Published:Updated:

சர்ஃபிங் ஏஞ்சல்!

அட்வெஞ்சர் நா.இள.அறவாழி, படங்கள்: ஜெ.முருகன்

சர்ஃபிங் ஏஞ்சல்!

அட்வெஞ்சர் நா.இள.அறவாழி, படங்கள்: ஜெ.முருகன்

Published:Updated:

''மற்ற சாகச விளையாட்டுகள்ல அடிபட வாய்ப்பிருக்கு. ஆனா, 'சர்ஃபிங்' (Surfing) அப்படினு இங்கிலீஷ்ல சொல்லப்படுற கடல் அலை சறுக்கு விளையாட்டில், அடிபட வாய்ப்புகள் குறைவு. இதனால சந்தோஷம் அதிகம்!''

- கடற்கரையில் கால் நனைத்து நிற்கும் சுஹாசினி டாமியன், தலை சிலுப்பிச் சொல்கிறார்!

ஆரோவில் அகில உலக கிராமத்தில் வசிக்கும் சுஹாசினி டாமியன், புதுச்சேரியின் ஒரே பெண் கடல் அலை சறுக்கு வீரர். கோட்டக்குப்பத்தில் இயங்கிவரும் 'கல்லியாலே’ அலை சறுக்குப் பள்ளியில் மூன்று ஆண்டுகளாகப் பயின்று வருபவரை நாம் சந்திக்கச் சென்ற நேரம், 'சன் ஸ்க்ரீன் லோஷன்’ அப்ளை செய்துகொண்டிருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ரெடியா பாஸ்... சர்ஃபிங் போலாமா..?!'' என்று கேட்டுவிட்டு ஆளுயர பிளாஸ்டிக் போர்டை அசால்ட்டாக தூக்கிக்கொண்டு கடலை நோக்கி வேகமாக ஓடுகிறார் சுஹாசினி. சட்டென கடல் நீரில் இறங்கி, போர்ட் மீது படுத்தபடி இன்னும் கடலுக்குள் முன்னேறுகிறார். ஓரளவு ஆழத்தை எட்டியவுடன் அமைதியாகக் காத்திருக்கிறார். சரியான அலையைத் தேர்ந்தெடுத்த பின், அலையின் வேகத்தோடு ஈடுகட்டி போர்டை அலை மீதே நிலை நிறுத்தும் சுஹாசினி, கண்ணிமைக்கும் நொடிகளில் அப்படியே சறுக்கியபடி கரைக்கு வந்து சேர்கிறார். மீண்டும் அடுத்த அலைக்காக கடலை நோக்கி நகர்கிறார்!

சர்ஃபிங் ஏஞ்சல்!

சுஹாசினி கரையேறி வரை வரும் காத்திருந்து பேசினோம்.

''பிறந்தது வளர்ந்தது எல்லாமே ஆரோவில்தான். அம்மா தமிழ், அப்பா ஜெர்மன். நான் பக்கா பாண்டிச்சேரியன். ஃபேஷன் டிசைனிங் படிச்சிருக்கேன். சர்ஃபிங் தவிர ஃபுட் பால், டான்ஸ் மேல அவ்வளவு இஷ்டம். கிளாஸிக்கல், வெஸ்டர்ன், ஒடிசி, சல்சா, ஹிப்பாப்னு கலக்குவேன். நண்பர் மூலமா சர்ஃபிங் ஸ்கூல்ல சேர்ந்தேன். ஆரம்பத்துல நடுக்கம் இருந்துச்சு. முதல் அலையைப் பிடிச்சு, அதுல சர்ஃப் பண்ணிட்டே கரைக்கு வந்து சேர்ந்தப்போ, கிடைச்ச சந்தோஷமும் நம்பிக்கையும் பெருசு'' என்றவர்,

''உடம்பை ஆரோக்கியமா, ஃபிட்டா வெச்சுக்கிற இந்த விளையாட்டில் ஈடுபடறதுக்கு நீச்சல் தெரிஞ்சிருக்கணும். ஆரம்பத்துல ஃபோம் போர்டு பயன்படுத்தி பயிற்சி எடுத்துக்கிட்ட பிறகுதான், பிளாஸ்டிக் போர்டு. முதல்ல சரியான அலையைத் தேர்ந்தெடுக்கணும். அடுத்து, தடுமாறாம சர்ஃப் செய்யணும், கீழ மட்டும் விழக் கூடாது. பிறகு அலையோட 'டிப்’பை தொட்டுட்டு வரணும். எவ்வளவு நொடிகள் சர்ஃப் செய்யுறோமோ, அந்தளவுக்கு பாயின்ட்ஸ் கிடைக்கும். பெரிய அலைகளோட சுழலுக்குள் போயிட்டு வெளியே வந்தா அதிக பாயின்ட்ஸ்''

- சீறி வரும் அலைகளை ஒருமுறை காதலாகப் பார்த்துவிட்டுத் தொடர்ந்தார்.

சர்ஃபிங் ஏஞ்சல்!

''தமிழ்நாட்டில் சர்ஃபிங் செய்யும் பெண்கள் சிலர்தான் இருக்காங்க. பிகினி டிரெஸ் போட்டுட்டுக்கணும்ங்கிறதாலதான் பெற்றோர்கள் பலரும் அனுமதிக்க மறுக்கிறாங்க. ஆனா, டைட்ஸ் போட்டுட்டுகூட சர்ஃப் பண்ணலாம். ப்ளீஸ் பேரன்ட்ஸ்... உங்க பெண்களுக்கு பச்சைக் கொடி காட்டுங்க!'' என்று கோரிக்கை வைக்கும் சுஹாசினி, கடந்த மாதம் சர்வதேச அளவில் புதுச்சேரியில் நடைபெற்ற கடல் அலை சறுக்கு விளையாட்டு போட்டியில் மகளிர் பிரிவில் முதல் பரிசு வென்றிருக்கிறார்.

''வெளிநாடுகளில்தான் அலைகள் அதிகமாவும், ஆக்ரோஷமாவும் இருக்கும். சர்ஃபிங் பிரியர்கள் பெரிய அலைகளுக்கு இலங்கையைத் தேர்வு செய்யலாம்!'' என்று பரிந்துரைக்கும் சுஹாசினியின் எதிர்கால லட்சியம், சர்ஃபிங்கில் சர்வதேச அளவுப் போட்டிகள் என்று சொல்வார் என நினைத்தால்...

''ஸ்விம் சூட் டிசைனர் ஆகணும். சொந்த டிசைனிங் நிறுவனத்தை ஆரம்பிக்கணும்!''

- சர்ப்ரைஸ் கொடுக்கிறார் சர்ஃபிங் ஏஞ்சல்!

'காளி அலை’!

'கல்லியாலே’ அலை சறுக்குப் பள்ளி நிர்வாகி ஜுவான், வெளிநாட்டுக்காரராக இருந்தாலும் அழகுத் தமிழில் பேசினார். ''இங்க வந்துதான் தமிழ் கத்துக்கிட்டேன். 'கல்லியாலே’ என்றால் 'காளி  அலை’னு அர்த்தம். இந்திய அலை சறுக்கு மற்றும் இன்டர்நேஷனல் அலை சறுக்கு அமைப்புகள்கிட்ட முறையா அனுமதி வாங்கியிருக்கோம். வியாபாரத்துக்காக இந்த விளையாட்டை சொல்லித் தர்றது இல்லை. ஆத்மார்த்தமா விரும்பி வர்றவங்களையே சேர்த்துக்கிறோம். நீச்சல் தெரிஞ்சிருந்தா... ஒரே மாசத்துல கத்துக்கலாம்!'' என்று நம்பிக்கை ஊட்டுகிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism