ந்தோஷம், துக்கம், பரவசம், உற்சாகம் என்று எல்லா உணர்வுகளையும் உறைந்த காட்சியாகச் சொல்வது, புகைப்படக் கலை. இந்தக் கலை மீது ஆர்வம், பிரியம் இல்லாதவர்கள் மிகமிகக் குறைவு. சொல்லப்போனால், சின்ன வயதிலிருந்தே, மூன்றாவது கண் எனப்படும் கேமரா மீது அனைவருக்குமே ஒரு கண் இருக்கத்தான் செய்யும். கால ஓட்டத்தில் பல்வேறு துறைகளில் போய் செட்டில் ஆகிவிட்டாலும்... கேமரா மீதான ஏக்கம் அப்படியேதான் உள் மனதில் படிந்திருக்கும். அவ்வப்போது எட்டிப்பார்க்கும் இந்த கேமரா காதலோடு, வெவ்வேறு பணிகளில் பயணித்துக்கொண்டிருக்கும் 1,600 பேரை ஒருங்கிணைத்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது, 'சி.டபுள்யூ.சி' (CWC - Chennai Weekend Clickers) எனும் அமைப்பு!

ஐ.டி. துறையில் பணிபுரிபவர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், கல்லூரி மாணவர்கள் என பல தரப்பினரும் உறுப்பினர்களாக இருக்கும் இந்த அமைப்பில், 5 வயதுச் சிறுவன் தொடங்கி, 65 வயது முதியவர் வரை ஒவ்வொருவரும் தன்னை புகைப்படக் கலைஞராக வெளிப்படுத்தும் முனைப்பில் இருக்கிறார்கள். வார இறுதி நாட்களில் சந்தித்துக் கொள்ளும் இந்த அமைப்பினர், அன்றைய தினத்துக்கென ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்து, குழுக்களாக ஒவ்வொரு திசையில் பிரிந்து சென்று, அந்த தலைப்பின் அடிப்படையில் புகைப்படங்கள் எடுக்கிறார்கள். பின் அவற்றை அமைப்பில் கொண்டுவந்து சேர்க்கிறார்கள். அந்தப் புகைப்படங்கள் பற்றிப் பேசுகிறார்கள், சிறந்தவற்றைப் பாராட்டுகிறார்கள், திருத்தங்கள் செய்ய வேண்டிய புகைப்படங்களை சுட்டிக்காட்டுகிறார்கள், புகைப்படத் துறையில் இருக்கும் வாய்ப்புகள் பற்றி அலசுகிறார்கள். ஆர்வமுள்ளவர்கள், அதற்கு மடை மாறுகிறார்கள்.

கேமரா காதலர்கள்!

சமீபத்தில் இந்த அமைப்பினர் எடுத்த புகைப்படங்களைக் கொண்டு, சென்னை, கிரீம்ஸ் சாலையில் உள்ள லலித் கலா அகாடமியில் புகைப்பட கண்காட்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். தேர்ந்த புகைப்படக் கலைஞர்களின் கேமராவில் பதிவான நேர்த்தி, ஒவ்வொரு படத்திலும்!

புன்னகையோடு வரவேற்ற சி.டபுள்யூ.சி அமைப்பினர், ''2009ம் ஆண்டு வெவ்வேறு துறைகளில் பணிபுரியும் மூன்று பேர் சேர்ந்து இக்குழுவை தொடங்கினார்கள். அதன் பின் அவர்களது நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள், ஃபேஸ்புக் நண்பர்கள், உறவினர்கள் என்று கொஞ்சம் கொஞ்சமாக உறுப்பினர்கள் வட்டம் விரிந்து, தற்போது 1600க்கும் அதிகமானோர் இக்குழுவில் இணைந்துள்ளார்கள். இதில் இணைபவர்களில் சிலருக்கு ஆர்வம் இருந்தாலும், ஆரம்பத்தில் எப்படி புகைப்படம் எடுப்பது என்ற அடிப்படைகூட தெரியாமல் இருக்கும். இவர்களுக்கு அடிப்படை தொடங்கி டெக்னிக்கலான விஷயங்கள் வரை ஒவ்வொன்றாகக் கற்றுக்கொடுத்து மெருகேற்றிவிடுவார்கள் அமைப்பில் இருக்கும் சீனியர்கள்.

கேமரா காதலர்கள்!

"பல துறைகளில் முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றிக் கொண்டிருந்தாலும், எங்கள் குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் ஒரு இடத்தில் கூடி, தலைப்பின் கீழ் புகைப்படங்கள் எடுத்து வந்து, தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு, பின் எங்கள் புகைப்படங்களை வலைதளத்தில் பதிவேற்றுவோம். திருப்பூர் பகுதியைச் சேர்ந்த காதுகேளாத மாணவர்கள் ஐந்து பேரும் எங்கள் அமைப்பில் இணைந்து புகைப்படம் எடுக்கக் கற்றுக்கொண்டு, தங்களது படைப்புகளை இந்தக் கண்காட்சியில் வைத்துள்ளார்கள்'' என்றவர்கள், புகைப்படங்களையெல்லாம் ஆர்வத்தோடு காட்டினார்கள்.

கேமரா காதலர்கள்!

''நான் ஒரு பிசினஸ் உமன். இந்த அமைப்புல சேர்ந்த முதல் பெண் நான்தான்! இங்க அனுபவப் பாடமா கத்துக்கிறதை, ஒரு இன்ஸ்டிடியூட்லகூட கத்துக்க முடியுமானு தெரியல'' என்று சந்தோஷமாகச் சொல்கிறார் ப்ரியா.

''நான் எம்.ஓ.பி வைஷ்ணவா கல்லூரியில பி.எஸ்ஸி., விஷுவல் கம்யூனிகேஷன் முடிச்சுட்டு இப்போ அங்கேயே வேலை பார்த்துட்டு இருக்கேன். இந்தியா முழுவதிலும் இருந்து எங்க அமைப்பில் உறுப்பினர்கள் சேர்ந்திருக்காங்க. அதனால, இந்தியாவுல எங்கேயோ ஒரு மூலையில நடக்கிற நிகழ்வின் புகைப்படம்கூட எங்க வலைதளத்துக்கு வந்து சேர்ந்துடும். குறிப்பா, பாரம்பரியத்தை இந்தத் தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்கு கடத்துற புகைப்படங்களை எடுக்கிறதில் எங்க அமைப்பினர் அதிக ஆர்வம் காட்டுறோம்'' என்கிறார் இந்த அமைப்பிலிருக்கும் ப்ரியதர்ஷினி.

கேமரா காதலர்கள்!

''உறுப்பினரா சேர, ஒரு ரூபாய்கூட கட்டணம் கிடையாது. இதில் சேர்றதுக்கு அடிப்படை தகுதினு பார்த்தா... புகைப்படம் எடுக்குறதுல கொஞ்சம் ஆர்வம் மட்டும்தான். இப்படிப்பட்டவங்க... ப்ளீஸ் வெல்கம்!'' என்று அழைக்கிறார் இந்த அமைப்பைச் சேர்ந்த  நவீன்.

கூடுங்கள்... 'கிளிக்'குங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு