நான் ஐந்தாம் வகுப்பு படித்தபோது, காதலர்கள் இருவர் தங்களின் கடிதப் பரிமாற்றங்களுக்கு என்னைப் பயன்படுத்திக்கொண்டனர். 'காதல் என்றால் என்ன?’ என்ற கேள்வி, அப்போதே எனக்குள் விழுந்துவிட்டது. ஒரு பெண்ணுக்கு ஓர் ஆணைப் பிடித்தால், அது காதல் என்று நினைத்துக்கொண்டேன். காலப்போக்கில் காதலின் மெய்யான அர்த்தங்களையும், புரிதல்களையும் உணர ஆரம்பித்தேன்.

டூரிங் டாக்கீஸ்களில் படம் பார்க்க ஆரம்பித்த என் பயணம், சினிமா மீது காதல்கொள்ள வைத்து, இயக்குநராக முயற்சியெடுக்க வைத்தது. நல்ல சினிமாக்களையும், தரமான புத்தகங்களையும் தேட ஆரம்பித்தேன். கே.பாலச்சந்தரின் படங்களும், ஜெயகாந்தனின் எழுத்துக்களும் எனக்குப் பெண்கள் மீது மரியாதையை ஏற்படுத்தின. இந்த பாதிப்புதான், கதைநாயகிகளை ஆராதித்த படங்களை நான் எடுத்ததற்குக் காரணம்!

என் இனிய கதைநாயகிகள்! - 11

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'காதல் கோட்டை’, காதலை புது கோணத்தில் பேசிய படம். கோப்பெருஞ்சோழர் - பிசிராந்தையார் பார்க்காமலே கொண்ட நட்பு என்னை பெரும் ஆச்சர்யத்துக்கு உள்ளாக்கியது. இது ஓர் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையிலான காதலாக இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்த முடிச்சுதான் 'காதல் கோட்டை’. நாயகன் அஜீத்தின் பெயர், 'சூர்யா’. நாயகி தேவயானியின் பெயர் 'கமலி’. சூரியனைப் பார்த்து மலரும் தாமரைதான் என் நாயகி 'கமலி’. அந்தப் படம் முழுவதும் ஒருவித இறுக்கத்துடன் இருக்கும் 'கமலி’, இறுதியில் தன் 'சூர்யா’வை பார்த்தபின் மலர்ந்து, அழுது, சிரிப்பாள்.

பொதுவாக, அக்கா வீட்டில் தங்கி வாழும் பெண்களிடம் இயல்பாகவே ஒரு தற்காப்பு உணர்ச்சி இருக்கும். அந்த வகையில்தான் 'கமலி’ ஒரு சிடுமூஞ்சிப் பெண்ணாக இருப்பாள். தன் காதலனைப் பார்க்காமலே காதலிக்கும் அவள், 'நீ எப்படியிருப்பே, எவ்ளோ சம்பாதிக்கிறேனு கேட்டு வர்றதுக்கு பேரு காதல் இல்ல. மனசோட அன்புதான் காதல்’ என்று சொல்லி, தன் காதலனின் மனதை எழுத்துக்களில் அறிந்து, அவன் அன்பின்மீதும் தன் அன்பின்மீதும் அசாத்திய நம்பிக்கை வைத்து, காதலனுக்காகக் காத்திருப்பாள். பார்த்த பத்தாவது நாளே 'ஐ லவ் யூ' சொல்லி, பதின்மூன்றாம் நாள் பிரிந்து போகும் காதலர்களுக்கு மத்தியில், பார்க்காமலே காதல் யாகம் வளர்த்தவள் என் 'கமலி’.

'காதல் கோட்டை’, செல்போனின் அசுர வளர்ச்சிக்கு சற்றுமுன் எடுக்கப்பட்ட படம். ஒரே ஒரு ஆண்டு நான் தாமதப்படுத்தி இருந்தாலும் இந்தப் படம் வெளியாகியிருக்க வாய்ப்பே இல்லை. மற்ற படங்களை ரீ-மேக் செய்து பார்ட் 2 எடுப்பதைப் போல், 'காதல் கோட்டை’ படத்தை இனி எப்போதும் ரீ-மேக் செய்ய முடியாது என்பதை, இப்படத்தின் தனிச்சிறப்பாக நினைக்கிறேன்.

என் இனிய கதைநாயகிகள்! - 11

'கோகுலத்தில் சீதை’... படத்தின் பெயரே கதையைச் சொல்லும். சுவலட்சுமி 'நிலா’வாகவும், கார்த்திக் 'ரிஷி’யாகவும் நடித்த படம். எனக்கு ஒரு நண்பன் இருந்தான். தான் காதலித்த பெண்ணைத் தன்னோடு சேர்த்து வைக்கச் சொல்லி என் னிடம் அழுதான். நானும் அந்தப் பெண்ணை வீட்டை விட்டு வெளிவரச் செய்து, அவனுக்காக காத்திருந்தால், ஆளைக் காணவில்லை. நடுராத்திரி பன்னிரண்டு மணியாகிவிட்டது. செல்போன் இல்லாத அந்தக் காலத்தில், தியேட்டருக்குப் படம் பார்க்கச் சென்றிருப்ப தாகக் கூறிய அவனை, தியேட் டரில் சிலைடு போட்டு வெளியே வர வைத்தேன். 'கொஞ்ச நேரத்துக்கு முன்ன தான் என் அண்ணன் என்கிட்ட பேசினாரு. நான் மனசு மாறிட் டேன். இந்தப் பொண்ணை நீயே கல்யாணம் பண்ணிக்கோ’ என்றதும், அதிர்ச்சியில் உறைந் தேன். பின் அந்தப் பெண்ணை பத்திரமாக அவர் வீட்டில் சேர்த்துவிட்டாலும், இந்தச் சம்பவம் என் உள் மனதை அரித்துக்கொண்டே இருந்தது. அதன் தொடர்ச்சியாக, அந்தப் பெண், அந்த பேரதிர்ச்சியையும் மீறி கலங்காமல் நின்று, அதே நேரத்தில் இருட்டு வாழ்க்கையில் இருக்கும் ஓர் ஆணையும் திருத்தினால் எப்படியிருக் கும் என்று சிந்தனையில் உதித்ததுதான் 'கோகுலத்தில் சீதை’.

'நிலா’, தான் காதலித்தவன் (கரண்) தன்னைக் கைவிட நேர்ந்ததும் 'ரிஷி’ வீட்டில் தங்கும் சூழல் ஏற்படும். ஒரு பெண், அந்நிய ஆண் ஒருவனுடைய வீட்டில் தைரியமாக தங்குவதற்குக் காரணம் அவள் அவனை நம்புவது மட்டுமல்ல, அவள் தன்னை நம்பு வதும்தான். தன்னை வேடிக்கை பொருளாகப் பார்த்த 'ரிஷி’யை நெறிப்படுத்தி மாற்றுவாள் 'நிலா’. பெண் என்பவள் வெறும் சதையல்ல, அக்கா, தங்கை, அம்மா, மனைவி என்று மேன்மையான உறவுகளுக்கு உரியவள் என் பதை தன் செயல்களால் 'ரிஷி’க்கு உணர்த்து வாள். தடம்மாறிக் கிடக்கும் ஆண்களை மடை மாற்றும் முயற்சி எடுக்கும் பெண் களுக்கு, 'நிலா’ ஓர் உதாரணம்.

வாழ்க்கை விடைகளால் நிரம்பியது, வினாக்களை நாம்தான் உருவாக்குகிறோம். அதுதான் 'விடுகதை’ படத்தின் சாராம்சம். நாயகி 'ஆனந்தி’ பாத்திரத்தில் நீனா நடித்திருப்பார். தாயில்லா மல் தன் தந்தையுடன் வளரும் அவள், ஒரு கட்டத்தில் தந்தை யையும் இழக்கும்போது, தன் பதினெட்டு வயதில், கிட்டத்தட்ட தன் தந்தையின் வயதை யொத்த 41 வயது 'நீலகண்டனை (பிரகாஷ்ராஜ்)’ திருமணம் செய்துகொள்கிறாள். தன் வயோதிகத்தில் அவளுக்கு தாம்பத்யத்தை கொடுக்க முடி யாதே என உருகும் நீலகண் டன், வேறொரு திருமணம் செய்துகொள்ள வலியுறுத்துவார். ஆனால், செக்ஸ் மட்டுமே வாழ்க்கை இல்லை. உடல் மட்டும்தான் நேசிப்பு என்றால் வயதான பிறகு எந்தக் கணவனும் மனைவியும் சேர்ந்து வாழ மாட்டார்கள் என்பதை தன் அர்ப்பணிப்பான அன்பால் புரியவைப்பாள் 'ஆனந்தி’.

பெண்கள், காமத்தை ஜெயித்தவர்கள் என்பதற்கு, இந்த தேசத்தில் நிறைய உதாரணங்கள் உண்டு. ராமகிருஷ்ணருக்கும் அன்னை சாரதா தேவிக்கும் திருமணம் நடக்கும்போது அவருக்கு 21 வயது, அன்னைக்கு 5 வயது. ஒரு கட்டத்தில் அன்னை வளர்ந்த பிறகு, அவருக்கு பணிவிடை செய்வதையே தன் கடமையாகக் கொள்வார். அன்புக்கு முன் தாம்பத்யமோ, வயது வேறுபாடோ செல்லாத ஒன்று. பெண்களைவிட அதிக வயது வித்தியாசம் கொண்ட ஆண்களைப் போலவே, பெண்கள் தங்களைவிட வயது குறைந்த ஆண்களை திருமணம் செய்துகொண்டு இனிதே வாழ்வதையும் பார்க்கிறோம்.

உடல் என்பது மறைக்கப்பட்ட பொருளாக இருக்க வேண்டும். அன்பு வெளிப்படையானதாக இருக்க வேண்டும். ஆனால், முன்பெல்லாம் தாம்பத்யம் இருட்டில் இருந்தது, வாழ்க்கை வெளிச்சத்தில் இருந்தது. இன்றோ தாம்பத்யத்தை வெளிச்சத்துக்கு கொண்டுவந்து, வாழ்க்கையை இருட்டில் தள்ளிக்கொண்டு இருக்கிறார்கள்.

அன்பு சூழ் பெண்களால் மட்டுமே ஆண்கள் முழு மனிதர்கள் ஆகிறார்கள்!

சந்திப்பு: பொன்.விமலா

என் இனிய கதைநாயகிகள்! - 11

வாழ வைத்த 'காதல் கோட்டை’!

''தமிழில் 'காதல் கோட்டை’க்கு முன்னே ரெண்டு படங்கள் நடித்திருந்தாலும், இந்தப் படம் எனக்கு கொடுத்த ஹோம்லி அறிமுகம்தான், தொடர்ந்து குடும்பப்பாங்கான படங்கள்ல நடிக்கும் வாய்ப்பை எங்கிட்ட சேர்த்தது. சொல்லப்போனா, அந்தப் படத்தில் நடிச்சிட்டிருந்தப்ப என் கையில எந்தப் படமும் இல்ல. ஆனா, அந்தப் படத்துக்கு அப்புறம் என்னோட கிராஃப் எவ்வளவு ஏறினதுனு எல்லாருக்கும் தெரியும். இன்னொரு விஷயம், 'கமலி’யைப் போலவே நானும் மனசைப் பார்த்து காதலிச்சு, கல்யாணம் செய்துகிட்டவ. அதனாலதான் என் வீட்டுக்கே 'கமலி இல்லம்’னு பேர் வெச்சிருக் கேன்!'' என்கிறார் தேவயானி வெட்கப் புன்னகையுடன்!