'என் இனிய கதைநாயகிகள்’ தொடரில் வழக்கமாக, தங்களின் கதைநாயகிகளைப் பற்றி, அந்த நாயகிகளைப் படைத்த இயக்குநர்கள் பேசுவார்கள். இந்த இதழில் இதில் கொஞ்சம் மாறுதல். விஜய டி.ராஜேந்தர் உருவாக்கிய கதைநாயகிகளுக்கு, உயிர் கொடுத்த நிஜ நாயகிகளே பேசுகிறார்கள், தங்களின் பாத்திரப் படைப்பு மற்றும் ராஜேந்தர் பற்றி!

'ஒருதலை ராகம்’ ரூபா!

''ஒருதலை ராகம் படத்துல நடிச்ச அனுபவங்கள் ஒவ்வொண்ணும், பசுமையா நினைவில் இருக்கு. 'ஒருதலை ராகம்’ ஹீரோ சங்கர் இயக்குற 'மணல் நகரம்’ங்கிற படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி சமீபத்துல சென்னையில நடந்துச்சு. இதுல 'ஒருதலை ராகம்’ படக்குழுவுல இருந்த நான், சங்கர், டி.ஆர் சார் உள்பட பலரும் சந்திச்சுகிட்டோம். பல வருஷங்கள் கழிச்சு பார்த்தப்போ... 80-கள்ல வெளியான அந்தப் படத்துக்காக நாங்க நடிச்சது, பேசினது, டேக்... கேமரா... ஆக்ஷன்... ஒவ்வொண்ணும் இப்பவும் அப்படியே ஒலிக்குது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என் இனிய கதைநாயகிகள்! - 12

ஒருதலை ராகம், எனக்கு ரெண்டாவது படம். என் கேரக்டர் பேர் 'சுபத்ரா’. 'ராஜா’வா சங்கர் நடிச்சிருப்பார். முதல் நாள் பார்த்து, மறுநாளே 'ஐ லவ் யூ’ சொல்ற கலாசாரமெல்லாம் அப்போ இல்லை! 'காதலை சொல்லிட்டா, அந்தப் பொண்ணு ஏத்துப்பாளா, பிரச்னை வருமா?'னு யோசிச்சு யோசிச்சே... நேசத்தை மனசுக்குள் பூட்டி வைத்துக்கொள்ளும் ஆண்கள்; உண்மையாவே ஒரு ஆணை தனக்குப் பிடிச்சிருந்தாலும், அவன் தன்னிடம் காதலைச் சொன்னாலும், குடும்பத்தை மனசுல வெச்சு அதை நிராகரிக்கிற பெண்கள்... இதுதான் 80-களின் காதல். அதன் பிரதிநிதிகள்தான் சுபத்ரா - ராஜா!

என் இனிய கதைநாயகிகள்! - 12

ராஜா, ஒருதலையா சுபத்ராவைக் காதலிப்பார். முதல் பார்வை பார்க்கும்போதே அவளுக்கும் ராஜாவைப் பிடிச்சுடும். ஆனா, மனசுக்குள்ளயே வெச்சுப்பா. மிகவும் வறுமையான குடும்பத்தைச் சேர்ந்த அவ, எந்தச் சூழ்நிலையிலயும் தன்னோட குடும்ப கௌரவம் பாதிச்சுடக்கூடாதுனு, கட்டுக்குள்ள தன்னை வெச்சுக்க நினைக்கிற பொண்ணு. இறுக்கப் போர்த்தின புடவை, குனிஞ்ச தலையுமாதான் வருவா. இந்த ரெண்டு பேருக்கும் நடுவுல அந்தக் காதல் நடத்துற மௌன யுத்தம்தான் படம். கடைசி வரைக்கும் சுபத்ராகிட்ட காதலை சொல்லாமலே செத்துப் போயிருவார் ராஜா. தெய்விக காதல்ம்பாங்களே... அதை அடையாளப்படுத்துற காதல்!

துளிகூட ஆபாசத்துக்கு இடம் கொடுக்காம, கட்டிப்பிடிச்சி ஆடாம, பெண்களைக் கேவலப்படுத்திப் பார்க்காம வெளிவந்த இந்தப் படத்தை, அன்னிக்கு குடும்பத்தோட திரண்டு வந்து பார்த்தவங்க அதிகம். திரையிட்ட பெரும்பாலான ஊர்கள்லயும் நூறு நாளை தாண்டி ஓடின படம்!''

'உயிருள்ளவரை உஷா' நளினி!

''ஒரு மலையாளப் படத்துல நடிச்சுட்டு இருந்தேன். அப்பதான் 'உயிருள்ளவரை உஷா’ படத்துல நடிக்க வாய்ப்பு வந்துச்சு. ஒரு படத்துல நடிக்கும்போதே இன்னொரு படத்துல நடிக்க முடியாதேனு தயங்கினேன். 'நீ எவ்ளோ நாள் வேணும்னாலும் டைம் எடுத்துக்கோ... என் படத்துல நீதான் ஹீரோயின்!’னு சொன்னார் டி.ஆர். சார். அதேமாதிரி காத்திருந்து படத்தோட கதையை அவர் சொன்னப்போ, ரொம்ப பிடிச்சுப் போய், அப்போவே ஆர்வமா சில ஸீன்களை நடிச்சுக்காட்டினேன். 'உயிருள்ளவரை உஷா’ படம் தெலுங்கிலும் பயங்கர ஹிட்! டி.ஆர் சார் படங்கள்ல நடிக்கிற ஹீரோயின்களுக்கெல்லாம் நல்ல எதிர்காலம் கிடைக்கும். அந்த வகையில் எனக்கு அவர் குரு, வழிகாட்டி எல்லாம்!

என் இனிய கதைநாயகிகள்! - 12

இந்தப் படத்தில் எனக்கு அக்காவா சரிதா மேடம் நடிச்சிருப்பாங்க. கணவனைப் பிரிஞ்சு வாழற கேரக்டர் அவங்களுக்கு. என்னோட அண்ணனா, ஒரு ரவுடி கேரக்டர்ல ராதாரவி சார் நடிச்சிருப்பார். டைட்டில் ரோலான 'உஷா’ கேரக்டர் எனக்கு. எதிர்வீட்ல குடியிருக்கும் பால்கார குடும்பத்துப் பையனை உஷா காதலிப்பா. இந்தக் காதல்ல ரொம்ப உறுதியாவும் இருப்பா. இதுக்கு சப்போர்ட் பண்ற கேரக்டர்ல டி.ஆர் சார் நடிச்சிருப்பார். எனக்குத் தெரிஞ்சு ஒரு பெரிய ரோல்ல முதல் முறையா அவர் நடிக்க ஆரம்பிச்சது இந்தப் படத்துலதான். 'உஷா’ முன்னிலையிலேயே காதலனைப் போட்டு அவங்க அண்ணன் அடிக்கும்போது, தன் கையை கத்தியால கீறிகிட்டு, காதலோட வலிமையை எல்லாருக்கும் புரிய வைப்பா உஷா. வீட்டுல இருக்கிறவங்களோட மிரட்டலுக்கோ, பாசத்துக்கோ கட்டுப்பட்டு பல பெண்கள் காதலை விட்டுக்கொடுத்திருவாங்க. ஆனா, உறுதியா இருந்து காதலிச்சவனையே கல்யாணம் பண்ணிப்பா உஷா. காதலிக்கிற பல பெண்களுக்கு மன தைரியத்தை உண்டாக்கின படம் இது. இந்தப் படம் வெளியான பிறகு, மக்கள் மத்தியில காதல் பத்தின பார்வையே மாறி, அதுக்கு ஒரு மரியாதை கிடைக்க ஆரம்பிச்சது.

அந்தக் காலகட்டத்துல பெரும்பாலான படங்கள், காதல் தோல்விப் படங்களாவே வந்துட்டு இருந்துச்சு. அதையெல்லாம் பிரேக் பண்ற மாதிரி, இந்தப் படம் கல்யாணத்துல முடிஞ்சதை... மக்கள் ரொம்பவே ரசிச்சாங்க. இதுக்குப் பிறகு 'தங்கைக்கோர் கீதம்’, 'உறவைக் காத்த கிளி’னு சாரோட ரெண்டு படங்கள்ல நடிச்சேன். இதுவும் வெற்றிப் படங்களா அமையவே, எனக்கு நிறைய படவாய்ப்புகள் வந்துட்டே இருந்துச்சு. பல வருஷங்கள் படத்துல நடிக்காம இருந்த எனக்கு, 'காதல் அழிவதில்லை’ படம் மூலமா ரீ-என்ட்ரி கொடுத்ததும் டி.ஆர் சார்தான்.''

'சம்சார சங்கீதம்’ ரேணுகா!

''குடும்பப் படம்னு எல்லாரும் பாராட்டின படங்கள்ல இது ஒண்ணு. கணவரை சந்தேகப்படுற மனைவி கேரக்டர் எனக்கு. கிராமத்துப் பெண்ணான நான், டி.ஆர் சாரை கல்யாணம் பண்ணிப்பேன். அவர் மேல சந்தேகப்பட்டு, ஆட்டிவைக்க ஆரம்பிச்சுடுவேன். ஒரு கட்டத்துல உண்மையைப் புரிஞ்சுகிட்டு திருந்துவேன். பெண்கள், அவசரப்பட்டு கணவனை சந்தேகப்பட்டா... குடும்பம் என்ன கதிக்கு ஆளாகும்ங்கிறத... என்னோட கேரக்டர் மூலமா ஊருக்கே உணர்த்தியிருப்பார்.

டி.ஆர் சாரோட படத்துல நடிச்சா... டயலாக்ல பிச்சி உதறுற சாமர்த்தியம் தானாவே வந்துடும். அவர்கிட்ட டயலாக் சொல்றப்ப, முதல் டேக்லயே சொல்லிட்டா தப்பிச்சுப்போம். டி.ஆர் சாரோட மகன் சிம்பு, மகள் தமிழ் இலக்கியா ரெண்டு பேருமே இந்தப் படத்துல நடிச்சிருப்பாங்க. என்னோட 18 வயசுல சிம்புவுக்கு அம்மாவா நடிச்சது... உண்மையாவே பெருமையான விஷயம். அப்ப சிம்புவுக்கு மூணு இல்ல நாலு வயசுதான். பயங்கர துறுதுறு... அளவில்லாத சேட்டைனு யூனிட்டே கலகலனு இருக்கும். 'ஐயாம் எ லிட்டில் ஸ்டார்... ஆவேன் நான் சூப்பர் ஸ்டார்'னு இந்த படத்துல வந்த சிம்புவோட பாட்டு, அப்ப பயங்கர ஹிட்!''

என் இனிய கதைநாயகிகள்! - 12

'அத்தனை கதைநாயகிகளும் முக்கியமானவர்கள்தான்!’

1980-ம் ஆண்டுகளில் பெண்கள் அதிகம் விரும்பிப் பார்த்த படங்களின் பட்டியலில் டி.ராஜேந்தர் படங்களுக்குக் கட்டாய இடமுண்டு. ''டி.ராஜேந்தர் படம்னா, கண்டிப்பா குடும்பத்தோட பாக்கலாம். அடுக்கு மொழி வசனங்கள், அமர்க்களமான பாட்டுனு பட்டையக் கிளப்பிஇருப்பார். 'என் தங்கை கல்யாணி' படம் பாத்த பிறகு, அண்ணன்- தங்கை பாசம்னா என்னனு எனக்கும் என் அண்ணனுக்குமே புரிஞ்சுது. தங்கச்சி ஆசைப்பட்டு கேக்குற எல்லாத்தையும் செய்யுற அண்ணன்கள் கிடைச்சதுக்கு டி.ஆர் படங்களும் காரணம்'' என மெய்சிலிர்க்கும் பெண்கள் இன்றளவும் இருக்கிறார்கள்.

இப்படியொரு தாக்கத்தை உருவாக்கிய விஜய டி. ராஜேந் தரிடம் தான் படைத்த கதை நாயகிகள் பற்றி கேட்டபோது, ''நான் உருவாக்கிய அத்தனை நாயகிகளுமே முக்கியமான வர்கள்தான். அவர்களைப் பற்றி பேசுவதற்கான ஒரு வாய்ப்பு வரும்... அப்போது பேசுகிறேன்'' என்று ஓரிரு வார்த்தைகளில் முடித்துக்கொண்டார்.