Published:Updated:

சிலம்புச்செல்வி!

சிலம்புச்செல்வி!

சிலம்புச்செல்வி!

சிலம்புச்செல்வி!

Published:Updated:

''பொண்ணுங்களுக்கு ஏத்த விளையாட்டு பல்லாங்குழினு சொல்லி வெச்சது யாரு? வீரவிளையாட்டுகள், வளையல் கைகளுக்கு கைவராதா என்ன..?''

- ஆரம்பமே அசத்தலாக இருந்தது சொக்கர் மீனாளின் பேச்சு.

தேனி, என்.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம்., இரண்டாம் ஆண்டு படிக்கும் சொக்கர் மீனாள்... சிலம்பம், குங்ஃபூ, பாக்ஸிங், களரி, பளுதூக்குதல் என்று தேசிய அளவில் வெற்றிகளைக் குவித்துவருகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''கொஞ்சம் இருங்க... சிலம்பத்தில் நாலு வீடு கட்டிட்டு வந்துடறேன்...'' என்றபடி புழுதி பறக்கச் சிலம்பு சுற்றியவர், வியர்வை துடைத்து நம் முன் வந்தமர்ந்தார்.

''என்னோட முதல் குரு, என் தாத்தா வீரபத்திரன். அந்தக் கால குஸ்தி வாத்தியார். மூன்றரை வயசுலயே சிலம்பம் கத்துக்கொடுத்தார். மூணு வருஷம் தாத்தாகிட்ட பயிற்சி எடுத்த நான், ஆறு வயசுல சிலம்பத்தில் அசத்த ஆரம்பிச்சுட்டேன். தாத்தா இறந்ததுக்கு அப்புறம், என் அப்பா, தொடர்ந்து சிலம்பம் சொல்லிக்கொடுத்தார்.

சிலம்புச்செல்வி!

சிலம்பம் மட்டுமில்லாம பாக்ஸிங், குங்ஃபூ இதிலெல்லாம்கூட எங்க அப்பா நல்ல திறமை உள்ளவர். அதனால அவர்கிட்டயே நானும் கத்துக்கிட்டேன். இப்ப களரி வித்தையையும் அப்பாகிட்டயே கத்துக்கிறேன். வெயிட் லிஃப்ட்டிங், 800 மீட்டர் ரன்னிங் இதுலஎல்லாம் நான் ஸ்டேட் லெவல் வின்னர்!'' என்று ஆச்சர்யப்படுத்தியவர், தன் விளையாட்டுகள் பற்றிப் பகிர்ந்தார்.

''சிலம்பத்தைப் பொறுத்தவரை, தனியா நின்னு எவ்வளவு வேகமா வேணும்னாலும் சுத்திடலாம். போட்டினு வரும்போது, நம்ம மேல அடிபடாம சுத்தணும். குறிப்பா, இதுல 'அடி பாடம்’னு சொல்ற ஆட்டத்துல ஸ்பீடு கன்ட்ரோல் பண்றதுலதான் திறமை இருக்கு. அலங்கார வீச்சு, ரெண்டு குச்சி வெச்சு வீசுறதுனு பல வகை இருக்கு. தனியா சுத்தும்போது நம்ம கால் பாடம் (நான்கு கட்டங்களிலும் சரியாகக் கால் சென்று வருகிறதா என பார்ப்பது) சரியா இருக்குதானு பார்ப்பாங்க. ஆனா, போட்டியில நம்ம சிலம்பம் எதிரியோட உடம்பைத் தொட்டாலே நமக்கு பாயின்ட்தான். பாக்ஸிங்ல எதிராளியோட 'கிக்’கை தடுக்கலைனா... ரத்தம் வரவும் வாய்ப்பிருக்கு. ’குங்ஃபூ’ல நம்மளோட 'கட்டா’ மட்டும் பார்த்து நம்மை ஜட்ஜ் பண்ணிடுவாங்க (குங்ஃபூவில் பிரயோகிக்கும் ஸ்டைல், கை - கால் மூவ்மென்ட், பர்ஃபார்மென்ஸ் எல்லாவற்றையும் பார்த்தே நம்மை ஜட்ஜ் செய்வார்கள். இதைத்தான் 'கட்டா’ என்கிறார்கள்). இப்ப கத்துகிட்டு இருக்கிற களரியில கொஞ்சம் கவனம் சிதறினாலும் ஆபத்துதான்'' என்று மடமடவென விவரங்கள் அடுக்கும் மீனாள், தேசிய அளவில் சிலம்பத்தில் இரண்டு சில்வர், ஒரு வெண்கலம், பாக்ஸிங்கில் ஒரு வெண்கலம், ஒரு சில்வர், குங்ஃபூவில் ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி வென்றிருக்கிறார்.

''பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ்ல நடந்த யூத் ஃபெஸ்டிவல் போட்டியில தமிழ்நாட்டில் இருந்து போன 100 பேர்ல, 12 பேர் சிலம்பம் சுத்தினோம். அப்போ பிரசிடென்ட்டா இருந்த பிரதீபா மேடம், எங்களைக் கைகுலுக்கி வாழ்த்தினது வாழ்க்கையில் மறக்க முடியாத சந்தோஷம்’' என்பவருக்கு, சமீபத்தில் திருமணம் முடிந்திருக்கிறது.

''என் கணவர் சிலம்பம், பாக்ஸிங் இதுக்கு ரெஃப்ரியா இருக்காரு. கூடவே பக்கத்துல இருக்கிற மில்லுல சூப்பர்வைஸரா வேலை பார்க்கிறாரு. இப்போ பாக்ஸிங் ரெஃப்ரியாவும் போயிட்டிருக்கிற எனக்கு, பாக்ஸிங், சிலம்பத்துல டஃப் கொடுக்கிறது, என் தம்பி. இப்படி எங்க குடும்பமே வீரவிளையாட்டுக் குடும்பம்!'' என்று சிரிக்கும் மீனாள்,

''குங்ஃபூ, பாக்ஸிங் எல்லாம் வெளிநாட்டுக்காரங்க விளையாட்டுனு நினைக்காதீங்க. உண்மையில அதோட ஆதி தமிழ்நாடுதான்... கராத்தே மாதிரியே. அதனால நம்ம பிள்ளைங்களுக்கு சிலம்பம், கராத்தே, களரினு ஆட்டங்களை கத்துக்கொடுங்க. கம்ப்யூட்டர், மொபைல் கேம்ஸ்னு ஒரே இடத்தில் உட்காரவிடாம, பக்கத்து வீட்டுப் பசங்களோட ஓடியாடி விளையாடவாவது விடுங்க...''

- கோரிக்கை வைத்து, களரி களத்தில் இறங்கினார் சொக்கர் மீனாள்.

- உ.சிவராமன்

படங்கள்: வீ.சக்தி அருணகிரி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism