ட்டையில் அழகிய சரஸ்வதியோடு கவிதைப் புத்தகம் தயாரானது. அழைப்பிதழ்கள் வந்தன. முதல் அழைப்பிதழோடு முதல் புத்தகத்தை ஸ்வாமிக்கு, 'புட்டபர்த்தி’க்கு அனுப்பினேன். பத்திரிகையாளர்கள், இலக்கியவாதிகள், நண்பர்கள், உறவினர்களுக்கு அப்பாற்பட்டு, சில சாயி குடும்பங்களையும் விழாவிற்கு அழைத்திருந்தேன். சில சாயி பக்தர் வீடுகளில்... பூஜையறையில் ஸ்வாமி பாதங்களில் வைக்கும்படி, அழைப்பிதழ்களையும் புத்தகங்களையும் அனுப்பி இருந்தேன். குடும்பத்தினரின் ஒத்துழைப்போடு விழா ஏற்பாடுகள் நடந்தன.

சாயிபக்தரும் எழுத்தாளப் பெரியவருமான சாவி தலைமை தாங்கி புத்தகத்தை வெளி யிட்டு வாழ்த்தியபிறகு, பிரபல பெண் மருத் துவர் கமலா செல்வராஜ், பெண் பத்திரிகை யாளர் வாஸந்தி, பேராசிரியை தாயம்மாள், கவிதைச் சகோதரர் முத்தையா ஆகியோர் அன்போடு மனதார வாழ்த்திப் பேசினர். பெரிய பிள்ளை வரவேற்புரையும் சிறிய பிள்ளை நன்றியுரையும் நிகழ்த்தி விழாவிற்கு கலகலப்பூட்டினர். வழிபடும் தெய்வத்திற்கு வந்தனம் கூறியபடி நான் ஏற்புரை கூறினேன். நிறைவான கூட்டம்... நிறைவான நிகழ்ச்சி. தெய்வ சங்கல்பத்தால் எல்லாம் சரியாய் நடந்தது.

விழா நிறைவடைந்து, அனைவரும் விடைபெற்றுச் செல்லத் தொடங்கினர். அங்கு வந்த முதிய சாயி பக்தை ஒருவர் என் கைகளைப் பிடித்துக்கொண்டார். அன்போடு தலைதொட்டு ஆசீர்வதித்தார். 'ஸ்வாமி வந்தாரே பார்த்தியா?’ என்று அவர் கேட்க... திகைத்துப் போனேன். 'எப்படி, எங்கே’ என்று கேட்டதும் சொன்னார். மேடையில், 'மீண்டும் சரஸ்வதி’ என்ற புத்தகத் தலைப்பும் அழகிய மிகப்பெரிய வீணையும் வண்ண மலர்களால் பதிக்கப்பட்டிருந்தன. அந்த வீணைக்கு மேல் ஸ்வாமி அடிக்கடி காட்சியாகியிருக்கிறார்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சத்தியப்பாதையில்..! - 10

வழக்கமாய் சாயி குடும்பங்கள் நடத்தும் விசேஷங்கள், விழாக்கள் எதுவாக இருந்தாலும், மேடையில் ஒரு பக்கத்தில் ஸ்வாமிக்கு சிம்மாசனம் போட்டு... படம் வைத்து வழிபாடு செய்த பிறகே, அவர் முன்னிலையில் அவருடைய ஆசீர்வாதத்தோடு நிகழ்ச்சியை நடத்துவார்கள். இங்கு அதுபோல் ஏற்பாடு செய்யும் சூழ்நிலை எனக்கில்லை. அதனால், ஸ்வாமி வந்திருக்கிறார்... வந்தவர், ஒரு பேச்சாளர் பேசுவதற்கு எழுந்து ஒலிபெருக்கி முன்னால் போனதும், காலியாயிருந்த அலங்கார நாற்காலியில் சற்றுநேரம் அமர்ந்திருக்கிறார்... மேடையைச் சுற்றிலும்... கூட்டத்தையும் பார்வையிட்டு அபயஹஸ்தம் காட்டிவிட்டு மறைந்திருக்கிறார். மற்ற சாயி வைபவங்களிலோ ஸ்வாமி வந்து போனதற்கு அடையாளமாக சிம்மாசனத்திலோ, படத்திலோ விபூதி வருவதும் பூச்சரங்கள் விழுவதும் நடக்கும். இங்கு அதற்குரிய சூழ்நிலை இல்லாததால்... தன் வருகையை அந்த சாயி பக்தை மூலம் எனக்குத் தெரியப்படுத்தி, ஸ்வாமி, 'தான்’ விழாவிற்கு வந்து ஆசீர்வதித்ததை உறுதிபடுத்தியிருக்கிறார்!

எப்பேர்ப்பட்ட ஆகாய மனம் இந்த அன்பான ஸ்வாமிக்கு?! விசேஷ வரவேற்பு ஏதும் ஸ்வாமிக்கு செய்ய முடியவில்லையே என்ற ஏக்கம் என்னை வருத்தியது. இருந்த இடத்தில் அமர்ந்து ஆசீர்வதித்து விட்டுப்போன ஸ்வாமியின் அன்பையும் கருணையையும் நினைத்தபடி நெகிழ்ச்சியாலும் மகிழ்ச்சியாலும் கனத்துப்போன மனத்தோடு சற்றுநேரம் அங்கேயே நின்றிருந்தேன். விழாவிற்கு உதவியாயிருந்த என் தோழியர் கலாவதியும் சாந்தியும் வந்து அழைக்கவும் அந்த உணர்விலிருந்து மீண்டேன்.

கவிதைப் புத்தகத்திற்கான வாழ்த்துக் கடிதங்களோடு, பத்திரிகைகளில் மதிப்புரைகள் வந்தன. அப்போதுதான் ஸ்வாமி இன்னொரு லீலையைப் புரிந்தார்.

சில சாயிபக்தர்கள் வீட்டு பூஜையறையில் ஸ்வாமி பாதங்களில் வைக்கச் சொல்லி புத்தகங்களைக் கொடுத்திருந்தேனில்லையா... சில நாட்களுக்குப் பிறகு தொலைபேசியில் அவர்களிடம் பேசினேன். 'புத்தகத்தைப் படித்தீர்களா?’ என்று கேட்டேன். ஏதோ வேலை இருந்ததால் படிக்க முடியவில்லை... படித்துவிட்டுப் பேசுகிறேன் என்றார்கள். அதன்பிறகு நானும் கேட்கவில்லை, அவர்களும் பேசவில்லை. இடையில் மாதங்கள் பல கடந்தன. நவராத்திரி வந்தது. சரஸ்வதி பூஜைக்கு கொலுவில் வழக்கமாய் வைக்கும் எங்கள் புத்தகங்களோடு புதிதாய், 'மீண்டும் சரஸ்வதி’யை வைத்தேன். அடுத்த நாள் விஜயதசமியில் படித்துவிட்டு எடுத்து வைத்தேன்.

திடீரென்று என் சாயி தோழி ஒருவர் தொலைபேசியில் பரபரப்போடு பேசினார். 'இங்க பாரு முக்கியமான விஷயம் கேளு... சரஸ்வதி பூஜைக்கு உன் புத்தகத்தை கொலுவில் வெச்சேன்... விஜயதசமிக்கு எடுத்து முன்னுரையில் சில வரிகளை மட்டும் படிச்சிட்டு ஷெல்பில் வெச்சுட்டேன். அன்னிக்கு ராத்திரி ஸ்வாமி கனவில் வந்தார். 'படிக்கறதுக்கு புத்தகம் கொடுத்தா... படிக்கறதில்லையா? இப்படித்தான் நாலஞ்சு வரி படிச்சிட்டு வெச்சுடறதா? முழுக்கவும் படி’ என்றார். அதோடு பக்க எண்கள் சொல்லிச் சொல்லி சில கவிதைகளைப் படிக்க சொன்னார் என்று விவரம் சொன்னார். அதில் ஒன்று டைட்டில் கவிதையான, 'மீண்டும் சரஸ்வதி...’ சரஸ்வதியிடம் நான் பேசுவதும், ஏன் எழுதாமலிருக்கிறாய் என்று அவள் கோபிப்பதும், நான் அழுவதும் அவள் மனமிளகி ஆசீர்வதிப்பதுமான கவிதை. அதை ஸ்வாமி குறிப்பிட்டிருக்கிறார். இன்னொன்று, 'சத்யதரிசனம்’ என்ற கவிதை... இந்தக் கலிகாலத்தில் உண்மை என்கிற சத்யம் சமூகத்தில் உலாபோனால் அது என்ன பாடுபடுகிறது என்பதை எதார்த்தமாக எழுதிய கவிதை. அதையும் ஸ்வாமி பிரத்யேகமாகப் படிக்கச் சொல்லியிருக்கிறார். தோழி தொடர்ந்தார். 'அவ்வளவுதான் ஸ்வாமி வந்து சொன்ன பின்னால எப்படி படிக்காம இருக்கறது... வீட்டுல அத்தனை பேரும் படிச்சு முடிச்சுட்டோம்... பிரமாதம்... என்ன நல்லா எழுதியிருக்கே’ என்று பேசி மனமார வாழ்த்தினார்.

விழாவிற்கு ஸ்வாமி வந்ததைச் சொன்ன முதிய பக்தையின் கனவிலும், 'ஏன் இன்னும் படிக்காமலிருக்கிறாய்? படி... முழுசா படி’ என்று ஸ்வாமி சொல்லியிருக்கிறார். 'பரீட்சைக்கு படிக்கறாப்பல ராத்திரி முழுக்க உட்கார்ந்து படிச்சு முடிச்சுட்டேன்... ரொம்ப நல்லாயிருக்கு’ என்று மகிழ்ச்சியோடு சொன்னார் அந்த பக்தை.

ஸ்வாமியின் அன்பையும் அக்கறையையும் என்னென்று சொல்வேன்?! இத்தனைக்கும் புத்தகத்தை மறைமுகமாகத்தான் ஸ்வாமிக்கு காணிக்கையாக்கியிருந்தேன். அதற்கே ஸ்வாமி எத்தனை பரிவு... பரிந்துரை... கருணை காட்டிவிட்டார்! அவருடைய தெய்விகப் பணிகள், பிரமாண்டமான சேவைப் பணிகளுக்கிடையே... இந்த நூலையும் முழுமையாக வாசித்து மகிழ்ந்து மற்றவர்களையும் படிக்கச் சொன்ன ஸ்வாமிக்கு என்ன கைம்மாறு செய்வேன்? வழிபடத் தொடங்கியதிலிருந்து ஸ்வாமி காட்டிவரும் அன்பிற்கும் அங்கீகாரத்திற்கும் அனுக்கிரகத்திற்கும் எவ்விதத்தில் நன்றிக்கடனை வெளிப்படுத்துவேன்?

ஸ்வாமிக்கு சாயிபக்தர்கள் புரியும் சேவைகள் ஏராளம். எனக்குத் தெரிந்ததும் என்னால் முடிந்ததுமான சேவையெல்லாம் எழுத்தும் பேச்சுமே. அப்போதுதான், மிகத்தீவிரமாகவும் உறுதியாகவும் நினைத்தேன், 'இனி ஸ்வாமியைப் பற்றி எழுத வேண்டும்’ என்று. நினைப்பு எழுந்ததுமே அதற்கான வாய்ப்பும், சூழலும் வந்தன. ஓர் ஆன்மிகப் பத்திரிகையில் ஸ்வாமி சங்கல்பத்தோடு ஆசீர்வாதத்தோடு அவருடைய தெய்விக மேன்மைகளையும் மகிமைகளையும் லீலைகளையும் உபதேசங்களையும் கவிதைகளாக எழுதத் தொடங்கினேன். பெருங்கூட்டம்... கைதட்டல்கள்... பாராட்டு... மாலை, மரியாதை ஏதுமில்லை. இது தெய்வ சேவை. எந்த எதிர்பார்ப்புகளுமில்லாத ஆத்மார்த்தமாகப் புரியத் தொடங்கிய ஸ்வாமிக்கான எழுத்துச் சேவை மனதிற்கு மிகவும் நிறைவாக இருந்தது; நிம்மதி தந்தது. ஸ்வாமி சில காட்சிகளின் மூலம் அந்தக் கவிதைகளையெல்லாம் வெகு அன்போடு மகிழ்ந்து ஆசீர்வதித்தார். ஸ்வாமிக்கான கவிதைகளை எழுதிக்கொண்டிருந்த போதுதான் நீண்டகாலமாய் நான் போக நினைத்துக்கொண்டிருந்த சத்யசாயிபாபாவின் பிறப்பிடமும் இருப்பிடமுமான 'புட்டபர்த்தி’க்கு போகும் பொன்னான வாய்ப்பு வந்தது!

ஜெய் சாயிராம்!

தொடரும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism