Published:Updated:

''மகளே என் ரோல் மாடல்!''

ஒரு தாயின் நெகிழ்ச்சி க்ளிக்ஸ்சைபர்சிம்மன்

''மகளே என் ரோல் மாடல்!''

ஒரு தாயின் நெகிழ்ச்சி க்ளிக்ஸ்சைபர்சிம்மன்

Published:Updated:

பேஸ்புக்கும் இணைய உலகமும் கொண்டாடி வரும் அந்தப் புகைப்படங்களின் மையமாக இருக்கும் குட்டி தேவதையின் பெயர், வொய்லெட். 5 வயதாகும் வொய்லெட்டின் தாயான ஹோலி ஸ்பிரிங், ஒரு புகைப்படக் கலைஞர். கேமராவை தொழிலாகக்கொண்ட ஹோலி ஸ்பிரிங், தன் செல்ல மகளை விதம்விதமாக புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக்கில் பகிர்ந்து வருகிறார்.  

ஒரு தாய், தன் மகளை விதம்விதமாக படம் எடுப்பதும், அதை ஆர்வத்துடன் பகிர்ந்துகொள்வதும் இயல்புதான். அதிலும் அந்த அம்மா புகைப்படக் கலைஞராக இருக்கும்போது இதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை. ஆனால், இந்தப் புகைப்படங்கள்... ஒரு தாயின் போராட்டப் பாசத்தைச் சொல்லும் பதிவுகள். அந்தக் குட்டி தேவதை, உட லளவில் பல பிரச்னைகளைச் சுமக்கும் ஓர் அசாதாரண சிறுமி. அதனால்தான் இந்தப் புகைப்படங்கள் அழகை மீறிய ஆன்மாவோடு கவர்கின்றன.

''மகளே என் ரோல் மாடல்!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஐந்து வயதாகும் வொய்லெட், பிறவிக் குறைபாடு காரணமாக முழுவதும் வளர்ச்சி அடையாத ஒரு கையுடன் பிறந்தவர். அதோடு ஒரு வகையான வயிறு மற்றும் சிறுகுடல் தொடர்பான நோயாலும் பாதிக்கப்பட்டவர். அறுவை சிகிச்சையில் அவர் பிழைத்தது, மறுபிறவி. தொடர்ந்தும் வாழ்க்கை சோதனையானதாகவே இருக்கிறது. மகள் அதிக காலம் வாழ முடியாமல் போய்விடும் அபாயம் இருக்கிறது என்பதைவிட தாயுள்ளத்தை தின்னும் ரணம் எது?

''மகளே என் ரோல் மாடல்!''

இந்த உணர்வுக்கு ஆளான ஹோலி ஸ்பிரிங்கிடம், அவருடைய கணவர், 'அவள் நினைவுகளை நம்முடனேயே நிறுத்த, நமக்கு மகிழ்வூட்டும் அவளுடைய ஒவ்வோர் அசைவையும் புகைப்படமாகப் பதிவுசெய்...’ என கேமரா வாங்கிக் கொடுத்தார். அதிலிருந்து க்ளிக்... க்ளிக்... க்ளிக்தான்! தாய் எடுத்த படங்களில் எல்லாம் வொய்லெட், குட்டி தேவதை போல, கற்பனை உலகங்களின் நடுவே காட்சி அளிக்கிறார். அந்த கற்பனை உலகங்கள் ஒவ்வொன்றும் இந்த தேவதையின் உள்ளத்தில் இருந்து உருவானவைதான்.

''ஆடை அணிவதில் அவளுக்கு அதிக ஆனந்தம் என்பதால், மகிழ்ச்சியோடு பிடித்தமான உடை அணிந்து தயாராகிவிடுவாள். பின் தனது மனதில் தோன்றும் கற்பனைகளை விவரிப்பாள். அந்தக் கற்பனைகளை நான் தனியே புகைப்படமாக எடுத்துக்கொள்வேன். பின்னர் அந்தப் புகைப்படங்கள் நடுவே மகளை இடம்பெற வைத்து, புதிய புகைப்படத்தை உருவாக்குவேன்!'' என்கிறார் ஹோலி ஸ்பிரிங்.  

படங்களில், சிண்ட்ரல்லா போல ஒரு படகின் மீது அமர்ந்திருக்கிறாள் வொய்லெட்; ஒட்டகச்சிவிங்கியைப் பார்த்து வியக்கிறாள், தேவதைபோல நடுக்காட்டில் கைநீட்டி நிற்கிறாள்; ஒரு பட்டாம்பூச்சிபோல நிலவை எட்டிப்பிடிக்கிறாள்! இப்படி இன்னும் பல காட்சிகளில் வசீகரிக்கிறாள் அந்த தேவதை.

''மகளே என் ரோல் மாடல்!''

''இரண்டு வயதானபோது, தன்னுடைய கை எப்போது வளரும் என என்னிடம் கேட்டாள். அந்தக் கை வளரவே வளராது எனும் உண்மையைச் சொல்ல முடியாமல் நான் அழுது தவித்தேன். ஆனால், நாளாக ஆக அந்த நிலையை ஏற்றுக்கொண்டு, தன்னை மாற்றிக்கொண்டாள். 'எனக்கு ஏன் இப்படிம்மா..?’ என்ற கேள்விகள் எதுவும் இல்லை. அந்தப் பிஞ்சு உள்ளம், வாழ்வின் நிதர்சனத்தை ஏற்றுக்கொண்ட பக்குவத்தைப் பார்த்துதான், எனக்கும் அந்த ஏற்புத்தன்மை வந்தது. நான் எடுக்கும் படங்களுக்கு மாடல் மட்டும் அல்ல, எனக்கான ரோல்மாடலும் அவள்தான்!'' என்கிறார் ஹோலி ஸ்பிரிங்.

மகளுக்காக புகைப்படங்கள் மூலம் புது உலகை உருவாக்கித் தரும் இந்த தாயின் முயற்சியை இணையத்தில் படித்து, லட்சக்கணக்கானோர் அந்தக் குட்டி தேவதையைக் கொண்டாடி மகிழ்கின்றனர். ''எப்போதும் உங்கள் குழந்தைகளின் சிறந்தவற்றை வெளிக்கொணர்வதில் நேரத்தை செலவிடுங்கள், அவர்களுக்கு சுவாரஸ்யத்தை அளியுங்கள், அவர்கள் உங்களுக்கு மறக்க முடியாத தருணங்களை அளிப்பார்கள்!''

- தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஹோலி ஸ்பிரிங் வைத்திருக்கும் கோரிக்கை இது!

எத்தனை அழகான கோரிக்கை!

ஹோலி ஸ்பிரிங்கின் ஃபேஸ்புக் பக்கம்: https://www.facebook.com/HSpringPhotography?ref=stream

ஹோலி ஸ்பிரிங்கின் இணையதளம்: http://www.hollyspringphotography.com/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism