவோடு கல்லூரிக்கு வந்து பேசிவிட்டுப் போனார். கல்லூரி வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தேன். என் வாழ்வில் இன்னும் சில முற்றுப்புள்ளிகளும் விழுந்துபோயின.

வீட்டுப் பணிகளை முழுமையாகக் கவனிக்க முடிந்தது என்றாலும்... ஒரு கோலாகலம் முடிந்துபோன வருத்தம் எனக்குள் கவிழ்ந்துகொண்டதால் உற்சாகம் போனது. எழுதுவது, பேசுவது, வெளியில் போவது, தோழியருடன் பேசுவது என்று எல்லாவற்றையும் குறைத்துக்கொண்டேன். ஒரு கட்டத்தில் நிறுத்தினேன். பிடித்ததைத் துறக்கவும் மறக்கவும் மனம் பழகிக்கொண்டது. ஸ்வாமியின் ஆன்மிக நூல்களை வாசித்தேன். வழிபாடும் தியானமும் மனதை அமைதிப்படுத்தின. என் வாழ்வில் எந்தவிதமான சோதனைகளும் துன்பங்களும் வந்தபோதும்... அதெல்லாம் என் பூர்வ வினைகளால் கர்ம வினைகளால் வந்ததென்றே நினைக்கிறேன். இன்னொன்று, இலக்கியப் பணியும் கல்லூரி பணியும் பழையபடி தொடர்ந்துகொண்டிருந்தால், இந்த ஆன்மிக வாழ்க்கைக்கு வந்திருப்பேனோ என்னவோ? 'கடந்தால்தான் பயணமே’ என்பதை உணர்ந்துகொண்டேன்.

அந்தத் துன்பப் போதுகளில்... ஸ்வாமியின் அன்பும் ஆதரவும் நிறைந்த மொழிகள், வழிகாட்டுதல்கள், கருணை ததும்பும் கனவுகள், காட்சிகள், 'நானிருக்க பயமேன்’ என்ற அபய வாக்குகள் எல்லாம்... சமாதானம் செய்து எனக்குள் சாந்தி தந்தன. சோதனை காலத்தில் யார் அன்பும் ஆதரவும் தந்து ஆறுதல் தருகிறார்களோ அவர்கள் நமக்கு நல்லுறவாய் ஆகிப்போகிறார்கள். அப்படித்தான் ஸ்வாமி பாபா எனக்கு நல்லதோர் ஆத்ம பந்தமாய் ஆனார். வாழ்க்கைப் பயணத்தில் உறவுகள் உடன்வரும் பயணிகள்; அவர்கள் எப்போது வேண்டுமானாலும் இறங்கிப் போய்விடலாம். கண்காணிப்பாளராகவும் நடத்துநராகவும் ஓட்டுநராகவும் கடைசி வரையில் உடன் வருபவர் கடவுள் மட்டுமே.

ஸ்வாமியின் சங்கல்பத்தினாலும் கருணையினாலும், மனம் தெளிவுகொள்ளத் தொடங்கியது. அப்பாவோடு பழைய கோயில்கள் சிலவற்றுக்குப் போய் வந்தேன். பழையபடி தோழியரோடு பேசத்தொடங்கினேன். மனம் ஒரு சமநிலைக்கு வரத்தொடங்கியது.

அதுசமயம் கனவொன்று வந்தது. ஹாலில் குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்திருக்கிறோம். எதிரே மிகப்பெரிய ஸ்வாமி படம் தெரிகிறது. படமெல்லாம் விபூதி மயமாய்இருக்கிறது! 'என்ன இது... இப்படி விபூதி வருகிறதே’ என்கிறார் உறவினர் ஒருவர். திடீரென்று ஸ்வாமி படத்திலிருந்து அமிர்தம் பொங்கி வழியத் தொடங்கியது. சுவரில் வழிந்து தரையில் விழுந்து வெள்ளமாய்ப் பெருக்கெடுத்து ஓடிவரத் தொடங்கியது! அந்த சந்தோஷம் தாங்காமல் திணறியபடி விழித்துக்கொண்டேன். ஸ்வாமியின் அனுக்கிரஹமே இந்தக் கனவு. ஏதோ நல்லது நடக்கப் போகிறது என்றார்கள் என் தோழியர். ஓர் எண்ணம் அப்போது வந்தது. பத்தாண்டுகளாக எழுதிவைத்த கவிதைகளைத் தொகுத்து இன்னொரு கவிதைப் புத்தகம் வெளியிட்டால் என்ன என்ற ஆர்வமும் உந்துதலும் எழுந்தன. ஸ்வாமியிடம் ஆசீர்வாதம் கேட்டுப் பிரார்த்தித்தேன். குடும்பத்தினரிடம் அனுமதி வாங்கினேன். புத்தக வேலையைத் தொடங்கினேன். அது நல்லதொரு கவிதை நூலாக வெளிவந்தது. அதுதான் 'மீண்டும் சரஸ்வதி’. அந்தக் கவிதை நூல் வெளியீட்டு விழாவிலும்... விழாவிற்கு முன்னும் பின்னும் ஸ்வாமி தன் அருளாசியைக் காட்டிய விதம் மிகவும் அருமையானது! அற்புதமானது!

ஜெய் சாயிராம்!

தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism