Published:Updated:

ஸ்ரீமஹாலக்ஷ்மி கடாக்ஷம்!

ஆன்மிகம்வேளுக்குடி கிருஷ்ணன்

'லக்ஷ்மி கடாக்ஷம் கிடைக்க வேண்டும்' என்கிற ஆசை யாருக்குத்தான் இருக்காது. இப்படி லக்ஷ்மி பிராட்டியாரின் கருணை கிடைத்துவிட்டால், சகல சௌபாக்யங்களும் சந்தோஷமும் நிறைந்ததாக வாழ்க்கை வாசம் வீசுமே! பிராட்டியாரின் கருணை கடாக்ஷம் நமக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காக,

'லக்ஷ்மீம் க்ஷீரஸமுத்ரராஜ தனயாம்
ரங்க தாமேஸ்வரீம்
தாஸீபூத ஸமஸ்த தேவ வனிதாம்
லோகைக தீபாங்குராம்'

என்கிற ஸ்லோகத்தைச் சொல்லிப் பிரார்த்திக்கிறோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஸ்ரீமஹாலக்ஷ்மி கடாக்ஷம்!

மஹாலக்ஷ்மிக்கு என்று எத்தனையோ ஸ்லோகங்கள் உண்டு. தவிர, தியான ஸ்லோகங்களும் உண்டு. தியான ஸ்லோகத்தில் மஹாலக்ஷ்மியின் எழிலார்ந்த வடிவம் விவரிக்கப்படும். பிரார்த்தனை ஸ்லோகத்தில் மஹாலக்ஷ்மியின் கருணா கடாக்ஷம் நமக்கு விளங்கும். மஹாலக்ஷ்மி எங்கு பிறந்தாள், எப்படி வளர்ந்தாள், எப்படி வாழ்கிறாள், அவளுக்கு இந்த சம்பிரதாயத்தில் என்ன முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பவற்றையெல்லாம் விளக்குவதே இந்த 'மஹாலக்ஷ்மி கடாக்ஷம்'!

பெண்கள் கல்யாணம் வரை பிறந்த வீட்டில் இருப்பார்கள். கல்யாணத்துக்குப் பிறகு புகுந்தவீடே, அவர்களுடைய வீடாகிவிடும். தீபாவளி, பொங்கல் போன்ற சமயங்களில் வேண்டுமானால், பிறந்த வீட்டுக்கு வந்து சீர்பெற்றுச் செல்லலாம். இப்படி மஹாலக்ஷ்மிக்கு பிறந்த வீடு திருப்பாற்கடலாகவும், புகுந்த வீடு வைகுண்டமாகவும் இருந்தாலும், அவள் எப்போதும் நிரந்தரமாக இருப்பது எங்கே தெரியுமா? ரங்கத்தில்தான்! அதனால்தான் 'ரங்க தாமேஸ்வரீம்' என்று அஷ்டோத்ர சத நாம ஸ்தோத்ரத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது.

தீபத்தின் ஒளியானது தன்னை மட்டும் வெளிப்படுத்திக்கொள்வதில்லை. தன்னைச் சுற்றி இருப்பவற்றையும் வெளிப்படுத்துகிறது. அதுபோல்தான் மஹாலக்ஷ்மியும்! தன்னை வெளிப்படுத்திக்கொள்வதுடன், தன்னைச் சரண் அடைந்தவர்களையும் சிறப்புறச் செய்வாள்! அவளுடைய திருவடிகளைப் பற்றிக்கொள்ள யாருடைய சிபாரிசும் தேவையில்லை. அவளுடைய கருணா கடாக்ஷத்தின் மகிமைகளைச் சொல்லி பிரார்த்தித்துக்கொண்டோம் என்றால், அவளுடைய திருவடிகளை நமக்குக் கொடுத்துவிடுவாள்!

ஹரிஹர பிரஹ்மாதி தேவர்களாலும் சேவித்து வணங்கப்படுகின்ற அந்த மஹாலக்ஷ்மியை போற்றிப் பணிந்து, அவளுடைய கருணா கடாக்ஷம் நமக்கெல்லாம் தொடர்ந்து கிடைக்கப் பிரார்த்தித்தபடி, மஹாலக்ஷ்மி வைபவத்தை தொடர்ந்து தரிசிப்போம்.

- அருள் பொங்கும்...

ஸ்ரீமஹாலக்ஷ்மி கடாக்ஷம்!

வேளுக்குடி கிருஷ்ணன்... பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர். இவருடைய தந்தை வரதாச்சாரியார்தான் இவருக்கு குரு. சார்ட்டர்டு அண்ட் காஸ்ட் அக்கவுன்டன்ட் பட்டம் பெற்று, பன்னாட்டு நிறுவனத்தில் உயர் அதிகாரியாக இருந்தவர், 1996-ல் அதிலிருந்து விலகி, முழுக்க ஆன்மிகத்தின் பக்கம் திரும்பிவிட்டார். தமிழ், சம்ஸ்கிருதம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளையும் கற்றறிந்தவர். நாலாயிர திவ்யபிரபந்தங்களையும் ஆண்டாளின் திருப்பாவையையும் சேர்த்து மனனம் செய்தவர். பகவத் கீதை, ஸ்ரீமத் ராமாயணம், ஸ்ரீமத் பாகவதம், விஷ்ணு புராணம், விஷ்ணு சஹஸ்ரநாமம், உபநிஷதங்கள், புராணங்கள் என ஆழ்ந்த புலமைமிக்கவர்.

சொல்லின் செல்வர், ஸ்ரீராமானுஜ சேவாஸ்ரீ, ரஹஸ்யார்த்த விவ்ருதி விகஷணர் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றிருக்கும் இவர், 'கண்ணனின் முகங்களுள் ஏழு’, 'நான் கண்ட நல்லது’ ஆகிய நூல்களையும் எழுதியிருக்கிறார். பல்வேறு தலைப்புகளிலான இவருடயை உபந்நியாசங்கள், குறுந்தகடுகளாக வெளியிடப்பட்டுள்ளன. இந்தியா மட்டுமின்றி, சிங்கப்பூர், மலேசியா, பாங்காக், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, துபாய், மஸ்கட், பஹ்ரைன், லண்டன் என பல இடங்களில் ஆன்மிக உபநியாசத்தை எடுத்துச் சென்று கொண்டிருப்பவர். ஸ்டேன்ஃபோர்ட் யுனிவர்சிட்டி மற்றும் டென்வர் லைப்ரரி ஆகியவற்றில் உபந்நியாசம் நிகழ்த்தியது மைல்கல். அறப்பணி மற்றும் கல்வி நிதியுதவிகளை செய்துவருபவர்.