ஹாலக்ஷ்மியை சரண் அடைந்துவிட்டால், அவள் திருவடிகளை அவளே நமக்குக் கொடுத்துவிடுவாள். ஆனால், பெருமாளின் திருவடியை அடைவதற்கு மஹாலக்ஷ்மியின் கடாக்ஷம் மிக அவசியம். அப்படியானால், மஹாலக்ஷ்மிதான் பெருமாளையும் பிரகாசப்படுத்துகிறாள் என்றுதானே அர்த்தம்! மஹாலக்ஷ்மியை பிரகாசப்படுத்த மற்றவர்களின் உதவி தேவை இல்லை. மற்றவர்களைப் பிரகாசப்படுத்த அவளுடைய அருள் கடாக்ஷம் அவசியம் தேவை. அதனால்தான் அவள் இந்த உலகத்துக்கெல்லாம் ஒரே விளக்காகத் திகழ்கிறாள்.  

'ஸ்ரீமந் மந்த கடாக்ஷ லப்த விபவ பிரம்மேந்திர கங்காதாரம்’

ஸ்ரீமஹாலக்ஷ்மி கடாக்ஷம்! - 2

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மஹாலக்ஷ்மி தன் கண்களை மெள்ள மெள்ளத் திறந்து கடாக்ஷிப்பதால்தான், பிரம்மா, இந்திரன் போன்ற தேவர்களும் தங்களுடைய பதவிகளை அடைந்திருக்கின்றனர்! 'மந்த கடாக்ஷம்’ என்றால் அரும்பு மெள்ள மெள்ள மலர்வதுபோல மஹாலக்ஷ்மியும் தன் தாமரைக் கண்களை மெள்ள மெள்ள திறந்து கடாக்ஷிப்பாளாம்.

இரண்டு பேர் அருகருகில் நின்றுகொண்டிருக்கும்போது, ஒருவரைக் குறிப்பிட்டு, ''இவரா! ரொம்ப குளிர்வா பேசுவார், நிதானமா பேசுவார், இவர் பேசும் பேச்சு நன்றாக இருக்கும்’ என்று சொல்லிவிட்டு நிறுத்திவிட்டால் என்ன அர்த்தம்? கூட இருப்பவர் இவருக்கு நேரெதிர் என்றுதானே அர்த்தம்? பிராட்டியாரின் பார்வை மென்மையும் குளிர்ச்சியும் பொருந்திய பார்வை என்று சொல்லிவிட்டு நிறுத்திவிட்டால், உடன் இருக்கும் பெருமாளின் பார்வை அதற்கு நேரெதிர் என்றுதானே பொருள். பெருமாள் தம்முடைய கண்களை சட்டென்று திறந்து நம்மைப் பார்த்துவிட்டால், ஐந்து அருவிகளும் நம் மேல் ஒருசேர விழுந்ததுபோல் திக்கித் திணறிப் போவோம்.

மஹாலக்ஷ்மி, முகுந்தனுக்கு மிகவும் பிரியமானவள். அதனால்தான் அவளை 'முகுந்த ப்ரியாம்’ என்று ஸ்தோத்திரம் செய்கிறோம். முகுந்தனுக்கு மிகவும் பிரியமாக இருக்கக்கூடிய பிராட்டியாரை, ஒருமுறை துர்வாச முனிவர் தரிசித்துவிட்டு, பிராட்டியார் தமக்கு அளித்த நவரத்ன மாலையுடன் திரும்பி வருகிறார். வழியில் தேவேந்திரன் தன்னுடைய வாகனமான ஐராவதம் என்ற வெள்ளை யானையின் மீது அமர்ந்தவனாக பவனி வந்துகொண்டிருந்தான். அவனைப் பார்த்த துர்வாசர், தாம் பிராட்டியாரிடம் பெற்ற நவரத்ன மாலையை இந்திரனுக்கு கொடுக்க நினைத்தவராக, மாலையை அவன் பக்கமாக நீட்டுகிறார். உடனே இந்திரன் என்ன செய்திருக்க வேண்டும்? யானையை விட்டு இறங்கி, முனிவரை வணங்கி மாலையைப் பெற்றுக்கொண்டிருக்க வேண்டும். அதுதானே முறையும்கூட! அவன் என்ன செய்தான் தெரியுமோ? யானையின் மீதிருந்தபடியே தன் வஜ்ராயுதத்தை நீட்டி, அதில் மாலையைப் பெற்று, யானையின் மத்தகத்தின் மேல் வைத்தான். அந்த மாலையை தன் தும்பிக்கையால் பற்றி இழுத்து கால்களில் போட்டு மிதித்தது யானை. இந்திரனின் இந்தத் தகாத செயலைக் கண்டு பொறுப்பாரா துர்வாச முனிவர்? அவர்தான் கோபத்துக்கும் சாபத்துக்கும் பெயர் பெற்றவர் ஆயிற்றே!

ஸ்ரீமஹாலக்ஷ்மி கடாக்ஷம்! - 2

''இந்திரனே, எந்தத் தேவியின் கடாக்ஷத்தினால் உனக்கு இந்த இந்திர பதவி கிடைத்திருக்கிறதோ, சாட்சாத் அந்த மஹாலக்ஷ்மி தேவியினால் எனக்குக் கிடைக்கப் பெற்ற மாலையையே நீ அவமதித்துவிட்டாய். எனவே, உன்னுடைய இந்திர பதவி உன்னை விட்டு நீங்கட்டும். உன்னுடைய ஐஸ்வர்யங்கள் எல்லாம் இல்லாமல் மறையட்டும்'' என்று சாபம் கொடுத்துவிட்டார்.

இறுமாப்புடன் நடந்துகொண்டதால் இந்திர பதவியை இழந்த இந்திரன், இழந்த பதவியைத் திரும்பப் பெறவேண்டுமானால் அந்த மஹாலக்ஷ்மி பிராட்டியை ஸ்தோத்திரம் செய்வதைத் தவிர வேறு வழி இல்லை என்பதை உணர்ந்தவனாக,

பத்மாலயாம் பத்மகராம் பத்மபத்ர நிபேக்ஷணாம்
வந்தே பத்மமுகீம் தேவீம் பத்மநாபப்ரியாமஹம்

என்று பலவாறாக மஹாலக்ஷ்மியை பிரார்த்தித்தான். இழந்த இந்திர பதவியை திரும்பவும் அடைந்தான்.

இழந்தவற்றை பெறுவதற்காக இந்திரன் சேவித்த ஸ்லோகம்... அனைவருக்குமானதுதான்.

'ஹரிஹர பிரம்மாதி சேவிதாம்’

மஹாலக்ஷ்மி பிராட்டியார் அனைத்து ஜீவன்களாலும் வணங்கப்படுபவள். தேவர்களாலும்கூட சேவிக்கப்படுபவள். அப்படி என்றால் ஹரியும் சேவிக்கிறாரா என்றால், ஆம் என்றுதான் சொல்ல வேண்டும். 'என்ன, கணவன் போய், மனைவியை சேவிக்கிறாரா?' என்று நினைக்கக் கூடாது. சேவை என்றால் காலைத் தொட்டு வணங்குவது என்று மட்டுமே பொருள் இல்லை. அன்பான பார்வையும்கூட சேவைதான். ஹரியாகிய பகவானுக்குப் பிரியமானவள் என்றபடியால் இவர்களெல்லாம் சேவிக்கிறார்கள்; மஹாலக்ஷ்மிக்கு தாசன் என்பதால் அந்த ஹரியும் அன்புடன் பார்க்கிறான் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

மனைவியாக இருந்துவிட்டால் மட்டும் போதாது, பிரியமான மனைவியாகவும் இருக்க வேண்டும். ஹரியின் பிரியத்துக்கு உகந்தவளாக அவள் இருப்பதால்தான், அவள் 'ஹரி வல்லபே’ என்று அழைக்கப் பெறுகிறாள். 'ஸ்ரீவல்லபேதீ, வரபேதீ தயாபரேதீ...’ என்று முகுந்த மாலையில் போற்றுகிறார் குலசேகர ஆழ்வார். 'ஸ்ரீவல்லபராக இருந்தால்தான் அதாவது பிரியத்துடன் கூடிய பிராட்டியாருடன் இருந்தால்தான் பெருமாள் வரதனாக வரம் தருபவராக இருப்பார். அவர் மட்டும் தனித்து இருந்தால் வரம் தரமாட்டார். கொடுக்கத் தூண்டும் பிராட்டி கூடவே இருக்கிறபடியால்தான் அவர் நாம் கேட்கும் வரங்களை நமக்குக் கொடுக்கிறார். இத்தகைய அருள்திறம் கொண்ட அவளுடைய திருவடித் தாமரைகளை எப்போதும் தியானிப்போம்.

- கடாக்ஷம் பெருகும்...

தொகுப்பு: க.புவனேஸ்வரி

பெரியகுடும்பினி!

மஹாலக்ஷ்மி தாயார் உலகம் முழுவதுக்கும் தாயார். அதனால்தான் அவள் 'த்ரைலோக்கிய குடும்பினீன்’ என்று போற்றப்படுகின்றாள். 'பகுகுடும்பி’ என்று சிலரைச் சொல்வது உண்டு. அப்படி என்றால், அவருக்கு நிறைய பிள்ளைகள், பெண்கள், பேரக்குழந்தைகள், உறவுக்காரர்கள், ஒன்றுவிட்ட சகோதர - சகோதரிகள் என்று எத்தனையோ பேர் இருப்பார்கள். அவர்கள் வீட்டில் ஒரு விசேஷம் என்றால், வெளியிலிருந்து யாரையும் அழைக்க வேண்டாம். வீட்டிலேயே கொடுத்துவிடலாம். அதுபோல், பிராட்டியாரும் ரொம்பப் பெரிய தாயார். உலகம் முழுக்க அவளுக்குத்தான் குழந்தைகள்.

சாந்த சொரூபி!

'பத்மபிரியே பத்மினி பத்மஹஸ்தே’ என்று சொல்கிறோம். மலர்ந்து இருக்கிற தாமரையைப் போன்றக் கண்களால் நம் அனைவரையும் கடாக்ஷித்துக் கொண்டிருப்பவள். 'பத்மப்ரியா’ தாமரைக்கு மிகவும் பிரியமாக இருப்பவள். 'பத்மினி’ என்றே லக்ஷ்மி தந்திரத்தில் பெயர் பெற்றவள். அவள் பத்மத்தையே இருப்பிடமாகக் கொண்டவள். பத்ம மாலையையே தரித்துக்கொண்டு இருப்பவள். அவளுடைய திருமுகத்தில் எப்போதும் புன்னகையே நிலைத்திருக்கும். கோபம் என்பதையே அவளுடைய திருமுகத்தில் காண முடியாது. பெருமாளுக்காவது எப்போதாவது கோபம் வரக்கூடும். ஆனால் கருணையே வடிவான மஹாலக்ஷ்மி பிராட்டியாருக்கோ கோபம் என்றால் என்னவென்றே தெரியாது.