சத்தியப்பாதையில்..! - 11

புட்டபர்த்திக்கு என் சங்கல்பமிருந் தால் மட்டுமே வரமுடியும் என்று ஸ்வாமி சொல்வது பரமசத்யம்! அலுவலகத்தில் விடுமுறை கிடைத்திருக்கிறது, வண்டி தயாராயிருக்கிறது என்றெல்லாம் நம் வசதிக்கும் நினைப்பிற்கும் ஏற்றபடி புறப்படுவது என்பது புட்டபர்த்தி பயணத்தைப் பொறுத்தவரையில் செல்லுபடி யாவதில்லை. சாயி பக்தர்களுக்கு மிக நன்றாகத் தெரிந்த உண்மை இது. ஸ்வாமியை தரிசிக்க வேண்டும் என்ற தீவிரமான நினைப் பும், தவிப்பும் ஸ்வாமியிடம் மனமுருகிப் பிரார்த்திப்பதுமே இந்த தெய்விகப் பயணத்திற்கு சுமுகமாய் வழிவகுக்கும்.

ஸ்வாமியை அவருடைய பிறப்பிடமாகிய புட்டபர்த்தியில் போய் தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் வளர்ந்து தீவிரப் பட்ட சமயத்தில் நல்ல கனவொன்று வந்தது. வெண்ணிற அங்கியில் அபயஹஸ்தம் காட்டியபடி ஸ்வாமி வந்து நிற்கிறார். நான் பாத நமஸ்காரம் எடுத்துக்கொள்கிறேன். அதன்பிறகு ஒரு கோயில் பயணத்திற்கு தயாராகிறேன். இந்த கனவு விரைவில் பலித்தது. நல்லதொரு சாயி சகோதரியோடு புட்டபர்த்திக்குச் சென்ற அந்த முதல் பயணம் மகிழ்ச்சியும் பரபரப்பும் கலந்ததாக இருந்தது. இப்போது அந்த சாயி சகோதரி வெளிநாட்டிலிருக்கிறார். தொடர்பில் இல்லையென்றாலும் அவரை நன்றியோடு நினைவுகூர்கிறேன். இருள்பிரியாத விடி யலில், விர்ரென்று வந்து முகத்தில் மோதும் குளிர்காற்றை நுகர்ந்தபடி சென்னையிலிருந்து புறப்பட்டோம். ஸ்வாமி தந்த அனுபவங்களைப் பேசியபடி, சாயி பஜன்களைப் பாடியபடி, இனிய வழியிடைக் காட்சிகளை வேடிக்கை பார்த்தபடி... ஸ்வாமியிடம் போகிறோம் என்ற பரபரப்போடு சென்ற அந்தப் பயணம் மிக இனியதும் தூயதுமான தெய்விகப் பயணம். சித்தூர், மதனபள்ளி, பலம்நேர், கதிரி, நல்லமடா, புக்க பட்டிணம் என்று வண்டி விரைந்துகொண்டிருக்க, மனம் வானம்பாடியாய் இறக்கை கட்டிப் பறந்துகொண்டிருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எங்களுக்குத் தெரிந்த அரைகுறை தெலுங்கில் வழிகேட்டுக்கொண்டே சென் றோம். புட்டபர்த்திக்கு, 'எட்ல போவால...?’ (எப்படிப் போவது) என்று கேட்டு, அவர்கள் தெலுங்கில் நீளமாய்ப் பதில் சொல்ல... புரிந்தது போன்ற அசட்டுச் சிரிப்போடு தலையாட்டிவிட்டு, கொஞ்சதூரம் சென்று, இன்னோரிடத்தில் வழி கேட்டபடி சென்றோம். வழியில் காடுமேடுகள், வயல் வெளிகள், பொட்டல்காடுகள், தடதடக்கும் சாலைகள், சுட்டெரிக்கும் வெயில், தெலுங்கு வழிகாட்டிப் பலகைகள், குக்கிராமங்களைக் கடந்தபடி சென்றோம். சித்ராவதி ஆறு வழியாக ஆஞ்சநேயர் கோயிலுக்குப் போய் இடதுபக்கமாய்ச் செல்ல சாயிகோபுரம் காட்சியானது! நெடுநேரப் பயணத்தின் தளர்ச்சி போய் மனங்குளிர்ந்து சிலிர்க்க பொன்னுலகமாய்ப் பிரகாசித்தது புட்ட பர்த்தியின் பிரசாந்தி நிலையம்!

அது பூலோக வைகுண்டம்! கைலாசம்! கற்பக விருட்சம், காமதேனு போன்ற தேவலோக விசேஷங்களையெல்லாம் உடனழைத்துக் கொண்டு விநாயகரிலிருந்து அத்தனை தெய்வங்களும் வந்து, ஸ்வாமி யின் இருப்பிடத்தைச் சுற்றி அமர்ந்து அருள்பாலிக்கும் தகத்தகாயமானதொரு தெய்வலோகமே பிரசாந்தி நிலையம்! அப்பப்பா... மயன் நிர்மாணித்த மாடமாளிகைகள், கூடகோபுரங்கள் என்று புராணங்களில் படித்ததை நேரிலே காணும் அற்புதத்தை அனுபவித்தபடியேயிருந்தேன். பிரமாண்டமான தெய்விகப் பேரழகோடு பகவான் சத்யசாயி பாபாவால் அதியற்புதமாக உருவாக்கப்பட்டிருக்கும் சாயி சாம்ராஜ்ஜியம் அது!

சத்தியப்பாதையில்..! - 11

மந்திருக்கு (பிரசாந்தி நிலையம்) உள்ளே ஸ்வாமி ஸ்தாபிதம் செய்த கோயில்களில் பிரசாந்தி விநாயகர், சுப்ரமணியர், ராமர் சீதை லட்சுமண ஆஞ்சநேயர், காயத்ரி மாதா, மகாலட்சுமி... சந்நிதிகளில் வணங்கித் தொழுதோம். மந்திருக்கு வெளியே சென்று வேணுகோபால ஸ்வாமி... சத்யம்மா கோயில்... ஆஞ்சநேயர் கோயில்... தியான சிவன் சந்நிதி... ஸ்வாமியின் பெற்றோரான, ஈசுவரம்மா பெத்தவெங்கப்பராஜூ சமாதி என்று அத்தனை கோயில்களுக்கும் சென்று வணங்கி வலம் வந்தோம். மகளிர் உணவகத்திற்கு எதிரே உள்ள வேப்ப மரத்திற்குப் பக்கத்திலிருக்கும் மகளிருக்கான தனி வழியில் சென்று சாயி குல்வந்த் ஹாலுக்குப் போய் அமர்ந்தோம். 40,000 பேருக்கு மேல் அமர்ந்திருக்கும் மிக விஸ்தாரமான 'குல்வந்த்’ ஹாலின் அழகும் கம்பீரமும் சொல்லி மாளாது. ஹாலிலுள்ள பலவிதானங்களிலும் உள்ள 1,222 சதுரங்களில் தங்கரேக்குகள் பதிக்கப்பட்டு ஒளிர்வதும்... ஹால் முழுவதிலும் தூண்களிலும் மைய மேடையிலும் தொங்கும் விளக்குகள் சரவிளக்குகளால் நிறைந்து ஜொலிப்பதும்... பூவலங்காரத்தால் பொலிவதுமான அந்தப் பேரழகை என்னென்று சொல்வேன்?! அந்த பக்தர் கூட்டத்தோடு சேர்ந்து பஜன் பாடல்களைப் பாடியபடியே ஸ்வாமி தன் இருப்பிடத்திலிருந்து வரும் திசையைப் பார்த்தபடியே தெய்விக அதிர்வுகளால் நிறைந்த சாயி குல்வந்த் ஹாலில், ஸ்வாமிக் காகக் காத்திருக்கும் அனுபவம் இருக் கிறதே, அதை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது... வந்து பார்த்து அனுபவிக்க வேண்டும்.

பஜன் நடந்து கொண்டிருக்கும்போதே, மிக ரம்மியமாய் காற்றில் மிதந்து வரத் தொடங்கியது புல்லாங்குழலிசை! ஸ்வாமி வருகிறார் என்று புரிந்ததும் பக்தர்கள் மத்தியில் பரபரப்பு, மகிழ்ச்சிப் பரவசம். ஸ்வாமி ஆரஞ்சு வண்ண அங்கியில் காற்றில் மிதந்து வருவதைப் போல நடந்து வந்தார். 'ஸ்வாமி வருகிறார்.. பிரார்த்தனை செய்துகொள்’ என்று என் காதில் கிசுகிசுத்தார் சாயி சகோதரி. மனமுருகிப் பிரார்த்தனை செய்துகொண்டேன். ஆனால், ஏனோ ஸ்வாமியைப் பார்த்ததும் மனதில் ஓர் ஏமாற்றம் வந்தது. முன்பு நான் தரிசித்த ஸ்வாமிதானா இவர்? ஏன் இப்படி மெலிந்து போய் கோட்டோவியம் போல் தெரிகிறார்? கோடிக்கணக்கான பக்தர்களுக்குப் பாதுகாவல னாக, பரம்பொருளாக இருப்பது இவர்தானா? சர்வவல்லமையுள்ள சாயிபாபாவா இவர்? மனம் கேள்விகளோடு அலைமோதியது 'உருவமாக மட்டும் என்னைக் காண வேண்டாம்’ என்று ஸ்வாமி அடிக்கடி சொல்வதுண்டு. இருந்தாலும் மனம் சமாதானப்படவில்லை. ஸ்வாமியின் தோற்றம் எனக்கு ஏமாற்றம் தந்ததை சாயி சகோதரியிடம் சொன்னபோது...

சத்தியப்பாதையில்..! - 11

அவர் தெய்வம்... இப்படியெல்லாம் நீ நினைக்கக்கூடாது' என்றார்.

அடுத்தநாள் ஊருக்குப் புறப்படுவதற்கு முன் காலை தரிசனத்திற்காகக் காத்திருந் தோம். 'ஸ்வாமி, இனி எப்போது வரப் போகிறேனோ... ஸ்வாமி தரிசனம் எனக்கு திருப்தியாய் இருக்கட்டும்’ என்று பிரார்த்தித்தபடியே இருந்தேன். தெய்வ வருகைக்குக் கட்டியம் கூறும் தேவ கீதம் ஒலிக்கத் தொடங்கியது. அதோ... ஸ்வாமி வந்து கொண்டிருந்தார். என்ன ஆச்சர்யம்! ஸ்வாமி, சில வருடங்களுக்கு முன்பு நான் பார்த்த ஸ்வாமியாகவே இப்போது தெரிந்தார்! இது என்ன சித்திர விசித்திரம்?! சத்தியமாய் இது நேற்றைய தோற்றமில்லை. பழையபடிக்கு வனப்பும் கம்பீரமும் கொண்ட சர்வவல்லமையுள்ள ஆண்டவனாய் ஆரஞ்சு அங்கி பளீரிட அபயஹஸ்தம் கட்டியபடி நடந்து வந்தார்! இது நிஜமா? கனவா? மாயமா? 'என் தரிசனம் திருப்திதானா உனக்கு?’ என்று ஸ்வாமி கேட்பதைப் போலிருந்தது. இந்த மாற்றம் சாயி சகோதரிக்குப் புலப்படவில்லை. ஸ்வாமி எல்லாம்வல்ல, எதையும் மாற்றவல்ல ஆண்டவன் என்பதை உணர்ந்தேன்... மெய்மறந்தேன். மீண்டும் அழைக்கும்படியாய் ஸ்வாமியிடம் பிரார்த்தனை செய்தபடி புறப்பட மனமில்லாமல் புட்டபர்த்தியிலிருந்து புறப்பட்டோம். அப்பாவோடும், பிள்ளைகளோடும் சென்ற அடுத்து வந்த பயணங்களோ ஆனந்தமானவை!

ஜெய் சாயிராம்!

தொடரும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism