Published:Updated:

சித்ராங்கதா... 'நிழல்கள்’ நாயகியின் புதுப் பிரவேசம்!

சித்ராங்கதா... 'நிழல்கள்’ நாயகியின் புதுப் பிரவேசம்!

சித்ராங்கதா... 'நிழல்கள்’ நாயகியின் புதுப் பிரவேசம்!

சித்ராங்கதா... 'நிழல்கள்’ நாயகியின் புதுப் பிரவேசம்!

Published:Updated:

ண்பதுகளில் இசை, இயக்கம், நடிப்பு என்று அனைத்து அம்சங்களிலும் ரசிகர்களைக் கட்டிப்போட்ட மைல்கல் திரைப்படம், பாரதிராஜாவின் 'நிழல்கள்’. 'பூவாய்... பெண் பாவாய்' என படத்தில் நடைபோட்ட நாயகி ரோஹிணியை, நடுத்தர வயதினர் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது. இவருடைய இயற்பெயர் ராதிகா. அலையலையாகப் படிந்த சுருட்டை முடியும், பிரகாசிக்கும் கண்களும், தீர்க்கமான கிளிமூக்குமாக... 25 வருடங்களுக்குப் பிறகும் அப்படியே இருக்கிறார் ராதிகா!

திருமணத்துக்குப் பிறகு, அமெரிக்காவில் செட்டிலாகிவிட்ட ராதிகா, அங்கே தான் நடத்திவரும் நடனப் பள்ளிக் குழுவினருடன் அண்மையில் சென்னையில் 'சித்ராங்கதா’ எனும் நாட்டிய நாடகத்தை மேடையேற்றினார். ரவீந்திரநாத் தாகூரின் உணர்ச்சி மிகுந்த காதல் காவியம் 'சித்ராங்கதா’. இதைத் தமிழில் மேடையேற்றிய பெருமிதத்திலும் மகிழ்ச்சியிலும் பூரித்திருந்த ராதிகாவை, சந்தித்தபோது... 'நிழல்கள்’ பிரவேசம் முதல் 'சித்ராங்கதா’ வரை அழகாகப் பகிர்ந்தார்.

''பாரதிராஜா அங்கிள் எங்க குடும்ப நண்பர். நான் 9-ம் வகுப்பு படிச்சப்போ என்னோட நடன நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர், எனக்கு 'நிழல்கள்’ படத்தில் வாய்ப்பு கொடுத்தார். அப்போ எனக்கு 14 வயசுதான். 'ரோஹிணி’ செயற்கைக்கோள் ஏவிய சமயத்தில் அந்தப் படம் தயாரிச்சதால, அந்தப் பெயர் வெச்சாங்க. குடும்பத்தில் யாருமே சினிமா உலகில் இல்லை. அங்கிள் சொன்னதுக்காக நடிச்சேனே தவிர, நடிப்பு என் கனவா இருக்கல. 'நிழல்கள்’ படத்துக்கு அப்புறம், 'ஒருவர் வாழும் ஆலயம்’ வாய்ப்பு வர, அதிலும் நடிச்சேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சித்ராங்கதா... 'நிழல்கள்’ நாயகியின் புதுப் பிரவேசம்!

கல்லூரிப் படிப்பு முடிஞ்சப்போ, சின்ன வயசிலிருந்து ஒண்ணாவே படிச்சு, ஒண்ணாவே விளையாடிய எங்க குடும்ப நண்பர் நீஹார் கிரி, என்னைத் திருமணம் செய்துகொள்ளப் பிரியப்படுறதா சொன்னார். 'நடிப்பா, கல்யாணமா?’னு வந்தப்போ, கல்யாண வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தேன். அவர், அமெரிக்காவுல சாஃப்ட்வேர் இன்ஜினீயரா இருந்ததால நானும் அங்க போயிட்டேன். ஒரு ஐ.டி. கம்பெனி வேலையிலயும் சேர்ந்துட்டேன்''

- கன்னம் குழியச் சிரிக்கிறார்.

''சின்ன வயசில் இருந்தே கே.ஜே.சரஸா அம்மாகிட்டே பரதம் கத்துக்கிட்டேன். அரங்கேற்றத்துக்கு அப்புறம் நடனத்தில் சீரியஸா இறங்கல. டிசம்பர் சீஸன்ல சென்னை சபாக்களில் ஆடறதோட சரி. வேலை, குழந்தைகள், குடும்பம்னு எனக்கான உலகத்தில் பிஸியா இருந்தேன். மகள் லாஸ்யா, 5 வயதில் நடனம் கத்துக்க ஆசைப்பட்டப்போதான், 'நாமே கத்துக்கொடுத்தா என்ன’னு தோணுச்சு. அது எனக்கான பயிற்சியாகவும் அமைஞ்சுது. 'அஞ்சலி நாட்டியா’னு நடனப் பள்ளியைத் தொடங்கி, கத்துக்கொடுக்க ஆரம்பிச்சேன். இப்போ என் டான்ஸ் ஸ்கூல்ல 75 ஸ்டூடென்ட்ஸ் கத்துக்கிறாங்க. பெரும்பாலும் தென்னிந்தியர்கள்தான். இதுவரை ஆறு அரங்கேற்றம் பண்ணி வெச்சுருக்கேன். 15 வருஷமா பார்த்துட்டிருந்த வேலையை ராஜினாமா பண்ணிட்டு, நடனத்துல பிஸியாயிட்டேன்.

தாகூரின் 'சித்ராங்கதா’ அருமையான காதல் காவியம். இதை ஒடிஸி, மணிப்புரி நடனங்கள்ல பல நடன நட்சத்திரங்கள்  பண்ணி யிருக்காங்க. பரதநாட்டியத்தில் இதை பண்ணினா என்னனு ஆசை வரவே... தமிழ் மேடைக்கு கொண்டு வந்துட்டேன். இதை தமிழில் எழுதிக் கொடுத்தது, கல்பகம் ஸ்ரீனிவாசமூர்த்தி. பாடல்கள் எழுதி இசையமைச்சுக் கொடுத்தது ராஜ்குமார் பாரதி. நான்தான் 'சித்ராங்கதா’ வேடத்தில் ஆடினேன். என் மகளும், என் மாணவர்கள் 12 பேரும் பங்கெடுத்துக்கிட்டாங்க. நல்ல வரவேற்பும் பாராட்டுகளும் கிடைச்சிருக்கு. இனி இதுபோன்ற நாட்டிய நாடகங்களை இயக்க ஆர்வம் வந்திருக்கு!'' எனும் ராதிகா கிரி, சிறு வயதிலிருந்து யோகாசனப் பயிற்சியும் செய்கிறார். தினமும் ஆசனம், பிராணாயாமம், தியானம் செய்யாமல் அந்த நாளைத் தொடங்குவதில்லை.

''கணவர் கிரி எனக்கு ரொம்ப சப்போர்டிவ். நல்ல விமர்சகரும் கூட. சித்ராங்கதா பார்த்துட்டு, 'நம்ம மண்ணு சென்னையில் உன் முத்திரையைப் பதிச்சிட்டே’னு சந்தோஷப்பட்டார். பையன் அவனீஷ் கிரி, இன்ஜினீயர். பொண்ணு லாஸ்யா கிரி ஸ்கூல் படிச்சுட்டிருக்கா. இப்போ அவளுக்கு 13 வயசாகுது. அவளுடைய வாழ்க்கையில் முக்கியமான கட்டம் இது. இந்தச் சமயத்தில், ஒரு அம்மாவா அவள் வாழ்க்கையில் நான் அக்கறை எடுத்துக்கிட்டு, வழிநடத்தணும்...''

- ராதிகாவின் விழிகளில் தாய்மையின் அக்கறை!

'அர்ஜுனன் காதலி’!

70 நிமிடங்கள் நடைபெறும் இந்த நாட்டிய நாடகம், ஓர் அமர காவியம்.

மணிப்புரி நாட்டு இளவரசி சித்ராங்கதா. ஓர் ஆணைப் போல வீரமும், விவேகமும் கொண்டவள். அனைத்து வகைப் போர்க்கலைகளிலும் தேர்ச்சி பெற்று, இளவரசன் போல வளைய வந்த அவள், பாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனன் மீது காதல்வயப்படுகிறாள். 'என்னை மணம் செய்துகொள்வீர்களா?’ என்று அவள் கேட்கும்போது, ஆண் போல வீரம் கொண்ட அவளை ஏற்க மறுக்கிறார் அர்ஜுனன்.

மனம் வருந்தி, மன்மதனை நோக்கி 12 வருடங்கள் தவம் செய்கிறாள் சித்ரா. காட்சி அளிக்கும் மன்மதனிடம், 'என்னை ஒரே ஒரு நாள் மட்டும் அழகிய, ஒயிலான பெண்ணாக மாற்று. அர்ஜுனனை என் அழகால் மனம் மாற்ற வேண்டும்’ என வேண்டுகிறாள். மன்மதனோ ஒரு நாள் அல்ல... ஒரு வருடத்துக்கு அழகிய இளவரசியாகத் திகழும் வரம் கொடுக்கிறார். அர்ஜுனனைக் கைப்பிடிக்கிறாள்.

இதற்கிடையே... மணிப்புரி நாட்டு மக்கள் தங்களின் இளவரசி சித்ராங்கதாவின் வீரத்தையும் தைரியத்தையும் போர்க்குணத்தையும் புகழ்ந்து பேசுவது கண்டு, அர்ஜுனனுக்கு அந்தச் சித்ராங்கதாவைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் உண்டாகிறது. அவளுடைய தைரியத்தைப் பற்றிக் கேட்டுக்கேட்டு, அவளையே நினைத்து, ஒருதலையாக விரும்ப ஆரம்பிக்கிறார். சரியாக ஒரு வருடம் முடியும்போது, 'நான்தான் அந்த வீரதீரம் மிக்க சித்ராங்கதா’ என்று உண்மையைக் கூறி, தான் மாறிய கதையைச் சொல்கிறாள். அர்ஜுனனும் மகிழ்ந்து ஏற்கிறான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism