Published:Updated:

‘மர்தானி’ - வக்கிர ஆண்களுக்கு பளார் பளார்!

பொன்.விமலா

‘மர்தானி’ - வக்கிர ஆண்களுக்கு பளார் பளார்!

பொன்.விமலா

Published:Updated:

'விபசாரத்துக்காக குழந்தைகள் கடத்தப் படுவதில் உலகத்தின் மையமாக இருக்கிறது இந்தியா. ஒவ்வோர் ஆண்டும், 40 ஆயிரம் குழந்தைகள் இதற்காகவே கடத்தப் படுகிறார்கள். 8 நிமிடத்துக்கு ஒரு பெண் குழந்தை காணாமல் போகிறாள்...'

- கேட்கும்போதே நடுநடுங்க வைக்கும் இந்த நிஜ புள்ளிவிவரங்களைக் கருவாக எடுத்துக்கொண்டு, நிழலில் மிரள வைக்கிறது 'மர்தானி’ எனும் ஹிந்தி திரைப்படம். ஆகஸ்ட் 22-ல் வெளியாகியுள்ள இந்தப் படத்தின் முதல் காட்சியின்போதே சென்னையில் பெண்களின் கூட்டம் அதிகமாக இருந்தது ஆச்சர்யமே!

கதாநாயகிகளுக்கான படங்களின் வரிசை யில் அழுத்தமான சமூக பிரதிபலிப்பு கொண்ட தாக வந்திருக்கும் இப்படத்தில், தன்னுடைய முத்திரையைப் பலமாகப் பதித்திருக்கிறார் ராணி முகர்ஜி. ஆக்ஷன் காட்சிகள் ஒவ்வொன் றிலும் எதிரிகளை விளாசி எடுக்கும் ராணிக்கு, ராயல் சல்யூட் வைக்கலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சரி, திரைக்கதைக்குள் புகுவோம்...

‘மர்தானி’ - வக்கிர ஆண்களுக்கு பளார் பளார்!

பாலியல் தொழிலுக்குப் புகழ்பெற்ற மும்பையில், இளம்பெண்களையும் குழந்தை களையும் கடத்தி, அவர்களை சித்ரவதைக்கு உள்ளாக்கி பாலியல் தொழிலுக்கு உட்படுத்துவது, நட்சத்திர ஹோட்டல்களில் நடனப் பெண்களாக, பணிப்பெண்களாக உலாவவிடுவது என தீவிரமாக செயல்படுகிறது ஒரு மாஃபியா கும்பல். க்ரைம் பிராஞ்ச் போலீஸ் சீனியர் இன்ஸ்பெக்டரான ஷிவானி (ராணி முகர்ஜி), அனாதைக் குழந்தைகள் மீதும் ஆதரவற்ற பெண்கள் மீதும் இயல்பாகவே அன்பு காட்டுபவர். இந்த வகையில் அநாதையான ப்யாரி எனும் பெண்ணுடன் அறிமுகம் ஏற்படுகிறது. இடையில் அந்தப் பெண் திடீரென காணாமல் போக... தேடுதலில் குதிக்கும்போதுதான் அந்தக் கும்பலிடம் அவள் சிக்கியிருப்பது தெரிகிறது.

ப்யாரியை பாலியல் தொழிலுக்கு தள்ளிவிட அந்தக் கும்பலின் தலைவன் மேற்கொள்ளும் கொடூர கணங்கள், நெஞ்சை உறைய வைக்கின்றன. ப்யாரியோடு சேர்த்து இன்னும் பல பெண்களும் அங்கே கொண்டு வரப்படுகிறார்கள். புதிய இடத்துக்கு வந்த மிரட்சி அந்தப் பெண்களின் கண்களிலும் உடல் நடுக்கத்திலும் தெரிகிறது. ஒவ்வொரு பெண்ணையும் சில ஆண்களின் முன்னிலை யில் ஆடையை கழற்றச் சொல்கிறார்கள். ஆடையை கழற்ற மறுக்கும் பெண்களை அடித்துத் துன்புறுத்தி கழற்ற வைக்கிறார்கள். இவர்களில் ஒருத்தி வெகுண்டு எழுந்து காபி சாஸரை உடைத்து, அங்குள்ளவர்களைத் தாக்கி, தன் மணிக்கட்டை அறுத்துக்கொள்ளப் போவதாக மிரட்டி, தன்னை தற்காத்துக்கொள்ள முயல்கிறாள். ஆனால், அவளிடம் ஆசை வார்த்தைகள் கூறி, தன் கட்டுக்குள் கொண்டு வருகிறான் தலைவன்.

மந்தையில் சிக்கிய ஆடுகளாக, முழுமை யாக நிர்வாணப்படுத்தி, வரிசையாக நிற்க வைத்து, பைப் மூலம் தண்ணீர் அடித்து, கவர்ச்சியான ஆடைகளைக் கொடுத்து... பாலியல் தொழிலுக்குக் கட்டாயப்படுத்து கிறார்கள். கொத்தடிமையாகச் சிக்கிக்  கொண்டுவிட்ட பெண்கள் ஒவ்வொருவரும் தப்பிக்க வழியில்லாமல் சிக்கித் திணறும் காட்சிகள், குலைநடுங்க வைக்கின்றன.

‘மர்தானி’ - வக்கிர ஆண்களுக்கு பளார் பளார்!

'எங்க வீட்டுக்குப் பக்கத்துல அடர்ந்த காடு இருந்துச்சு. அங்க தாக்க வர்ற நாயைப் பிடிக்கணும்னா, நாயா மாறணும்; எலியைப் பிடிக்கணும்னா, எலியா மாறணும்; புலியைப் பிடிக்கணும்னா, புலியா மாறணும்! இதுபோல விஷப்பாம்பைப் பிடிக்கணும்னா, பாம்பா மாறணும்னு ஒரு கதை உண்டு. பெண்களை வதைக்கும் அந்தப் பாம்பைப் பிடிக்க, நான் பாம்பா மாறுவேன்’னு ஷிவானி விடுக்கும் சவாலுக்கு... கைதட்டல்கள் பறக்கின்றன.

கடத்தல் கும்பலின் தலைவனை ஷிவானி எப்படி பிடிக்கிறார்... பாதிக்கப்பட்டப் பெண்கள், அவனை எப்படி துவம்சம் செய்கிறார்கள்... என்பதுதான் மீதிக்கதை. 'இந்திய சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளில் புகுந்து தப்பிக்க ஆயிரம் வழிகள் இருக்கு’ என கடத்தல் கும்பல் தலைவன் கர்ஜிக்கும்போது.... 'அதே இந்திய சட்டத்தில், ஒருத்தனை ஒருத் தன் கொலை பண்ணினாதான் அது கொலை. நிறைய பேர் சேர்ந்து பண்ணினா... அதுக்குப் பேரு தண்டனை’ பதிலடி கொடுப்பது செம பஞ்ச்! ராணி முகர்ஜியின் சண்டைக் காட்சிகள், கருத்து சொல்லும் படம் என்பதை மறக்க வைத்து, கமர்ஷியல் கிக் ஏற்றுகின்றன.

'மர்தானி' எனும் இந்தி வார்த்தைக்கு ஆண்மை என்று பொருள். 'ஆண்மைத்தனம் என்பது, பெண்ணை சித்ரவதை செய்து, அவளுடைய பெண்மையை அடைவதில் இல்லை' என்கிற கருத்தை வக்கிர ஆண்களின் கன்னத்தில் அறைந்து சொல்கிறது படம். பெண்கள் மென்மையானவர்கள். ஆண்கள், அவர்களின் மனதைத் தொடும்போது, தங்கள் மனதில் வைத்துக் கொண்டாடுவார்கள். சீண்டிப் பார்க்க முயற்சித்தால் தீயாக சுடுவார்கள் என்பதே படம் உணர்த்தும் பாடம்.

‘மர்தானி’ - வக்கிர ஆண்களுக்கு பளார் பளார்!

பளார் விட்ட ராணி முகர்ஜி!

படம் குறித்து பேசும் ராணி முகர்ஜி, ''பெண், வலிமையானவள். ஆனாலும், அப்பா, கணவர், சகோதரர் என ஒவ்வொரு கட்டத்திலும், ஆணின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகிறாள். தங்களுக்கான உரிமைகளுக்காக பெண்கள் எப்போது குரல் கொடுக்கிறார்களோ, அப்போதுதான் பெண்களின் வலிமையை ஆண்கள் உணர்வார்கள். 'மர்தானி’ என் நிஜ வாழ்க்கையின் பிரதிபலிப்பு. பள்ளி, கல்லூரி காலங்களில் என்னை ஈவ் டீசிங் செய்த ஆண்களை பளார் என அறைந்திருக்கிறேன். அந்த இளம் வயது கோபத்தைத் தான் படத்தில் காட்டியிருப்பேன்.

இது வெறுமனே கமர்ஷியல் படம் மட்டுமல்ல... சமூகத்துக்குக் கருத்து சொல்லும் பாடம். பொதுவாக ஒரு ஆக்ஷன் படம் என்று எடுத்துக்கொண்டால், ஹீரோதான் எல்லோரையும் அடிப்பார். ஹீரோயின், யாரையாவது அடித்தால், காமெடியாகத்தான் பார்ப்பார்கள். இதை முறியடிக்க வேண்டும். இந்த படத்துக்காக பெண் போலீஸாரின் பாடி லாங்குவேஜ் எல்லாவற்றையும் படித்தேன். ஜிம்மில் நிறைய வொர்க்அவுட் செய்தேன்.

படத்தில், ஒரு பெண்ணை காப்பாற்றுவதற்காக, வக்கிரமான ஆண்களை நான் களை எடுப்பேன். ஆனால், நிஜத்தில் ஒவ்வொரு பெண்ணுக்கும் பாதுகாப்பு கொடுக்க எத்தனை போலீஸை உருவாக்க முடியும். அந்த வகையில் பார்க்கும்போது ஒவ்வொரு பெண்ணுமே தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இது விழிக்க வேண்டிய சரியான தருணம். இதுதான் இந்தப் படம் சொல்லும் சமூகக் கருத்து. இதில் நடித்ததை எண்ணி, ஒரு பெண்ணாக பெருமைப்படுகிறேன்!'' என்கிறார்.

உணர்ச்சி பொங்குகிறது ராணி முகர்ஜியின் குரலில்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism