Published:Updated:

''கருணைக் கொலைக்கு அனுமதி கொடுங்கள்...''

ஒரு தாயின் கண்ணீர்க் கதறல்ந.ஆஷிகா, படங்கள்: பா.காளிமுத்து

''கருணைக் கொலைக்கு அனுமதி கொடுங்கள்...''

ஒரு தாயின் கண்ணீர்க் கதறல்ந.ஆஷிகா, படங்கள்: பா.காளிமுத்து

Published:Updated:

துரை, திருப்பரங்குன்றத்தில், 'ரம்யா வீடு எங்கே இருக்கிறது?’ என்று கேட்டால், அந்தத் தெருவில் உள்ளவர்கள் அனைவருமே சட்டென்று அடையாளம் காட்டுகிறார்கள். வீட்டில் பாவாடை - சட்டையில் வந்து நின்ற ரம்யா, நம்மைப் பார்த்ததும், 'ம்மா... ம்மா...’ என்கிறாள் மிரட்சியுடன். அவள் அம்மா அபிராம சுந்தரி, ''அக்கா, உன்கிட்டதான் பேச வந்திருக்காங்க. உன்னை போட்டோ எடுக்கப் போறாங்க...’' என்றதும், சின்ன வெட்கத்துடன் சிரிக்கிறாள் ரம்யா. இந்த 14 வயதுக் குழந்தையைத்தான் 'கருணைக் கொலை செய்ய அனுமதியுங்கள்' என்று தமிழக முதல்வரின் தனிப்பிரிவில் சமீபத்தில் மனு கொடுத்திருக்கிறார், அம்மா அபிராம சுந்தரி.

''கருணைக் கொலைக்கு அனுமதி கொடுங்கள்...''

ரம்யாவிடம் சிறிது நேரம் விளையாடிவிட்டு, அபிராம சுந்தரியிடம் பேச்சு கொடுத்தபோது, ''சொந்த மாமா பையனுக்குத்தான் என்னைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்தாங்க. நாலே வருஷத்துல கடன் பிரச்னையால தற்கொலை பண்ணிட்டு இறந்துட்டார். ரெண்டு பொண்ணுங்களோட நான் அனாதரவாயிட்டேன். அதுலயும், வளரவளர ரம்யாவோட நிலைமை தெரிய வந்தப்போ, ரொம்ப உடைஞ்சுட்டேன்'' என்றவர், ரம்யாவின் குறைபாட்டை விவரித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''சின்ன வயசுல இருந்தே அந்தந்த வயசுல செய்ய வேண்டிய வேலைகளை ரம்யா செய்யல. நான் இருந்த துயரத்துல ஆரம்பத்துல பெருசா எடுத்துக்கல. ஆனா, நாளாக ஆக, அவளோட நடவடிக்கைகள் ஒவ்வொண்ணும் சராசரியா இல்லாம இருந்ததைக் கவனிச்சதும், டாக்டர்கிட்ட தூக்கிட்டு ஓடினேன். டாக்டருங்க பார்த்துட்டு, 'குழந்தைக்கு மனவளர்ச்சி குறைவு, சொந்தத்துல கல்யாணம் பண்ணியிருந்தாலோ, இல்ல பிரசவ நேரத்துல ஏதாவது பிரச்னை ஏற்பட்டிருந்தாலோ இப்படி ஆக வாய்ப்பிருக்கு. இனி எதுவும் செய்ய முடியாது’னு சொல்லிட்டாங்க. அதிலிருந்து இத்தனை வருஷமா அவளுக்கு எல்லா வேலைகளும் நான்தான் செஞ்சுட்டு வர்றேன்.

பாத்ரூம் வந்தாகூட அவளுக்கு சொல்லத் தெரியாது, உட்கார்ந்த இடத்துலயே போயிடுவா. தனியா நடக்க மாட்டா, சுவரைப் பிடிச்சிட்டேதான் நடப்பா. எந்திரிக்கும்போதும் ஒரு ஆள் பிடிச்சு தூக்கிவிடணும். ஒழுங்கா சாப்பிடவும் தெரியாது. நான்தான் ஊட்டி விடணும். கொஞ்சம் சத்தமா பேசினாலே அழுதுடுவா. அவ பேசுற ரெண்டே வார்த்தை... அம்மா, அக்கா. இப்படி 14 வருஷமா, அவளை பச்சைபுள்ள மாதிரி பார்த்துட்டு வர்றேன். எங்கம்மாவும், மூத்தபொண்ணு நிலாவும் உதவியா இருப்பாங்க'' என்றவர்,

''வாடகை வீட்டுலதான் வாழ்க்கை. ஆனா, ரம்யாவுக்கு இப்படி பிரச்னை இருக்கறதால எந்த வீட்டுலயும் நிரந்தரமா இருக்க முடியாது. 'மனவளர்ச்சி இல்லாத பொண்ணை வெச்சுருக்கீங்க'னு அடிக்கடி காலி பண்ணச் சொல்லிடுவாங்க. ஒரு வருஷத்துக்குள்ள மூணு வீடு மாற வேண்டி இருக்கும். கூலிக்குதான் ஒரு இடத்துல வேலை பார்த்தேன். ஆனா, ரம்யாவைப் பார்த்துக்கறதுக்காக அடிக்கடி லீவு போட்டதால, வேலைக்கு வரவேண்டாம்னு சொல்லிட்டாங்க. வேலையும் போயி, வயித்துக்குப் பத்தாம இருந்த சூழ்நிலையிலதான், ரெண்டு மாசத்துக்கு முன்ன ரம்யா பெரிய பொண்ணாயிட்டா. அதுகூட அவளுக்குத் தெரியல. நான் பார்த்துதான் சுத்தம் பண்ணணும்...''

- பெருகி வழியும் கண்ணீரைத் துடைத்துவிட்டுத் தொடர்ந்தார்.

''இவளை இனி தனியா விட்டுட்டு வேற வேலை தேடிப் போகலாம்னாலும் பயமா இருக்கு. இப்போவெல்லாம் பாலியல் பலாத்காரம்னு அடிக்கடி நியூஸ் வருது. நல்லாயிருக்கற பொண்ணுங்களாலயே தங்களைக் காப்பாத்திக்க முடியல. அப்படியிருக்க, தண்ணி வேணும்னுகூட கேட்கத் தெரியாத எம்புள்ளைக்கு ஏதாவது விபரீதம் நடந்தா நான் என்ன பண்ணுவேன்... நடந்ததைக்கூட அவளுக்கு சொல்லத் தெரியாதே...''

''கருணைக் கொலைக்கு அனுமதி கொடுங்கள்...''

- மீண்டும் கண்ணீர் பெருக்கெடுக்க, வார்த்தைகள் தடைபடுகின்றன.

''இப்போ கொஞ்சம் என் நிலைமையை யோசிச்சுப் பாருங்க. மூத்த பொண்ணு ப்ளஸ் ஒன் படிக்கிறா. இவ பெரியவளாகியும் பச்சப் புள்ளையா இருக்கா. சொந்தக்காரங்க கருணையோட செய்ற உதவியிலதான் வீட்டு வாடகைக்கு பணம் கொடுக்கிறேன். ஆனா, சாப்பாட்டுக்கு? என் கஷ்டத்துக்கெல்லாம் ஒரு விமோசனம் கிடைக்காதானுதான், சென்னைக்கு போய், 'அரசாங்க வேலை ஏதாச்சும் கொடுங்க. இல்லாட்டி என் புள்ளைய கருணைக் கொலை செய்யறதுக்கு அனுமதியாவது கொடுங்க’னு முதல்வரோட தனிப்பிரிவுக்கு மனு கொடுத்துட்டு வந்தேன். சென்னைக்கு கிளம்பினப்போ, துணைக்கு என்கூட வந்த அண்ணன்கிட்ட வேலை கேட்டு மனு கொடுப்போம்னு சொல்லிதான் கூட்டிட்டுப் போனேன். அங்க போன பிறகு விஷயம் தெரிஞ்சு ஆரம்பத்துல தடுத்தவரு, என் நிலைமைய புரிஞ்சுகிட்டு ஒப்புக்கிட்டாரு'' என்றவர்,

''ஒரு தாயா இருந்து என்னோட தவிப்பை யோசிச்சு பாருங்க. ரெண்டு பொம்பளப் புள்ளைங்களோட, அதுலயும் இப்படி வளர்ச்சி இல்லாத ஒரு பொம்பளப் புள்ளையோட, ஆம்பளை துணை இல்லாம, எந்த வருமானமும் இல்லாம, பாதுகாப்பும் இல்லாம என்னதான் பண்ணுவேன்? எனக்கப்புறம் ரம்யாவோட நிலைமை என்னவாகும்? இந்த வேதனை, விரக்தி எல்லாம்தான் அப்படி ஒரு மனு கொடுக்க வெச்சது. எந்த ஒரு தாய்க்கும் இப்படி ஒரு நிலைமை வரவே கூடாது. ஆனா, என் ரத்தக் கண்ணீருக்கு எந்த பலனும் இதுவரை இல்ல. 'எந்த ஊர் வேலைவாய்ப்பு அலுவலகத்துல பதிஞ்சு இருக்கீங்களோ, அங்க போய் கேளுங்க'னு சொல்லிட்டாங்க. சொந்த ஊரான ராமநாதபுரத்துலதான் பதிஞ்சிருக்கேன். அங்க போய் கேட்டேன். 'வேலை இருந்தா உங்களுக்கு முன்னுரிமை தர்றோம்... இப்போ இல்ல, அடுத்த மாசம் வாங்க பார்ப்போம்'னு சொல்லிட்டாங்க. எப்ப விடியுமோ தெரியல!''

- பேச்சினூடே ரம்யாவுக்கு சோறூட்டிவிட்டு, 'மடக்மடக்’கென தண்ணீரைக் குடித்துதான் பசியாறுகிறார் சுந்தரி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism