வணக்கம் தோழிகளே, நான் கௌதமி பேசறேன்!

ஒரு நட்சத்திரமாவோ, பிரபலமாவோ உங்ககிட்ட பேசல. உங்கள்ல ஒருத்தியாதான் பேசறேன்.

நான் உங்க முன்னாலதான் வளர்ந்தேன். நீங்க இல்லனா, உங்க அக்காவோ, அம்மாவோ, அத்தையோ, தோழியோ... உங்க குடும்பத்தில் யாரோ ஒருவர் பார்க்க வளர்ந்தேன். என்னை வரவேற்று நீங்கள்லாம் ஏத்துக்கிட்டது, திரையுலகம் எனக்குக் கொடுத்த மிகப்பெரிய கௌரவம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்களுக்கே தெரியும்... சில காலம் திரையுலக வெளிச்சத்தை விட்டு ஒதுங்கியிருந்தேன். அப்ப நான் எங்கே இருந்தேன், ஏன் ஒதுங்கி இருந்தேன், என்ன பண்ணிட்டிருந்தேன்னு பலருக்குள்ளயும் கேள்விகள் இருந்துகிட்டேதான் இருக்கு. இதுக்கெல்லாம் பல விடைகள் இருந்தாலும், எல்லாத்தையும் தொகுத்துப் பார்த்தா, வர்ற விடை ஒண்ணே ஒண்ணுதான்.. அந்தச் சமயத்தில் வாழ்க்கை என்னும் ரோலர்கோஸ்டர்ல சுற்றிச் சுழன்றுகிட்டு இருந்தேன்!

ஒரு மகளா, தாயா, வாழ்க்கைத்துணையா, தோழியா, இல்லத்தரசியா, பணிபுரியும் பெண்ணா... இன்னும் பலவாவும் நான் இருந்திருக்கிறேன். இந்த உலகத்தில் பல விஷயங்களைப் பார்த்துக்கிட்டிருக்கேன்... பல நஷ்டங்கள்... பல வெற்றிகள்... பல புதிய நண்பர்கள்... இப்படி நான் சந்திச்ச விஷயங்கள் நிறைய!

'கண்மணி அன்போடு...’ கௌதமி!

நடிகைனா, அவங்க வேற ஏதோ ஒரு லோகத்தில் இருக்கறது போல ஒரு பிரமை வந்துடுது இங்கே! நிஜம் அப்படியில்லை. எல்லாருக்கும் இருக்கும் கஷ்ட, நஷ்டங்கள் எனக்கும் உண்டு. எல்லாரும் அனுபவிக்கிற சுக, துக்கங்களை நானும் அனுபவிக்கிறேன். ஒரு விலைவாசி உயர்வோ, மழை, வெள்ளமோ, நல்லது - கெட்டதோ... எதுவா இருந்தாலும், அதோட பாதிப்பு எனக்கும் இருக்கு! என் வாழ்க்கையில் சவால்களைச் சந்திக்கும்போதும், மிகப் பெரிய வெற்றிகளைத் தலைக்குக் கொண்டுபோயிடாம கையாளும்போதும், எனக்கு உத்வேகமும் ஊக்கமும் ஆறுதலும் கிடைச்சுது, என்னைச் சுற்றி இருந்த பலரின் கதைகள்ல இருந்துதான்! அதையெல்லாம் உங்ககிட்ட பகிர்ந்துக்க விரும்பறேன்.

எனக்கு வந்த புற்றுநோயுடனான என் உறவைச் சொல்றப்போ, 'எப்படி இவ்வளவு ஓபனா நீ கேன்சர் பத்திப் பேசறே?’னு பலரும் கேட்பாங்க. இதில் கூச்சப்படுறதுக்கோ, மறைக்கிறதுக்கோ என்ன இருக்கு? எனக்கு முன்ன ரொம்பத் துணிச்சலோட அவங்க அனுபவங்களைப் பத்திப் பேசின பலரால, நான் எவ்வளவோ பலன் அடைஞ்சிருக்கேன். அதேவழியில் நானும் என் அனுபவத்தைச் சொல்றப்போ, என்னால சில பேருக்கு தெளிவும் நம்பிக்கையும் கிடைக்குமேங்கிற எண்ணம்தான் நான் வெளிப்படையா பேசறதுக்குக் காரணம்! இதன் மூலமா யாராவது ஒருத்தரோட வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டா கூட, அதுவே எனக்குப் போதும்!

ஒரு குடும்பத்துக்கு அடித்தளமா இருந்து, இதன் மூலமா சமூகத்துக்கும் பலமான அஸ்திவாரமா இருக்கிற பெண்களையும் யுவதிகளையும் வலிமைமிக்க, தன் காலில் நிற்கக் கூடிய சுதந்திர உணர்வு மிக்க பெண்களா பார்க்கணும்ங்கிறது என் கனவு. லட்சக்கணக்கில் இருக்கும் அவள் வாசகிகளான உங்களோடு தொடர்ந்து பேசப்போறேன்னு நினைக்கறப்போ... என் கனவு நனவாகும் சாத்தியம் தெரியுது!

இந்த இடம்தான் நான் விரும்பினது.. நாம மனம் திறந்து பேசக்கூடிய, அனுபவங்களைப் பகிர்ந்துக்கக் கூடிய, பரிமாறிக்கக்கூடிய, கத்துக்கக்கூடிய ஒரு முற்றம் இது. இங்கே நாம சேர்ந்து சிரிக்கலாம்... சேர்ந்து அழலாம்... வாழ்க்கையை அனுபவிச்சு ரசிக்கலாம். நாம ஒருத்தரோட ஒருத்தர் பேசிக்கிறப்போ, நம்மால சாதிக்க முடியாதது எதுவுமே இல்லைங்கிறது புரியும்.

வயசான பெரியவங்களுடைய அறிவும் ஞானமும் வீட்டுல இருக்கிற பெண்ணுங்ககிட்ட இன்னும் இருக்கு. அது பாட்டிக்கிட்டேயிருந்து அம்மாவுக்கு, அப்புறம் மகளுக்குனு வழிவழியா வந்துக்கிட்டே இருக்கு. இந்த அனுபவங்களையும் அறிவையும் நாம ஒரு குடும்பமா இந்த உலகத்தில் தொடர்ந்து எடுத்துட்டுப் போவோம். இங்கே என் கதை உங்களுடையது... உங்க கதை என்னுடையது!

- பேசுவோம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism