Published:Updated:

மொக்கச்சாமி, காமாயி, முத்துக்காமன் மற்றும் நல்லகாமன்...

உருகவைக்கும் ஒரு குடும்பம்!உ.சிவராமன், படங்கள்: வீ.சக்தி அருணகிரி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

'ரெண்டு போகம் அழிஞ்சுதான், ஒரு புள்ள வளர்க்க முடியும்’ என்பார்கள் கிராமத்து விவசாயக் குடும்பங்களில்! குழந்தை பிறந்து அதை நடக்க, ஓட என வளர்த்துவிடுவதற்குள், அவர்களால் வயல் வேலைகளை சரிவர பார்க்க முடியாது என்பதால், இரண்டு போக விளைச்சலை தவற விட்டுவிடுவார்களாம். குழந்தை வளர்ப்பு என்பது அவ்வளவு சுமையும், பொறுப்பும் நிறைந்தது என்பதைச் சொல்வதற்காக பிறந்ததே இந்தச் சொலவடை!

ஆரோக்கியமாகப் பிறக்கும் குழந்தைகளை வளர்க்கவே எப்படியெல்லாம் பாடுபட வேண்டும் என்பதை நாம் அறிவோம். இப்படியிருக்க, மொக்கசாமி - காமாயி தம்பதியோ, மாற்றுத்திறனாளிகளான இரு மகன்களையும் பெருகும் அன்புடனும், குறையாத பொறுமையுடனும் வளர்த்து ஆளாக்கியிருப்பதுடன், 45 ஆண்டுகளாக துணையாகவும் நிற்கிறார்கள்!

'பிள்ளைகள் கைநிறைய சம்பாதித்து, நமக்கு வீடு கட்டித் தருவார்கள், நகை செய்து போடுவார்கள்' என்பது போன்ற எதிர்பார்ப்புகளோடு வளர்க்கும் பெற்றோருக்கு மத்தியில், தேனி மாவட்டம், கூடலூரில் உள்ள திருவள்ளுவர் பள்ளிக்கு அருகே வசிக்கும் இந்த மொக்கசாமி - காமாயியை சந்தித்த அனுபவம், பேரனுபவம்!

மொக்கச்சாமி, காமாயி, முத்துக்காமன் மற்றும் நல்லகாமன்...

''வியாபாரிங்ககிட்ட பானையை மொத்தமா வாங்கி, கேரளாவுல இருக்குற கொச்சரவுங்கிற எடத்துக்கு நடந்தே போயி வித்துட்டு வர்றதுதான் எங்க தொழில். கால்நடையாத்தான் மலையில ஏறுவோம். ஒரு நாளைக்கு லாபமா நூறு ரூபா சம்பாதிக்குறதே பெரிய விஷயமா இருக்கும். அந்த காசை வீட்டுக்கு கொண்டு வந்தாதான் ரவைக்கு (ராத்திரி) சாப்பிடவே முடியும். ஒரு நாள் போகலைனாலும் பக்கத்து வீட்டுலதான் அரிசி கடன் வாங்கணும்.

இந்த நிலையிலதான் எங்களுக்குப் பொறந்த ரெண்டு ஆம்பளப் புள்ளைங்களும் கால் சரிவராம பொறந்தாங்க. சொந்தத்துக்குள்ளயே கல்யாணம் முடிச்சுகிட்டதாலதான் இப்படினு எல்லாரும் சொன்னாங்க. 'ரெண்டும் பழுதா போச்சே’, 'காலத்துக்கும் அதுகள உட்கார வெச்சு நீங்க பாக்கணுமே’னு பலரும் பலவிதமா புலம்பினாங்க. ஆனா, எங்கள அம்மா, அப்பானு கூப்பிட்டு சந்தோஷப்படுத்த கடவுள் கொடுத்த வரமாதான் எங்களுக்குத் தெரிஞ்சாங்க. ஆசை ஆசையா வளர்த்தோம்..!''

- இந்த தகப்பன் மொக்கசாமியின் கனிவில் கரைந்து போனோம். மூத்தமகன் முத்துக்காமன் சாப்பாட்டுக்காக விறகுகளை வெட்டிக்கொண்டிருக்க, 'அதை ஒதுங்க வெச்சுட்டு வந்துடறேன்’ என்று மொக்கசாமி அவகாசம் பெற்றுச் சென்றார். இளையமகன் நல்லகாமனின் வியாபாரத்துக்காக முந்திரிப்பழங்களையும், நெல்லிக்காய்களையும் தயார் செய்துகொண்டிருந்த காமாயி தொடர்ந்தார்.

மொக்கச்சாமி, காமாயி, முத்துக்காமன் மற்றும் நல்லகாமன்...

''எல்லாரும் மழைக்கும் வெயிலுக்கும் புள்ள வளர்க்குற மாதிரிதான் நாங்களும் வளர்த்தோம். என்ன... கொஞ்சம் அதிகமா சிரமப்பட்டோம். இப்ப மூத்தவனுக்கு 45 வயசாகுது, இளையவனுக்கு 40 வயசாகுது. மூத்தவன் வீட்டு வேலைகளைப் பாத்துக்குவான். அதோட மலைக்கு வியாபாரத்துக்கு போற எங்களுக்கு சாப்பாடும் செஞ்சுருவான். நானும் அவரும் தோட்டத்துல போயி முந்திரிப்பழமும், நெல்லிக்காயும் பொறுக்கிட்டு வருவோம். அதை இளையவன் பள்ளியோடத்து பிள்ளைங்ககிட்ட வித்து, 50 ரூபாயில இருந்து நூறு ரூபா வரைக்கும் சம்பாதிப்பான். இவரு, காலையில அவனை வண்டியில வெச்சு தள்ளிக்கிட்டே ஸ்கூலுக்கு கூட்டிட்டு போவார். இவன் விக்கிற சாமான்களைத் தூக்கிக்கிட்டு பின்னாடியே நடந்து போவேன். இப்படித்தான் 15 வருசமா ஓடிட்டு இருக்கு. இப்ப எங்களுக்கு வயசாகிட்டதால வியாபாரத்துக்கு போக முடியல. இவங்க ரெண்டு பேரும்தான் எங்கள பாத்துக்கிறாங்க'' - இரண்டு மகன்களையும் கட்டிக்கொண்டு சொன்னபோது, ஆனந்த நீர்த்துளிகள் அந்தத் தாயின் கண்களில்.

''இயல்பான குழந்தைகளை வெச்சுருக்கிற அம்மா, அப்பாகூட அவங்கள கோபத்துல திட்டுவாங்க, அடிப்பாங்க. ஆனா, இவங்க ரெண்டு பேரும் அன்பைத் தவிர எங்களுக்கு வேறெதுவும் தந்ததில்ல'' என்று இளையவர் நல்லகாமன் பாசத்தின் அடர்த்தியில் குரல் குழைய, ''ஆனாலும் எங்களப் பத்தின வருத்தம், அப்பா - அம்மா மனசுக்குள்ள இருக்கும்னு எங்க ரெண்டு பேருக்கும் கஷ்டமா இருக்கும். அதனால, வியாபாரத்துல, வீட்டுலனு தினமும் நடக்கறத ராத்திரியில அவங்ககிட்ட சொல்லி, கலகலனு பேசி சிரிக்க வைப்போம். எவ்வளவு வறுமை பார்த்தாலும், அடுத்தவங்ககிட்ட கையேந்துற நிலைக்கு மட்டும் போகவே கூடாதுனு அம்மா சொல்லிக் கொடுத்திருக்காங்க. உடம்புல குறையிருந்தாலும், ஒரு நாளைக்கு ஐம்பது ரூபாயாச்சும் சம்பாதிச்சி பெத்தவங்களை காப்பாத்தணுங்கிற வைராக்கியத்துக்கு மட்டும் குறைவில்ல!'' என்று குரலில் உறுதி காட்டினார் மூத்தவர் முத்துக்காமன்.

ஈன்றபொழுதின் பெரிதுவந்தபடி உட்கார்ந் திருந்தனர்... மொக்கசாமி - காமாயி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு