Published:Updated:

உயிர்காக்கும் உன்னத நிமிடங்கள்!

கோல்டன் ஹவர்... சா.வடிவரசு

உயிர்காக்கும் உன்னத நிமிடங்கள்!

கோல்டன் ஹவர்... சா.வடிவரசு

Published:Updated:
உயிர்காக்கும் உன்னத நிமிடங்கள்!

விபத்து ஒன்றில் தன் இரு கால்களையும் பறிகொடுத்த 4 வயது சிறுவன் கிருத்திக்ரோஷன் பற்றி, 'இந்தப் பிஞ்சு செய்த பாவமென்ன?' என்ற தலைப்பில், 12.8.14 தேதியிட்ட இதழில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம். இதில் பெட்டிச் செய்தியாக, விபத்துக்கு அடுத்த சில நிமிடங்களான 'கோல்டன் ஹவர்’ என்கிற நேரத்தில் முதலுதவி செய்ய வேண்டியது பற்றி எழுதியிருந்தோம். இதையடுத்து, 'இந்த கோல்டன் ஹவர்' பற்றி இன்னும் விளக்கமாகச் சொல்லவேண்டி கடிதம் மற்றும் இணையதளம் வாயிலாக வாசகர்களிடமிருந்து வேண்டுகோள்கள் வந்தன. அவற்றையெல்லாம் சென்னை, சவீதா மருத்துவக் கல்லூரியின் டீன் மற்றும் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் குணசாகரன் முன்பாக வைத்தோம்.

''விபத்தில் காயமடைந்தவரை விபத்து நடந்த இடத்திலிருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு இடையிலிருக்கும் 'கோல்டன் ஹவர்’ எனும் நேரம் மிகமிக முக்கியமானது. இந்த நிமிடங்களில் தரப்படும் முதலுதவியானது காயமடைந்தவரின் உடல் உறுப்புகளை, உயிரைக் காப்பாற்றுவதற்கு மிகவும் முக்கியமானது. எந்தளவுக்கு ஒவ்வொரு நொடியையும் பயன்படுத்தி விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறோமோ, அந்த அளவுக்கு குணப்படுத்துவதற்கான, உயிர் பிழைக்க வைப்பதற்கான சாத்தியங்கள் அதிகரிக்கும்'' என்ற டாக்டர், அந்த நிமிடங்களில் செய்ய வேண்டிய முதலுதவிகளை விவரித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ஒருவர் சாலை விபத்தில் சிக்கிக் கிடக்கிறார் என்றால், முதலில் ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்துவிட்டு, காயமடைந்து மயக்க நிலையில் இருப்பவர் சுவாசிக்க மூச்சு தடைபடாமல் இருக்குமாறு கூட்டத்தை விலக்க வேண்டும். அவருக்கு குடிக்க எதுவும் கொடுக்கக் கூடாது. ஒருபக்கமாக படுக்கவைக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் பூமியை நோக்கியோ வானத்தை நோக்கியோ படுக்கவைக்கக் கூடாது. உட்காரவைக்கவும் கூடாது. அதன்பின் இதயத்துடிப்பு சரிபார்த்து, சிக்கல் இருக்கும்பட்சத்தில் இதயம் இருக்கும் இடத்தில் அழுத்தம் கொடுத்து இதயம் சீராகத் துடிக்க உதவி செய்ய வேண்டும்.

உயிர்காக்கும் உன்னத நிமிடங்கள்!

ரத்தம் வெளியேறிக்கொண்டிருந்தால் மேற்கொண்டு வெளியேறாத வண்ணம் கையில் கிடைக்கும் துணி, கர்சீஃப், துப்பட்டா போன்றவற்றைக் கொண்டு அந்த இடத்தில் அழுத்தம் கொடுத்து, ரத்தக் கசிவை நிறுத்த வேண்டும். இதில் மிக முக்கியமான விஷயம், எக்காரணம்

உயிர்காக்கும் உன்னத நிமிடங்கள்!

கொண்டும் ரத்த ஓட்டம் தடைபடாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த உதவிகளைச் செய்துகொண்டிருக்கும் நேரத்துக்குள் ஆம்புலன்ஸ் வந்துவிடும் அல்லது கிடைக்கும் வாகனத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுவிடலாம்.

விபத்தில் சிக்கியவரின் விரல், கை, கால் என ஏதாவது உடல் பாகங்கள் துண்டாகிஇருந்தால், மேற்கொண்டு எந்தவித சேதமும், பாதிப்பும் ஏற்படாதவாறு உடனடியாக அதை பத்திரப்படுத்த வேண்டும். சுத்தமான பிளாஸ்டிக் கவர், பிளாஸ்டிக் டப்பா, கிண்ணம் உள்ளிட்ட எது கிடைக்கிறதோ அதில் அந்த பாகத்தை வைத்து, வெளிப்புறத்தில் ஐஸ் வைக்க வேண்டும். அதாவது, துண்டான பாகத்தை, சுத்தமான பிளாஸ்டிக் பையில் வைத்து கட்டியபிறகு, வெளிப்பகுதியில் ஐஸ் வைக்க வேண்டும். இதுவே ஒரு கிண்ணம் அல்லது பாத்திரம் என்றால் அதனுள் துண்டான உடல் பாகத்தை பாதுகாப்பாக வைத்து, அந்தக் கிண்ணத்தை ஐஸ் மீது

உயிர்காக்கும் உன்னத நிமிடங்கள்!

வைத்தவாறே மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லவேண்டும். அதிகபட்சமாக ஒரு மணி நேரத்துக்குள் கொண்டு சேர்க்க வேண்டும். அங்கே மருத்துவர்கள் நோயாளிக்கு வேண்டிய முதல்கட்ட சிகிச்சையை அளித்து, உடல் பாகத்தை சுத்தப்படுத்தி, அதை உடலுடன் பொருத்த வேண்டிய சிகிச்சையை மேற்கொள்வார்கள்'' என்ற டாக்டர் குணசாகரன்,

''கோல்டன் ஹவர் பற்றி வெளிநாடுகளில் ஒவ்வொருவரும் அறிந்து வைத்திருப்பதோடு, ஆபத்து காலங்களில் தங்களின் கடமையைத் தவறாமல் செய்வார்கள். ஆனால், நம் நாட்டில் இத்தகைய விழிப்பு உணர்வு அவ்வளவாக இல்லை. விபத்தில் சிக்கியவருக்கு வேண்டிய முதலுதவிகளைச் செய்து மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியது, பொதுமக்கள் ஒவ்வொருவரின் கடமை. 'நமக்கு ஏன் வம்பு’, 'நம்ம வேலைக்கு லேட்டாகிடுமே’ என்று நகர்வது, ஓர் உயிருக்கு நீங்கள் செய்யும் துரோகம். உங்களின் அந்த நாள் வேலையைவிட, ஓர் உயிரின் மதிப்பு அதிகம். எனவே, சாலையில் ஏதேனும் விபத்து என்றால், வேடிக்கை பார்க்கும் கூட்டத்தில் ஒருவராக நில்லாமல், உடனிறங்கி முதலுதவி செய்யுங்கள். விலைமதிப்பில்லாத ஓர் உயிரைக் காக்கும் அந்த உதவிக்கு ஈடு இணை உலகத்தில் இல்லை!'' என்றார் வேண்டுகோளாய்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism