Published:Updated:

இதற்கு என்னதான் தீர்வு? ஆண்களின் பார்வையில்..!

பொன்.விமலா

காலையில் செய்தித்தாள்களைப் புரட்டினாலோ அல்லது தொலைக்காட்சி செய்திகளைப் பார்த்தாலோ ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பாலியல் வன்கொடுமை சம்பவங்களைக் கடப்பது நிச்சயமாகிவிட்டது. கடந்த சில தினங்களுக்கு முன் பெங்களூரில் இருக்கும் கல்விக்கூடத்தில், 6 வயது பிஞ்சு பாலியல் பலாத்காரத்துக்குள்ளாக்கப்பட்ட கொடுமை, தேசத்தையே அதிரவைத்துக்கொண்டிருக்கிறது. அடுத்த சில நாட்களிலேயே விழுப்புரம் அருகே ஓடும் ரயிலில் 5 வயது பிஞ்சு ஒன்று காமுகனுக்கு இரையாக்கப்பட்ட கொடுஞ்செய்தி வெளியாகி... பயத்தைப் பல மடங்கு கூட்டுகிறது.

இப்படி 5 வயதுக் குழந்தையில் இருந்து 60 வயது முதிய பெண்மணி வரை பலியாக்கப்படும் இந்தக் குற்றங்களுக்கு சில பல போராட்டங்களும், ஆங்காங்கே ஒலிக்கும் கூக்குரல்களும் மட்டுமே தீர்வாகிவிடுமா?

'பெண்களே, உங்கள் ஆடையில் கவனம் தேவை. இரவில் பயணிப்பதைத் தவிருங்கள். பாதுகாப்புக்கு பெப்பர் ஸ்பிரே வைத்திருப்பதுடன் தற்காப்புக் கலையையும் கற்றுக்கொள்ளுங்கள்’ என ஆலோசனைகளும் அறிவுரைகளும் பெண்களை நோக்கி மட்டுமே படையெடுத்துக்கொண்டிருக்கும் நிலையில், ஆண்களுக்கு அறிவுறுத்த, அவர்களை எச்சரிக்க எந்த வார்த்தை யும் இல்லையா?

இதற்கு என்னதான் தீர்வு? ஆண்களின் பார்வையில்..!

ஒரு ஆண் இந்த சமூகத்தில் தன்னுடன் சக மனுஷியாய் வாழக்கூடிய ஒரு பெண்ணின் பாதுகாப்பை எந்த வகையில் உறுதி செய்ய முடியும்? பெண்களையும் குழந்தைகளையும் இந்த பாலியல் வன்கொடுமையிலிருந்து காக்க, ஆண்களின் பார்வையில் இதற்கான தீர்வு என்ன?

- கேள்விகளை, சமூகத்தின் முக்கியமான துறைகளைச் சார்ந்த சிலரிடம் வைத்தோம்.

சமுத்திரக்கனி, திரைப்பட இயக்குநர்

''கூட்டுக்குடும்பங்கள் உடைந்து தனிக்குடும்பங்கள் பெருகி, பாசப்பிணைப்புகள் கொஞ்சம் கொஞ்சமா இங்கே வேரறுந்துட்டு வருது. உறவுகளின் பாசமும் கண்காணிப்பும்தான் ஒரு ஆணுக்குள் தனிமனித ஒழுக்கத்தை சீராக வளர்க்கும். 'என்னைக் கேட்க யார் இருக்கா..?’ என்று ஒருவித கட்டவிழ்த்துவிடப்பட்ட சூழலில் வளரும் ஆண்களின் மனம், குற்றம் செய்ய எளிதில் தூண்டப்படும். அதனால, ஆண் குழந்தைகளை ஒழுக்கமானவர்களா வளர்க்கும் பொறுப்பு, குடும்பங்களில் இருந்து தொடங்கணும். அதேபோல, மனிதாபிமானம் குறையும்போதும், இந்த மாதிரியான அரக்கத்தனமான குற்றங்கள் நடக்கும். அதனால, ஆண், பெண் பேதமில்லாம மனிதம் வளர்ப்பதற்கான போராட்டங்களை இருபாலரும் முன்னின்று நடத்தணும்.

இதற்கு என்னதான் தீர்வு? ஆண்களின் பார்வையில்..!

குற்றங்களைத் தடுக்க, ஆண்களின் மனதைச் சீராக்க, இதை எல்லாம் செய்யலாம். சரி, குற்றம் செய்தவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? என்னைக் கேட்டா, குற்றவாளியோட ஆணுறுப்பை வெட்டி எறியணும்னு சொல்வேன். வேதியியல் முறையில் செயலிழப்பு என்பதிலெல்லாம் எனக்கு உடன்பாடில்லை. அதேபோல எந்தத் தவறும் செய்யாத, பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படமே இங்கே பத்திரிகை, செய்தித்தாள்களில் எல்லாம் வெளிவரும்போது, அந்தக் குற்றவாளிகளை முகமூடிஇல்லாமல் ஊடகத்தின் முன் நிறுத்தணும். எல்லாத்தையும்விட, ஒரு பெண்ணை சீரழித்த பெரும்குற்றத்தை செய்தவர்களுக்கு, சட்டங்களும், தண்டனைகளும் மிக கடுமையாக்கப்படணும்... அவை தாமதமின்றி உடனடியா நிறைவேற்றப்படணும்.''

சைலேந்திரபாபு, காவல்துறை இயக்குநர்,    கடலோர காவல்படை

''ஒரு வருடத்தில் காணாமல் போன குழந்தைகளின் எண்ணிக்கை, 1,500. இதில் 40 சதவிகித குழந்தைகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சில குழந்தைகள் பாலி யல் வன்கொடுமைக்கு ஆளாவதாக ஆய்வுகள் சொல்கின்றன. இதில் பெண் குழந்தைகள் மட்டுமல்ல, ஆண் குழந்தைகளும் அடக்கம். குழந்தைகளும், பெண்களும் உடல்ரீதியாக பலவீனமானவர்கள் என்பதால்தான் இவர்களுக்கு அதிகமான குற்றங்கள் இழைக்கப்படுகின்றன. இவ்வாறு பாதிப்புக்கு உள்ளானவர்களின் வழக்குகள் பெரும் பாலும் காவல் நிலையத்துக்குப் புகாராக வருவதில்லை. பொதுவாக, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் உறவினர்களாகவோ, அறிந்தவர்களாகவோதான் இருக்கிறார்கள்.

சட்டங்களை விட, தன்னளவில் உருவாக்கிக்கொள்ளும் கட்டுப்பாடுகளும், ஏற்படுத்திக்கொள்ளும் மாற்றங்களுமே பெண்களைப் போகப் பொருளாகப் பார்க்கும் ஆண் சமுதாயத்தின் மனதை மாற்றும். இதுபோன்ற பாலியல் குற்றங்களில் சிக்குகிற ஆண்களிடம் கேட்கப்படும் ரௌத்திரக் கேள்வி... 'உன் அக்கா, தங்கச்சியா இருந்திருந்தா இப்படி நடந்திருப்பியா?’ என்பதுதான். இந்தக் கேள்வியை, தவறு செய்யத் துணியும் முன் அந்த ஆண் தனக்குள் கேட்டுக்கொள்ள வேண்டும்.''

இதற்கு என்னதான் தீர்வு? ஆண்களின் பார்வையில்..!

கோபிநாத், ஊடகவியலாளர்

''இது பெண்களுக்கான பிரச்னை மட்டுமல்ல, தேசத்தின் பிரச்னை. ஒரு பெண்ணை ஒன்று உட்சபட்ச மரியாதையோடு தெய்வமாக வணங்குகிறோம், அல்லது ஒரேயடியாக கீழிறக்கி நம் தேவைகளுக்கான கருவியாகப் பயன்படுத்திக்கொள்கிறோம். ஆனால், பெண்ணை நம்மோடு பயணிக்கும் சகமனுஷியாகப் பார்க்க வேண்டியதுதான் அவசியமானது. தன் வீட்டில் இருக்கும் பெண்களின் பாதுகாப்பு குறித்து ஒரு ஆண் எந்தளவுக்கு உறுதியுடன் இருப்பானோ, அதே உணர்வை வெளியில் பார்க்கும் பெண்களிடமும் கொள்ள வேண்டும். இந்த வன்கொடுமைகளுக்கான தீர்வு ஒரு நாளில் ஏற்பட்டுவிடாது. இதற்கு நீண்டகால சமுதாய மாற்றம் தேவை. இந்தக் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்பது ஒருபுறம் இருக்க, இன்னொருபுறம் பெண்களை ஏமாந்தவர்களாக, அதிகாரமற்றவர்களாகப் பார்க்கும் ஆண்கள், தங்கள் சிந்தனையைத் திருத்திக்கொள்ள வேண்டும். வீடுகளில் பெண்களை ஆணுக்கு இணையாக நடத்தும் மாற்றத்தை படிப்படியாகக் கொண்டு வந்தால், அது இந்த தேசிய அவமானத்திலிருந்து தப்பிக்கும் நன்முயற்சியாக இருக்கும்.''

சுகி.சிவம், ஆன்மிக சொற்பொழிவாளர்

''10 வயதுக் குழந்தைக்கும் காமம் குறித்த விழிப்பு உணர்வு தேவைப்படும் சமூகத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஒரு ஆணின் காமம் அவன் சிறு வயதிலிருந்தே ஒடுக்கப்படும்போது, ஒரு கட்டத்தில் கட்டுப்பாடு இழக்கும் அவன், தன் காமத்துக்கான தேடலை தவறான பாதையில் அடைய முற்படுகிறான். ஒவ்வொரு பள்ளியிலும் ஒழுக்க போதனை வகுப்புகள் கட்டாயம் இருக்க வேண்டும். ஒரு மனநல ஆலோசகர் காமம் குறித்த விழிப்பு உணர்வுக் கல்வியை பள்ளிகளில் வழங்குவற்கான சூழலை உருவாக்க வேண்டும். தன் மனதில் தோன்றும் வக்கிரத்தை அடுத்தவருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்படுத்துபவன் ஆண் அல்ல... மிருகம்!''

ஜி.ஜே.மனோகர், தலைமை ஆசிரியர் - தாளாளர்,    தனியார் பள்ளி

''கல்விக் கூடங்களிலேயே நடக்கும் சில பாலியல் வன்முறைகள், கொடுமையின் உச்சம். சமீபத்தில் பெங்களூரில் ஒரு தனியார் பள்ளியில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட செய்தி அறிந்தபோது, அந்த பாதகத்தைச் செய்த குரூர ஆண் புத்திக்கு உட்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று மனம் கொதித்தது. தலைமை ஆசிரியர் ஒருவருடன் இரண்டு மாணவிகள் ஒரே நேரத்தில் காணாமல் போன செய்தி, ஆண் சமுதாயத்துக்கான அவமான சவுக்கடி! பெண்களுக்கு பாலியல் தவறிழைக்கும் வக்கிரபுத்திக்காரர்கள் தப்பித்துவிடாதவாறு நிச்சய தண்டனை வழங்கப்பட வேண்டும். அதேசமயம், கல்வித்துறை, காவல்துறை என்று சமூகத்தின் முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்கள் பெண்களைச் சீரழித்தால் அவர்களுக்கு இரட்டை தண்டனை வழங்கப்பட வேண்டும்.''

அடுத்த கட்டுரைக்கு