Published:Updated:

‘திருஷ்யம்’... ஒரு தாயின் டைரக்ஷன்!

பொன்.விமலா

‘திருஷ்யம்’... ஒரு தாயின் டைரக்ஷன்!

பொன்.விமலா

Published:Updated:

'திருஷ்யம்’... மலையாளம், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளிலும் ஹிட் அடித்து... ஒட்டுமொத்த திரையுலகினரையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்திருக்கும் 'திக்திக்’ த்ரில்லர்! ஏழு மாதங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியான இப்படத்தில் மோகன்லால் - மீனா நடித்திருந்தனர். பிறகு, 'திருஷ்யா’ என்ற பெயரில் ரவிச்சந்திரன் - நவ்யா நாயர் நடிப்பில் கன்னடத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம், தற்போது, ஸ்ரீப்ரியாவின் இயக்கத்தில் தெலுங்கில் வெங்கடேஷ் - மீனா நடிப்பில் திருஷ்யம் என்கிற பெயரிலேயே வெளியாகி... ஹேட்ரிக் வெற்றியைப் பெற்றிருக்கிறது! சென்னையிலும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படம், மோகன்லால், ரவிச்சந்திரன், வெங்கடேஷ் மூவரின் திரை வாழ்க்கையிலும் திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறது!

வரவுக்கேற்ற செலவு செய்து ஆனந்தமாக வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு குடும்பம், எதிர்பாராதவிதமாக காவல்துறையிடம் சிக்கி சின்னாபின்னமாக, எப்படி புத்திசாலித்தனமாக மீள்கிறது என்பதுதான் படத்தின் ஒரு வரிக் கதை!

பரந்த அழகான தோட்டத்துக்கு நடுவில் வீடு. அடிப்படையில் விவசாயியாக இருந்தாலும், கேபிள் டி.வி நிறுவனம் நடத்துகிறார் வெங்கடேஷ். இவரின் மனைவி மீனா. இவர்களுக்கு பள்ளி செல்லும் வயதில் இரு மகள்கள். போலீஸ் ஐ.ஜி-யாக நதியா. பள்ளிப்படிப்பைக்கூட முழுமையாக முடிக்காத வெங்கடேஷ், தன் சினிமா ஆர்வத்தை மெருகேற்றிக்கொள்ள, தான் நடத்தி வரும் கேபிள் அலுவலகத்தில் பன்மொழி திரைப்படங்கள் பார்ப்பதில் பெரும்பான்மையான நேரத்தை செலவிட்டுக்கொண்டிருப்பார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘திருஷ்யம்’... ஒரு தாயின் டைரக்ஷன்!

ப்ளஸ் டூ படிக்கும் மூத்த மகள், ஒரு கேம்ப் செல்லும்போது, பாத்ரூமில் மறைத்து வைக்கப்பட்ட செல்போன் கேமராவில் படம் பிடிக்கப்படுகிறார். இதை வைத்தே தன் ஆசைக்கு இணங்குமாறு மிரட்டுகிறான்... படம் பிடித்தவன். இது, அம்மா மீனாவுக்கு தெரியவர... அதன் பின் நடக்கும் சம்பவங்களின் தொடர்ச்சியாக அவன் கொல்லப்படுகிறான். அவனுடைய அம்மா... ஐ.ஜி-யான நதியா. கொலைகாரர்களைக் கண்டுபிடிக்க எப்படியெல்   லாம் நதியா போராடுகிறார், இந்தக் குற்றத்தில் சிக்கிய வெங்கடேஷ் குடும்பம் எப்படி புத்திசாலித்தனமாக மீண்டு வருகிறது என்பதை துளிகூட ஆபாசம் இல்லாமல், திகில் குறையாமல் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஸ்ரீப்ரியா.

'சைபர் க்ரைம்' என்று தற்போது பெரிதாகப் பேசப்படும் குற்றங்களில் ஒன்றான செல்போனில் ஆபாச படம் பிடிப்பது... எப்படி ஒரு குடும்பத்தையே புரட்டிப் போடும் என்பதற்கு இந்தப் படம் மிகச்சிறந்த பாடம். உற்று நோக்கினால், சைபர்   க்ரைமில் சிக்காமல் இருக்கவும், சிக்கினாலும் பெற்றோரிடம் மறைக்காமல் வெளிப்படையாக இருக்க வேண்டியதன் அவசியத் தையும் படம் நன்றாகப் புரிய வைக்கிறது.

‘திருஷ்யம்’... ஒரு தாயின் டைரக்ஷன்!

படத்தின் வெற்றியில் மகிழ்ந் திருக்கும் இயக்குநர் ஸ்ரீப்ரியாவைச் சந்தித்தோம். ''நமக்கே தெரியாம நம்மைப் படம் பிடித்து, பெண்களை அச்சுறுத்தும் குற்றங்கள் நிறைய நடந்துட்டே இருக்கு. இந்தக் குற்றங்களுக்கு முதன்மையான தீர்வு குடும்பங்கள்ல இருந்து ஆரம்பிக்கணும். படத்தில் மீனாவின் பெண், தனக்கு நேர்ந்த சிக்கலை அம்மாவிடம் சொல்லாம இருந்திருந்தா, அவளுக்கு பெரிய அளவிலான பாதிப்புகள் வந்திருக்கும். அதேபோல நதியாவின் மகன், பெற்றோரின் அரவணைப்பில் முழுமையா இருந்திருந்தா, தன் தாய் வயதுள்ள ஒரு பெண்கிட்டயும் தவறா நடக்க முயற்சி செய்திருக்க மாட்டான். இதுதான் இந்தப் படம் சொல்ற மெசேஜ்.

பெற்றவர்களிடம் குழந்தைகளுக்கு பிரைவஸி தேவையில்லை. பெற்றவர்களிடம் இருந்து விலகி தனிமையைத் தேடும் குழந்தைகள்தான் தவறுகளைச் செய்கிறார்கள். பெற்றவர்களிடம் வெளிப்படையாக எதையும் மறைக்காத குழந்தைகள் சிக்கல்களில் சிக்கினாலும் மீள்கிறார்கள். இந்தக் கருத்தை சொல்ற படம், முன்னெச்சரிக்கை இல்லாட்டி ஒரு குடும்பம் எப்படியெல்லாம் கஷ்டப்படும்ங்கிறதை புரியவைக்கும்'' என்று சொன்ன ஸ்ரீப்ரியா, ஒரு இயக்குநராக தான் உணர்ந்த விஷயங்களைப் பேசினார்.

''ஒரு படத்தை நேரடியா எடுக்குறதவிட, ரீ-மேக் பண்றதுதான் ரொம்பக் கஷ்டம். மலையாளத்துல நல்லா ஓடின படம்ங்கிறதால கவனமா கையாளுற பொறுப்பை நல்லா உணர்ந்தேன். இந்தியாவுல குடும்பப் பிணைப்புங்கிறது எல்லா மாநிலத்திலும் ஒண்ணுதான். ஆனா, கலாசாரம் வேற வேற. மலையாளத்துல மோகன்லால் கிறிஸ்தவரா நடிச்சிருப்பார். தெலுங்குல வெங்கடேஷ் இந்துவா நடிச்சிருக்கார். அங்க காலையில டிபன் குழாய்புட்டு... தெலுங்கு தேசத்துல இட்லி. இப்படி கதைக்களம் மொத்தமும் வேறயாத்தான் இருக்கும் தெலுங்குல.

இந்தப் படத்தைத் தயாரிச்ச சுரேஷ் புரொடக்ஷனுக்கு இது 50-வது படம். அவங்களோட பேனர்ல எனக்கு முதல் படம். அவங்களுக்கு மட்டுமில்ல... இந்தப் படத்துல நடிச்சிருக்கிற நிறைய பேரோட திரையுலக வாழ்க்கையில முதல் பெண் இயக்குர் நான்'' என்று சிரித்தபடியே சொன்னவர்,

''என் மகளுக்கு 20 வயசு, பையனுக்கு 16 வயசு. இந்த படத்தை எடுக்கும்போது ஒரு டைரக்டரா இல்லாம... முழுக்க முழுக்க ஒரு தாயா இருந்துதான் இயக்கினேன்'' என்று சொல்லி நெகிழ்ந்தார் ஸ்ரீப்ரியா.

''தமிழ்லயும் நானே நடிக்கணும்!''

டம் குறித்து மீனாவிடம் பேசியபோது, ''மலையாளத்தில் இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைச்சு, படமும் சூப்பர் ஹிட். கன்னடத்துல கேட்டப்ப... டைம் சரிப்பட்டுவராம போனதால நடிக்க முடியல. தெலுங்குல அழைப்பு வந்தப்ப டைம் கிடைச்சு ஒப்புக்கிட்டேன். பெண் இயக்குநர்கிட்ட நான் நடிச்ச முதல் படம் இதுதான். ஸ்ரீப்ரியா மேடம் ரொம்ப ஃப்ரெண்ட்லி. படத்துல நடிக்கும்போது

‘திருஷ்யம்’... ஒரு தாயின் டைரக்ஷன்!

அது த்ரில்லர் கம் ஃபேமிலி மூவியா இருக்கும்னு தெரியும். ஆனா, இந்தப் படம் தனித்தனியா மெசேஜ் சொல்லியிருக்கிறதை படத்தைப் பார்த்த ஒவ்வொருத்தரும் சொல்லும்போது பெருமையா இருக்கு. தமிழ்ல இந்தப் படத்துல கமல் சார் நடிக்கப் போறதா சொல்றாங்க ('பாபநாசம்’ என்ற பெயரில் கமல்ஹாசன் - கவுதமி நடிப்பில் இந்தப் படம் தமிழில் தயாராகப் போகிறது என்று தகவல்). இதுலயும் வாய்ப்பு கிடைச்சா சந்தோஷப்படுவேன்!'' என்றார்.

''பெற்றோர்களும் பார்க்க வேண்டிய படம்!''

டிகை நதியா பேசும்போது, ''இந்தப் படத்துல நடிச்சது பெருமைக்குரிய விஷயம். கண்டிப்பான போலீஸ் அதிகாரியா இருந்தாலும் கண்டிப்பான அம்மாவா இல்லாம போனதுதான் பிரச்னை. ஒரு தாய், தன் மகனை சரியா அரவணைக்காம போனா, அவன் மத்த பெண்களை உதாசீனப்படுத்துவான்னு சொல்லுது படம். பெற்ற பிள்ளை களை அளவுக்கு அதிமான இடைவெளிகள் கொடுத்து பிரியறதும்கூட இந்த மாதிரி சம்பவங்கள் நடக்கக் காரணம் ஆயிடுது. பாதிக்கப்பட்ட பொண்ணுக்காக பேசினாலும், இங்க மகன்கள் சரியா இருந்தா பிரச்னையே இல்ல. இந்தப் படத்தை மகன்கள் மட்டுமில்ல, மகன்களைப் பெற்றவர்களும் பார்க்கணும்!'' என்றார் அழுத்தம் கொடுத்து.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism