Published:Updated:

QMC - நூற்றாண்டு கொண்டாட்டம்...

கல்லூரிக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும்!க.அபிநயா, படங்கள்: கு.கார்முகில்வண்ணன்

'அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?' என்று கேள்விகள் எழுப்பப்பட்ட 20-ம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் (1914) ஆரம்பித்து, நாடாளும் அளவுக்கு பெண்கள் உயர்ந்துள்ள 21-ம் நூற்றாண்டு வரை, தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான பெண்களைப் பட்டதாரிகளாக்கி, இச்சமூக முன்னேற்றத்தில் பெரும் பங்காற்றிக் கொண்டிருக்கும் பெருமைக்கு உரிய கல்லூரி... சென்னை, ராணி மேரி கல்லூரி. தென் இந்தியாவின் முதல் பெண்கள் கல்லூரி என்கிற பெருமைகொண்ட இந்த அரசுக் கல்லூரிக்கு... இது நூற்றாண்டு!

QMC - நூற்றாண்டு கொண்டாட்டம்...

ஜூலை முதல், டிசம்பர் வரை ஆறு மாத காலம் தொடர்ந்து கொண்டாட்ட நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டு, கல்லூரியின் பழைய மாணவிகள் அமைப்பு ஆர்வத்துடன் இயங்கி வருகிறது. அஞ்சல்தலை வெளியிடுதல், நூற்றாண்டு தூண், நூறு மரக்கன்றுகள் நடுதல் என இதுவரை மூன்று விழா நிகழ்வுகளை நிகழ்த்தியுள்ள இந்த அமைப்பு, கொண்டாட்டத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக 60 வகுப்பறைகள் அமைப்பது குறித்து அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறது.

ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என ஆரவாரத்துடன் ஆரம்பித்த தொடக்க விழாவில், கல்லூரியின் பழைய மாணவிகளான அனுராதா ஸ்ரீராம், வாணி ஜெயராம், கிரேஸ் கருணாஸ், சுஹாசினி மணிரத்னம், உமா ரமணன், மீரா கிருஷ்ணன், வயலினிஸ்ட் கன்னியாகுமரி, பாடகி சாருமதி ராமச்சந்திரன் உள்ளிட்ட செலிப்ரிட்டிகள் பலரும் கலந்துகொண்டனர்.

QMC - நூற்றாண்டு கொண்டாட்டம்...

கல்லூரியின் இசைத் துறைத் தலைவர் ஜெய சீதாலக்ஷ்மி, இந்தக் கம்பீரமான கல்விக் கூடத்தின் வரலாறுகளை நம்மிடம் பெருமையுடன் பகிர்ந்தார். ''கல்லூரியின் முதல் இரண்டு முதல்வர்கள், இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள். சுதந்திரம் பெற்ற பின், நல்லமுத்து ராமமூர்த்தி முதல்வர் பொறுப்பேற்றார். தொடர்ந்து 28 முதல்வர்களைக் கடந்துள்ள இக்கல்லூரியின் தற்போதைய முதல்வர் அக்தர் பேகம்.

ஒருமுறை நேதாஜி எங்கள் கல்லூரிக்கு வருகை தந்து சொற்பொழிவாற்றினார். அப்போது கல்லூரியின் மாணவி லக்ஷ்மி சேகல் அந்தப் பேச்சில் தூண்டப்பட்டு, நேதாஜியுடன் இணைந்து, 'கேப்டன்’ லக்ஷ்மி சேகல் என்றாகி சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்றார். சில ஆண்டுகளுக்கு முன்பு, எதிர்க்கட்சிகளால் குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட பெருமையும் இவருக்கு உண்டு. தன்னுடைய 98-ம் வயதில் உலக வாழ்வில் இருந்து விடுபட்ட அவர், எங் கள் பொக்கிஷங்களில் ஒரு வர்!'' என்றார் சிலிர்ப்புடன்.

''காந்திஜி எங்கள் கல்லூரிக்கு வருகை தந்தபோது ஹிந்தியின் முக்கியத்துவத்தைச் சொன்னார். அதன் பின்னர் நான் ஹிந்தி கற்றேன்!'' என்று சொல்லும் டாக்டர் மனோ பக்தவச்சலம், இந்தக் கல்லூரியில் இன்டர்மீடியட் ஹிஸ்டரி படித்தவர். இப்போது, 'உமன்ஸ் வாலன்டியர் சர்வீஸ் ஆஃப் தமிழ்நாடு' அமைப்பின் செக்ரட்டரி.

QMC - நூற்றாண்டு கொண்டாட்டம்...

கல்லூரியின் பழைய மாணவி கலாவதி, ''1973-ல் எகனாமிக்ஸ் படிச்சேன். ஒவ்வொரு நாளோட முடிவிலயும் ஒரு கொத்து சந்தோஷத்தை எங்களுக்குத் தந்து அனுப்பிட்டே இருந்துச்சு இந்தக் கல்லூரி. போட்டிகள், கிளாஸ் ரூம் அரட்டைகள், கேன்டீன்ல மாஸ்டர் உன்னிகிருஷ்ணனோட பூரி, வடை ருசினு, எல்லாம் இழை இழையா மனசின் அடுக்குகள்ல இருக்கு. அப்புறம்... எங்க காலேஜ்லதான் முதல் லேடீஸ் பேண்ட் கொண்டு வந்தாங்க. இந்த மாதிரி அழிக்க முடியாத இன்னும் பல பெருமைகள் எங்க கல்லூரிக்குச் சொந்தம்!'' என்றார் சந்தோஷத்தில் திக்குமுக்காடி.

இந்தக் கல்லூரியில் மாணவியாகச் சேர்ந்து, பேராசிரியராகப் பணியாற்றி, பின் கல்லூரியின் முதல்வராக உயர்வுபெற்று, ஜாயின்ட் டைரக்டராக பணி ஓய்வுபெற்ற நிர்மலா தியாகராஜனுக்கு, அள்ள அள்ளக் குறையாத மலரும் நினைவுகள். ''நான் மாணவியாக இருந்தபோது, கல்லூரியின் 50-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாடினோம். சிறப்பு விருந்தினராக குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வந்திருந்தார். நான் பேராசிரியராகப் பணியாற்றியபோது, வைர விழா. இதற்கு அன்றைய பிரதமர் இந்திரா காந்தி வருகை தந்து சிறப்பு செய்தார். நான் கல்லூரி முதல்வராகப் பொறுப்பில் இருந்துபோது, பிளாட்டினம் விழா (75-ம் ஆண்டு). அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி வந்து வாழ்த்தினார். அன்று அவர் மேடையில் நடனம் ஆடியது இன்றும் கண்ணிலேயே நிற்கிறது'' என்று பரவசமானவர்,

''பெண்கள் கல்வி பெறுவது, நாட்டு முன்னேற்றத்தின் முக்கியப் படி. அந்த வகையில், நூறு ஆண்டுகளாக இப்பணியை தொடர்ந்துகொண்டிருக்கும் ராணி மேரி கல்லூரிக்கு இந்தச் சமூகம் பெரும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது!'' என்றார் நெகிழ்ச்சியுடன்.

நன்றியும், வாழ்த்துகளும் ராணி மேரி!

70 ஆயிரம் பட்டதாரிகள்!

இதுவரைக்கும் சுமார் 70,000 பெண்கள் இங்கே படித்து பட்டம் பெற்றிருக்கிறார்கள்.

இக்கல்லூரியில் படித்தவர்களில் சுமார் 100 பெண்கள், இதுவரை இங்கேயே பேராசிரியர் பணியில் சேர்ந்துள்ளனர்.

  கல்லூரி அளவில் மியூசிக் என்பதை பட்டப்படிப்பாக 1917-ம் ஆண்டில் கொண்டு வந்த முதல் கல்லூரி இது. இதன் பிறகுதான் சென்னையில் மியூசிக் காலேஜ் என தனியாக ஆரம்பிக்கப்பட்டது.

அடுத்த கட்டுரைக்கு