Election bannerElection banner
Published:Updated:

மிரட்டும் மூட்டு வலி... விரட்டுவது எப்படி?

ஃபாலோ பண்ண வேண்டிய ஃபார்முலாக்கள்ஹெல்த்சா.வடிவரசு, படம்: கு.பாலசந்தர் 

''மூட்டு வலி... இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, சமீப ஆண்டுகளாக பலரையும் வாட்டுகிறது'' என்கிறார்கள் மருத்துவர்கள்.

இதற்கான காரணம், சிகிச்சை, அதற்கான செலவுகள், மூட்டுவலி வராமல் தவிர்ப்பதற்கான வழிகள் பற்றியெல்லாம் தகவல்கள் வழங்குகிறார், சென்னையைச் சேர்ந்த மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வேல்முருகன்.

மிரட்டும் மூட்டு வலி... விரட்டுவது எப்படி?

''மூட்டு வலி வயதானவர்களுக்கு வரக்கூடிய பிரச்னை என்பதில்லை. மிக அதிக வேலை, அல்லது மிகக் குறைந்த வேலை என்றிருக்கும் எந்த வயதினரும் மூட்டு வலியை சந்திக்க நேரலாம். பெரும்பாலும் 45 வயதைக் கடந்தவர்களுக்கு மூட்டு எலும்புகள் தேய்மானம் அடைவதால், மூட்டு வலி ஏற்படலாம். மெனோபாஸ் கட்டத்தை தாண்டிய பெண்களுக்கும் இப்பிரச்னை வர அதிக வாய்ப்புள்ளது. மிக அதிக மற்றும் குறைவான வேலை செய்வது, சத்தான உணவும் போதிய உடற்பயிற்சியும் இல்லாமல் இருப்பது என வாழ்க்கை முறையும் இப்பிரச்னைக்கு முக்கியக் காரணமாகிறது.

டி.பி, சர்க்கரை, சொரியாசிஸ், எதிர்ப்புசக்தி குறைவு உள்ளவர்களும் இந்நோய்க்கு இலக்காகலாம். சிலருடைய கால்களில் ஏற்படும் புண்கள் சரிவர கவனிக்கப்படாமல் செப்டிக் ஆகி, அப்பகுதியில் உள்ள மூட்டுப்பகுதி பாதிக்கப்பட்டு பிரச்னை வரவும் வாய்புள்ளது. ஐ.டி நிறுவனங்களில் பணிபுரிவோர்

8 மணி நேரத்துக்கும் மேலாக ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதால், அவர்களுக்கும் மூட்டுவலி வர அதிக வாய்ப்பிருக்கிறது'' என்று காரணங்களை அடுக்கிய டாக்டர், மூட்டு வலியில் இருந்து தற்காத்துக்கொள்ள செய்ய வேண்டியவற்றைக் குறிப்பிட்டார்.

மூட்டுக்கு அவசியம் மூவ்மென்ட்!

''கிராமத்தில், வாசல் தெளித்துக் கோலம்போட, மாடுகட்ட, வீடுகூட்ட என்று பலதரப்பட்ட வேலைகளைச் செய்யும் பெண்களுக்கும், வயல்களில் தினம் வேலை செய்யும் ஆண்களுக்கும், அத்தனை எலும்புகளையும் இயக்க வைக்கும்விதமாக உடற்பயிற்சியானது கிடைத்துவிடுகிறது. சாப்பிடும் சத்தான உணவும் ஆரோக்கியமாக வைக்கிறது. ஆனால், நகரவாசிகளுக்கு உடல் இயக்கம் குறைந்துவிட்டது. அப்படியே செய்தாலும் டிரெட்மில், அப்டமன் பயிற்சி என உடலின் சில எலும்புகளுக்கு மட்டும் வேலை தரும் பயிற்சிகளையே செய்கிறார்கள். உடலில் உள்ள எலும்புகளுக்கு வேலை கொடுத்துக்கொண்டே இருந்தால்தான் இயக்கம் சீராக இருக்கும். அதேசமயம் வலுவை மீறிய வேலையையும் தரக்கூடாது.

மூட்டு வலிக்கு தீர்வு!

குழந்தைகள் கால் வலிக்கிறது என்றால், சரியான ஓய்வே போதுமானது. 18 வயதைக் கடந்தவர்கள் என்றால், கால்சியம் சத்து மிகுந்த கீரை, பால், முட்டை, மீன் போன்றவற்றை சாப்பிட வேண்டும். தினமும் மிதமான உடல் பயிற்சி செய்ய வேண்டும். வைட்டமின்-டி கிடைக்க, காலை 10 மணி முதல் மதியம் 3 மணிக்குள் தினமும் 30 நிமிடமாவது வெயிலில் உலாவ வேண்டும். சர்க்கரை வியாதிக் காரர்களுக்கு மூட்டு வலி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் தினமும் உடற்பயிற்சி அல்லது நடைபயிற்சி அவசியம்.

அறுவை சிகிச்சை அவசியமா?

மிரட்டும் மூட்டு வலி... விரட்டுவது எப்படி?

மூட்டு வலி பிரச்னை உள்ளவர்கள், காலம் கடத்தாமல் மருத்துவர்களிடம் செல்ல வேண்டும். இதில் 90 சதவிகிதம் பேருக்கு மருந்து, மாத்திரை, உடற்பயிற்சி, உணவு, வாழ்க்கை முறை மாற்றம் உள்ளிட்டவை மூலமாக சரிபடுத்தக்கூடும். சிகிச்சை அளிக்க முடியாதபடி மூட்டு தேய்மானத்தால் எலும்பு கோணலாகி இன்னும் பலவித பாதிப்புகளோடு இயக்கமும் குறைந்து, சரிபடுத்தக்கூடிய கட்டத்தை கடந்துவிட்டால், அறுவை சிகிச்சையைத் தாங்கும் தகுதியுடன் உடல் இருக்கிறதா என்கிற ஆய்வுக்குப் பிறகு, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப் படும்.  

எவ்வளவு செலவு?

பொதுவாக ஒன்றரை லட்சம் முதல் மூன்று லட்சம் வரை செலவாகக்கூடிய இந்த மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை, அரசு வழங்கும் காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாகவும் செய்துகொள்ளலாம். இந்த மாற்று மூட்டின் ஆயுட்காலம் 20 - 25 ஆண்டுகள்தான். பிறகு, இதேபோன்றதொரு அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம்'' என்று எளிதாக விஷயங்களைப் புரியவைத்தார் டாக்டர் வேல்முருகன்.

மிக அதிக வேலைக்கும், மிகக் குறைந்த வேலைக்கும் குட்பை; சத்தான உணவுக்கும் மிதமான உடற்பயிற்சிக்கும் வெல்கம். இந்த எளிய ஃபார்முலா... மூட்டு வலியை விரட்டும் என்றால், ஃபாலோ பண்ணலாம்தானே?!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு