Published:Updated:

'அட்சயம்' எனும் நம்பிக்கை ஊற்று!

'அட்சயம்' எனும் நம்பிக்கை ஊற்று!

'அட்சயம்' எனும் நம்பிக்கை ஊற்று!

'அட்சயம்' எனும் நம்பிக்கை ஊற்று!

Published:Updated:

''சமூக சேவையிலேயே, இதுவரை யாரும் பயணிக்காத வித்தியாசமான சேவையா இருக்கிறதுதான் எங்க 'அட்சயம்’ அமைப்போட சிறப்பு!''

- உற்சாகத்துடன் கைகுலுக்குகிறார்கள், நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், எஸ்.எஸ்.எம்.பொறியியல் கல்லூரி மாணவ- மாணவிகள்!

ஒரு விடுமுறை நாளில் நிகழ்ந்தது சந்திப்பு. நம்மை வரவேற்ற 'அட்சயம்’ குழுவின் தலைவி பிரியங்கா, ''இன்னிக்கு எங்க டீம் மீட்டிங் இருக்கு...'' என்றபடி ஆரம்பித்தார் பேச்சை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''அட்சயம்’னா அள்ள அள்ளக் குறையாததுனு அர்த்தம். அதேமாதிரி எங்க சேவையும் முடிவில்லாதது. எங்க குழுவின் நோக்கம், பிச்சைக்காரர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித்தந்து, அவங்களை நல்வழிப்படுத்துறது. எப்படி இந்த வித்தியாசமான முயற்சினு கேட்கிறீங்களா? என் டீமில் உள்ள நவீன்தான் இதுக்கு பிள்ளையார் சுழி போட்டவன். ஆனா, அதுக்கு முன்ன ஒரு குட்டி ஃப்ளாஷ்பேக்'' என்று சுவாரஸ்யம் கூட்டியவர்,

''நானும் நவீனும் ஃப்ரெண்ட்ஸ். ரெண்டு பேருமே திருச்சிதான். ஜனவரி மாசம் லீவுல ஊருக்குப் போறதுக்காக பஸ் ஸ்டாண்ட்ல நின்னுட்டு இருந்தோம். அப்போ ஒருத்தர், 'ஊருக்குப் போக எனக்கு காசு இல்ல. 50 ரூபா கொடுங்களேன்’னு கை நீட்டினார். நாங்களும் கொடுத்தோம். கொஞ்ச நேரம் கழிச்சு வந்த ஒரு பாட்டி, வயோதிகத்தால நடக்கக்கூட சிரமப்படுற நிலையில இருந்தாங்க. அவங்களும் கை நீட்டினப்போ, கஷ்டமா இருந்துச்சு. கொடுத்தோம். அன்னிக்கு பஸ் ஸ்டாண்டுல காசு கேட்ட அதே ஆள், கொஞ்ச நாள் கழிச்சு இன்னொரு இடத்தில, அதே காரணத்தைச் சொல்லி கை நீட்டிட்டு இருந்தாரு. கோபமா வந்துச்சு. காலேஜ்ல ஃப்ரெண்ட்ஸ்கிட்ட ஷேர் பண்ணிக்கிட்டப்போ, 'கை, கால் நல்லாயிருக்கிறப்போ பொய் சொல்லி பிச்சையெடுக்கிற அவர் மட்டுமில்ல, அவருக்கு பிச்சை போட்ட நாமளும்தான் தப்பு செய்திருக்கோம்'னு சொன்னாங்க.

'அட்சயம்' எனும் நம்பிக்கை ஊற்று!

ஒரு கட்டத்துல, 'பிச்சைக்காரர்களைத் திருத்தி மறுவாழ்வு கொடுக்கறத ஒரு சேவையா செய்தா என்ன?’னு நவீன் கேட்டான். உடனே குழுவா இணைஞ்சுட்டோம். காலேஜ் லெக்சரர்கள்கிட்ட சொன்னப்ப, 'கேட்கவே புதுமையா இருக்கு. எண்ணத்தை செயலாக்கினீங்கனா ரொம்ப சந்தோஷம்!’னு ஊக்குவிச்சாங்க. கல்லூரி சேர்மன், பிரின்ஸிபால் எல்லாரும் கொஞ்சம் நிதி கொடுத்து எங்க சேவைக் கணக்கை ஆரம்பிச்சு வெச்சதோட, கல்லூரியில் நிதி சேகரிக்கவும் அனுமதி கொடுத்தாங்க'' என்று பிரியங்கா நிறுத்த.

''காலேஜ்ல ஒவ்வொரு வகுப்பா போய் எடுத்துச் சொன்னோம். கொஞ்சம் கொஞ்சமா சேர ஆரம்பிச்சி, இப்போ 'அட்சயம்’ அமைப்போட உறுப்பினர் எண்ணிக்கை, 1200'' என்று ஆச்சர்யப்பட வைத்தார் நவீன்!

அடுத்து பேசிய வாசுகி, ''இந்த அமைப்பை ஆரம்பிச்ச எட்டே மாசத்துல, இதுவரை 5 பேருக்கு மறுவாழ்வு தந்திருக்கோம். முதல்ல ராஜசேகர்... சேலம் பஸ் ஸ்டாண்ட்ல பிச்சை எடுத்துட்டு இருந்தவரை ஒருநாள் சந்திச்சு, எங்க நோக்கத்தைச் சொன்னோம். அவர் ஒத்துழைக்கவே தாராபுரத்துல இருக்கிற 'எக்காம்வெல் சில்ட்ரன்ஸ் ஹோம்'ல வேலைக்கு சேர்த்துவிட்டோம். ரெண்டாவதா, காளியப்பன்னு ஒருத்தரையும் அதே இடத்துல வேலைக்குச் சேர்த்துவிட்டோம்'' என்று சொல்ல,

''மத்தவங்களப் பத்தி நான் சொல்றேன்'' என்ற திவ்யபூரணி, ''பிச்சை எடுத்திட்டிருந்த லட்சுமி பாட்டிகிட்ட பேசி, எங்க காலேஜ் கேன்டீன்லயே வேலை வாங்கிக் கொடுத்தோம். ஈரோடு பஸ் ஸ்டாண்ட்ல இருந்து மீட்டெடுத்த யுவராஜ், நாமக்கல்லில் இருந்து மீட்டெடுத்த பாலு... இவங்க ரெண்டு பேரையும் பெருந்துறை மில்லுல வேலைக்குச் சேர்த்துவிட்டிருக்கோம். முதன்முதலா வேலைக்குச் சேர்த்துவிட்ட ராஜசேகர், இப்ப தன் குடும்பத்தோட சேர்ந்துட்டார்!' என்றபோது, பெருமிதம் திவ்யபூரணியின் குரலில்.

அட்சயம் பணிகளை முன்னெடுப்பதற்கான நிதி திரட்டுவது பற்றி பேசிய மகேஷ், ''விடுமுறை நாட்களில் ஒவ்வொரு ஸ்டூடென்ட்டும் அவங்க அவங்க ஏரியாவுல இருக்கிற வீடுகள், கடைகள்னு பிட் நோட்டீஸ் கொடுத்து நிதியுதவி கேட்கிறோம். எங்க பாக்கெட் மணி காசையும் போடுறோம்'' என்று சொன்னார்.

தொடர்ந்த லட்சுமிபிரியா, ''எங்க காலேஜ் பண்பலையில, வாரம்தோறும் 'அட்சயம்’ பத்தி பேசுவோம். அதுக்கு நல்ல பலன். எல்லாத்தையும்விட பெரிய சந்தோஷமா, 'அட்சயத்தை’ நாங்க முறைப்படி பதிவு பண்ணிட்டோம். இந்த அமைப்புல ஏற்கெனவே எஸ்.எஸ்.எம். ஆர்ட்ஸ் காலேஜ் ஸ்டூடென்ஸ் மெம்பரா இருக்காங்க. இப்போ புதுசா மற்ற கல்லூரி மாணவர்களும் இணைஞ்சுட்டு இருக்காங்க...'' என்றார் பெருமையாக!

நிறைவாக, ''பல பிச்சைக்காரர்களைப் பார்த்துட்டோம். சிலர்தான் ஒத்துழைப்புக் கொடுப்பாங்க. பலர், 'வணக்கம் சார்... நாங்க அட்சயம் என்ற அமைப்பில் இருந்து’னு ஆரம்பிக்கும்போதே கெட்ட வார்த்தையில திட்ட ஆரம்பிச்சுடுவாங்க. சுத்திமுத்தி பார்த்துட்டு, 'தேங்க்யூ சார்!’னு ஜூட் விட்டுருவோம்!'' என்றார்கள் குழு உறுப்பினர்கள் அனைவரும் கோரஸாக சிரித்தபடி!

- கு.ஆனந்தராஜ்

படங்கள்: அ.நவின்ராஜ்  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism