பெண்ணை சக்தியா வெச்சி வழிபடும் நவராத்திரிக் கொண்டாட்டங்கள் முடிஞ்சிருக்கும் நேரம் இது! இதிலிருந்தே பேச்சை ஆரம்பிக்கலாம்னு நினைக்கிறேன். பெண்ணை தெய்வமா ஆராதிக்கிறோம், வணங்குறோம், கொண்டாடுறோம். நம்ம வீட்டில் பெண் பிறந்தா, 'மகாலட்சுமி வந்து பிறந்திருக்கா!’னு குஷியாகிறோம். ஆனா, பெண் சிசுவை எப்படியெல்லாம் வளர்த்தெடுக்கிறோம், பாதுகாக்கிறோம்னு பார்த்தா... எல்லாமே நேர்மாறா இருக்குங்குறதுதானே நிஜம். பெண்ணை, 'அம்மா, தாயே'னு கையெடுத்துக் கும்பிடுற அதே வாயும் கையும்தான்... அடக்கி, ஒடுக்கி மட்டம் தட்டுது.

'கண்மணி அன்போடு...’ கௌதமி! - 2

ஒரு பெண், தன் ஆசைக்காக படிக்கிறது, தனக்குப் பிடிச்ச மாதிரி டிரெஸ் பண்ணிக்கிறது, யாரைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு முடிவெடுக்கிறது, எப்போ குழந்தை பெத்துக்கிறது, குழந்தையை எப்படி வளர்த்தெடுக்கிறது... இது எல்லாத்துலயுமே அவளோட முடிவுனு பார்த்தா, பெரும்பாலும் இல்லைங்கிறதுதானே நடைமுறையா இருக்கு. சுத்தி இருக்கிறவங்க, குடும்பத்துப் பெரியவங்க, பொதுவா சமுதாயம்ங்கிற ஒரு முகமில்லாத அமைப்பு - இவங்களோட நடைமுறைகளுக்குக் கட்டுப்படற மாதிரிதான் இருக்கு! 'இவங்க என்ன சொல்வாங்களோ... அவங்க என்ன நினைச்சுக்குவாங்களோ’ன்னு பயந்து பயந்து, மத்தவங்களுக்காகவே வாழற மாதிரி ஆயிடுது! நான் ஒட்டுமொத்தமா எல்லாரையும் குறை சொல்றேன்னு நினைக்காதீங்க... இது எல்லாருக்கும் பொருந்தாதுன்னாலும், நம்மைச் சுத்திப் பல இடங்கள்ல இருக்குங்குறது மறுக்க முடியாத உண்மை. அது 80 சதவிகிதமா இருந்தாலும் சரி... ஒரு சதவிகிதமா இருந்தாலும் சரி... அதைக் கவலையோடு கவனிச்சு, அதைப் பத்திப் பேசி, அதுக்காக ஏதாவது செய்றதுக்கு நாம கடமைப்பட்டிருக்கோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெண்கள், எத்தனை உயரத்தில் இருந்தாலும், 'பலவீனமான பாலினம்’ங்கிற சமூகப் பார்வை, மாறினபாடில்லையே! சம உரிமை, சம வாய்ப்புகள் கொடுக்கணும்னு கேட்கறதையே, தவறான நோக்கத்துலதானே புரிஞ்சுட்டிருக்கு இந்த சமூகம். இப்படி யாராச்சும் குரல் கொடுத்தா... 'பெண்ணியம்’ பேசுறதா கிண்டல் அடிக்கிறாங்க. சகஜீவனா, உரிமைக்காக எழுப்புற குரல்தான் இதுங்கிறத ஏன் புரிஞ்சுக்க மறுக்கிறாங்கனு தெரியல. இப்படி பேசுற பெண்களை, 'ஃபெமினிஸ்ட்'னு முத்திரை குத்தி, 'வெறிபிடிச்ச பொம்பளைங்க... அவங்களுக்கு ஆண்களைக் கண்டாலே அறவே பிடிக்காது, அது, இது’ன்னு  பிரசாரம் செஞ்சு, அந்தப் பெண்களோட முயற்சிகளை முடக்கிடறாங்க. அதனால, பெண்ணியத்துக்காகக் குரல் எழுப்ப நினைக்கிறவங்க கூட, பயந்து பேசாம விட்டுடறாங்க.

'என்னடா, டிராக் வேற மாதிரி போகுதே!’னு யோசிக்கிறீங்களா?

உண்மைதான்.... இந்த டாபிக் பத்தி ஆரம்பிச்சா.... பேசிட்டே போகலாம். ஆனா, அதைப் பத்தி பேசப் போறதில்ல. இப்ப நான் பேச வந்த விஷயம்... சின்னஞ்சிறு மனுஷங்களைப் பத்திதான்!

சமீபத்தில, ஒரு நண்பரோட பேசிட்டிருந்தப்ப... இந்தக் காலக் கல்வி முறை பத்திப் பேச்சு வந்துச்சு.

''கிரேடிங் சிஸ்டத்தையும் மதிப்பெண்ணையும் வெச்சுதான் குழந்தை புத்திசாலியா இல்லையானு மதிப்பிடறாங்க’.

'ஒரு குழந்தைக்கு கணக்கு வரல, அந்தப் பாடத்தில் மார்க் கம்மியா வாங்கியிருக்குனா, அது என்ன முட்டாளா?'

'உலகம்னா என்னங்கிறதை இன்னும் சரியாகத் தெரிஞ்சுக்காத ஒரு குழந்தைகிட்ட, தன்னோட ஆளுமையை முழுமையா புரிஞ்சுக்கத் தெரியாத வயசில் இருக்கிற ஓர் உயிர்கிட்ட, 'நீ ஃபெயில் ஆயிட்டே’னு எப்படி சொல்லலாம்... இது எவ்வளவு கொடூரமான வார்த்தை!’'

'கண்மணி அன்போடு...’ கௌதமி! - 2

இப்படியே நீண்டுச்சு அந்த விவாதம்.

நிஜம்தானே... கணக்குப் பாடத்தில் தோற்கும் ஒரு குழந்தைக்கு, வேற ஏதாவது ஒரு பாடம் நல்லா வரலாம். இல்ல, வேற ஆர்வம் இருக்கலாம். 'இது நம்ம குழந்தைக்கு சரியானதுதானா... இது நம்ம குழந்தைக்கு நல்லா வருமா?’ - இதையெல்லாம் தெரிஞ்சுக்காம, நம்ம இஷ்டத்துக்குக் கட்டாயப்படுத்துறோம். கடைசியில தோல்விங்கிற மிகப்பெரிய விளைவை குழந்தை மேலயே போடுறோம். இது எவ்வளவு கொடுமை!

தோல்வி வரும்போது குழந்தைக்குத் தன்னம்பிக்கை கொடுத்தாதான், அடுத்தமுறை அது தோற்காது. ஒரு முறை தோற்றுப் போறப்போ, எதனால வந்தது அந்தத் தோல்வினு தவறுகளைப் புரியவெச்சோம்னா, அடுத்த முறை அந்தத் தவறை, அதுவே சரிபண்ணிக்க முடியும். அடுத்த காலடியை தானே எடுத்து வைக்கிறதுக்கான தன்னம்பிக்கையை நாமதான் கொடுக்க முடியும்! அந்தக் குழந்தைக்கு, தன்னம்பிக்கையோடு, வெற்றிகரமா வாழறதுக்கும் இப்படித்தான் கத்துக்கொடுக்க முடியும் நம்மால!

'கண்மணி அன்போடு...’ கௌதமி! - 2

இப்படியொரு நம்பிக்கை என் வீட்டுல கிடைச்சதுதான், இந்த கௌதமி, இன்னிக்கு இந்த இடத்துல இருக்கிறதுக்குக் காரணம்.

ஸ்கூல் ஃபைனல் முடிச்சுட்டு, இன்ஜினீயரிங் படிச்சேன். ஆனா, இதில் எனக்குப் பெரிய ஆர்வம் எல்லாம் இல்லை. எம்.பி.ஏ படிக்கணும்ங்கிறதுதான் ஒரே லட்சியமா இருந்துச்சு. ஏதாவது ஒரு யு.ஜி கோர்ஸ் முடிச்சாதான் எம்.பி.ஏ போக முடியும்ங்கிறதால... இன்ஜினீயரிங் என்ட்ரன்ஸ் எழுதினேன். மெரிட்ல ஸீட் கிடைச்சு சேர்ந்தேன். இன்ஜினீயரிங் படிச்சுட்டிருக்கப்பதான் சினிமா வாய்ப்பு! அம்மா, அப்பா, என்னை உட்கார வெச்சிப் பேசினாங்க. 'இது எல்லாருக்கும் கிடைக்காத வாய்ப்பு. உனக்குக் கிடைச்சிருக்கு... இது உனக்கு சரியா வருமா? இந்தத் துறையில் உன்னால தொடர்ந்து மேனேஜ் பண்ணமுடியும்னா, நாங்க முழுமையா உனக்கு சப்போர்ட் பண்றோம்’னு சொல்லி, சினிமாவின் சாதக, பாதகங்களை டிஸ்கஸ் பண்ணினாங்க. சினிமாவுக்கு வந்தேன்.

இதுலயெல்லாம் நானே முடிவெடுக்கற அளவுக்கு எங்க வீட்டில் எனக்கு சுதந்திரம் இருந்துச்சு. இந்த சுதந்திரம்... எல்லாருக்கும் கிடைக்கும்னு சொல்ல முடியாது. ஆனா, கிடைக்கணும்ங்கிறதுதான் என்னோட ஆசை!

இந்தக் காலத்துத் தாய்மார்கள் எக்கச்சக்க எதிர்பார்ப்புகளை மனசுல தேக்கி வெச்சுட்டிருக்காங்க. இதில் தப்பு இல்ல. குழந்தைகளோட எதிர்காலம் நல்லாயிருக்கணும்ங்கிறதுல ஒரு தாயைவிட வேற யாருக்கு அதிக அக்கறை இருக்க முடியும்! ஆனா, வளர்ந்த பிறகு, 'என்ன வாழ்க்கை?'னு சலிப்பு ஏற்படாத அளவுக்கு, அஸ்திவாரம் போடறதுக்கு நாம உறுதுணையா இருக்கணும்ங்கிறதுதான் முக்கியம். 'நாம இப்படி முடிவு எடுத்துட்டோமே’ங்கிற கவலையிலயே குழந்தைகளோட வாழ்க்கையின் பாதிநாள் வீணாக நாம காரணமாயிடக் கூடாது. குழந்தை எப்படி இருந்தாலும், அது நமக்கு உயிர் இல்லையா? அதனால ஆரம்பத்திலிருந்தே அதுக்கு சில அடிப்படை மரியாதைகளை நாம கத்துக்கொடுக்கிறது வழக்கம்... அதில், 'ப்ளீஸ், ஸாரி, தேங்க்யூ’ இந்த மூணு வார்த்தைகளையும் கத்துக் கொடுக்க மறக்கக்கூடாது.

ஆனா, இதைவிட முக்கியமான வார்த்தை, 'நோ’! குழந்தைக்குக் கண்டிப்பாக சொல்லித் தரவேண்டிய முதல் வார்த்தையே இதுதான். ஆமாம், 'எனக்கு இது வேண்டாம்... பிடிக்கல’னு தெளிவா சொல்லத் தெரியணும் குழந்தைக்கு.

'ஏற்கெனவே சாப்பாடு பிடிக்கல, அந்தக் காய் பிடிக்கல, இந்தக் காய் பிடிக்கல'னு எல்லாத்துக்கும் பிடிக்கல புராணம்தான் ஓடிட்டிருக்கு... இதுல இது வேறயா?'னு சலிச்சுக்காதீங்க. நான் சொல்ல வர்றது... 'எனக்கு வேண்டாம்... பிடிக்கல’னு ஒரு விஷயத்தை மறுக்குற உரிமையைக் குழந்தைக்குக் கொடுக்கணும்ங்கிறதுதான்.

'ஏன் வேண்டாம்னு சொல்லுது... ஏன் பிடிக்கல? உண்மையில் அதுக்குப் பின்னால ஏதாவது பிரச்னை இருக்கா?’னு யோசிக்கணும். அதை விட்டுட்டு, 'பிடிக்கலனு சொல்லுவியா?'னு கேட்டு, குழந்தையை உருட்டி, மிரட்டினா, 'எங்க அம்மா - அப்பாகிட்ட என் விருப்பமின்மையைச் சொல்ல முடியாது’ங்கிற நிலைக்குத்தான் அந்த குழந்தை தள்ளப்படும். இதுக்குப் பிறகு, அந்தக் குழந்தை, எதுக்குமே வாய் திறக்காது. யார்கிட்டயுமே தன் நிலையைச் சொல்ல முடியாத அந்த சூழ்நிலையில் குழந்தை ஸ்தம்பிச்சுப் போயிடும். விபரீதமா ஏதாவது நடக்கும்போதுதான், குழந்தை 'வேண்டாம்’னு மறுத்த உண்மையான காரணம் புரியும். ஆனா, அப்போ காலம் கடந்துரும்!

அது என்ன விபரீதம்?

- பேசுவோம்...

தொகுப்பு: பிரேமா நாராயணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism