Published:Updated:

‘தம்பியைப் படிக்கவைக்க... அந்தரத்தில் ஆடும் பெண்!’

உ.சிவராமன், படங்கள்: வீ.சக்தி அருணகிரி

‘தம்பியைப் படிக்கவைக்க... அந்தரத்தில் ஆடும் பெண்!’

உ.சிவராமன், படங்கள்: வீ.சக்தி அருணகிரி

Published:Updated:

'வயித்துக்காக மனுஷன் இங்கே கயித்தில் ஆடுறான் பாரு...
ஆடி முடிச்சி இறங்கி வந்தா அப்புறந்தாண்டா சோறு...’

- 'நல்ல நேரம்’ படத்தில் எம்.ஜி.ஆர் பாடும்போது, சாகசங்கள் மூலம் மக்களைக் குஷிப்படுத்தும் சர்க்கஸ்காரர்களின் அபாயகரமான வாழ்க்கை புரியும்.

ஆண்களுக்கு இணையாக, சொல்லப்போனால் அவர்களைவிட ஒரு படி மேலாக உயிரைப் பணயம் வைத்து சர்க்கஸில் ஈடுபடும் பெண்கள் அதிகம். இப்படிப்பட்ட பெண்களை... தேனி மாவட்டம், பி.சி. பட்டியில் முகாமிட்டிருக்கும் 'குளோபல் சர்க்கஸ்' அரங்கில் சந்தித்தபோது, அந்த வியப்பு இன்னும் கூடியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சீனியரான ரீனா, ''இதோ... சாரி பேலன்ஸிங் (புடவையைப் பயன்படுத்தி செய்யப்படும் வித்தை) விளையாட்டை முடித்துவிட்டு வருகிறேன்'' என்றவர், 40 அடி உயரத்தில் இருந்து கீழே தொங்கவிடப்பட்டிருந்த நீளமான புடவையில் தன் உடலை வளைத்து, தரையிலிருந்து மேலே ஏறுகிறார். அந்தரத்தில் புடவையிலிருந்தபடியே சில சாகசங்களையும் செய்கிறார். பின் 20 அடி உயரத்திலிருந்து புடவையின் வழியே கீழே சுழன்று விழுந்து, சாதாரணமாக எழுந்து நடந்து வரும்போது அரங்கம் கைதட்டலால் அதிர்கிறது.

‘தம்பியைப் படிக்கவைக்க... அந்தரத்தில் ஆடும் பெண்!’

''சொந்த ஊர் நேபாளம். ஐந்து வயதில் சர்க்கஸ் பார்க்கச் சென்ற என்னை, அந்த சர்க்கஸ் குழுவில் ஒருத்தியாக சேர வைத்துவிட்டது குடும்பத்தின் நிலைமை. என்னைப் போலவே வறுமையைச் சமாளிக்க, பல மாநிலங்களில் இருந்தும் பெண்கள் இதில் இணைந்துள்ளனர். சர்க்கஸ் செய்வதற்கு உடல்வலிமையும், மனவலிமையும் ரொம்பவே முக்கியம். இதில் ஆபத்துகள் அதிகம். ரோலிங் செய்யும்போது, ஜம்ப் செய்யும்போது நிறைய அடிபட வாய்ப்புகள் உண்டு. அடிபட்டால், அதற்கான மருத்துவச் செலவுகளை நிர்வாகம் பார்த்துக்கொள்ளும். ஷோ இருந்தாலும் இல்லை என்றாலும்... சாப்பாடு, தங்கும் இடம் எல்லாவற்றையும் நிர்வாகமே கொடுத்துவிடும். சர்க்கஸ் வீரர்களின் அனுபவத்தைப் பொறுத்து சம்பளம் கிடைக்கும்'' என்று சொல்லும் ரீனா, தன் குழுவில் இருக்கும் மேற்குவங்கத்தைச் சேர்ந்தவரை கைப்பிடித்திருக்கிறார். தற்போது இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகன். மாமியார் பொறுப்பில் வளரும் மகனுக்கு, மாதம்தோறும் பணம் அனுப்பிவிடுவார்களாம்.

பேசிக்கொண்டே இருந்த ரீனா... ''அடுத்தது, 'ஃப்ளையிங் ட்ரப்பீஸ்’ (அந்தரத்தில் பறந்து கம்பியைப் பிடிப்பது) கேம் ஆரம்பமாகப் போகிறது. இதில் நான் ஒருத்தி மட்டும் தான் பெண். மற்ற 12 பேரும் ஆண்கள். வரட்டுமா...'' என்று விடைபெற்றவர், சரசரவென்று நூல் ஏணியில் ஏற ஆரம்பித்தார்.

லூசியா, அஸாம் பெண். ''முன்பு ஜம்போ சர்க்கஸில் நான்கு ஆண்டுகள் இருந்துவிட்டுதான் இந்தக் குழுவுக்கு வந்துள்ளேன். என்னுடைய ஸ்பெஷல், ரிங்கிங்... உடம்பில் ஐந்து வளையங்களை வைத்துக்கொண்டு சுத்துவது. அப்பா இல்ல. மூன்று அண்ணன்களும் விவசாயம் செய்கிறார்கள். 'நாமளும் நாலு காசு பார்க்கணும்' எனும் வைராக்கியத்தில்தான் சர்க்கஸ் குழுவில் இணைந்தேன். புதிதாக வந்திருக்கும் ஜூனியர்களுக்கு சர்க்கஸ் வித்தையைக் கற்றுக்கொடுத்து, மக்கள் முன்பாக அவர்களையெல்லாம் கைதட்டல் வாங்க வைக்க வேண்டும். ஒரு காலத்தில் நாங்களும் இப்படித்தானே வந்தோம்!'' என்று கொஞ்சிக் கொஞ்சிப் பேசியவர், வளையம் சுழற்றக் கிளம்பிப் போனார்.

இந்த சர்க்கஸில் கடைக்குட்டியும், படித்தவருமான (ஏழாவது வரை) க்ளாரினா, அசாம் பகுதியைச் சேர்ந்தவர். ஒரு வருட கடுமையான பயிற்சிக்குப் பின், தற்போது ஷோக்களில் பங்கேற்று வருகிறார். ''என் தம்பியைப் படிக்க வைத்து, நல்ல நிலைமைக்கு கொண்டுவர வேண்டும். இந்த ஒரே காரணத்துக்காகத்தான் இந்த சர்க்கஸில் வேலை பார்க்கிறேன். இயல்பில் நான் மிகவும் அமைதியான பெண். ஆனால், இங்கே வந்தபிறகு அப்படியே மாறிவிட்டேன். ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் எங்கள் வீட்டுக்குப் போய் சந்தோஷமாக இருந்துவிட்டு வருவோம். மீதி நாட்கள் எல்லாம்... நாடோடி வாழ்க்கைதான்'' என்று ஏக்கமாகச் சொன்னவர், தடதடவென அந்தரத்தில் தாவத் தயாரானார், தன்னை வாழவைக்கும் சாகசங்களை நிகழ்த்த!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism