Published:Updated:

''மாத்தி யோசிச்சா... மகத்தான வெற்றி!’'

டெய்லரிங்மித்ரா, படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

''மாத்தி யோசிச்சா... மகத்தான வெற்றி!’'

டெய்லரிங்மித்ரா, படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

Published:Updated:

டிப்புக் கலையாத புதுத் துணியைத் தைப்பதற்கு நூற்றுக்கணக்கில் கடைகள் உள்ளன நம் ஊரில். பழைய, சாயம் போன அல்லது அளவில் பெரியதாகிப் போன உடைகளை மாற்றித் தைத்துத் தருவதற்குத்தான் தையல்காரர்கள் கிடைக்கமாட்டார்கள். ஆனால், சென்னை, மயிலாப்பூர், லஸ் கார்னரில் இருக்கும் 'ரீ-ஸ்டிட்ச்’ல், கோடி ரூபாய் கொடுத்தால்கூட புதுத்துணியைத் தைக்க மாட்டார்கள். 'ஒன்லி ஆல்டரேஷன்’ என்பதுதான் அவர்களின் தொழில் மந்திரம்!

ஆல்டரேஷனுக்காக வந்திருந்த சுடிதார்கள் மற்றும் பேன்ட், சட்டைகளே ஹேங்கர் முழுக்கத் தொங்கிக்கொண்டிருக்க, ஒருவர் உடைகளைப் பிரிக்க, மற்றொருவர் பிரித்தவற்றை வெட்ட என சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது அந்தக் கடையின் அலுவலகம். புத்துணர்ச்சியுடன் நம்மிடம் பேசிய அதன் உரிமையாளர் சசிகலா, ''மூணு தலைமுறைகளா, எங்க குடும்பத் தொழிலே தையல்தான். எங்க அப்பா, மாமனார், கொழுந்தனார்கள், நாத்தனார் வீட்டுக்காரர்னு எல்லாருமே டெய்லர்ஸ். கணவர் முருகதாஸ் மட்டும் பேங்க்ல வேலை பார்க்கிறார். அவரும் ஓய்வுநேரத்தில் தையல் வேலைகள் பார்ப்பார். இந்த ஊசியும் நூலும்தான் எங்களுக்கு சோறு போடுற தெய்வங்கள். கல்யாணத்துக்கு அப்புறம், தையல் கடை ஆரம்பிக்க யோசிச்சப்போ, 'புதுத்துணி தைக்கிறதுக்கு நிறைய பேர் இருக்காங்க. ஆனா, செஞ்சு தர ஆளில்லாத ஆல்டரேஷன் வேலைகளுக்காகவே நாம ஏன் ஒரு கடையை ஆரம்பிக்கக் கூடாது?’னு என் கணவர் கேட்டார். மத்தவங்க செய்யத் தயங்குற, செய்ய மறுக்குற அல்லது சோம்பேறித்தனப்படுற அந்த பலவீனத்தையே பலமா எடுத்துக்கிட்டு கடையை ஆரம்பிச்சோம். கடகடனு கஸ்டமர்கள் கிடைச்சாங்க. ஏன்னா, அந்தளவுக்கு இந்த வேலைகளுக்கான தேவை இருந்ததுதான்'' என்றவர்,

''மாத்தி யோசிச்சா... மகத்தான வெற்றி!’'

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''எல்லா வகையான ஆல்டரேஷன் வேலைகளையும் செய்வோம். பேன்ட் இடுப்புப் பகுதியில ஆல்டரேஷன், பொதுவா யாரும் பண்ண மாட்டாங்க. நாங்க செய்வோம். இதுக்காகவே எங்க கடைக்கு நிறைய கஸ்டமர்ஸ் வர்றாங்க. பிராக்டிகல் பிரச்னை இருக்கிறதால, பிளவுஸ், உள்ளாடைகளைத் தவிர்த்து, மத்தபடி சுடிதார், நைட்டி, டாப்ஸ், குர்தி, பாட்டம், பேன்ட், ஜீன்ஸ் எதுவா இருந்தாலும், முழுசாப் பிரிச்சுட்டு தைக்கிறது, பெரிய சைஸ் டிரெஸ்ஸை சின்னதாக்குறது, சுடிதார் டாப்ஸ் கழுத்து பெரிசாயிடுச்சுனா ஏதாவது டிசைன் பண்ணி அளவா தைச்சுக் கொடுக்கிறதுனு நிறைய பண்ணிட்டு இருக்கோம். மாடியில் யூனிட் இருக்கு'' என்றவர், நம்மையும் அழைத்துக்கொண்டு படி ஏறினார். சிறிய இடத்தில் ஏழெட்டு மெஷின்கள் போடப்பட்டு, ஆண்களும் பெண்களும் பரபரப்பாகத் தைத்துக்கொண்டிருந்தனர்.

''மாத்தி யோசிச்சா... மகத்தான வெற்றி!’'

''அஞ்சு டெய்லர்ஸ், 3 ஆபீஸ் ஸ்டாஃப் வேலை செய்றாங்க. இந்த வேலைக்கு ஆள் கிடைக்கிறது கஷ்டம். ஆனாலும் ரொம்ப சின்ஸியரா வேலை செய்ற இந்தமாதிரி ஸ்டாஃப்தான் எங்களுக்குப் பெரிய வரம். உபயோகிக்க முடியாத பழைய உடையை, திரும்பப் போட்டுக்கற மாதிரி 'ஆல்டர்’ பண்ணித் தர்றதுக்கு, அதிக கற்பனை சக்தியும் கிரியேட்டிவிட்டியும் வேணும். அதுவும் பழைய லுக் போகாம, பண்ணித் தரணும். சில ஷர்ட் எல்லாம் நிறம் நல்லா இருக்கும், காலர் மட்டும் வெளுத்திருக்கும். இதுமாதிரி ஷர்ட்களை, காலரைப் பிரிச்சு, ரிவர்ஸ் பண்ணி, பழைய அசல் சட்டை மாதிரியே கொண்டுவந்துடுவோம்.

புது உடைகள்ல சின்னதா கிழிசல் இருந்தா, அதே நூல்ல 'டார்னிங்’ பண்ணித் தர்றதும் உண்டு. சைஸ் ஆல்டரேஷன், பாக்கெட் தைக்கிறது, ஜிப் வெச்சுத் தைக்கிறது, லுங்கி, புடவை ஓரம் அடிக்கிறதுனு... நிறைய வரும். வேலையைப் பொறுத்து 25 ரூபாயிலிருந்து 250 ரூபாய் வரை சார்ஜ் பண்றோம்'' என்ற சசிகலாவுக்கு தொழிலில் முதுகெலும்பாக இருப்பவர், கணவர். இந்தத் தம்பதிக்கு பல் டாக்டர், இன்ஜினீயர், சி.ஏ மாணவி என்று மூன்று மகள்கள்.

''நடுத்தர வர்கம் மற்றும் வசதி குறைஞ்சவங்களை மனசுல வெச்சுத்தான் இதைத் தொடங்கினோம். இப்போ எங்ககிட்டே வர்றவங்க எல்லாம் வசதியானவங்களும் அப்பர் மிடில் கிளாஸும்தான். ஃபாரின் கஸ்டமர்ஸும் நிறைய. அங்கே இருந்து வர்றப்போ, பெட்டி நிறைய பேன்ட், சட்டைகளை அள்ளிட்டு வந்து ஃபிட்டா தைச்சுட்டுப் போவாங்க. சின்ன வயசுல எங்ககிட்ட டிரவுசரை ஆல்டர் பண்ணிப் போட்டுக் கிட்டவங்களோட வாரிசுகளுக்கும் இப்போ தைச்சுக்கிட்டிருக்கோமே!'' என்று புன்னகை மாறாமல் சொல்லும் சசிகலா, தான் மாற்றியோசித்த தொழி லில், தற்போது வெள்ளி விழா கடந்து பயணித்துக்கொண்டிருக்கிறார் வெற்றியுடன்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism