பெண்கள், மெல்லிய உணர்வுகளால் பூட்டப்பட்டவர்கள். ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு தனித்துவம் இருக்கிறது. அதை அவர்கள் உணரும்போதுதான் கம்பீரமாக தலைநிமிர்கிறார்கள். என் படங்களின் நாயகிகளும் அவர்களுடைய தனித்துவம் உணர்ந்தவர்களாக இருப்பார்கள்!

என் ஒவ்வொரு படத்திலும் கதைநாயகியை விரும்பிச் செதுக்குவேன். அப்படித்தான் 'அழகிய தீயே' பட நாயகி 'நந்தினி’. உதவி இயக்குநராக இருந்த என் நண்பனின் வாழ்வில் நடந்த நிஜ சம்பவமே, படத்தின் கரு. என் நண்பன், தன் தோழியின் படிப்புக்கு உதவவேண்டி, தான் அவளைக் காதலிப்பதாக அவர்கள் வீட்டில் சொல்லி திருமணத்தை நிறுத்தினான். இதுவரை நிஜம். படத்தில் தொடரும் சம்பவங்கள், நான் திரைக்கதைக்காக தொடுத்தவை.

என் இனிய கதைநாயகிகள்! - 9

நவ்யா நாயர், நந்தினியாக நடித்திருப்பார். தன் பணக்கார அப்பா ஏற்பாடு செய்யும் திருமணத்தைத் தடுக்க, சந்திரனின் (பிரசன்னா) உதவியை நாடுவாள் நந்தினி. சினிமாவில் உதவி இயக்குநராக இருக்கும் அவன், அவளுக்குப் பார்த்திருக்கும் மாப்பிள்ளையான பிரகாஷ்ராஜிடம், தானும் அவளும் ஐந்து ஆண்டுகளாகக் காதலிப்பதாக உருகுவான். அதை நம்பும் பிரகாஷ்ராஜ், ஒரு சிக்கலான சூழ்நிலையில் அவர்களுக்குப் பதிவுத் திருமணம் செய்துவைத்து, இருவரையும் ஒரே வீட்டில் தங்க வைத்துவிட்டு, அமெரிக்கா சென்றுவிடுவார். ஒன்றாகத் தங்கினாலும் நாயகனும் நாயகியும் கண்ணியமான நண்பர்களாக வாழ்வார்கள். க்ளைமாக்ஸ் வரை சந்திரனால் எந்த வகையிலும் டிஸ்டர்ப் ஆகாதவளாக இருப்பாள் நந்தினி. இறுதியாக நாயகன் கண்கலங்கும்போது, தானும் அவன்மீது வைத்திருந்த மென்மையான காதலை உணர்வாள்.

தந்தையிடம் வசதிகள் கொட்டிக்கிடந்தாலும், அவரிடத்தில் தர்மம் இல்லை என்பதால், வசதி வாய்ப்புகளை துணிந்து இழந்து, தன் எதிர்காலக் கல்வியின் மீது மட்டும் தீராத நம்பிக்கையோடு இருக்கும் 'நந்தினி’, எனக்குப் பிடித்தமானவள்!

என் வாழ்நாளில் நான் பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டிய படம், 'மொழி’. அதன் நாயகி 'அர்ச்சனா’, தன்னம்பிக்கையின் அடையாளம்!

'அர்ச்சனா’வாக ஜோதிகா நடித்திருப்பார். பிருத்விராஜ் மற்றும் பிரகாஷ்ராஜ் இருவரும் திரை இசை அமைப்பாளர்கள். இசை என்றால் என்ன, அதை எப்படி ரசிப்பது, உணர்வது என்றுகூட அறிய முடியாத வாய் போசாத, காது கேட்காத மாற்றுத்திறனாளி என் அர்ச்சனா. அவள் தன் குறைபாட்டை மறந்து, சுயபச்சாதாபத்தை தூர நிறுத்திவிட்டு, துடுக்கான, கொஞ்சம் திமிரான பெண்ணாக வெளிப்படுத்திக்கொள்வாள். 'உனக்கு ஃபிரெஞ்சு தெரியாது, ஜப்பானீஸ் தெரியாது, அது மாதிரி எனக்கு மொழி தெரியாது. ஸோ வாட்? ஆனா, நான் பேசுற மொழியை உங்க யாராலும் பேச முடியாது. அது மௌனம்!’ என்று சொல்கிற கான்ஃபிடன்ட் ஏஞ்சல்! பள்ளிப் பருவத்தில் அர்ச்சனா மாதிரி எனக்கு ஒரு தோழி இருந்தாள். மற்றவர்கள் தன்னைப் பார்த்துப் பரிதாபப்படுவதை விரும்பாத அவளோட கோபங்கள் என் மனதில் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும்.

ஒரு நாள் பேப்பரில், சைகை மொழி கற்றுக்கொடுப்பதாக ஒரு விளம்பரம் பார்த்தேன். அங்கே போனபோது, அந்தச் சூழலும், அங்கே இருந்தவர்களும் எனக்கு ஆச்சர்யம். ஒரு வாரமாக நானும் சைகை மொழி கற்றுக்கொண்டேன். அப்புறம்தான் 'மொழி’ ஸ்கிரிப்ட் உருவாகியது. அந்த சைகை மொழி பயிற்சிக் கூடத்தில் நான் சந்தித்த பலரும், நடிப்பில் ஜோதிகாவுக்கு நிறைய உதவினார்கள்.

என் இனிய கதைநாயகிகள்! - 9

'நீங்க என்னை பாவமா பார்க்கத் தேவையில்லை. குறை ஒரு குறையில்லை. அதை குறைனு நினைக்கிறதுதான் குறை!’னு அனைவருக்கும் புரியவைக்கும் அர்ச்சனாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

'அபியும் நானும்’... ஓர் அப்பாவுக்கும் மகளுக்குமான அன்பிழைகளைச் சொல்லும் படம்!

என் நண்பன் ஒருவன், தன் குழந்தைக்குக் காது குத்தும்போது அதை தாங்கிக்கொள்ள முடியாமல் தேம்பித் தேம்பி அழுதான். 'இதற்குப் போய் இப்படி அழுகிறானே' என்று எனக்குள் சிரித்துக்கொண்டேன். இதை படத்திலும் சேர்த்தேன். ஆனால், அந்த தந்தை பாசம், அதன் பிறகுதான் புரிந்தது. பொதுவாக தாய்மையைப் பற்றி நாம் அதிகமாகப் பேசியிருக்கிறோம். ஆனால், தந்தைக்கும் மகளுக்குமான உணர்வுகள் அதிகம் பதிவு செய்யப்படாதவை. 'அபி’ த்ரிஷாவும், 'அப்பா' பிரகாஷ்ராஜும் அந்த உறவை அழகாக நடிப்பில் கொடுத்தார்கள்.  

என்னதான் உறவுகளில் பற்று இருந்தாலும், அதிலிருந்து விடுபடும் தைரியத்தை வளர்த்துக்கொள்வது வாழ்க்கையின் அவசியம் என்பதைத்தான் படத்தில் சொல்ல முயற்சி செய்திருப்பேன். மகள்கள் எவ்வளவு வளர்ந்தாலும், தங்களின் அரவணைப்பில்தான் பத்திரமாக இருப்பார்கள் என்கிற எண்ணம், நம்பிக்கை எல்லா அப்பாக்களுக்குமே உண்டு. மகள்மீது அளவு கடந்த பாசம் வைத்து, ஒரு கட்டத்துக்குப் பிறகு, திருமணம் எனும் உறவு மூலமாக இன்னொருவருக்குச் சொந்தமாகும்போது, திகைத்துப் போகிறார்கள்.

அபி கொஞ்சம் வளர்ந்து, தானே சைக்கிளில் பள்ளிக்குப் போகும்போது, பிரகாஷ்ராஜ் ஃபாலோ செய்வார். 'ஐ நோ வாட் ஐயாம் டூயிங் பா’ என்று தெளிவாக சொல்வாள். உள்ளங்கைக்குள் வைத்து வளர்த்த மகள்தான்... இருந்தாலும் வளர வளர பெண்கள் எல்லோருமே ஒரு கட்டத்தில் இந்தத் தெளிவை அடைந்துவிடுகிறார்கள். நாம்தான், 'ஐயோ, அவளுக்கு ஒண்ணும் தெரியாது!’ என்று பதறுகிறோம்.

பெண்கள் ஒவ்வொருவருமே தனித்த சிந்தனையோடு, தைரியமாக இருக்கக் கூடியவர்கள்தான். இதை உணர்ந்து வழிவிட வேண்டியது மட்டுமே நாம் செய்ய வேண்டியது!

சந்திப்பு: பொன்.விமலா

என் இனிய கதைநாயகிகள்! - 9

''அந்த செல்லம் வேற... இந்த செல்லம் வேற..!''

'அபியும் நானும்’ படம் பற்றி த்ரிஷா கூறும்போது, ''படத்தில் எனக்கு டைட்டில் கேரக்டர் கிடைச்சதுக்கே ரொம்பப் பெருமைப்படுறேன். பாட்டு, டான்ஸ்னு வழக்கமான வாய்ப்பா இல்லாம, இது எனக்கு நிறைவான வாய்ப்பு. சின்ன

என் இனிய கதைநாயகிகள்! - 9

வயசு அபி, ஸ்கூல் பொண்ணு அபி, இளவயது அபினு படத்தில் மூணு பகுதிகள் அபிக்கு இருக்கும். 'ஸ்கூல் பொண்ணு கேரக்டருக்கும் நீங்களே பொருத்தமா இருப்பீங்க!’னு நடிக்க வெச்சார் ராதா மோகன் சார்.

'கில்லி’ படத்துல 'ஐ லவ் யூ செல்லம்’னு வில்லனா துரத்தின பிரகாஷ்ராஜ் சார், இந்தப் படத்தில் எனக்கு அப்பா! ஆனாலும் முற்றிலும் மாறுபட்ட நடிப்பால, 'கில்லி' வில்லனை ஆடியன்ஸ் மெமரியில இருந்து தூக்கி எறிஞ்சு, எல்லோரையும் கலங்க வெச்சார் அபியோட அப்பா. அதான் பிரகாஷ்ராஜ் சார்!'' என்றார்.

அழகிய அனுபவம்!

'அழகிய தீயே’ படம் பற்றி நவ்யா நாயர் கூறும்போது, ''இது, தமிழில் எனக்கு முதல் படம். பொதுவாவே தேர்ந்தெடுத்த படங்கள்லதான் நடிப்பேன். மலையாள படங்கள்ல பிஸியா இருந்த சமயம் அது. தமிழ்ல அஜீத், விஜய்கூட நடிக்க வாய்ப்பு வந்தும், 'அழகிய தீயே’ படத்தோட கதை என்னை உடனே 'ஓ.கே’ சொல்ல வெச்சுடுச்சு. தமிழில் மறக்க முடியாத அழகிய அனுபவம், அழகிய தீயே'' என்றார்.