வாழையடி வாழையாய்த் தொடர்ந்து எனக்கு வந்து சேர்ந்ததே சத்யசாயி வழிபாடு! என் அப்பாவின் தாய்மாமன்தான் எங்கள் குடும்பத்தில் சாயிபாபா நம்பிக்கையை ஏற்படுத்தியவர். அவர் மூலமே பகவான் பாபாவின் தெய்விகமும் மேன்மைகளும் மகிமைகளும் என் அப்பாவிற்குச் சொல்லப்பட்டன. 'சத்யம் சிவம் சுந்தரம்’ என்ற ஸ்வாமி பாபாவின் வாழ்க்கைச் சரிதத்தை அவர் தந்து படிக்கத் தொடங்கிய பின்பே, அப்பா, ஸ்வாமி மீது நம்பிக்கையும் பக்தியும் கொண்டார். கேட்கிறார்களோ இல்லையோ... ஸ்வாமி தரும் அனுபவங்களை, கனவுகளை அனைவரிடமும் அப்பா சொல்லிக்கொண்டேயிருப்பார்.

கதை கேட்பது போல், அவர் சொல்வதைக் கேட்டு வந்த எனக்குள்ளும், படிப்படியாய் ஸ்வாமி வளர்ந்து கோயில் கொண்டார்! ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக ஸ்வாமியின் பக்தராக இருந்த என் அப்பாவிற்கு... நானும் ஸ்வாமி வழிபாட்டிற்கு வந்தது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. என் அப்பா இப்போது இல்லையென்றாலும், சாயி சங்கல்பத்தினால் என் வாழ்வில் சாயி வழிபாட்டைத் தொடங்கி வைத்தவர் என்பதை எப்போதும் எனக்குள் நான் நன்றியோடு நினைவுகூர்கிறேன்.

சத்தியப்பாதையில்..! - 12

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அடுத்தடுத்த பயணங்களில் அப்பாவும் பிள்ளைகளும் உடன் வந்தார்கள். அப்பா எங்களை புட்டபர்த்தியின் கோயில்கள், ஸ்வாமியின், இலவச சேவைகள் புரியும் சாயி நிறுவனங்கள், ஸ்வாமிக்கு வெளிநாட்டு பக்தர்களின் காணிக்கையாக பேரழகோடு நிறுவப்பட்ட 'சைதன்யஜோதி’ என்ற அருங்காட்சியகம், பக்தர்கள் கேட்ட வெவ்வேறு பழங்களை ஸ்வாமி வரவழைத்துக் கொடுத்த 'கல்பதரு’ என்று அழைக்கப்படும் புளியமரம், பால்ய பருவத்தில் ஸ்வாமி தவம் செய்த குகை, ஸ்வாமியை சிறு போதிலிருந்து போற்றிக் கொண்டாடிய சுப்பம்மா போன்ற பழைய பக்தர்களின் வீடுகள் என்று அத்தனை இடங்களுக்கும் அழைத்துச் சென்று அவற்றின் புனிதப் பின்னணிகள், மேன்மைகளைக் கூறுவார்.

ஒவ்வொருமுறையும் ஸ்வாமி தரிசனம், தனித்தனியானதோர் அனுபவத்தையும் ஆனந்தத்தையும் தெய்விக உணர்வுகளையும் எனக்குள் ஏற்படுத்தியது. பல நாடுகளிலிருந்தும் வந்து அர்ப்பண உணர்வோடு பக்தியும் சேவையும் புரியும் பக்தர்களின் உண்மையான அன்பும், ஸ்வாமியின் பேரன்பும், அவருடைய பிரமாண்டமான சேவைப்பணிகளும், நான் பேட்டி எடுத்த ஸ்வாமியின் பால்யகால பக்தர்களின் அனுபவங்களும் என் ஆழ்மனதில் நல்லதொரு மனமாற்றத்தை ஏற்படுத்தின. இந்த என் உணர்வுகளையெல்லாம் கவிதைகளாக்கினேன். ஸ்வாமி, தன் ஆசீர்வாதம் தொடர்வதை சில நிகழ்ச்சிகளின் மூலம் நிரூபித்தார்.

பெரிய பிள்ளை மதன்கார்க்கிக்கும் நந்தினிக்கும் திருமணம் நடந்த பிறகு, பிரார்த்தனை செய்துகொண்டபடி அவர்களை அப்பாவோடு ஸ்வாமி தரிசனத்திற்கு அழைத்துச் சென்றேன். அவனுடைய கல்யாணம் நடப்பதற்கு முன் ஒரு தடை வந்து விலகியது. கவலையோடு ஸ்வாமியிடம் தீவிரமாய் பிரார்த்தனை செய்தபடியிருந்தேன். திருமணத்திற்கு முன்பே... கல்யாண மேடையும், மேடையிலிருப்பவர்களும் வாழ்த்த... தம்பதியாய், 'இவர்கள்’ மாலைமாற்றிக் கொள்வதுமான கல்யாண கனவைத் தந்து, கல்யாணம் நடக்கப் போவதை உறுதி செய்தார் ஸ்வாமி! அதன்படியே கல்யாணம் கோலாகலமாய் நடந்தது! இன்னொரு விசேஷமும் எனக்குத் தெரியாமல் நடந்தது. ஏதோ ஒரு சாயி வழிபாட்டு மையத்திலிருந்து வந்த வயதான காவிச் சாமியாராய், 'ஸ்வாமி’ வந்து பிள்ளைகளை வாழ்த்தி விட்டுப் போயிருக்கிறார்! இந்த அதிசயத்தை நினைத்து நினைத்து நெடுநாட்கள் மகிழ்ந்துகொண்டிருந்தேன். தம்பதியை புட்டபர்த்திக்கு ஸ்வாமி தரிசனத்துக்கு அழைத்துச் சென்றபோது, பிரசாந்தி நிலையத்தின் வனப்பும் பேரமைதியும் பிள்ளைகளை வெகுவாகக் கவர்ந்தன. ஸ்வாமி தரிசனத்திற்கு முதல் வரிசையில் அமர்ந்திருந்தோம். எல்லாமறிந்த ஸ்வாமி எங்கள் அனைவரையும் மகிழ்ச்சியோடு ஆசீர்வதித்தார்! அப்பாவிற்கும் மதனுக்கும், அபயஹஸ்தம் காட்டிப் புன்னகைத்தார்! அனைவருக்கும் அப்படி ஒரு பேரானந்தம்!

சிறிய பிள்ளை கபிலன் ரம்யா திருமணத்திற்கு முன்பும் ஒரு சின்னதடை வந்து விலகியது. இங்கும், ஸ்வாமி கல்யாணக் காட்சியை முன்கூட்டியே கனவில் காட்டிவிட்டார்! கல்யாணத் தம்பதியை அழைத்துக்கொண்டு ஸ்வாமியின் ஆசீர்வாதத்திற்காக ஒரேநாள் பயணமாக புட்டபர்த்தி சென்றேன். பிரசாந்தி நிலையத்தின் பேரெழிலும் அமைதியும் பிள்ளைகளுக்குப்

சத்தியப்பாதையில்..! - 12

பெருமகிழ்ச்சி தந்தன. அடுத்த நாள் காலை புறப்பட வேண்டும். மாலை தரிசனத்திற்கு வந்து ஸ்வாமியின் வருகைக்காகக் காத்திருந்தோம். பஜன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்துகொண்டிருந்தது. நெடுநேரமாகியும் ஸ்வாமி வராததால் இனிவர மாட்டார் என்றார்கள். ஸ்வாமி கருணையோடு வந்து பிள்ளைகளை ஆசீர்வதிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தபடியே இருந்தேன். நம்ப முடியாத அதிசயமாய் புல்லாங்குழலிசை காற்றில் மிதந்து வரத் தொடங்கியது. என்ன ஆச்சரியம்! ஸ்வாமி வந்துகொண்டிருந்தார்! வந்தவர் முதலில் எங்கள் முன் வந்து நின்றார்! என்னை உற்றுப் பார்த்தார். சின்ன மருமகளைப் பார்த்தார். சுற்றிலும் உள்ளவர்களைப் பார்த்தார். திடீரென்று ஸ்வாமி முன்னால் வந்து பார்க்கத் தொடங்கியதும், பேச்சுவராமல் நெஞ்சடைத்துப் போய் கைகூப்பிக்கொண்டிருந்த என்னை மீண்டும் பார்த்தார். அவர் பார்வையே எனக்கும் பிள்ளைகளுக்கும் ஆசீர்வாதமானது! ஸ்வாமியை பௌதீகசரீரமாக நான் தரிசித்த கடைசி நேரம் அது என்று எனக்குத் தெரியவேயில்லை.

இரண்டு மாதங்களுக்குப் பிறகுதான் உலகெங்குமுள்ள சாயி பக்தர்களை பெருந்துயரத்தில் ஆழ்த்திவிட்ட அந்தச் சம்பவம் நிகழ்ந்து போனது. ஸ்வாமி உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இருந்ததும்... உலகம் முழுவதிலுமுள்ள சாயி பக்தர்கள் தத்தளித்துக் கிடந்து அலமந்து போனதும்... ஸ்வாமி மகாசமாதியானதும் தாளமுடியாத வேதனைப் பொழுதுகள். எப்படியும் ஓர் அற்புதம் நிகழ்த்தி ஸ்வாமி எழுந்து வந்துவிடுவார் என்று அத்தனை பக்தர்களையும் போலவே நானும் நம்பிக் காத்திருந்தேன். ஆனால், உடம்பளவில் மறைதல் என்பது அவர் சங்கல்பமாயிருந்தபோது யார் என்ன செய்ய முடியும். இந்தச் செய்தியை என்னிடம் எப்படிச் சொல்வது என்று தயங்கித் தவித்து பிள்ளைகள் வந்து சொன்னபோது அழுதேன்... தாளமுடியாத துக்கத்தில் அழுதேன். 'இப்படியா ஸ்வாமி என்னிடம் பேசாமலும், பாத நமஸ்காரம் கொடுக்காமலும் சென்று விடுவாய்’ என்று புலம்பினேன். ஸ்வாமி வந்து பேசும் தோழியிடம் நான் பேசி மனம் வெடிக்க அழுதுகொண்டிருந்தபோது, ஸ்வாமி அவருக்குக் காட்சியாகி... என்னை அழ வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார் 'நம்மோடதான் ஸ்வாமி இருக்கிறாராம். அழ வேணாம்னு சொல்றார்’ என்று தோழி சொல்லிக்கொண்டிருந்தார். அந்தமுறைதான் நான் ஸ்வாமி சொன்னதைக் கேட்கவில்லை. அழுதபடியேயிருந்தேன். ஸ்வாமி... நான் மறையவில்லை எனக்கு மறைவுமில்லை என்பதைக் கூடிய சீக்கிரமே எனக்குப் புரியவைத்தார்.

ஜெய் சாயிராம்!

(அடுத்த இதழில் முடியும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism