Published:Updated:

ரத்ததானம்... நெகிழவைக்கும் ஒரு கூட்டுக் குடும்பம்!

ம.மாரிமுத்து, படம்: வீ.சக்தி அருணகிரி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

''எங்க கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர், 15 வருஷமா ரத்ததானம் செய்துட்டு வர்றோம்னு சொல்றதுல பெருமை, சந்தோஷத்தைவிட, நிறைவு நிறையக் கிடைக்குது!''

தேனி மாவட்டம், போடியில் உள்ள மாரியப்பனின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மொத்தமாகச் சேர்ந்து சொல்வதைக் கேட்க, அத்தனை அழகாக இருக்கிறது!

குடும்பத்தின் மூத்த மருமகளும், மாரியப்பனின் அண்ணியுமான சரளா தேவிக்கு, பேச்செல்லாம் உற்சாகம். ''கல்யாணத்துக்கு முன்ன, ரத்ததானத்தோட சிறப்பு பத்தி எனக்கு எதுவும் தெரியாது. ஒருமுறை என் மாமியாருக்கு உடம்பு முடியாம போனப்போ, ரத்தம் ஏத்தணும்னு சொல்லிட்டாங்க. எங்க வீட்டுல எல்லாரும் தவிச்சுத் தேட, ஒரு வழியா குருதிக் கொடையாளி ஒருத்தர் கிடைச்சப்போ, எங்களுக்கெல்லாம் கடவுளைப் பார்த்த மாதிரி இருந்துச்சு. இந்த சம்பவத்துக்குப் பிறகுதான், வீட்டுல எல்லாரும் ரத்தம் கொடுக்கிற பழக்கத்துக்கு வந்தோம்...'

ரத்ததானம், குடும்ப சேவையாக மாறியதற்கான முடிச்சு விழுந்த நிமிடத்தைப் பகிர்ந்த சரளாதேவி, தொடர்ந்தார்.

”இதுக்குப் பிறகு, ஒரு பொண்ணுக்கு பிரசவ நேரத்துல அவசரமா ரத்தம் ஏத்தணும்னு சொல்ல, நான் போய் கொடுத்துட்டு வந்தேன். அதுதான் என்னோட முதல் அனுபவம். அவங்களோட அம்மா, கணவர் எல்லாம் கண்ணுல தண்ணியோட நன்றி சொன்னப்போ எனக்கு ஏற்பட்ட உணர்வை வார்த்தைகள்ல சொல்லத் தெரியல. அதிலிருந்து சீரான இடைவெளியில் ரத்த தானம் பண்ணிட்டிருக்கேன். இப்பவும் ரோட்டுல போகும்போது, 'அன்னிக்கு எங்களுக்கு ரத்தம் கொடுத்தீங்களே’னு யாராவது நன்றியோட வந்து பேசும்போது, சந்தோஷமா இருக்கும்!'' என்று குரலில் உற்சாகம் கூட்டிக்கொள்கிறார் சரளாதேவி.

ரத்ததானம்... நெகிழவைக்கும் ஒரு கூட்டுக் குடும்பம்!

மாரியப்பனின் மனைவி பாலசம்பூர்ணம் பேசும்போது, ''ஒருமுறை நடுராத்திரி பன்னி ரெண்டே முக்கால் மணிக்கு, போடியில ஒரு குழந்தைக்கு ரத்தம் தேவைனு தகவல் வந்துச்சு. உடனே கணவருடன் கிளம்பிபோய் ரத்தம் கொடுத்தேன். 'எங்க குழந்தை உயிர் பிழைக்கக் காரணமே நீங்கதான்’னு அந்த அம்மா என் கையைப் பிடிச்சுகிட்டு நன்றி சொன்னதைவிட சந்தோஷமான தருணத்தை இதுவரை வாழ்க்கையில் கடக்கல! 'ரத்ததானம்ங்கிறது, ஓர் உயிருக்கு செய்ற உதவி’னு சொல்லிச் சொல்லியே வளர்க்கிறதால, எங்க பிள்ளைங்க பெரியவங்களானதும் தாங்களா முன் வந்து குருதிக் கொடையாளி ஆகிடுறாங்க' என்ற வர், "18 வயதில் இருந்தே ரத்ததானம் செய்ய ஆரம்பிக்கலாம். உடம்போட ஆரோக்கி யத்தைப் பொறுத்து மூணு மாசத்துக்கு ஒரு தடவை ரத்ததானம் தரலாம். இப்படி தானம் கொடுக்கிறதால நம்ம உடலுக்கு எந்தப் பிரச்னையும் வராது. சொல்லப் போனா... நம்ம உடம்புல புது ரத்தம் ஊறி, புது உற்சாகத்தையும் கொடுக்கும்'' என்கிற தகவல்களையும் பகிர்ந்தார்.

பெருமையான குரலில் பேச்சைத் துவக்கிய மாரியப்பனின் அண்ணன் மகள் ஜெயராணி, ''ஒருமுறை எங்கப்பா ரத்ததானம் செய்தப்போ, வயசான ஒரு அம்மா ஓடி வந்து எங்க அப்பாவோட கால்ல விழுந்து நன்றி சொன்னாங்களாம். 'எத்தனையோ சொந்தக்காரங்க ஆஸ்பத்திரிக்கு வந்திருந் தாங்க. ரத்தம் வேணும்னு சொன்னதும், எல்லாரும் கிளம்பிட்டாங்க. ஆனா, எங்க பேர், ஊருகூட தெரியாத நீங்க கொடுத்த ரத்தத்தாலதான் என் மகன் உயிர் பொழச்சிருக்கான். உங்க குடும்பம் நல்லாயிருக்கணும்’னு வாழ்த்தினாங்களாம். இப்படி எத்தனையோ வாழ்த்துகள் எங்க குடும்பத்துக்கு கிடைச்சுட்டே இருக்கு. நான் இதுவரை 14 தடவை ரத்ததானம் செஞ்சுருக்கேன், அப்பா 30 தடவை, பெரியப்பாவும் சித்தப்பாவும் 40 தடவை, சின்ன சித்தப்பா 30 தடவைனு அது பெரிய லிஸ்ட். யாருக்காவது ரத்தம் தேவைனா... எங்களுக்குத் தகவல் சொல்லுங்க...'' என்கிறார் மகிழ்ச்சி பொங்க!

மகிழ்வித்து மகிழ்வது போல, இது வாழ வைத்து வாழும் குடும்பம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு