மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேபிள் கலாட்டா!

கிஸ் அடித்த எமி... கட்டிப் பிடித்த டாப்சி... கலக்குறே பாலாஜி! ரிமோட் ரீட்டா

புதிய தலைமுறை சேனல் '360 டிகிரி ஷோ’வின் ஆங்கர் பாலாஜியைப் பத்திப் பேசினாலே, அந்த யூனிட்ல இருக்குற ஆட்களுக்கு... ஸ்டொமக் பர்னிங், காதுல கலர் கலரா புகையெல்லாம் வருதாம்!

''அப்படி என்னய்யா நடந்துச்சு?''னு பாலாஜி முன்னாடி அப்பியர் ஆனேன்.

''வா ரீட்டா! அப்புறம், எங்க இந்த பக்கம்?''னு சார் ஒரே ஜாலியாயிட்டார்.

''ஒண்ணும் இல்ல பாலாஜி... உன்னோட யூனிட்ல எல்லாம் ஒரே ஃபீலாயிட்டாப்பல. அப்படி என்ன பண்ணேனு கேட்டுப் போலாம்னுதான் வந்தேன்.''

கேபிள் கலாட்டா!

''ஓ, அதுவா... என்னோட ஷோக்கள்ல வரும் வி.ஐ.பி நடிகை, நடிகருங்க எல்லாம் எனக்கு க்ளோஸ் ஆகிடுவாங்க. அந்தவிதத்துல எமி ஜாக்ஸன் என்னோட செம க்ளோஸ்! இன்டர்வியூக்கு வந்ததும் என்னைப் பாத்தாலே ஓடி வந்து கட்டிப் புடிச்சு கிஸ் பண்ண ஆரம்பிச்சுடுவாங்க. அதேமாதிரி பூஜா எனக்கு திக் ஃப்ரெண்ட். அவளோட நான் எடுத்த போட்டோஸை ஃபேஸ்புக்ல அப்லோட் பண்ணதும் எக்கச்சக்க லைக்ஸ் எகிறும். ஒருமுறை ஆதியையும் டாப்ஸியையும் இன்டர்வியூ பண்ணி முடிச்சதும், ஆதி என்னைக் கட்டிப்பிடிச்சு 'இன்டர்வியூ ரொம்ப நல்லா வந்துச்சு... தேங்ஸ் பாஸ்’னு சொல்லிட்டு, கூட நின்னுட்டிருந்த டாப்ஸியைக் காட்டி, 'என்னை மாதிரி நீ டாப்ஸியை ஹக் பண்ண முடியாது... ஸோ ஃபீல் பண்ணாதே’னு கலாய்ச்சார். உடனே... 'அவர்தானே என்னை ஹக் பண்ண முடியாது... ஆனா, நான் பண்ணலாமே’னு டக்குனு என்னை ஹக் பண்ணிட்டாங்க. கலர் கலர் புகையா கௌம்புறதுக்கு இதெல்லாம்தான் காரணம். வேற ஒண்ணும் இல்ல ரீட்டு!''

''அட, எவ்ளோ பெரிய விஷயம்... இதைப் போய் இவ்ளோ சிம்பிளா சொல்லிட்டே! உங்க யூனிட்ல மட்டுமில்ல... தமிழ்நாட்டுப் பசங்களே உன்னை மன்னிக்க மாட்டாங்க போப்பா!''

''ரீட்டா நான் பேஸிக்கலி ஒரு ஆர்.ஜே! நம்ம ஊரு எஃப்.எம்-ல மட்டும் இல்லாம, லண்டன் தமிழர்களுக்கான எஃப்.எம்-லயும் வேலை செஞ்சுருக்கேன். தூர்தர்ஷன்லதான் முதல்ல ஸ்டெப் எடுத்து வெச்சேன். என் னோட முதல் இன்டர்வியூ, கமல் சாரோட! பார்த்தியா... நான் எப்பவுமே லக்கிதான்!

இதுமட்டுமில்ல ரீட்டா... ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா, சூர்யா, விஜய், விஷால், ஜெயம் ரவி, விக்ரம், விக்ரம் பிரபு, ஆர்யா, அனுஷ்கா, சினேகானு நான் இன்டர்வியூ எடுத்த வி.ஐ.பி லிஸ்ட் ரொம்பவே நீ....ளம்! பாலிவுட்லயும்... ஜான் ஆபிரஹாம், ரன்பீர் கபூர், ஸ்ரீதேவி, விது ஜம்மால்னு நிறைய எடுத்திருக்கேன். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி ஸ்பெஷல் எனக்கு!''

''ஆமா, நீ என்ன விஸ்காமா படிச்சிருக்கே?''

''இல்ல ரீட்டா, பி.எஸ்ஸி கெமிஸ்ட்ரி.''

''அதான் கெமிஸ்ட்ரி நல்லாவே வொர்க் அவுட் ஆகுது!''

செம பல்பு!

கேபிள் கலாட்டா!

மோனிக்கு ஒரு ஆசை!

ம்ம கலைஞர் டி.வி மோனிகா, ஒரே 'ஸ்டேஜ் லைவ் ஷோஸ், செலிபிரிட்டி ஷோஸ்’னு கலக்கிட்டு இருக்காங்களேனு போய் பாத்து, ''என்ன மோனி... பொது மேடை நிகழ்ச்சிகள்ல அடிக்கடி பாக்க முடியுது. என்ன விஷயம்?''னு கேட்டேன்.

''ரீட்டா, எல்லாரும் நெனக்கிற மாதிரி நான் இன்னிக்கு நேத்து இல்ல... காலேஜ் படிக்கும்போதே, பார்ட் டைம் வேலையா, பொது நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க ஆரம்பிச்சுட்டேன். பி.எஸ்ஸி., நர்ஸிங் படிக்கும்போதே, 'உனக்கு போட்டோஜெனிக் ஃபேஸ்’னு எல்லாரும் சொல்லுவாங்க. அதனாலயோ என்னவோ... படிப்பு முடிச்சதும், 'ரிசல்ட் வர்ற வரைக்கும் பார்ட் டைமா டி.வி-யில காம்பியரிங் பண்ணப்போறேன்’னு வீட்ல சொன்னேன். ஆரம்பத்துல வேணாம்னு சொன்னவங்கள, சமாதானப்படுத்திட்டேன்.

முதல் வாய்ப்புக்காக முயற்சி பண்ணினது 'இசையருவி’ சேனல்லதான். ஆனா, எவ்ளோதான் மேடை நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியிருந்தாலும், ஆடிஷன்ல கேமராவை பாத்ததும், ஒரே படபடப்பா வந்து வியர்த்துக்கொட்டி, ஒழுங்கா பேச முடியாம இருந்ததால, ரிஜெக்ட் பண்ணிட்டாங்க.

அடுத்ததா  மெகா டி.வி ஆடிஷனுக்குப் போனேன், அங்கேயும் இதே பிரச்னைதான். பிறகு, தினமும் வீட்டுல கண்ணாடி முன்ன நின்னு, காம்பியர் செஞ்சு பிராக்டீஸ் பண்ணதுக்கு அப்புறம் இமயம் டி.வி-யில செலக்ட் ஆகிட்டேன். அப்புறம் ராஜ் டி.வி, மலேஷியன், சிங்கப்பூர் சேனல்கள்ல கூட காம்பியரிங் பண்ணிட்டிருந்தேன். ஆரம்பத்துல ரிஜெக்ட் பண்ணின, இசையருவி சேனல்லயும் செலக்ட் ஆகி, 2 வருஷமா லைவ் ஷோக்கள் பண்ணிட்டிருந்தேன். அப்புறம் கலைஞர் டி.வி லைவ் ஷோக்கள், செலிபிரிட்டி ஸ்பெஷல் ஷோக்கள், லைவ் ஸ்டேஜ் ஷோக்கள்... இப்படி என்னோட வேலை ரொம்ப பிஸியா போயிட்டிருக்கு ரீட்டா.''

''அடுத்த பிளான் என்ன?''

''ஒரு பெரிய பிரேக் குடுக்குற மாதிரி, ஏதாவது வித்தியாசமான ஒரு ஷோ பண்ணணும். குறிப்பா, பெண்களுக்கான நிகழ்ச்சியா இருந்தா ரொம்ப சந்தோஷமா இருக்கும். என்னைப் பொறுத்தவரைக்கும் சீரியல்ல இருந்து வெளியில வந்து, வித்தியாசமான கேம் ஷோக்கள்ல பெண்கள் கலந்துக்கணும்!''

உன் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள் மோனி!

வாசகிகள் விமர்சனம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

கேபிள் கலாட்டா!

 150

செலவு ஏராளம்... பலன் பூஜ்யம்!

''சன் மியூசிக் தொலைக்காட்சியில் வாரம் 7 நாட்களும் நேரலை நிகழ்ச்சி நடத்துகின்றனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, நிகழ்ச்சித் தொகுப்பாளரிடம் பேச நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது உடனே ஏற்றுக்கொண்டு என்னைக் காத்திருப்பில் வைத்துவிட்டார்கள். கடைசி வரை தொகுப்பாளரிடம் பேச முடியவில்லை, நிமிடத்துக்கு 9 ரூபாய் வீதம் செலவானதுதான் மிச்சம்! இதுபோன்ற தேவையில்லாத அபகரிப்புகளை என்னைப் போன்ற சாமான்யர்களிடம் செய்யாதிருங்களேன்...'' என்று கோரிக்கை விடுக்கிறார் தர்மபுரியில் இருந்து மு.போதுமா.

ராயல் சல்யூட்!

''கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 10 மணிக்கு 'கலியுகம்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இன்றைய தலைமுறையினர் வரலாற்றையும், தமிழையும் கற்றுக்கொள்ள மறுத்துவரும் சூழலில், உலக வரலாறுகளைக் காட்சிப்படுத்தும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் தேவையானவையே! வரலாறுகளை அறிந்துகொள்ளாவிட்டால், நம்மால் அறிவியலில் முன்னேற்றம் அடைய முடியாது என்பதை ஆழ்ந்து உணர்ந்து, எளிமையான முறையில் நம் கண்முன் வரலாற்றைக் காட்சிப்படுத்தும் இந்நிகழ்ச்சிக்கு ராயல் சல்யூட்!'' என்று ஊக்குவிக்கிறார் அரியலூரில் இருந்து மணிமேகலை.

மனதை நிறைக்கும் மாறுபட்ட நிகழ்ச்சி!

''புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 1 மணிக்கு 'கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு’ என்னும் சமையல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. ஓர் உணவுப்பொருளை எடுத்துக்கொண்டு, முதன்முதலில் எங்கே தோன்றியது, பெயர் வந்த விதம், எப்படி தயாரிக்கப்படுகிறது, அதன் பயன்பாடு என்ன என்பதையெல்லாம் காட்சிகளோடு விளக்குகிறார்கள். மேலும் அந்தப் பொருள் சம்பந்தப்பட்ட மூன்று விதமான சமையலை செய்து காட்டுவது அருமை!'' என்று பாராட்டுகிறார் சேலம், அம்மாப்பேட்டையில் இருந்து லதா.