Published:Updated:

"12 வயதுக்குப் பிறகும் படுக்கையில் சிறுநீர்!”

சா.வடிவரசு

''12-ம் வகுப்பு படிக்கும் என் சகோதரி, உறக்கத்திலேயே சிறுநீர் கழித்துவிடுகிறாள். இதனால் வீட்டில் உள்ளோர் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிறோம். சொந்தக்காரர் வீடுகளுக்கு குடும்பத்தோடு போவதற்குக்கூட யோசிக்கிறோம். பள்ளியில் தோழிகளுக்கும் விஷயம் தெரிந்து கிண்டல் செய்வதாக அழுகிறாள். பல டாக்டர்களிடம் காட்டியும் பிரச்னை தீரவில்லை. இது எங்கள் குடும்பத்தையே மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாக்கிஇருக்கிறது...’'

- இப்படி ஒரு தோழி, தன் வருத்தத்தை சமீபத்தில் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

"12 வயதுக்குப் பிறகும் படுக்கையில் சிறுநீர்!”

சென்னை, ஸ்ரீராமச்சந்திரா பல்கலைக்கழக சிறுநீரக சிறப்பு மருத்துவப் பேராசிரியர் சவுந்தரராஜனிடம் இதைப் பற்றிக் கேட்டபோது, ''தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகள், பல வீடுகளில் உண்டு. ஆனால், அவர்களின் வயது ஐந்தைத் தாண்டினால், அது கவனிக்க வேண்டிய விஷயம். அதற்கும் மேல் தாண்டினால், அது சிகிச்சையளிக்க வேண்டிய விஷயம்! ஆனால், இந்த விஷயத்தை கேவலமானதாக நினைத்து வெளியில் சொல்லவே வெட்கப்படுபவர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். இது, பிரச்னையை மேலும் அதிகப்படுத்துமே ஒழிய, ஒருபோதும் தீர்வு தராது. அதனால் சரியான மருத்துவர்களை நாடி உரிய அறிவுரை மற்றும் சிகிச்சையைப் பெற்றுக்கொள்வதுதான் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு நல்லது'' என்று எச்சரிக்கையாகச் சொன்னவர், இந்தப் பிரச்னைக்கான காரணங்கள் மற்றும் தீர்வுகளையும் சொன்னார்.

''பொதுவாக, குழந்தைகள் உறக்கத்தில் இருக்கும்போது 'பிளாடர் கன்ட்ரோல்’ இருக்காது. எனவே, அவர்கள் உறக்கத்திலேயே சிறுநீர் கழிப்பது இயல்பு. இதை 'பெட் வெட்டிங்’ என்பார்கள். பெரும்பாலும் ஐந்து வயதுக்குள் இந்த கன்ட்ரோல் இயற்கையாகவே வந்துவிடும். சில குழந்தைகளுக்கு இன்னும் சிறிது கால தாமதமாகலாம். ஆனால், ஏழு வயதுக்குப் பின்னும் தூக்கத்தில் குழந்தைகள் சிறுநீர் கழித்தால், கவனிக்க வேண்டிய விஷயம். 'அதெல்லாம் வளர வளர சரியாயிடும்’ என்று அலட்சியம் கூடாது. குழந்தைகளின் இத்தகைய செயல்களைக் கண்டு, ஏதோ செய்யக்கூடாததை செய்துவிட்டது போல பதறி, குழந்தைகளை அடித்து, உதைப்பதன் மூலமாக இப்பிரச்னைக்கு தீர்வு தேட நினைக்கிறார்கள் சிலர். இது தலைவலி போய் திருகுவலி வந்த கதையாக, குழந்தைகளை பலவித மனஉளைச்சலுக்கு ஆளாக்கி, உடல்ரீதியாகவும் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்திவிடக் கூடும்.

இன்றைய சூழலில் பெண் குழந்தைகள்தான் அதிக அளவில் இந்த பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். பள்ளியில் நினைத்த நேரத்தில் சிறுநீர் கழிக்க செல்ல முடிவதில்லை. அதேபோல வெளியிடங் களுக்குப் போனாலும் ஆண்களைப் போல இஷ்டப்படி சிறுநீர் கழித்துவிட முடியாது. இத்தகைய சூழல்களில் சிறுநீரை அடக்கி வைக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். இப்படி அடக்கி அடக்கியே ஒரு கட்டத்துக்கு மேல், பழக்கப்பட்ட விஷயமாக மாறிவிடுகிறது. ஆனால், இது உள்ளுக்குள்

"12 வயதுக்குப் பிறகும் படுக்கையில் சிறுநீர்!”

வேறுவிதமான பிரச்னைகளுக்கு அடிபோட்டுவிடுகிறது. அதேசமயம், இந்தப் பிரச்னையால் ஆண் குழந்தைகளுக்கு வரும் பாதிப்பு அதிகம். குணப்படுத்துவதிலும் ஆண் குழந்தைகளைப் பொறுத்தவரை சற்று சிரமமான விஷயமாகவே இருக்கிறது'' என்ற டாக்டர்,

''சிறுநீர் கழிக்கும் பாதையில் ஏற்படும் பிறவிக் கோளாறுகள், மலச்சிக்கல் பாதிப்பு, சர்க்கரை நோய், சிறுநீர்ப் பாதை தொற்று, சிறுநீரகப் பிரச்னை, மிரட்டல், தேர்வு பயம், மனஉளைச்சல் உள்ளிட்ட பல காரணங்களால் இப்பிரச்னை வர வாய்ப்புள்ளது. பரம்பரையும் ஒரு காரணம். ஆழ்ந்த உறக்கத்துக்குச் செல்லும் குழந்தைகள், சிறுநீர் கழிப்பார்கள் என்று கூறப்படுவது உண்டு. சிறுநீர்ப்பை நிறைந்துவிட்டதை மூளைக்குத் தகவல் அனுப்பும்போது, ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் மூளையை அத்தகவல் எட்டாமல் போவதுதான் காரணம். இந்தப் பிரச்னைகள் எல்லாமே தானாக சரியாகக் கூடிய வாய்ப்புக்காக, 5 வயது வரை காத்திருக்கலாம். அதற்கு மேலும் 'பெட் வெட்டிங்’ செய்யும் குழந்தைகளை அலட்சியப்படுத்தாமல், உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்வது அவசியம். 12 வயதுக்குப் பிறகும் சரிசெய்யாவிட்டால், அது ரத்த சோகை, ரத்த அழுத்தம், சிறுநீரகம் சுருங்கிப்போதல், சிறுநீரகம் முழுவதுமாக பாதிப்படைதல் உள்ளிட்ட பிரச்னைகளோடு, எலும்பு சம்பந்தமான பிரச்னைகளையும் விளைவிக்கக் கூடும்'' என்று எச்சரித்தார் டாக்டர்.

அடுத்த கட்டுரைக்கு